Yudhishthira lost everything | Sabha Parva - Section 64 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் சகுனியிடம் அனைத்து செல்வங்களையும் இழப்பது; தனது தம்பிகளை இழப்பது; தன்னை இழப்பது; பின்பு திரௌபதியை இழப்பது...
சகுனி சொன்னான், "ஓ யுதிஷ்டிரா, நீ பாண்டவர்களின் செல்வத்தை நிறைய இழந்துவிட்டாய். இன்னும் எங்களிடம் தோற்காதது ஏதேனும் உன்னிடம் இருந்தால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக" என்றான்.(1)
யுதிஷ்டிரன், "ஓ சுபலனின் மகனே {சகுனியே}, சொல்லப்படாத செல்வம் என்னிடம் உள்ளது எனக்குத் தெரியும். ஆனால், ஓ சகுனி, நீ ஏன் அந்தச் செல்வத்தைக் குறித்துக் கேட்கிறாய்?(2) ஆயிரங்களில் பத்து மடங்கும் {ஆயுதம் / பதினாயிரம்}, பத்துலட்சம் பத்து லட்சமாகவும் {பரயுதம் / பத்து லட்சம்}, பத்து லட்சங்களில் பத்து மடங்கும் {சங்கு / பத்து லட்சம் கோடி}, பத்து லட்சங்களில் நூறு மடங்கும் {பத்மம் / நூறு கோடி}, நூறு கோடிகளில் பத்து மடங்கும் {அர்ப்புதம் / பத்துக்கோடி}, நூறு கோடிகளில் நூறு மடங்கும் {கர்வம் / ஆயிரங்கோடி}, லட்சம் கோடிகளில் பத்து மடங்கும் {சங்கம் / லட்சம் கோடி}, லட்சம் கோடிகளில் நூறு மடங்கும் {நிகர்வம் / பத்தாயிரம் கோடி}, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் பத்து மடங்கும் {மஹாபத்மம் / நூறு லட்சம் கோடி}, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் நூறு மடங்கும் {பரார்த்தம் / லட்சம் லட்சம் கோடி}, அதற்கு மேலும் பந்தயம் வை. என்னிடம் அவ்வளவு இருக்கிறது. ஓ மன்னா {சகுனி}, அந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உன்னிடம் விளையாடுகிறேன்" என்றான்".(3,4)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(5)
யுதிஷ்டிரன், "ஓ சுபலனின் மகனே {சகுனியே}, என்னிடம் பர்ணாசியில் {ஓர் ஆறு}[1] இருந்து சிந்து ஆற்றின் கிழக்குக் கரை வரை விரிந்து இருக்கும் நாட்டில் அளவிடமுடியா எண்ணிக்கையில் பசுக்களும், குதிரைகளும், கறவை மாடுகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் இருக்கின்றன. இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்" என்றான்".(6)
[1] பர்ணாசி என்ற ஆறு வர்ணாசா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இது தற்காலத்தில் உள்ள சம்பல் {சர்மண்வதி} ஆற்றின் கிளை ஆறான பாணாசை இது குறிக்கிறது. இந்த ஆறு மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.}
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(7)
யுதிஷ்டிரன், "ஓ மன்னா, என்னிடம் எனது நகரம், எனது நாடு, நிலம், பிராமணர்களைத் தவிர்த்து அங்கு வசிக்கும் மக்கட்செல்வம், மற்றும் பிராமணர்களை மட்டும் என்னிடம் தக்க வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் அனைத்து மனிதர்களையும் எனது செல்வமாகக் கொண்டு, நான் உன்னுடனே விளையாடுவேன" என்றான்".(8)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(9)
யுதிஷ்டிரன், "ஓ மன்னா {சகுனியே}, இதோ இங்கிருக்கும் இந்த இளவரசர்கள், தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களாலும், காது வளையங்களாலும் பிரகாசிக்கின்றனர். அவர்கள் மேனியில் இருக்கும் நிஷ்கங்களும், அனைத்து அரச ஆபரணங்களும் எனது செல்வமாகும். இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்" என்றான்".(10)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் அவற்றை வென்றுவிட்டேன்!" என்றான்.(11)
யுதிஷ்டிரன், "பெரும் பலம் வாய்ந்த கரமும், சிங்கம் போன்ற கழுத்தும், சிவந்த கண்களும் இளமையும் உடைய இந்த நகுலன் இப்போது எனது பந்தயப் பொருளாவான். அவன் {நகுலன்} எனது செல்வம் என்பதை அறிந்து கொள்வாயாக" என்றான்.(12)
அதற்கு சகுனி, "ஓ மன்னா, யுதிஷ்டிரா, இளவரசன் நகுலன் உனக்கு அன்பானவன். அவன் {நகுலன்} ஏற்கனவே எங்கள் வசமாகிவிட்டான். இனி யாரை வைத்து நீ விளையாடுவாய்?" என்று கேட்டான்".(13)
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச் சொன்ன சகுனி, தனது பகடைப் பாச்சிகையை வீசி யுதிஷ்டிரனிடம், "பார், அவன் {நகுலன்} எங்களால் வெல்லப்பட்டான்" என்றான்.(14)
யுதிஷ்டிரன், "இந்தச் சகாதேவன் நீதியை நிர்வாகம் செய்கிறான். இவன் இவ்வுலகத்தில் கல்விக்காக மதிப்பைப் பெற்றிருக்கிறான். பந்தயமாக வைக்கக்கூடாதவன் என்றாலும், நான் எனக்கு அன்பான அவனை {சகாதேவனைப்} பந்தயப் பொருளாக வைத்து விளையாடுகிறேன்" என்றான்".(15)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(16)
மேலும் சகுனி, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மாத்ரின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} உனக்கு அன்பானவர்கள். அவர்கள் இருவரும் என்னால் வெல்லப்பட்டனர். இருப்பினும் பீமசேனனையும் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} மிக உயர்வாகக் கருதுகிறாய் எனத் தெரிகிறது" என்றான்.(17)
யுதிஷ்டிரன், "மூடரே! ஒரே இதயமாக இருக்கும் எங்களுக்குள் ஒற்றுமையின்மையை உண்டாக்கி, அறநெறிகளைக் கருதாமல் பாவகரமாக நடந்து கொள்கிறீர்" என்றான்.(18)
சகுனி, "போதையுண்ட ஒருவன் குழிக்குள் {நரகத்திற்குள்} விழுந்து, நகரும் சக்தியை இழந்து அங்கேயே தங்குவான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ மூத்தவனும், சிறந்தவனுமாக இருக்கறாய். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் (உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்) உன்னை வணங்குகிறேன்.(19) ஓ யுதிஷ்டிரா, தாங்கள் விழிப்புடன் இருக்கும்போதோ கனவிலோ கூட உச்சரிக்காத வார்த்தைகளை விளையாட்டில் உற்சாகமடைந்திருக்கும் சூதாடிகள் உச்சரிப்பார்கள்", என்றான்.(20)
யுதிஷ்டிரன், "போர் எனும் கடலின் மறுகரைக்கு எங்களை அழைத்துச் சென்று, எப்போதும் எதிரிகளை வெற்றி கொள்ளும் பெரும் செயலும், சக்தியும் கொண்ட இளவரசனும், உலகத்தின் மாவீரனுமான பல்குனனை {அர்ஜுனனைப்} பந்தயமாக வைக்ககூடாதெனினும் அவனை {அர்ஜுனனை} பந்தயமாக வைத்து உன்னிடம் விளையாடுவேன்" என்றான்".(21)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(22)
மேலும் சகுனி, "வில்லைத் தரிப்பவர்களின் முதன்மையான இந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இரு கரங்களிலும் சம திறன் வாய்ந்தவன் என்னால் வெல்லப்பட்டான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னிடம் எஞ்சியிருக்கும் செல்வத்தைக் கொண்டோ, உனது அன்பான தம்பியான பீமனைப் பந்தயமாகக் கொண்டோ என்னுடன் விளையாடுவாயாக" என்றான்.(23)
யுதிஷ்டிரன், "ஓ மன்னா, என்னதான் பந்தயப் பொருளாக வைக்கப்படக்கூடாதவனாக இருந்தாலும், சிங்கக் கழுத்தும், வளைந்த புருவங்களும், சாய்ந்த கண்களும் கொண்டவனும், போரில் முதன்மையானவனும், தானவர்களுக்கு எதிரியான வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போன்றவனும், அவமானப்படுத்த முடியாதவனும், இவ்வுலகத்தில் பலத்தில் நிகரற்றவனும், கதாயுதம் தாங்கியிருப்பவனும் எதிரிகளைக் கொல்பவனும், எங்கள் தலைவனுமான இந்த இளவரசன் பீமசேனனைப் பந்தயமாக வைத்து விளையாடுகிறேன்" என்றான்".(24,25)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(26)
சகுனி தொடர்ந்தான், "ஓ குந்தியின் மகனே, நீ நிறைய செல்வங்களை இழந்துவிட்டாய். குதிரைகள், யானைகள், உனது தம்பிகளையும் கூட இழந்துவிட்டாய். நீ தோற்காத வேறு ஏதேனும் பொருள் உன்னிடம் இருக்கிறதா என்பதைச் சொல்வாயாக" என்றான்.(27)
யுதிஷ்டிரன், "எனது தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனும், அவர்களுக்கு அன்பானவனுமான நான் மட்டுமே வெல்லப்படாமல் இருக்கிறேன். உன்னால் வெல்லப்பட்ட நான், வெல்லப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்" என்றான்".(28)
வைசம்பாயனர் சொன்னார், "பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(29)
மேலும் சகுனி, "உன்னை வெல்ல நீயே அனுமதித்தாய். இது மிகப் பாவகரமானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னிடம் இன்னும் செல்வம் இருக்கிறது. எனவே, உன்னை நீயே இழந்ததால் அது நிச்சயம் பாவகரமானதுதான்" என்றான்".(30)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பகடையில் திறன் வாய்ந்த சகுனி இப்படிச் சொல்லிவிட்டு, அங்கு இருந்த மற்ற துணிச்சல் மிக்க மன்னர்களிடம் தான் பாண்டவர்களை ஒருவர் பின் ஒருவராக வென்றதைச் சொன்னான்.(31)
சுபலனின் மகன் {சகுனி}, யுதிஷ்டிரனிடம், "ஓ மன்னா, உனக்கு அன்பான மற்றொரு பந்தயப் பொருள் உன்னால் தோற்கப்படாமல் இருக்கிறது. பாஞ்சால இளவரசி கிருஷ்ணையை {திரௌபதியை} பந்தயமாக வைப்பாயாக. அவளை {திரௌபதியை} வைத்து வென்று உன்னை மீட்டுக் கொள்வாயாக" என்றான்.(32)
யுதிஷ்டிரன், "நீலச் சுருள் முடிகளைக் கொண்டவளும், மெலிவுமில்லாமல் பருத்துமில்லாமல், குட்டையுமில்லாமல், நெட்டையுமில்லாமல் இருக்கும் திரௌபதியைப் பந்தயமாக வைத்து நான் உன்னுடன் விளையாடுவேன்.(33) அவள் {திரௌபதி}, இலையுதிர்கால தாமரையின் இலை போன்ற கண்களுடையவளும், தாமரை மணம் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளின் (லட்சுமி தேவி) அழகுக்கு நிகரானவளும், ஸ்ரீயைப் போன்ற அங்கலட்சணமும் அனைத்து அருளும் கொண்டவளும்,(34) மென்மையான இதயம் கொண்டவளாக இருப்பதால் எந்த மனிதனும் மனைவியாகக் கொள்ள விரும்பப்படுபவளும், அழகென்ற செல்வம் கொண்டவளும் அறம் சார்ந்தவளும் ஆவாள்.(35) அவள் {திரௌபதி}, அனைத்துத் தகுதிகளும் கொண்டவளும், இரக்கம் கொண்டவளும், இனிமையான பேச்சு கொண்டவளும், எந்த மனிதனும் அறம், இன்பம் மற்றும் செல்வத்தை அடைவதற்காக மனைவியாக அடைய விரும்பப்படுபவளும் ஆவாள்.(36) அவள் {திரௌபதி} பின் தூங்கி முன் எழந்து, இடையர்களையும், மேய்ப்பர்களையும் கவனித்துக் கொள்வாள்.(37) அவளின் {திரௌபதியின்} முகம், வேர்வையில் நனைந்திருந்தாலும் தாமரை அல்லது மல்லிகை போலவே இருக்கும். குளவி போன்ற மெல்லிடையும், நீண்டு வழியும் கூந்தலும், சிவந்த உதடுகளும், தாழாத உடலும் கொண்டவளே பாஞ்சால இளவரசி {திரௌபதி}.(38) ஓ மன்னா {சகுனி}, கொடியிடை திரௌபதியை எனது பந்தையப் பொருளாக வைத்து, ஓ சுபலனின் மகனே {சகுனியே} நான் உன்னிடம் விளையாடுவேன்" என்றான்".(39)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த புத்திசாலி மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் பேசியதும், "சீ...! சீ...!" என்ற வார்த்தைகளையே அந்தச் சபையில் இருந்த முதிர்ந்த மனிதர்கள் சொன்னார்கள்.(40) அந்த சபையே கலக்கமடைந்தது. அங்கிருந்த மன்னர்கள் அனைவரும் துயரத்திற்கு உள்ளானார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் வேர்வையில் மூழ்கிப் போனார்கள்.(41) விதுரன் தனது தலையை இரு கைகளுக்கிடையிலும் வைத்துக் கொண்டு, நினைவிழந்தவன் போல அமர்ந்திருந்தான். தனது தலையைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு தீவிரமாக ஆலோசித்து பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(42)
ஆனால் இதயத்தால் மகிழ்ந்த திருதராஷ்டிரன், "பந்தயம் வெல்லப்பட்டதா?", "பந்தயம் வெல்லப்பட்டதா?" என்று திரும்பத் திரும்ப கேட்டு, தனது உணர்ச்சிகளை மறைக்க முடியாதவனாக இருந்தான்.(43)
சபையில் இருந்த மற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிய போது, துச்சாசனனுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து கொண்டு கர்ணன் சத்தம் போட்டு சிரித்தான்.(44) வெற்றியால் செருக்கடைந்த சுபலனின் மகன் {சகுனி}, உற்சாக மிகுதியால் "உனக்கு அன்பான ஒரு பந்தயப் பொருள் இருக்கிறது" என்றும், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வீசப்பட்ட பகடைப் பாச்சிகைகளை எடுத்துக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(45)
ஆங்கிலத்தில் | In English |