Pratikamin went to Draupadi | Sabha Parva - Section 66A | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
துரியோதனன் தனது பணியாளை அழைத்து திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; திரௌபதி பணியாளிடம் கேள்வி கேட்டல்; பணியாள் மறுபடியும் சபைக்கு வந்து திரௌபதியின் கேள்வியைக் கேட்டல்; துரியோதனன் மறுபடியும் பணியாளை அனுப்புதல்; திரௌபதி மறுபடியும் பணியாளை திருப்பி அனுப்புதல்; யுதிஷ்டிரன் தனது நம்பிக்கைக்குரிய தூதரை திரௌபதியிடம் அனுப்புதல்...
வைசம்பாயனர் சொன்னார், "கர்வத்தால் போதையுண்ட திருதராஷ்டிரன் மகன் {துரோயோதனன்}, "க்ஷத்தரே! சீ" என்று சொல்லிவிட்டு பணியாளான பிராதிகாமினைப் பார்த்து, மரியாதைக்குரிய மூத்தவர்கள் முன்னிலையில் அவனை {பிராதிகாமினை} அழைத்து, "போ பிராதிகாமின், போய் திரௌபதியை இங்கே கொண்டு வா. பாண்டுவின் மகன்களிடம் அச்சம் கொள்ளாதே. விதுரர் மட்டுமே அப்படி பயத்தால் உளறுகிறார். மேலும், அவர் நமது செழிப்பை எப்போதும் விரும்புவதில்லை" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி கட்டளையிடப்பட்ட சூத சாதியைச் சேர்ந்த பிராதிகாமின், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு விரைவாக சென்று, சிங்கக்குகைக்குள் நாய் நுழைவது போல பாண்டவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து பாண்டு மகன்களின் ராணியை {திரௌபதியை} அணுகினான். பிறகு அவன் {பிராதிகாமின்}, "பகடையில் போதையுண்ட யுதிஷ்டிரனிடம், ஓ திரௌபதி, துரியோதனன் உன்னை வென்றுவிட்டார். ஆகையால், திருதராஷ்டிரர் வசிப்பிடத்திற்கு இப்போதே வா. ஓ யக்ஞசேனி {திரௌபதி}, நான் உன்னை அழைத்துச் சென்று, வீட்டு ஊழியம் செய்யும் கேவலமான வேலையில் நியமிக்கிறேன்" என்றான்.
திரௌபதி, "ஓ பிராதிகாமின், ஏன் இப்படிப் பேசுகிறாய்? எந்த இளவரசன்தான் தனது மனைவியை பந்தயப் பொருளாக வைத்து விளையாடுவான்? மன்னன் நிச்சயமாக பகடையில் போதையுண்டிருக்கிறார். இல்லையென்றால், அவரால் பந்தயமாக வைத்தாட வேறு பொருளைக் காண முடியாதா?" என்றாள்.
பிராதிகாமின், "அவரிடம் {யுதிஷ்டிரனிடம்} எதுவும் இல்லாத போதே பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} உன்னை வைத்து ஆடினார். மன்னன் {யுதிஷ்டிரன்} முதலில் தனது தம்பிகளையும், பிறகு அவரையும், அதன் பிறகு உன்னையும் பந்தயமாக வைத்து விளையாடினார் ஓ இளவரசி {திரௌபதி}" என்றான்.
திரௌபதி, "ஓ சூத குலத்தின் மகனே {பிராதிகாமினே}, நீ சென்று, அந்தச் சபையில் இருக்கும் சூதாடியிடம் {யுதிஷ்டிரனிடம்}, அவர் யாரை முதலில் இழந்தார், அவரையா அல்லது என்னையா என்று கேள். இதை உறுதி செய்து கொண்டு, இங்கே வா. பிறகு, ஓ சூத குலத்தின் மகனே {பிராதிகாமினே}, நீ என்னை அழைத்துச் செல்லலாம்" என்றாள்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்தச் சபையில் இருந்த அனைவரிடமும் திரௌபதியின் வார்த்தைகளைச் சொன்னான். பிறகு மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனிடம், "திரௌபதி உம்மிடம், என்னை விளையாட்டில் தோற்ற போது, நீர் யாருக்கு தலைவனாக இருந்தீர்? நீர் உம்மை முதலில் இழந்தீரா அல்லது என்னையா? என்று கேட்டாள்" என்று சொன்னான். யுதிஷ்டிரன் அறிவாற்றலை இழந்து, நினைவிழந்து அமர்ந்திருந்தான். நன்மையாகவோ தீமையாக அந்த சூதனுக்கு அவன் {யுதிஷ்டிரன்} ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தான்.
துரியோதனன், "பாஞ்சால இளவரசி {திரௌபதி} இங்கே வந்து தனது கேள்வியைக் கேட்கட்டும். இந்தச்சபையில் இருக்கும் அனைவரும் அவளும் {திரௌபதியும்} யுதிஷ்டிரனும் பேசிக் கொள்வதைக் கேட்கட்டும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்த அந்தத் தூதுவன் {பிராதிகாமின்} மறுபடியும் வேகமாக அந்த அரண்மனைக்குச் சென்று, அவனே {பிராதிகாமினே} மிகத் துயர் கொண்டு, திரௌபதியிடம், "ஓ இளவரசி, அந்தச் சபையில் இருப்பவர்கள் உன்னை அழைக்கிறார்கள். கௌரவர்களின் அழிவு உன் கைகளில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஓ இளவரசி, துரியோதனன் உன்னை சபையின் முன்னே அழைக்கும் போது, பலவீனமான மூளை கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்}, தனது செழிப்பை வெகு காலத்திற்குக் காத்துக் கொள்ள முடியாது" என்றான்.
திரௌபதி, "உலகத்தின் பெரும் ஆணையாளரின் {பிரம்மனின்} ஆணை நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறது. மகிழ்வும் துயரமும் ஞானமுள்ளோரையும் ஞானமற்றோரையும் தொடுக்கின்றன. இருப்பினும் அறமே உலகத்தில் உயர்ந்த பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சரியாக காத்தோமானால், அது நிச்சயம் நமக்கு அருளைக் கொடுக்கும். அறம் கௌரவர்களைக் கைவிடாதிருக்கட்டும். திரும்ப சென்று அந்தச் சபையில் உள்ளோரிடம், அறநெறிகளுக்கு ஏற்ற எனது வார்த்தைகளை மறுபடி சொல். அந்த அறம் சார்ந்த, அறநெறி அறிந்த மூத்தோர் உறுதியாகச் சொல்லும் சொல் கேட்டு நடக்க நான் தயாராக இருக்கிறேன்" என்றாள்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "யக்ஞசேனியின் {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த சூதன் {பிராதிகாமின்}, சபைக்குத் திரும்ப வந்து, திரௌபதியின் வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். ஆனால், அனைவரும் தங்கள் முகத்தை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனின்} ஆவலையும் தீர்மானத்தையும் அறிந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தனர்.
இருப்பினும், யுதிஷ்டிரன், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனின் நோக்கத்தைக் கேள்விப்பட்டு, ஒரு நம்பிக்கைக்குரிய தூதுவரிடம் 'திரௌபதி தனது மாதாந்திர நோயில் இருப்பதால், தொப்புள் வெளிப்பட ஒற்றையாடையுடன் இருந்தாலும், தனது மாமனார் முன்னிலையில் அழுது கொண்டே வரட்டும்" என்று சொல்லி திரௌபதியிடம் அனுப்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த புத்திசாலித் தூதுவனும் திரௌபதியின் வசிப்பிடத்திற்கு வேகமாக வந்து யுதிஷ்டிரனின் நோக்கங்களைத் தெரிவித்தான். அதே வேளையில் அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள் துயரம் கொண்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய இயலாமல் இருந்தனர். அவர்கள் {பாண்டவர்கள்} மீது பார்வையைச் செலுத்திய மன்னன் துரியோதனன் இதயத்தில் மிகவும் மகிழ்ந்து அந்தச் சூதனிடம், "ஓ பிராதிகாமின், அவளை {திரௌபதியை} இங்கே கொண்டு வா. கௌரவர்கள் அவளது கேள்விக்கு அவள் முகத்துக்கு எதிரேயே பதில் சொல்லடும்" என்றான். அவனது {துரியோதனது} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் அந்தச் சூதன் {பிராதிகாமின்}, துருபதன் மகளின் {திரௌபதியின்} கோபத்துக்குப் {கோபத்துக்கு வாய்ப்பிருப்பதை நினைத்து} பயந்து, நுண்ணறிவுக்கான நற்பெயரைக் கருதாமல், மறுபடியும் அந்தச் சபையில் இருந்தவர்களிடம், "நான் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} என்ன சொல்வது?" என்று கேட்டான்.
தொடர்வது:
சபா பர்வம் - பகுதி 66 ஆ............
தொடர்வது:
சபா பர்வம் - பகுதி 66 ஆ............
![]() |
![]() |
![]() |