Pandavas started to Indraprastha | Sabha Parva - Section 72 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது...
யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடும். ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்" என்றான்.
அதற்கு திருதராஷ்டிரன், "ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. அமைதியுடனும் பாதுகாப்புடனும் நீ செல்லலாம். நீ சென்று, உனது செல்வங்களுடன் கூடிய உனது நாட்டை எனது உத்தரவின் பேரில் ஆண்டுகொள். ஓ குழந்தாய், இந்தக் கிழவனின் உத்தரவை உனது மனதில் ஏற்றுக் கொள். நான் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் நன்மைக்கும் மேன்மைக்குமே ஆகும். ஓ யுதிஷ்டிரா, ஓ குழந்தாய், அறத்தின் நுட்பமான பாதையை நீ அறிவாய். பெரும் ஞானம் கொண்ட நீ, அடக்கத்துடன் பெரியோர்களுக்காக காத்திருப்பவனாகவும் இருக்கிறாய். எங்கே புத்திசாலித்தனம் இருக்கிறதோ அங்கே பொறுமை இருக்கிறது. ஆகையால், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அமைதி ஆலோசனைகளைத் தொடர்ந்து செல். கோடரி மரத்தின் மேலேதான் விழும், கல்லின் மேல் அல்ல. (நீ அறிவுரை ஏற்பாய், துரியோதனன் ஏற்கமாட்டான்).
எதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைத்துப் பாராமல் இருப்பவர்கள் சிறந்த மனிதர்கள் ஆவர். நல்லவர்கள், பகைவர்களின் நற்செயல்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பர், தீச்செயல்களை அல்ல; எதிரிகளின் நல்லதையே பார், குறைகளைப் பார்க்காதே. அவர்களுடன் பகை கொள்ளாதே. தவிரவும் நல்லவர்கள், மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்லதைச் செய்வார்கள். ஓ யுதிஷ்டிரா, மனிதர்களில் தாழ்ந்தவர்களே சண்டையிடும் வகையில் கடுஞ்சொற்களைப் பேசுவார்கள்; அதேவேளையில் பாகுபாடு பார்ப்பவர்கள், அப்படிப் பேசப்படும் வார்த்தைகளுக்கு பதிலளிப்பார்கள். நல்லவர்கள் தங்கள் உணர்வுகளைப் போல மற்றவர்கள் உணர்வுகளையும் அறிவார்கள், ஆகையால் அவர்கள் தீச்செயல்களை நினைவுகூராமல் நற்செயல்களையே கருதிப் பார்ப்பார்கள். நீ இதுவரை மனதைக் கவரும் முகப் பாவத்துடன், அறம், செல்வம், இன்பம், முக்தி ஆகியவற்றின் வரம்புகளை மீறாமல், நல்ல மனிதனாக இருந்தாய். ஓ குழந்தாய், துரியோதனனின் கடுஞ்சொற்களை மனதில் வைத்துக் கொள்ளாதே. நீ நல்லதையே நினைக்க விரும்பினால் உனது தாய் காந்தாரியையும் என்னையும் பார்.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, என்னைப் பார், நான் இன்னும் உயிருடன் இருக்கும் கண்ணில்லாத முதிர்ந்த உனது தகப்பன். நண்பர்களைக் காணவும், எனது பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் காணவும் கூடிய கொள்கை நோக்கத்துடனேயே நான் இந்த பகடை விளையாட அனுமதித்தேன். ஓ மன்னா, உன்னை ஆட்சியாளனாகவும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த விதுரனை ஆலோசகராகவும் கொண்டிருக்கும் குருக்கள் எதற்காகவும் துயரப்படத் தேவையில்லை. உன்னில் அறம் இருக்கிறது. அர்ஜுனனில் பொறுமை இருக்கிறது, பீமசேனனிடத்தில் வீரமும் மற்றும் இரட்டையர்களிடத்தில் பெரியோரை மதிக்கும் பக்தியும் இருக்கிறது. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிரு. காண்டவப்பிரஸ்தத்திற்குத் திரும்பிச் செல். உனக்கும் உனது பங்காளிகளுக்கும் இடையில் சகோதரப் பாசம் தழைக்கட்டும். உனது மனம் எப்போதும் அறத்தில் நிலைத்திருக்கட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, பாரதர்களில் முதன்மையான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது பெரியப்பாவிடம் {திருதராஷ்டிரரிடம்} மரியாதையின் அனைத்து அங்கங்களுடன் பேசி முடித்து, தனது தம்பிகளுடன் காண்டவப் பிரஸ்தம் கிளம்பினான். திரௌபதியைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மேக வண்ணத்துடன் இருந்த தங்கள் ரதங்களில் ஏறி, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நகரங்களில் சிறந்த இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிளம்பினர்.
![]() |
![]() |
![]() |