Gandhari's counsel to Dhritarashtra | Sabha Parva - Section 74 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
அறத்தின் வழி நடக்கும்படி திருதராஷ்டிரனுக்கு காந்தாரி அறிவுறுத்துவது; காந்தாரியை சொல்லை மறுத்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைப்பது.
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதி, அதன்பிறகு தான் அறம் சார்ந்த காந்தாரி, தனது மகன்கள் மேல் இருக்கும் பாசத்தால் துயர் கொண்டு மன்னர் திருதராஷ்டிரனிடம், "*துரியோதனன் பிறந்த போது, பெரும் புத்திகூர்மையுள்ள விதுரர், "குலத்தைக் கெடுக்கப் போகும் இவனை {துரியோதனனை} மறு உலகத்திற்கு அனுப்புவது நலம்." என்று சொன்னார். இதை இதயத்தில் நிறுத்தும், ஓ குருக்களின் மன்னா. ஓ பாரதா, உமது தவறுக்காக பேராபத்து எனும் கடலில் மூழ்காதீர்.
ஓ தலைவா, முதிரா வயது கொண்ட இந்தத் தீயவர்களின் ஆலோசனைகளைப் பாராட்டி அங்கீகரிக்காதீர். இந்தக் குலத்தின் பயங்கர அழிவுக்கு நீரே காரணமாகாதீர். கட்டி முடிக்கப்பட்ட ஏரிக்கரையை எவன் உடைப்பான்? அல்லது அணைந்து போன நெருப்பை எவன் மறுபடி கிண்டி விடுவான்? ஓ பாரத குலத்தின் காளையே, அமைதியாக இருக்கும் பிருதையின் {Pritha-குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} எவன் தூண்டிவிடுவான்?
ஓ அஜமிதரே {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் நீர் நினைவில் வைத்திருப்பீர். இருப்பினும், நான் இந்த விஷயத்தில் உம்முடைய கவனத்தைக் கோருகிறேன். சாத்திரங்களால் தீய மனம் கொண்டோரை நன்மையாகவோ தீமையாகவோ கட்டுப்படுத்தவே முடியாது {புத்தி கெட்டவனுக்கு நன்மையையும் தீமையையும் சாத்திரங்கள் கற்பிக்காது என்கிறது ம.வீ.ரா.பதிப்பு}.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ச்சியில்லா மனிதனின் புரிதல், முதிர்ச்சியுடையோரைப் போல இருக்காது. உமது மகன்கள் உம்மைத் தலைவராக ஏற்றுத் தொடரட்டும். அவர்கள் உம்மிடம் இருந்து {அவர்கள் உயிரை இழந்துவிடாமல்} எப்போதும் பிரிக்கப்படாது இருக்கட்டும். ஆகையால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தையின்படி இந்தப் பாவியை {துரியோதனனை} நமது குலத்தில் இருந்து கைவிடுங்கள்.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன்பு உமது பிள்ளை பாசத்தால் உம்மால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவனால் {துரியோதனனால்} நமது குலம் அழியும் நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிழை செய்யாதீர். அமைதி, அறம், உண்மையான கொள்கை ஆகியவற்றால் உமது மனம் வழிநடத்தப்படட்டும். தீச்செயல்கள் மூலம் செழிப்பை அடைபவன் விரைவில் அழிக்கப்படுவான். மென்மையான செயல் மூலம் கிட்டும் செல்வம், வேர்விட்டு, கீழிறங்கி தலைமுறை தலைமுறையாக இருக்கும்" என்றாள்.
அறத்தின் வழியைக் காட்டும் வார்த்தைகளைப் பேசிய காந்தாரியால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அவளிடம் {காந்தாரியிடம்}, "நமது குலத்திற்கு அழிவு வந்திருக்கிறது என்றால், அது அப்படியே நடக்கட்டும். நான் அதைத் தடுக்க இயலாதவனாக இருக்கிறேன். அவர்கள் (எனது மகன்கள்) விருப்பப்படியே நடக்கட்டும். பாண்டவர்கள் திரும்பட்டும். எனது மகன்கள் பாண்டுவின் மகன்களோடு சூதாடட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
********************************************************************
*துரியோதனன் பிறந்த போது...........
பார்க்க:அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115
********************************************************************
*துரியோதனன் பிறந்த போது...........
பார்க்க:அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115
![]() |
![]() |
![]() |