The destruction of Kurus is sure | Sabha Parva - Section 64 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் விதுரனிடம் திரௌபதியை அழைத்து வரச் சொல்வதும்; விதுரன் சொன்ன விளக்கங்களும்...
துரியோதனன், "ஓ க்ஷத்தரே இங்கே வாரும், பாண்டவர்களின் அன்புக்கும் நேசத்திற்கு உரிய மனைவியான திரௌபதியை இங்கே அழைத்து வாரும். அறைகளை துடைத்துக் கூட்டுவதற்கு அவளை பலவந்தமாக அனுப்புவீராக. நமது பணிப்பெண்கள் தங்கும் இடத்தில் அந்தப் பேறற்ற பெண்ணும் தங்கட்டும்" என்றான்.(1)
விதுரன், "ஓ பாவி {துரியோதனா}, இந்த வார்த்தைகளை உச்சரிப்பதால் உன்னை நீயே கயிறுகளில் கட்டிக் கொள்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா? செங்குத்தான பாறையின் விளிம்பில் நீ தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள மாட்டாயா? மானாக இருந்து கொண்டு பல புலிகளின் கோபத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா?(2) கொடும் விஷம் கொண்ட பாம்புகள் சினம் தூண்டப்பட்ட நிலையில் உனது தலையில் இருக்கின்றன. பாவியே, மேலும் அவர்களின் கோபத்தைத் தூண்டினால் நீ எமனுலகு செல்வாய்.(3) மன்னன் {யுதிஷ்டிரன்} தன்னையே இழந்து, தனக்கே தலைவனாக இல்லாத போது, அவளைப் பந்தயமாக வைத்ததால் கிருஷ்ணை {திரௌபதியை} அடிமையாக மாட்டாள்.(4) சாகும் போது மட்டுமே கனியைக் கொடுக்கும் {பலனைத் தரும்} மூங்கிலைப் போல, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இந்த விளையாட்டின் மூலம் பொக்கிஷத்தை வென்றான். அதனால் போதையுண்டிருப்பதால், தனது கடைசி காலமான இந்த காலத்தில் பகடையால் உண்டாகும் பகைமையையும், பயங்கரங்களையும் காணாமல் இருக்கிறான்.(5)
எந்த மனிதனும் கடும் வார்த்தைகளைச் சொல்லி மற்றவர்கள் இதயத்தைத் துளைக்கக்கூடாது. எந்த மனிதனும் பகடையாட்டத்தின் மூலமோ, வேறு நியாயமற்ற வழிகளிலோ தனது எதிரியை வெல்லக்கூடாது. வேதங்கள் அங்கீகரிக்காத, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வார்த்தைகளை அடுத்தவரை வருந்தச் செய்ய எந்த மனிதனும் சொல்லக்கூடாது.(6) சிலர் தங்கள் உதடுகளில் இருந்து கடும் வார்த்தைகளைச் சொல்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட வேறு மனிதன் இரவும் பகலும் துன்பப்படுகிறான். அந்த வார்த்தைகள் அடுத்தவரின் இதயத்தை துளைத்தெடுக்கும். எனவே, கல்விமான்கள் அடுத்தவரைச் சுட்டிக்காட்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் சொல்லவே கூடாது.(7)
ஒரு சமயம் ஓர் ஆடு ஒரு கொக்கியை {கத்தியை} விழுங்கிற்று, அஃது அந்த கொக்கியினால் துளைக்கப்பட்ட போது {சிரமப்பட்ட போது}, ஒரு வேடன் அதன் தலையை தரையில் வைத்து, அதன் தொண்டையைப் பயங்கரமாக அறுத்து, அந்தக் கொக்கியை வெளியே எடுத்தான். எனவே, ஓ துரியோதனா, நீயும் அதேபோல பாண்டவர்களின் செல்வத்தை விழுங்காதே. அவர்களை {பாண்டவர்களை} உனது எதிரிகளாக்கிக் கொள்ளாதே.(8) பிருதையின் {குந்தியின்} மகன்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வதில்லை. நாய் போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் மட்டுமே இப்படிப்பட்ட கடும் வார்த்தைகளை எல்லா வகை மக்களிடமும், அதாவது கடைசி காலத்தில் காட்டில் வசிக்கும் மக்களிடமும், இல்லற வாழ்க்கை வாழ்பவர்களிடமும், தவ அர்ப்பணிப்பில் இருப்பவர்களிடமும், பெரும் கல்வி கற்றவர்களிடமும் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.(9) ஐயோ! திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, நேர்மையற்ற குணம் நரகத்தில் நுழையும் பயங்கரமான கதவுகளில் ஒன்றாகும் என்பதை அறியவில்லை. ஐயோ! பகடை விளையாட்டு விஷயத்தில், பல குருக்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் துச்சாசனனும் அவனது {துரியோதனனது} நேர்மையற்ற பாதையிலேயே தொடர்ந்துள்ளனர்.(10)
சுரைக்காய் மூழ்கலாம், கற்கள் மிதக்கலாம், படகுகள் கூட எப்போதும் நீரில் மூழ்கலாம், ஆனாலும் திருதராஷ்டிரன் மகனான இந்த மூட மன்னன் {துரியோதனன்}, தனக்கு நன்மையான எனது இந்த வார்த்தைகளைக் கேட்க மாட்டான்.(11) இவன்தான் {துரியோதனன் தான்} குருக்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பான் என்பதில் ஐயமில்லை. நண்பர்கள் சொல்லும் நன்மையான நீதிச்சொற்கள் கேட்கப்படாமலும், மறுபுறம் சபலமும் அதிகரித்து இருப்பதால், பயங்கரமான பேரழிவே குருக்களுக்கு ஏற்படப்போகிறது", என்றான் {விதுரன்}.(12)
ஆங்கிலத்தில் | In English |