Draupadi rescued the Pandavas | Sabha Parva - Section 70 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : கர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது...
கர்ணன், "இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} செழிப்பை விரும்பாமலிருக்கிறார்கள்.(1) ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் ஈட்ட முடியாது. அப்படியே ஈட்டினாலும் அஃது அவர்களின் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஓர் அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவியாவாய் நீ.(2) மன்னர் திருதராஷ்டிரரின் அந்தப்புரத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய்வாயாக. அதுவே உனக்குச் சரியான காரியம் என நாங்கள் வழிகாட்டுகிறோம். ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும்தான் இப்போது உனக்குத் தலைவர்கள் ஆவர், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல.(3)
ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக. அவன் {இப்போது உன்னால் தேர்ந்தெடுக்கப்படுபவன்} உன்னை சூதில் வைத்தாடி அடிமையாக்க மாட்டான். பெண்கள், குறிப்பாக அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாகத் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கத் துணியும் போது நிந்திக்கப்படுவதில்லை.(4) எனவே, நீ அதைச் செய்வயாக. நகுலன், பீமசேனன், யுதிஷ்டிரன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோர் {எங்களால்} வெல்லப்பட்டனர். மேலும், ஓ யக்ஞசேனி {யக்ஞசேன என்றழைக்கப்படும் துருபதனின் மகளே திரௌபதி} நீ இப்போது அடிமையாக இருக்கிறாய். அடிமையாக இருக்கும் உனது கணவர்கள் இனிமேலும் உனக்குத் தலைவர்களாகத் தொடர முடியாது.(5) ஐயோ, பாஞ்சால மன்னன் துருபதன் மகளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்னால் பகடைப் பணயமாக வைத்தாடிய பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} தன் வாழ்வையும், ஆற்றலையும், ஆண்மையையும் பயனற்றதெனக் கருதவில்லையா?" என்று கேட்டான்".(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், கோபம் நிறைந்தவனுமான, பீமன் துயரத்தால் பெரும் மூச்சிரைத்தான். மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிந்து, அறம் மற்றும் கடமையால் கட்டப்பட்டு, கோபத்தால் அனைத்தையும் தனது பார்வையால் எரித்துக் கொண்டே,(7) "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தச் சூத மகனின் {கர்ணனின்} வார்த்தைகளால் எனக்குக் கோபம் வரவில்லை, ஏனெனில் உண்மையிலேயே நாம் அடிமைத்தனத்திற்குள் நுழைந்துவிட்டோம். நீர் இளவரசியை {திரௌபதியைப்} பந்தயமாக வைத்து விளையாடவில்லையெனில் நமது எதிரிகளால் என்னிடம் இப்படிப் பேச முடியுமா?" என்று கேட்டான்".(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் அமைதியாக உணர்விழந்து இருந்த யுதிஷ்டிரனிடம்,(9) "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமன் அர்ஜுனன் ஆகிய இருவரும், இரட்டையர்களும் கூட உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். (திரௌபதி கேட்ட) கேள்விக்கு நீ பதிலளி. கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ கருதுகிறாயா என்பதைச் சொல்வாயாக" என்றான்.(10)
குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசிய துரியோதனன், ராதையின் மகனை {கர்ணனை} ஊக்குவித்து பீமனை அவமதிக்க விரும்பி, வாழை மரம் போலவும், யானையின் துதிக்கையைப் போலவும் இருப்பதும், அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும் கொண்டதும், இடியைப் போன்ற பலமுடையதுமான தனது இடது தொடையை {ஆடை விலக்கித்} திரௌபதியின் பார்வையில் படும்படி வெளிக்காட்டினான்.(11,12)
இதைக் கண்ட பீமசேனன், தனது சிவந்த கண்களை அகல விரித்து, அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனிடம் (கணை போன்ற வார்த்தைகளால்) துளைப்பது போல,(13) "பெரும்போரில் உன்னுடைய இந்தத் தொடையை உடைக்கவில்லையென்றால், விருகோதரன் {பீமன்} தனது மூதாதையர்களின் நல்லுலகத்தை அடையமாட்டான்" என்றான்.(14)
கொழுந்துவிட்டெரியும் மரத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் தீப்பொறிகள் வெளிப்படுவது போல, கோபம் நிறைந்த பீமனின் அனைத்து உறுப்புகளில் இருந்தும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.(15)
பிறகு விதுரன் அனைவரிடமும், "பிரதீபரின் குலத்தைச் சேர்ந்த மன்னர்களே, பீமசேனனிடம் இருந்து எழும் பேரபாயத்தைக் காண்பீராக. பாரதர்களை விஞ்ச அச்சுறுத்தும் இந்தப் பெரும்போர் நிச்சயம் விதியால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து கொள்வீராக.(16) திருதராஷ்டிரரின் மகன்கள், நிச்சயமாக, ஒவ்வொரு சரியான கருத்தையும் கருத்தில் கொள்ளாமல் சூதாடினார்கள். அவர்கள் இப்போதும் ஒரு {அரச குலத்தைச் சேர்ந்த} பெண்மணியை {திரௌபதியைக்} குறித்து சர்ச்சை செய்து வருகின்றனர். நமது நாட்டின் செழிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஐயோ, கௌரவர்கள் இன்னும் பாவகர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.(17) கௌரவர்களே, நான் அறிவிக்கப்போகும் உயர்ந்த கட்டளைகளை உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அறத்துக்கு கொடுமை செய்தால், இந்த முழு சபையும் மாசுபடும். யுதிஷ்டிரன், அவனே வெல்லப்படுவதற்கு முன் அவளைப் {திரௌபதியை} பணயம் வைத்திருந்தானானால், அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயமாக அவளது {திரௌபதியின்} தலைவனாகக் கருதப்பட்டிருப்பான்.(18) எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவன் எந்த நேரத்தில் பணயம் வைத்தாலும், அதை வெல்வது என்பது கனவில் செல்வத்தை வெற்றிகொள்வது போன்றதாகும். காந்தார மன்னனின் {சகுனியின்} வார்த்தைகளைக் கேட்ட, இந்த சந்தேகமற்ற உண்மையில் இருந்து வீழ்ந்துவிடாதீர்கள்" என்றான் {விதுரன்}.(19)
விதுரர் இப்படிப் பேசுவதைக் கேட்ட துரியோதனன், "பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோரின் சொற்களுக்கு நான் இணங்குகிறேன். அவர்கள் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும். அப்போது, யக்ஞசேனி {திரௌபதி} தனது அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாள்" என்றான்.(20)
இதைக் கேட்ட அர்ஜுனன், "குந்தியின் சிறப்பு வாய்ந்த மகனும், நீதிமானுமான இந்த மன்னன் யுதிஷ்டிரர், விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு வரை நிச்சயம் எங்கள் தலைவராகவே இருந்தார். ஆனால், அவரே {யுதிஷ்டிரரே} தன்னைத் தோற்ற பிறகு, அவர் யாருடைய தலைவர் என்று கௌரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்றான்".(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த நேரத்தில், திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்த ஹோமம் செய்யும் அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருந்து ஒரு நரி உரக்க ஊளையிட்டது. மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்படி நரி ஊளையிட்டதைத் தொடர்ந்து, கழுதைகள் கத்தின. எல்லா புறங்களில் இருந்தும் கொடும் பறவைகள் தங்கள் கதறல்களால் பதில் சொல்லத் தொடங்கின.(22) அனைத்தையும் அறிந்த விதுரன், சுபலனின் மகள் {காந்தாரி} ஆகிய இருவரும் அந்தக் கொடும் ஒலியின் பொருளை உணர்ந்து கொண்டனர். பீஷ்மர், துரோணர், மற்றும் கல்விமானான கௌதமர் {கிருபர்} ஆகியோர் உரக்க "சுவஷ்டி! சுவஷ்டி!" {அமைதி, நல்லதே நடக்கட்டும்} என்றனர்.(23)
பிறகு காந்தாரியும், கல்விமானான விதுரனும் இந்தப் பயங்கர சகுனத்தைக் குறித்த அனைத்தையும் பெரும் துயரத்துடன் மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். அதன்பேரில் மன்னன் {திருதராஷ்டிரன்},(24) "தீய மனம் கொண்ட துரியோதனா, ஓ பாவியே, குருக்களில் காளையரின் மனைவியை {திரௌபதியை}, குறிப்பாக அவர்கள் {பாண்டவர்கள்} மணந்த மனைவியான திரௌபதியை, இப்படி அவமதிப்பாகப் பேசியதால், ஏற்கனவே அழிவு ஏற்பட்டுவிட்டது" என்று சொன்னான்.(25)
ஞானம் கொண்ட திருதராஷ்டிரன், தனது ஞானத்தின் துணை கொண்டு, தனது உறவினர்களையும், நண்பர்களையும் அழிவில் இருந்து காக்கும் பொருட்டு, பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியைச்} சமாதானப் படுத்தத் தொடங்கினான்.(26)
அவளிடம் {திரௌபதியிடம்} அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, என்னிடம் ஒரு வரத்தைக் கேட்பாயாக. கற்புள்ளவளும், அறம் சார்ந்தவளுமான நீ, எனது மருமகள்களில் மூத்தவளாவாய்" என்றான்.(27)
திரௌபதி, "ஓ பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் எனக்கு ஒரு வரம் அருளுவதாக இருந்தால், அனைத்துக் கடமைகளுக்கும் கீழ்ப்படியும், அழகான யுதிஷ்டிரர், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறட்டும்.(28) அறியாச் சிறுவர்கள், பெரும் மனோ சக்தி கொண்ட பிரதிவிந்தியனை {யுதிஷ்டிரனுக்கும், திரௌபதிக்கும் பிறந்த மகனை} அடிமையின் மகனே என அழைக்காதிருக்கட்டும்.(29) அவன் {பிரதிவிந்தியன்} இளவரசனாக இருப்பதால், அனைத்து மனிதர்களுக்கும் மேன்மையானவனாக இருக்க வேண்டும். அனைத்து மன்னர்களாலும் வளர்க்கப்பட வேண்டியவனை அடிமையின் மகனே என்று அழைப்பது முறையாகாது" என்றாள்.(30)
திருதராஷ்டிரன் அவளிடம் {திரௌபதியிடம்}, "ஓ மங்கலமானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஓ சிறந்தவளே, இன்னுமொரு வரத்தைக் கேட்பாயாக, நான் அதைத் தருவேன். உனக்கு இரண்டாவது வரம் கொடுக்கச் சொல்கிறது எனது மனம். நீ ஒரே ஒரு வரம் பெறக்கூடியவள் இல்லை" என்றான்.(31)
திரௌபதி, "ஓ மன்னா, பீமசேனர், தனஞ்சயர் {அர்ஜுனர்}, இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள் மற்றும் விற்களுடன், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சுதந்திரத்தை மீண்டும் அடையட்டும்" என்று கேட்டாள்.(32)
திருதராஷ்டிரன், "ஓ அருளப்பட்ட மகளே, நீ விரும்பியவாறே ஆகட்டும், மூன்றாவது ஒரு வரத்தைக் கேட்பாயாக, இரு வரங்கள் உனக்குப் போதுமானதல்ல. அறம் சார்ந்த நடத்தையுடைய நீ, எனது மருமகள்களில் முதன்மையானவள் ஆவாய்" என்றான்.(33)
திரௌபதி, "ஓ மன்னர்களில் சிறந்தவரே, ஓ சிறந்தவரே, பேராசை எப்போதும் அறவீழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மூன்றாவது வரம் பெறும் தகுதி எனக்கு இல்லை. எனவே நான் எதுவும் கேட்கத் துணிய மாட்டேன்.(34) ஓ மன்னர்களுக்கு மன்னா, வைசியன் ஒரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரியப் பெண் இரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரிய ஆண் மூன்று வரம் கேட்கலாம் என்றும்; பிராமணன் நூறு வரம் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.(35) ஓ மன்னா, கட்டுப்பட்ட இழிந்த நிலையில் இருந்து எனது கணவர்கள் விடுபட்டனர். அவர்களின் அறச்செயல்களால் நாங்கள் செழிப்பை அடைவோம்!" என்றாள் {திரௌபதி}.(36)
ஆங்கிலத்தில் | In English |