Krishna prevented from humiliation | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் கரங்களை எரித்துவிடுவதாக பீமன் சொல்வது; அர்ஜுனன் பீமனைக் கண்டிப்பது; திரௌபதிக்கு ஆதரவாக திருதராஷ்டிரனின் மகன் விகர்ணன் நீதி கேட்பது; கர்ணன் விகர்ணனைக் கண்டிப்பது; கர்ணன் துச்சாசனனிடம் திரௌபதியின் ஆடையைக் களையச் சொல்வது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் திரௌபதியின் மானம் காக்க விரைந்து வருவது; பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாயம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை அந்தப்பரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது...
பீமன் சொன்னான் "ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் அவர்களைப் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.(1) காசி மன்னன் கொடுத்த அத்தனை அற்புதப் பொருட்களையும், செல்வங்களையும், விலங்குகளையும், வேறு செல்வங்களையும், கவசங்களையும், வேறு மன்னர்கள் கொடுத்த ஆயுதங்களையும், நமது நாட்டையும், உம்மையும், எங்களையும் எதிரிகள் வென்று விட்டார்கள்.(2,3) நீர் எங்கள் தலைவராக இருப்பதால் இவற்றில் நான் கோபம் கொள்ளவிலை. இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன்.(4) இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுந்தவளல்ல. பாண்டவர்களைத் தலைவர்களாக அடைந்து, தாழ்ந்தவர்களும், இழிந்தவர்களும், கொடூரர்களும், தீய மனம் கொண்டவர்களுமான கௌரவர்களால் இவ்வாறு உம்மாலேயே தண்டிக்கப்படுகிறாள்.(5) அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. நான் அந்த உமது கரங்களை எரிக்கப் போகிறேன். சகாதேவா, நெருப்பைக் கொண்டு வருவாயாக" என்றான்[1].(6)
[1] கீழ்வருவது பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பீமன் பேச்சு ....சூதர் மனைகளிலே அண்ணே! தொண்டு மகளிருண்டு.சூதிற் பணய மென்றே -- அங்கோர் தொண்டச்சி போவதில்லை. 69ஏது கருதிவைத்தாய்? அண்ணே, யாரைப் பணயம்வைத்தாய்?மாதர் குலவிளக்கை -- அன்பே வாய்ந்த வடிவழகை. 70பூமி யரசரெல்லாங் கண்டே போற்ற விளங்குகிறான்,சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன். 71அவன் சுடர்மகளை, அண்ணே, ஆடி யிழந்துவிட்டாய்.தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே, தருமங் கொன்றுவிட்டாய். 72சோரத்திற் கொண்டதில்லை; அண்ணே, சூதிற் படைத்ததில்லை.வீரத்தினாற் படைத்தோம்; வெம்போர் வெற்றியினாற் படைத்தோம்; 73சக்கரவர்த்தி யென்றே மேலாந் தன்மை படைத் திருந்தோம்;பொக்கென ஓர்கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய். 74நாட்டையெல்லாந் தொலைத்தாய்; அண்ணே, நாங்கள் பொறுத்திருந்தோம்.மீட்டும் எமையடிமை செய்தாய், மேலும் பொறுத்திருந்தோம். 75துருபதன் மகளைத் திட்டத் துய்ந னுடற்பிறப்பை, இருபகடை யென்றாய், ஐயோ! இவர்க் கடிமையென்றாய்! 76இதுபொறுப்ப தில்லை, தம்பி! எரிதழல் கொண்டுவா.கதிரை வைத்திழந்தான் -- அண்ணன் கையை எரித்திடுவோம். 77
இதைக் கேட்ட அர்ஜுனன், "ஓ பீமசேனரே, இதற்கு முன் நீர் இதுபோன்ற சொற்களைச் சொன்னதில்லை. நிச்சயமாக உயர்ந்த நிலையில் இருந்த உம் அறம் இந்தத் தீய எதிரிகளால் அழிக்கப்பட்டது.(7) நீர் எதிரிகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டாம். உயர்ந்த அறத்தைப் பயில்வீராக. அறம் சார்ந்தவரும், அனைவருக்கும் மூத்தவருமான அண்ணனை {யுதிஷ்டிரரை} மீறிப் பேசுவது எவனுக்குத் தகும்?(8) மன்னர் எதிரியால் அழைக்கப்பட்டார், க்ஷத்திரிய ஒழுக்கத்தை நினைவில் கொண்டு, தமது விருப்பத்திற்கு மாறாக பகடை விளையாடினார். அது நிச்சயமாக நமது புகழுக்கு உகந்ததே" என்றான் {அர்ஜுனன்}.(9)
பீமன், "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, க்ஷத்திரிய ஒழுக்கத்தை ஏற்று மன்னர் நடந்து கொண்டார் என்பதை நான் அறியாமல் இருந்திருந்தால், அவரது {யுதிஷ்டிரரது} கரங்களை வலுக்கட்டாயமாகப் பற்றி தழல் நெருப்பில் எரித்திருப்பேன்" என்றான் {பீமன்}".(10)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துயரத்தில் இருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} நிலையையும் கண்ட திருதராஷ்டிரனின் மகனான விகர்ணன்,(11) "மன்னர்களே, யக்ஞசேனியால் {திரௌபதியால்} கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பீராக. நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட காரியத்தில் நாம் நீதியைத் தீர்மானிக்காமல் இருப்போமானால், நம் அனைவருக்கும் விரைவில் நரகம் நிச்சயம்.(12) குருக்களில் மூத்தவர்களான பீஷ்மரும், திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பதேன்?(13) எங்கள் அனைவருக்கும் குருவான பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, கிருபரும் இங்கே இருக்கின்றனர். இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்கள் பதிலளிக்காமல் இருப்பதேன்?(14) அனைத்துப் புறத்தில் இருந்தும் இங்கே வந்து திரண்டிருக்கும் மன்னர்கள், லாப மற்றும் கோப நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கேள்விக்கு பதில் அளிக்கட்டும்.(15) மன்னர்களே, மன்னன் துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} கேட்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளிப்பீராக. அதன் பிறகு சற்று சிந்தித்து எத்தரப்பில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பீராக" என்றான் {விகர்ணன்}.(16)
இப்படியே விகர்ணன் அந்த சபையின் முன்பு தொடர்ச்சியாகத் தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மன்னர்கள் அவனுக்கு நன்மையாகவோ, தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.(17) அனைத்து மன்னர்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த விகர்ணன், தனது கரங்களைப் பிசைய ஆரம்பித்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டான்.(18)
பிறகு அந்த இளவரசன் {விகர்ணன்} இறுதியாக, "பூமியின் மன்னர்களே, கௌரவர்களே, நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களோ இல்லையோ, நீதி என்றும், சரியானது என்றும் நான் கருதுவதைச் சொல்லப் போகிறேன்.(19) மனிதர்களில் முதன்மையானவர்களே, வேட்டை, குடி, சூது, அதிகப்படியான மாதர் இன்பம் ஆகிய நான்கும் மன்னர்களுக்கான நான்கு தீமைகளாகும்.(20) இவற்றுக்கு அடிமையாக இருக்கும் மன்னன் அறத்தை வஞ்சித்து வாழ்கிறான். இப்படி ஒழுங்கற்ற நடத்தைகளில் ஈடுபடுபவனை எந்த அதிகாரமும் இல்லாதவனாகவே மக்கள் கருதுவார்கள்.(21) இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்}, இந்தத் தீமைகளில் ஒன்றில் ஆழ்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்த வஞ்சகச் சூதாடிகளால் தூண்டப்பட்டு, திரௌபதியைப் பந்தயமாக வைத்தார்.(22) மறுபுறம், இந்த அப்பாவி திரௌபதி பாண்டு மகன்கள் அனைவரின் பொது மனைவியாவாள். மேலும், மன்னர் {யுதிஷ்டிரர்} முதலில் தம்மை இழந்த பிறகு, இவளை {திரௌபதியை} பந்தயமாக வைத்தார்.(23) இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சுபலனே {சகுனியே}, மன்னனை {யுதிஷ்டிரனை} இந்தக் கிருஷ்ணையை {திரௌபதியைப்} பந்தயமாக வைக்கத் தூண்டினான். இச்சூழ்நிலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் நான், திரௌபதி வெல்லப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறேன்" என்றான் {விகர்ணன்}.(24)
இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தச் சபையில் இருந்தவர்களால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விகர்ணனைப் பாராட்டி, சுபலனின் மகனைக் {சகுனியைக்} கண்டித்தனர்.(25) அவ்வொலியால், கோபம் கொண்டு உணர்வுகளை இழந்த ராதையின் மகன் {கர்ணன்}, நல்ல வடிவம் கொண்ட தனது கரங்களை அசைத்து,(26) "ஓ விகர்ணா, எதிர்மறையான, சீரற்ற பல நிலைகளை இந்தச் சபையில் என்னால் காண முடிகிறது. விறகில் உண்டாகும் நெருப்பு, அந்த விறகையே உட்கொள்வது போல, நீ வெளிப்படுத்தும் இந்தச் சினம் உன்னையே உட்கொள்ளும்.(27) திரௌபதியால் தூண்டப்பட்ட பிறகும் இங்கிருக்கும் பிரமுகர்கள் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவர்கள் அனைவரும், துருபதனின் மகள் {திரௌபதி} சரியாக வெல்லப்பட்டதாகவே கருதுகிறார்கள்.(28) ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, வயது முதிராதவனான நீ மட்டுமே கோபத்தில் வெடிக்கிறாய். சிறுவனாக இருக்கும் நீ முதியவன் போல சபைக்கு மத்தியில் நின்று பேசுகிறாய்.(29) ஓ துரியோதனன் தம்பியே {விகர்ணா}, (நீதியாக) வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று முட்டாளைப் போல சொல்வதால், உண்மையான அறநெறி எது என்பதை நீ அறிய மாட்டாய் என்று தெரிகிறது.(30)
ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்} இந்தச் சபையின் முன்னால் தனது உடைமைகள் அனைத்தையும் பந்தயமாக வைத்த போது, கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ சொல்வதெப்படி?(31) ஓ பாரத குலத்தின் காளையே {விகர்ணா}, {யுதிஷ்டிரனின்} அனைத்து உடைமைகளில் திரௌபதியும் ஒருத்திதான். எனவே, நியாயமாக வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ சொல்வதெப்படி?(32) திரௌபதி (சுபலனால்) குறிப்பிடப்பட்டு, பாண்டவர்களால் பந்தயப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டவள். நீ அவள் {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று கருதுவதற்கான காரணமென்ன?(33) அல்லது, அவள் {திரௌபதி} ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையென நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் குறிப்பிட்ட சிறந்த காரணங்களைக் கேட்பாயாக.(34)
ஓ குரு குலத்தின் மகனே {விகர்ணா}, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். எனவே, இவள் {திரௌபதி} நிச்சயம் கற்பற்ற பெண்ணே {வேசையே}.(35) எனவே, இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ, அவளது ஆடைகளைக் களைவதோ {ஆடையே இல்லாமல் கொண்டுவருவதோ} ஆச்சரியப்படத்தக்க செயல் அல்ல.(36) பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், இவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர்.(37) ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைவாயாக" என்றான் {கர்ணன்}.(38)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து, கீழே தூக்கி எறிந்து அந்தச் சபையில் அமர்ந்தார்கள்.(39) பிறகு துச்சாசனன், ஓ மன்னா, அனைவரின் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடையே வலுக்கட்டாயமாகப் பற்றிக் களையத் தொடங்கினான்".(40)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "திரௌபதியின் உடை அப்படி களையப்படும்போது, ஹரியின் நினைப்பால் அவள் {திரௌபதி பேரொலியுடன் கதறி அழுது}, "ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, ஓ துவாரகையில் வசிப்பவனே, ஓ கிருஷ்ணா, ஓ (பிருந்தாவனத்தின்) இடையர் குலப் பெண்களால் விரும்பப்படுபவனே {கோபீஜனப்ரியா},(41) ஓ கேசவா, கௌரவர்கள் என்னை அவமானப்படுத்துவதைப் பார்ப்பாயாக. ஓ தலைவா, ஓ லட்சுமியின் கணவனே, ஓ விராஜத்தின் (பிருந்தாவனத்தின்) தலைவனே, அனைத்துத் துன்பங்களையும் அழிப்பவனே, ஓ ஜனார்த்தனா, இந்தக் கௌரவப் பெருங்கடலில் மூழ்கும் என்னைக் காப்பாற்றுவாயாக.(42) ஓ கிருஷ்ணா, ஓ பெரும் யோகியே, அண்டத்தின் ஆன்மாவே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவனே, ஓ கோவிந்தா, குருக்களுக்கு மத்தியில் உணர்வுகளை இழந்து துன்பத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று அழுதாள்.(43)
துயரத்தில் இருந்த அந்த அழகான பெண்மணி {திரௌபதி}, தனது முகத்தை மூடி, மூவுலகத்தின் தலைவனான ஹரியான கிருஷ்ணனை நினைத்து பேரொலியுடன் கதறினாள்.(44) திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்டவனும், இரக்கமுள்ளவனுமான கிருஷ்ணன் ஆழமான உணர்ச்சிக்கு ஆட்பட்டு, இரக்கத்துடன் தனது ஆசனத்தைவிட்டு எழுந்து, கால்நடையாகவே அங்கு வந்தான்.(45) கிருஷ்ணன், விஷ்ணு, ஹரி மற்றும் நரன் ஆகியோரிடம் யக்ஞசேனி {திரௌபதி} உரக்க அழுது கொண்டிருந்தபோது, சிறப்புமிக்க தர்மதேவன் {கிருஷ்ணன்} எவராலும் கவனிக்கப்படாதவனாக இருந்து, அவளை {திரௌபதியை} பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடினான்.(47)
ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு, ஓர் ஆடை உருவப்பட்ட போது, அதே வகையைச் சார்ந்த மற்றொரு ஆடை அவளை மறைப்பது போலத் தோன்றியது.(47) இப்படியே பல துணிகள் காணப்படும் வரை இது தொடர்ந்து கொண்டு இருந்தது. ஓ மேன்மையானவனே, அறத்தைக் காக்க, பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான ஆடைகள் திரௌபதியின் மேனியில் இருந்து வந்தன.(48) பல குரல்களின் ஆழ்ந்த முழக்கம் அங்கே எழுந்தது. அந்தச் சபையில் இருந்த மன்னர்கள், உலகத்தின் காட்சிகளில் இயல்புக்கு மிக்க காட்சியைக் கண்டு, திரௌபதியைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனைக்} கண்டிக்கத் தொடங்கினர்.(49) மேலும், பீமன் தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் உதடுகள் நடுங்க, பெருத்த குரலில் மன்னர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரமான சபதத்தை ஏற்றான்.(50)
பீமன், "உலகத்தின் க்ஷத்திரியர்களே, நான் சொல்லப்போகும் இந்தச் சொற்களைக் கேட்பீராக. இது போன்ற சொற்களை வேறு மனிதர்கள் எவரும் இதுவரை சொன்னதில்லை, எதிர்காலத்திலும் யாரும் எப்போதும் இவற்றைச் சொல்ல மாட்டார்கள்.(51) பூமியின் தலைவர்களே, இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவற்றை நான் நிறைவேற்றாமல் இருந்தால், இறந்து சென்ற எனது மூதாதையர்களின் உலகம் எனக்குக் கிடைக்காமல் போகட்டும். போர்களத்தில் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, கொடிய மனம் கொண்டவனும், இழிந்தவனுமான இந்தப் பாவியின் மார்பைப் பிளந்து, இவனது {துச்சாசனனது} உயிர்க்குருதியைக் குடிக்காமல் போனேன் எனில், எனது மூதாதையர்கள் உலகத்தை நான் அடையாமல் போகக் கடவேன்" என்றான்".(52,53)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமனின் இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட சபையோர் இருக்கையின் நுனியில் நின்றனர். அங்கே இருந்த அனைவரும் பீமனைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை நிந்தித்தனர்.(54) அந்தச் சபையில் {திரௌபதியின் மேனியில் இருந்து உருவப்பட்ட} துணிக்குவியல் திரண்ட போது, துச்சாசனன் களைப்படைந்து நாணத்துடன் கீழே ஆமர்ந்தான்.(55)
அந்தச் சபையிலிருந்தவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான மனிதர்கள் குந்தியின் மகன்களை அந்த நிலையில் கண்டு, (திருதராஷ்டிரன் மகனையும் பார்த்து) "சீ, சீ" என்றனர்.(56) ஒன்றுகலந்த அவர்களின் குரல் கேட்டவர்களை இருக்கையின் நுனியில் நிற்கச் செய்தது. அந்தச் சபையில் இருந்த நேர்மையான மனிதர்கள் அனைவரும், "ஐயோ! திரௌபதியின் கேள்விக்கு இந்தக் கௌரவர்கள் பதிலளிக்கவில்லையே" என்று சொல்லி திருதராஷ்டிரனையும் நிந்தித்து அவர்கள் பெரும் கூச்சலிட்டனர்.(57)
பிறகு, நீதி நெறிகளின் அறிவியலை அறிந்தவனான விதுரன், தனது கரங்களை அசைத்து, அனைவரையும் அமைதிப்படுத்தி,(58) "இந்தச் சபையில் இருப்போரே, ஆதரவற்று அழுது கொண்டிருக்கும் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள். நீங்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இது போன்ற நடத்தையால் அறமும் அறநெறிகளும் தண்டிக்கப்படுகின்றன.(59) நெருப்பால் உட்கொள்ளப்பட்டவன் போல, துயரத்துக்கு ஆட்பட்ட மனிதன் நல்ல மனிதர்களின் சபையை அணுகுகிறான். அந்தச் சபையில் இருப்பவர்கள் அந்த நெருப்பைத் தணித்து, அவனை உண்மையாலும் அறநெறிகளாலும் குளிரச் செய்வர்.(60) பாதிக்கப்பட்ட மனிதன் சபையாரிடம் அறநெறி வழங்கும் தனது உரிமைகள் பற்றி கேட்கிறான். அப்போது அந்தச் சபையில் இருப்போர் விருப்பாலும் கோபத்தாலும் உந்தப்படாமல் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.(61)
மன்னர்களே, விகர்ணன் அவனது ஞானத்துக்கும் நீதிக்கும் தகுந்தவாறு அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறான். நீங்கள் சரியாக நினைப்பதை நீங்களும் பதிலாகச் சொல்ல வேண்டும்.(62) அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் {மௌனமாக} இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும்.(63) மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவன் ஒரு சபையில் சேர்ந்து பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவனைச் சாரும்.(64) பழைய வரலாற்றில் உள்ள அங்கிரசின் மகனான பிரகலாதனின் கதையைக் கல்விமான்கள் மேற்கோளாகக் காட்டுவார்கள்.(65)
பழங்காலத்தில் தைத்தியர்களின் தலைவனாக பிரகலாதன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு விரோசனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகன் இருந்தான், அந்த விரோசனன் தனக்கு ஒரு மணமகளை அடைவதற்காக அங்கிரசின் மகனான சூதன்வானிடம் சச்சரவு செய்தான்.(66) அந்த மணமகளை அடைவதன் பொருட்டு அவர்கள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, "நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்" என்று சொன்னார்கள்.(67) அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் பிரகலாதனை நடுவராகக் கொண்டு தங்கள் இருவருக்குள்ளும் ஒரு தீர்மானத்திற்கு வர முடிவு செய்தனர். அவர்கள் அவனிடம் {பிரகலாதனிடம்}, "எங்கள் இருவரில் (மற்றவனுக்கு) யார் பெரியவன்? இந்தக் கேள்விக்கு விடை பகரும். பொய் சொல்லாதீர்" என்றனர்.(68)
இந்த சண்டையால் அச்சமடைந்த பிரகலாதன் தனது பார்வையைச் சூதன்வானிடம் செலுத்தினான். யமனின் கதாயுதத்தைப் போல கோபத்தால் எரிந்து கொண்டிருந்த சூதன்வான், அவனிடம் {பிரகலாதனிடம்},(69) "நீர் தவறாக விடையளித்தாலோ, விடையளிக்காமல் இருந்தாலோ உமது தலை வஜ்ரதாரியின் {இந்திரனின்} இடியால் நூறு துண்டுகளாகச் சிதறிப்போகும்" என்றான்.(70)
சூதன்வானால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த தைத்தியன் {பிரகலாதன்}, அத்திமர இலை போல நடுங்கி, ஆலோசனைக்காக பெரும் சக்தி வாய்ந்த காசியபரிடம் சென்றான்.(71)
பிரகலாதன், "ஓ சிறப்பும், மேன்மையும் வாய்ந்தவரே, தேவர்களையும், அசுரர்களையும், பிராமணர்களையும் வழிநடத்த வேண்டிய அறநெறிகளின் விதிகளை நன்கு அறிந்தவர் நீர். இருப்பினும், கடமையின் படி பார்த்தால் இந்தச் சூழ்நிலை பெரும் சிரமம் கொண்டதாக இருக்கிறது. நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன்.(72) ஒருவனிடம் கேள்வி கேட்ட பிறகு, அவன் பதிலளிக்கவில்லை என்றாலோ, தவறாக பதிலளித்தாலோ அவன் எந்த உலகங்களை அடைவான்?" என்று கேட்டான்.(73)
காசியபர், "பதிலை அறிந்தும் ஒருவன் சபலத்தாலோ, கோபத்தாலோ, அச்சத்தாலோ விடையளிக்கவில்லை என்றால், அவன் தன் மீது வருணனின் ஆயிரம் சுருக்குகளைப் {சுருக்கு கயிறு} போட்டுக் கொள்கிறான்.(74) ஒரு காரியத்தைக் குறித்து விழியாலோ, காதாலோ சாட்சியாக நின்று அறிந்தவன், பொறுப்பில்லாமல் பேசினால், அவனும் தன்மேல் ஆயிரம் வருண சுருக்குகளை {வருண பாசங்களை} மாட்டிக் கொள்கிறான்.(75) முழுமையாக ஒரு வருட முடிவில் அச்சுருக்குகளில் ஒன்று தளரும். எனவே, அறிந்தவன், உண்மையை மறைக்காமல் பேச வேண்டும்.(76) அறம் பாவத்தால் {என்ற கணையால்} துளைக்கப்பட்டு ஒரு சபையை அடைந்தால், அந்தக் கணையை அகற்ற வேண்டியது அந்தச் சபையில் இருக்கும் அனைவரின் கடமையாகும். அல்லது அவர்களே அந்த அந்தப் பாவத்தால் துளைக்கப்படுவார்கள்.(77)
ஒரு சபையில் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய செயல் கண்டிக்கப்படவில்லை என்றால், அந்தச் செயலில் இருக்கும் பாதி பாக பாவம் அந்த சபைக்குத் தலைமை தாங்குபவனைச் சாரும். கால் பாக பாவம் கண்டிக்கத்தக்க படி நடந்து கொண்டவனுக்கும், கால் பாக பாவம் அங்கிருந்த மற்றவர்களையும் சாரும்.(78) மறுபுறம், சபையில், கண்டிக்கப்பட வேண்டியவன் கண்டிக்கப்பட்டால், அந்த சபைக்குத் தலைமை தாங்குபவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாகிறான். மற்ற சபை உறுப்பினர்களுக்கு எந்தப் பாவமும் சேருவதில்லை. குற்றம் புரிந்தவன் மட்டுமே அந்தச் செயலுக்குப் பொறுப்பாளி ஆவான்.(79)
ஓ பிரகலாதா, நீதி குறித்துக் கேட்கப்படும்போது தவறாக விடை சொல்பவர்கள், தங்களிலிருந்து ஏழு தலைமுறையினர் மற்றும் தங்களுக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அறச்செயல்களை அழிக்கின்றனர்.(80) செல்வத்தை இழந்தவன், மகனை இழந்தவன், கடனாளி, உடனிருந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டவன், கணவனை இழந்த பெண், மன்னனின் ஆணைக்கேற்ப எல்லாவற்றையும் இழந்தவன், மலட்டுப் பெண், புலியால் விழுங்கப்பட்டவன், சக்காளத்தியாக இருப்பவள், போலி சாட்சியால் சொத்தை இழந்தவன் ஆகியோரின் துயரங்கள் அனைத்தும் ஒன்றே என்று தேவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.(81-83) பொய் பேசுபவன் இந்த பல்வேறு துயரங்களையும் அனுபவிப்பான். ஒரு காரியத்தைப் பார்த்தோ கேட்டோ புரிந்து கொள்ளும் மனிதன் அந்த காரியத்தின் சாட்சியாகிறான்.(84) எனவே, ஒரு சாட்சியானவன் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். உண்மை பேசும் சாட்சி தனது அறத்தகுதிகளையும் உலகம் சார் உடைமைகளையும் இழப்பதில்லை" என்றார் {காசியபர்}.(85)
காசியபரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகலாதன், தனது மகனிடம் {விரோசனனிடம்},(86) "சூதன்வான் உன்னைவிடப் பெரியவன், (அவனது தந்தை) அங்கிரஸ் என்னைவிடப் பெரியவர். சூதன்வானின் தாயும், உனது தாயைவிட பெரியவள். எனவே, ஓ விரோசனா, இந்த சூதன்வானே உனது வாழ்வின் தலைவனாவான்" என்றான்.(87)
பிரகலாதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதன்வான், "உனது மகன் மீதிருக்கும் பாசத்தால் மாறி நடக்காமல், நீ அறத்தைக் கைக்கொண்டதால், உனது மகனான இவன் {விரோசனன்} ஆயிரம் வருடங்களுக்கு வாழட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்" என்றான் {சூதன்வான்}".(88)
மேலும் விதுரன், "எனவே சபையில் இருக்கும் அனைவரும் இந்த உயர்ந்த அற உண்மைகளைக் கேட்டு, திரௌபதி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்திக்கட்டும்" என்றான்.(89)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் "இந்தப் பணிப் பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்வாயாக" என்றான்.(90)
இதன் காரணமாக துச்சாசனன், பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்றவளாகவும், நாணத்துடனும் நின்று கொண்டிருந்தவளும், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பரிதாபமாக அழுது கொண்டிருந்தவளுமான திரௌபதியை இழுக்கத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(91)
ஆங்கிலத்தில் | In English |