Bhima was pacified | Sabha Parva - Section 71 | Mahabharata In Tamil
(தியூத பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...
கர்ணன் சொன்னான், "இந்த உலகில் அழகுக்காக பெயர் பெற்ற எந்தப் பெண்மணியும் (இந்த திரௌபதயைப் போல்) இதுபோன்ற செய்கையைச் செய்து நாம் கேள்விப்பட்டதில்லை.(1) பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் போது, இந்த திரௌபதி, பாண்டவர்களின் மீட்பவளானாள்.(2) உண்மையில், இந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, படகில்லாமல் துன்பக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களுக்கு படகாகி, அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாள்" என்றான்".(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "குருக்களுக்கு மத்தியில், பாண்டுவின் மகன்கள் தங்கள் மனைவியால் காப்பாற்றப்பட்டனர் என்று சொல்லப்பட்ட கர்ணனின் வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரடைந்த கோபக்கார பீமசேனன் (அர்ஜுனனிடம்),(4) "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, சந்ததி, செயல்கள் {கர்மம்}, கல்வி {ஞானம்} ஆகிய மூன்று ஒளிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. இந்த மூன்றிலிருந்துதான் படைப்புகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தேவலர் சொல்லியிருக்கிறார்.(5) இந்த உடலை விட்டு உயிர் போன பிறகு, தூய்மையிழக்கும் இந்த உடல், உறவினர்களால் கைவிடப்படும்போது, இந்த மூன்றும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் {ஆத்மாவுக்கும்} தொண்டாற்றுகின்றன.(6) ஆனால், நமக்குள் இருக்கும் அந்த ஒளி, நமது மனைவியை அவமதிக்கும் இந்தச் செயலால் மங்குகிறது. ஓ அர்ஜுனா, இப்படி அவமதிக்கப்பட்ட மனைவியிடம் பிறக்கும் மகன், நமக்குத் தொண்டு செய்வான் என்பது எப்படி நிச்சயமாகும்?" என்று கேட்டான்.(7)
அர்ஜுனன், "ஓ பாரதரே {பீமரே}, இழிந்த மனிதர்கள் கடுஞ்சொற்களைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் மேன்மையான மனிதர்கள் பதில் பேசுவதில்லை. சொந்தமாக மதிப்பை ஈட்டிய மனிதர்கள், அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும், எதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைக்க மாட்டார்கள். மாறாக, அவர்களின் நற்செயல்களைப் புதையலாக நினைப்பார்கள்" என்றான்.(8,9)
பீமன், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இங்கே கூடியிருக்கும் எதிரிகளை இந்த அரண்மனைக்கு வெளியில் இப்போதே, நேரத்தைக் கடத்தாமல் கொன்று வேரோடு அழிக்கட்டுமா?(10) இல்லையென்றால், வார்த்தைகளுக்கும் ஆணைக்கும் என்ன தேவை இருக்கிறது? நான் இப்போதே இவர்களைக் கொன்று விடுகிறேன், ஓ மன்னா, நீர் எதிரியில்லாத இந்த மொத்த உலகையும் ஆள்வீராக" என்றான்.(11)
இப்படிச் சொன்ன பீமன், தொடர்ச்சியாகத் தனது கோபப் பார்வையைச் சுழலவிட்டு, தனது தம்பிகளுடன் கூடி இழிந்த விலங்குகளுக்கு மத்தியில் உள்ள சிங்கம் போல இருந்தான்.(12) ஆனால் நற்செயல்களையே செய்யும் அர்ஜுனன், முறையிடும் தோற்றத்துடன் தனது அண்ணனைச் {பீமனைச்} சமாதானப்படுத்தத் தொடங்கினான். பேராற்றலும், வலுத்த கரமும் கொண்ட அந்த வீரன் {பீமன்} கோபத்தால் எரியத் தொடங்கினான்.(13) ஓ மன்னா {ஜனமேஜயா}, விருகோதரனின் {பீமனின்} காதுகளில் இருந்தும் மற்ற புலன்களில் இருந்தும் நெருப்பும், புகையும், தீப்பொறிகளும் வெளிப்பட்டன.(14) பிரளய கால யமனைப் போல அவனது புருவங்கள் நெறித்து, அவனது முகத்தைக் காணப் பயங்கரமாக இருந்தது.(15) பிறகு யுதிஷ்டிரன் அந்தப் பலம் வாய்ந்த வீரனை {பீமனைத்} தடுத்து, தனது கரங்களால் கட்டி அணைத்து அவனிடம் {பீமனிடம்}, "இவ்வாறு இராதே. அமைதியுடனும், சமாதானத்துடனும் இருப்பாயாக" என்றான்.(16) கோபத்தால் கண்கள் சிவந்து இருந்த அந்தப் பெரும் கரம் வாய்ந்தவனை அமைதிப்படுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, வேண்டும் வகையில் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தனது பெரியப்பாவான திருதராஷ்டிரனை அணுகினான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
ஆங்கிலத்தில் | In English |