Pandavas were asked to return | Sabha Parva - Section 73 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டனர் என்று கேள்விப்பட்ட துச்சாசனன், துரியோதனனிடம் விரைந்து சென்று சொல்வது; உடனே துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து முறையிடுவது; பாண்டவர்களை மீண்டும் விளையாட அழைப்பது...
ஜனமேஜயன் சொன்னான், "தங்கள் ரத்தினங்கள் மற்றும் செல்வங்களுடன், திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் புறப்பட்டனர் என்று தெரிய வந்த போது திருதராஷ்டிரன் மகன்களின் உணர்வு எப்படி இருந்தது?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் அவர்களது தலைநகருக்குத் திரும்பலாம் என ஞானமுள்ள திருதராஷ்டிரன் ஆணை கொடுத்தான் என்பதை அறிந்த துச்சாசனன் நேரங்கடத்தாமல் தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்} சென்றான்.(2) மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, தனது ஆலோசகருடன் இருந்த துரியோதனன் முன்னிலைக்கு வந்து, துயரத்துடன்,(3) "பெரும் பலம் வாய்ந்த வீரர்களே, நாம் இவ்வளவு சிரமப்பட்டு வென்றதையெல்லாம், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரன்} வீசி எறிந்துவிட்டார். மொத்த செல்வத்தையும் அவர் நமது எதிரிகளிடம் கொடுத்துவிட்டார்" என்றான்.(4) செருக்கால் வழிநடத்தப்பட்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, பாண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பி, ஒன்று கூடி விரைந்து சென்று விசித்திர வீரியனின் மகனான ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து, அவனை {திருதராஷ்டிரனை} மகிழ்விக்கும் தந்திரமான வார்த்தைகளால் பேசினர்.(5,6)
துரியோதனன், "ஓ மன்னா, தேவர்களுக்கு ஆசானான பிருஹஸ்பதி, சக்ரனிடம் {இந்திரனிடம்}, மனிதர்கள் மற்றும் அரசியல் குறித்து பேசியதை நீர் கேள்விப்பட்டதில்லையா?(7) ஓ எதிரிகளைக் கொல்பவரே, "தவறு செய்யும் எதிரிகளை, எப்போதும் தந்திரம் மூலமாகவும், பலத்தின் மூலமாகவும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டும் கொன்றுவிட வேண்டும்" இது தான் பிருஹஸ்பதி சொன்ன வார்த்தைகள்.(8)
எனவே நாம், பாண்டவர்களின் செல்வத்தைக் கொண்டு பூமியின் மன்னர்களை நிறைவடையச் செய்து பிறகு பாண்டுவின் மகன்களுடன் போரிட்டால், என்ன எதிர்விளைவுகள் வந்துவிடப் போகிறது?(9) ஒருவனுடைய கழுத்திலும் முதுகிலும் கோபத்திலிருக்கும் கடும் விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும்போது, அவனால் அதை எடுத்துவிட முடியுமா?(10) ஆயுதம் பொருந்திய தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கும் பாண்டுவின் கோபக்கார மகன்கள், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, நிச்சயமாக நம்மை அழித்துவிடுவார்கள்.(11)
இப்போது கூட, கவச உடை தரித்தவனும், இரு அம்பறாதூணிகளுடன் கூடியவனுமான அர்ஜுனன், அடிக்கடி தனது காண்டீபத்தை எடுத்து நீண்ட மூச்சுகளை விட்டு, தனது கோபப்பார்வையை சுற்றிலும் சுழற்றிக் கொண்டு முன்னேறுகிறான்.(12) விருகோதரன் {பீமன்}, விரைவாகத் தனது தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டு, அதன் மீது ஏறி, பெரும் எடை கொண்ட தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டே பயணிக்கிறான் என்றும் கேள்விப் படுகிறோம்.(13) நகுலன் வாளில் தனது பிடியை வைத்துக் கொண்டும், கரத்தில் தனது அரைவட்ட கேடயத்தைப் பிடித்துக் கொண்டும் பயணிக்கிறான். சகாதேவனும், மன்னனும் (யுதிஷ்டிரனும்), தங்கள் நோக்கங்களை {ஒருவருக்கொருவர்} தங்கள் அறிகுறிகளால் தெளிவாகக் காட்டியபடியே செல்கின்றனர்.(14) அவர்கள் அனைவரும் அனைத்துவித ஆயுதங்களைத் தங்கள் தேர்களில் நிரப்பி, தங்கள் குதிரைகளைச் சவுக்கால் அடித்து, (காண்டவத்திற்கு விரைவாக சென்று} தங்கள் படைகளை ஒன்றுசேர்க்கப் போகின்றனர்.(15)
நம்மால் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களால், நம்மை மன்னிக்கும் திறனற்று இருக்கிறார்கள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்களில் யார்தான் மன்னிக்க முடியும்?(16) நீர் அருளப்பட்டிருப்பீராக. நாம் மீண்டும் பாண்டுவின் மகன்களோடு பகடையாடி அவர்களை நாடு கடத்துவோம். ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, இப்படியே நாம் அவர்களை {பாண்டவர்களை} வசப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.(17) பகடையில் தோற்கும் நாமோ அவர்களோ தோலாடை பூண்டு, பனிரெண்டு வருடம் வனம் செல்ல வேண்டும்.(18) பதிமூன்றாவது வருடம், யாருக்கும் தெரியாமல், யாருக்கும் தெரியாத தேசத்தில் வாழ வேண்டும். அப்படி அவர்கள் வாழ்வது வெளிப்பட்டால், மற்றுமொரு பனிரெண்டு வருட காலம் கானகத்தில் இருக்க வேண்டும்.(19) {இவ்வுடன்பாட்டின்படி} நாமோ, அவர்களோ இப்படியே வாழ வேண்டும். பகடை வீசி விளையாட்டு தொடங்கட்டும், பாண்டுவின் மகன்கள் மீண்டும் விளையாடட்டும்.(20)
ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஓ மன்னா, இதுவே நமது மேலான கடமையாகும். இந்தச் சகுனி பகடையின் முழு அறிவியலையும் அறிவார்.(21) அவர்கள் பதிமூன்று வருடங்களை வெற்றிகரமான முடித்துத் திரும்பினாலும், நாம் அதற்குள் நாட்டில் நன்கு வேரூன்றி, பலருடன் கூட்டணி அமைத்து, அவர்களால் அணுக முடியாத பெரும் படையைக் கொண்டு அவர்களை அடக்கிவிடலாம்.(22) ஓ மன்னா, இதனால், பாண்டுவின் மகன்கள் திரும்ப வந்தாலும் அவர்களை வீழ்த்தி விடலாம். ஓ எதிரிளைக் கொல்பவனே, இந்தத் திட்டமே உமக்கு பரிந்துரைப்பதாக இருக்கட்டும்" என்றான் {துரியோதனன்}.(23)
திருதராஷ்டிரன் சொன்னான், "உண்மையில் பாண்டவர்கள் வெகு தொலைவு சென்றிருந்தாலும், அவர்களைத் திரும்ப அழைத்து வாருங்கள். பகடை வீச அவர்கள் உடனே வரட்டும்" என்றான்".(24)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு துரோணர், சோமதத்தன், பாஹ்லீகர், கௌதமர் {கிருபர்}, விதுரர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வைசிய மனைவிக்குப் பிறந்த திருதராஷ்டிரனின் பெரும் பலம் வாய்ந்த மகன் {யுயுத்சு} ஆகியோர், "விளையாட்டைத் தொடங்க வேண்டாம். அமைதி நிலவட்டும்" என்றனர்.(26) ஆனால் பிள்ளைகளிடம் பாகுபாடு கொண்ட திருதராஷ்டிரன், ஞானமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இவ்வாலோசனைகளைக் கருதாமல் பாண்டுவின் மகன்களை அழைத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)
ஆங்கிலத்தில் | In English |