This is the stake | Sabha Parva - Section 75 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் தூதுவர் யுதிஷ்டிரனிடம் சென்று மீண்டும் அழைத்து வருவது; சகுனி புதிய பந்தயம் பற்றிச் சொல்வது; யுதிஷ்டிரன் பந்தயத்தை ஏற்று, பகடையாட்டம் தொடங்கியது...
வைசம்பாயனர் சொன்னார், "புத்திசாலியான மன்னன் திருதராஷ்டிரனின் கட்டளைகளை ஏற்றுச் சென்ற அரசத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்த நேரத்தில் நெடுந்தூரம் சென்றிருந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரனைச் சந்தித்து,(1) "உமக்குத் தந்தையைப் போன்றவரான உமது பெரியப்பா "சபை தயாராக இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, ஓ மன்னன் யுதிஷ்டிரனே, வந்து பகடையை வீசுவாயாக" என்ற சொற்களை உமக்கு சொல்லி அனுப்பினார்" என்றான்.(2)
யுதிஷ்டிரன், "படைப்புகளுக்கு ஆணையிடுபவர் {பிரம்மா/ விதி} பகிர்ந்தளிக்கும் வண்ணமே நற்பேறு மற்றும் கேட்டின் கனியை உயிரினங்கள் பெறுகின்றன. நான் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அந்தக் கனிகள் {பலன்கள்} தவிர்க்கப்பட முடியாதனவாகும்.(3) இது பகடைக்கான உத்தரவாகும். தவிர இது கிழட்டு மன்னரின் {திருதராஷ்டிரரின்} கட்டளையும் ஆகும். எனக்கு அது அழிவைத் தான் தரும் என்றாலும் என்னால் அதை மறுக்க முடியாது" என்றான்.(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தங்கத்தாலான (உயிருள்ள) விலங்கு இருக்க வாய்ப்பில்லை என்றாலும், ராமன் மானைக் கண்டு மயங்கினான். உண்மையில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனின் மனம் ஒழுங்கு மாறி குழம்பிப் போகிறது.(5) எனவே, யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தனது தம்பிகளுடன் வந்த பாதையிலேயே மறுபடி திரும்பினான். சகுனியின் வஞ்சகத்தை முழுவதும் அறிந்தும், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, திரும்பி வந்து, மீண்டும் அவனுடன் பகடையாட அமர்ந்தான்.(6) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள், தங்கள் நண்பர்களின் மனம் பாதிக்கும் வகையில் மறுபடியும் அந்தச் சபைக்குள் நுழைந்தனர். தங்களையே அழிவுக்குள்ளாக்க, விதியால் கட்டாயப்படுத்தப்பட்டு, சூதாடுவதற்காக மீண்டும் வந்து வசதியாக அமர்ந்தனர்.(8)
சகுனி, "கிழட்டு மன்னர் {திருதராஷ்டிரர்} உங்கள் செல்வத்தை எல்லாம் மீண்டும் உங்களுக்கே கொடுத்துவிட்டார். அது நல்லதுதான். ஆனால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேள், ஒரு பெரும் பந்தயம் இருக்கிறது.(9) உன்னால் நாங்கள் வீழ்த்தப்பட்டால், மான் தோல் உடுத்தி, கானகம் நுழைந்து அங்கே பனிரெண்டு வருட காலம் வாழ்ந்து, பதிமூன்றாவது வருடம் ஏதோவோர் அறியாத தேசத்தில், யாரும் அறியா வண்ணம் வாழ்வோம். அறியப்பட்டால், மேலும் பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக கானகம் செல்வோம்.(10,11) அதேபோல எங்களால் நீங்கள் வீழ்த்தப்பட்டால், நீங்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து மான் தோலுடுத்தி, பனிரெண்டு வருடங்கள் கானகம் சென்று, பதிமூன்றாவது வருடம் யாருமறியா தேசத்தில் யாரும் அறியா வண்ணம் வாழ வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால், மேலும் பனிரெண்டு {வருடங்கள் தொடர்ச்சியாக கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது வருடம் முடிந்ததும், யாராக இருந்தாலும் அவர்கள் நாடு மற்றவரால் கொடுக்கப்படும்.(12-14) ஓ யுதிஷ்டிரா, ஓ பாரதா, இந்த உறுதியுடன் பகடை வீசி எங்களுடன் விளையாடு" என்றான்.(15)
இந்த வார்த்தைகளைக் கேட்ட சபையோர், பெரும் துயரத்துடன் தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் உணர்வுகளின் பலத்தால்,(16) "ஐயோ, துரியோதனன் நண்பர்கள், அவனது ஆபத்தை அவனுக்கு உணர்த்தவில்லையே... சீ.. சீ.. ஓ பாரதர்களில் காளைகளே, இவன் (திருதராஷ்டிரா) புரிந்து கொள்கிறானோ இல்லையோ, நீங்கள் சொல்ல வேண்டியது உங்கள் கடமை" என்றனர்.(17)
மன்னன் யுதிஷ்டிரன், இவ்வாறான பல்வேறு கருத்துகளைக் கேட்டும், வெட்கத்தாலும், அறவுணர்வாலும் மீண்டும் பகடையில் அமர்ந்தான்.(18) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாகவும், விளைவுகளை முழுமையாக அறிந்தவனாகவும் இருந்தாலும், குருக்களின் அழிவை அறிந்தவனைப் போல விளையாடத் தொடங்கினான்.(19)
யுதிஷ்டிரன், "ஓ சகுனி, தன் சொந்த வகைக்கான கடமையை நோற்று {என் தர்மத்தின் படி} வாழும் என்னைப் போன்ற ஒரு மன்னன், பகடைக்கு அழைக்கப்படும்போது எப்படி மறுப்பான்? எனவே, நான் உன்னோடு {மீண்டும்} விளையாடுவேன்" என்றான்.(20)
சகுனி, "எங்களிடம் நிறைய பசுக்களும், குதிரைகளும், கறவை மாடுகளும், கணக்கிலடங்கா ஆடுகளும், செம்மறிகளும், யானைகளும், பொக்கிஷமும், தங்கமும் இருக்கின்றன, ஆண் பெண் பணியாட்களும் இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் முன்பு பந்தயம் வைத்தோம். ஆனால் இப்போதோ இஃது ஒன்றே பந்தயம்; அதாவது கானகத்திற்கு நாடு கடத்தப்படுவது. தோல்வியுறும் நீயோ, நாங்களோ கானகத்தில் வாழ்ந்து, பதிமூன்றாவது வருடம் தலைமறைவாக யாரும் அறியாத இடத்தில் வாழவேண்டும். மனிதர்களில் காளைகளே இந்த உடன்பாட்டைப் பந்தையமாகக் கொண்டு நாம் விளையாடலாம்" என்றான்.(21-23)
ஓ பாரதா {ஜனமேஜயா}, இந்த முன்மொழிவு ஒரு முறை சொல்லப்பட்டது. பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்}, அஃதை ஏற்றுக் கொண்டான். சகுனி பாச்சிகைகளை எடுத்தான். அவற்றை {பாச்சிகைகளை} வீசியபடியே யுதிஷ்டிரனிடம் "பார், நான் வென்று விட்டேன்" என்றான்.(24)
ஆங்கிலத்தில் | In English |