The vow of Nakula | Sabha Parva - Section 76 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்...
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர்.(1) மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன்,(2) "சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர்.(3) அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்திலும், அனைத்திலும் மேன்மையடைந்தோம்.(4) எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர்.(5) செல்வத்தில் செருக்கு கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.(6)
சுபலன் மகனிடம் {சகுனியிடம்} அவர்கள் பந்தயமாக ஏற்றுக் கொண்டது போல, தங்கள் பல வண்ண கவசங்களையும், தெய்வீக ஆடை ஆபரணங்களையும் களைந்து, மான் தோலை அணிந்து கொள்ளட்டும்.(7) உலகத்தில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லையென்று தற்பெருமை பேசியவர்கள், இப்போது தங்கள் பேரிடர் காலத்தில் எள்ளுப் பதர்களைப் போலத் தங்களைக் கருதி, தங்கள் நிலையை அறிந்து கொள்வார்கள்.(8) இந்த ஆடையில் கூட பாண்டவர்கள் வேள்வியில் அமர்ந்திருக்கும் பலம் கொண்ட ஞானிகள் போல இருந்தாலும், வேள்வி செய்யத் தகாதவர்களைப் போலவும், வேடதாரிகள் போலவும் தெரிகிறார்கள்.(9)
சோமக குலத்தின் ஞானமுள்ள யக்ஞசேனன் {துருபதன்}, பாஞ்சால இளவரசியான தனது மகளை {திரௌபதியை}, பாண்டுவின் மகன்களுக்கு அளித்தான். ஆண்மையற்றவர்களுக்குத் தனது பெண்ணை அளித்ததால் அவன் நற்பேறற்ற நிலையை அடைந்தான்.(10) ஓ யக்ஞசேனி {திரௌபதி}, செல்வத்தையும், உடைமைகளையும் இழந்து, மான் தோலுடுத்தி, கந்தலான நூலாடை அணியும் உனது கணவர்களால் உனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது? இங்கே இருப்பவர்களுக்கு மத்தியில், உனக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவரைக் கணவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக.(11) இங்கே கூடியிருக்கும் குருக்கள் அனைவரும் பொறுமையும், தற்கட்டுப்பாடும், பெரும் செல்வமும் கொண்டவர்கள். இவர்களில் ஒருவரை உனது தலைவராகக் கொண்டால், இந்தப் பேரிடர் உனக்குப் பாவகர நிலையைத் தராது.(12) இந்தப் பாண்டுவின் மகன்கள் எள்ளுப் பதர்களைப் போன்றவர்களாவர்; அல்லது பார்வைக்காக தோலால் பாடம் செய்யப்பட்ட விலங்கு போன்றவர்களாவர்; அல்லது நெற்பதரைப் போன்றவர்களாவர்.(13) வீழ்ந்துவிட்டவர்களான பாண்டுவின் மகன்களுக்காக இனியும் நீ ஏன் காத்திருக்க வேண்டும்? {நீ ஏன் இன்னும் அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்?} {எண்ணைக்காக} எள்ளுப் பதரை நசுக்கும் வேலை வீணானது" என்றான்.(14)
திருதராஷ்டிரன் மகனான துச்சாசனன், பாண்டவர்களின் முன்னிலையில் இவ்வாறான கொடுமையான வார்த்தைகளைப் பேசினான். இதைக் கேட்டு பொறுமை காக்க முடியாதவனான பீமன், பெருங்கோபத்தில் திடீரென சிறு நரியை அணுகும் இமாலய சிங்கம் போல அந்த இளவரசனை {துச்சாசனனை} அணுகி, பேரொலியுடன் கண்டிக்கும் வார்த்தைகளில்,(15) "தீய எண்ணம் கொண்ட இழிந்தவனே, பாவிகள் பேசும் பேச்சைப் பேசிவிட்டு பரந்த அளவில் பாராட்டுகளைப் பெறுவாய் என்றா நினைக்கிறாய்? காந்தார மன்னனின் {சகுனியின்} திறனால் நீ முன்னேறினாய். ஆனால் மன்னர்களுக்கு முன்னிலையில் தற்பெருமை பேசுகிறாய்.(16) உனது கணை போன்ற வார்த்தைகளால் எப்படி நீ எங்கள் இதயங்களைத் துளைக்கிறாயோ, அப்படி போர்க்களத்தில், இதையெல்லாம் நினைவுகூர்ந்து உனது இதயத்தைத் துளைப்பேன்.(17) கோபத்தாலும், பேராசையாலும் உனக்குப் பின்னால் உனக்குப் பாதுகாவலாக இருப்போரையும் அவர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் உறவினர்களுடன் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன்" என்றான்".(18)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மான்தோல் உடுத்தியிருந்த பீமன் இப்படிப் பேசிவிட்டு, அறத்தின் பாதையில் இருந்து வழுவாமல், வேறு எதுவும் செய்யாமல் விட்டான். அப்போது துச்சாசனன் வெட்கமின்றி குருக்களுக்கு மத்தியில் ஆடிக் கொண்டு சத்தமாக "மாடே! மாடே!" என்றான்.(19)
இதனால் பீமன் மறுபடியும், "ஓ துச்சாசனா, பாதகா, இது போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த உனக்கு என்ன துணிவு? ஏமாற்று வித்தைகளால் எங்கள் செல்வத்தை வென்று, நீயெல்லாம் தற்பெருமை பேசுகிறாய்.(20) நான் உனக்குச் சொல்கிறேன். போர்க்களத்தில் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமனாகிய நான்} உனது இதயத்தைத் துளைத்துப் பிளந்து, உனது உயிர்க் குருதியைப் பருகவில்லையெனில், அருள் நிறைந்த பகுதிகளை அவன் அடைய மாட்டான்.(21) நான் இஃதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களை, அனைத்து வீரர்கள் முன்னிலையில் கொன்று, எனது கோபத்தை விரைவில் தணித்துக் கொள்வேன்" என்றான்".(22)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சபையை விட்டு பாண்டவர்கள் வெளியேறும் போது, தீய மன்னனான துரியோதனன், சிங்கம் போல நடக்கும் பீமனின் நடையைப் போல நடந்து காட்டி பெரும் மகிழ்ச்சியுடன் நையாண்டி செய்தான்.(23)
அப்போது, விருகோதரன் {பீமன்} மன்னனை {துரியோதனனை} நோக்கி பாதி திரும்பிய நிலையில், "ஓ மூடா, இதனால் நீ என்னை விஞ்சியவனாகி விட்டாய் என்று நினைத்துக் கொள்ளாதே. விரைவில் உன்னையும் உன்னைத் தொடர்பவர்களையும் கொல்வேன். அப்போது இதையெல்லாம் நினைவு கூர்ந்து உனக்குப் பதிலளிக்கிறேன்" என்றான்.(24)
தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைக் கண்டவனும், பெரும் பலமும் செருக்கும் கொண்டவனுமான பீமன், பொங்கும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, யுதிஷ்டிரனின் சுவடுகளைப் பின்பற்றி சென்று, அந்தக் கௌரவ அவையில்,(25) "நான் துரியோதனனைக் கொல்வேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வான். சகாதேவன் பகடைச் சூதாடியான சகுனியைக் கொல்வான்.(26) நான் இந்தச் சபையின் முன்னால் செருக்குமிக்க இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்கிறேன். இவ்வார்த்தைகளுக்குத் தேவர்கள் நன்மை செய்வர்.(27) எப்போதாவது நாங்கள் குருக்களுடன் போர் செய்தால், இந்தப் பாதகன் துரியோதனனை அப்போர்க்களத்தில் எனது கதாயுதத்தால் அடித்தே கொல்வேன். பிறகு அவனை {துரியோதனனை} தரையில் கிடத்தி, எனது பாதத்தை அவனது தலையில் வைப்பேன்.(28) தீய பேச்சு கொண்ட இந்தத் தீய மனிதன் துச்சாசனைப் பொறுத்தவரை, சிங்கம் போல நான் அவனது குருதியைக் குடிப்பேன்" என்றான்.(29)
அர்ஜுனன், "ஓ பீமரே, மேன்மையான மனிதர்களின் தீர்மானங்கள் வார்த்தைகளால் மட்டும் அறியப்படுவதில்லை. இன்றிலிருந்து பதினான்காவது வருடத்தில், அவர்கள் என்ன நடக்கும் என்பதைக் காண்பார்கள்" என்றான்.(30)
பீமன், "இந்தப் பூமி துரியோதனன், கர்ணன், தீய சகுனி, மற்றும் துச்சாசனன் ஆகிய நால்வரின் குருதியைப் பருகும்" என்றான்.(31)
அர்ஜுனன், "ஓ பீமரே, நீர் சொன்னவாறே, தீங்கிழைப்பவனும், பொறாமை கொண்டவனும், கடும் பேச்சு கொண்டவனும், வீணனுமான இந்தக் கர்ணனை நான் போர்க்களத்தில் கொல்வேன்.(32) பீமருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இந்தக் கர்ணனையும் அவனது தொண்டர்களையும் தனது கணைகளால் கொல்வதாக அர்ஜுனன் உறுதியேற்கிறான்.(33) மூடத்தனத்தால் எனக்கு எதிராகப் போரிட வரும் மன்னர்களையும் நான் யமனுலகு அனுப்புவேன்.(34) இமய மலை அகற்றப்படலாம், பகலை உண்டாக்குபவன் {சூரியன்} ஒளிழந்து போகலாம், சந்திரன் தனது குளிர்ச்சியை இழக்கலாம். ஆனால் இந்த எனது உறுதிமொழி எப்போதும் பேணப்படும்.(35) மேலும் இவை அனைத்தும் பதினான்காவது வருடத்திலேயே நிச்சயமாக நடைபெறும். துரியோதனன் உரிய மதிப்புடன் நமது நாட்டைத் திரும்பத் தர மாட்டான்" என்றான்".(36)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனன் இதைச் சொன்னதும், மாத்ரியின் அழகான மகனான பெரும் சக்தி பெற்ற சகாதேவன், சகுனியைக் கொல்ல விரும்பியவனாகத் தனது பலம் வாய்ந்த கரங்களை அசைத்துக்கொண்டும், பாம்பு போல பெருமூச்சுவிட்டுக் கொண்டும், கண்கள் சிவக்க கோபத்துடனும்,(37,38) "காந்தார மன்னர்களின் புகழைக் கெடுத்தவனே {சகுனியே}, தோல்வியுற்றார்கள் என்று யாரை நீ நினைக்கிறாயோ, அவர்கள் உண்மையில் வீழவில்லை. அவர்கள் கூரிய முனை கொண்ட கணைகளாவர். அவர்களுக்குத் தீங்கைச் செய்துவிட்டுப் போர் அபாயத்தை வரவழைத்துக் கொண்டாய்.(39) உன்னையும், உனது தொண்டர்களையும் குறித்து பீமர் சொன்ன அனைத்தையும் நிச்சயம் நான் சாதிப்பேன். உனக்கு செய்ய வேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், அந்த நாளுக்கு முன்பே செய்து முடித்துக் கொள்வாயாக.(40) ஓ சுபலனின் மகனே {சகுனியே}, அதுவரை நீ க்ஷத்திரிய நடைமுறையில் எதிர்த்துப் போரிட்டால், நான் உன்னையும், உனது தொண்டர்களையும் கொல்வேன்" என்றான்.(41)
பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சகாதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் அழகான நகுலன்,(42) "விதியால் உந்தப்பட்டு மரணத்தைவிரும்பி, யக்ஞசேனன் {துருபதன்} மகளை {திரௌபதியை} சூதாட்டத்தில் அவமதித்து, துரியோதனனுக்கு ஏற்புடைய காரியங்களைச் செய்யும் திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் நான் நிச்சயம் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்.(43,44) விரைவில், திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்துப் பார்த்து, யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரில், இந்தப் பூமியை திருதராஷ்டிரன் மகன்கள் அற்றதாக ஆக்குவேன்" என்றான்.45)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீண்ட கரங்கள் உடைய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் அவர்களுக்குள் அறம்சார்ந்த உறுதிமொழிகளை ஏற்று மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர்" {என்றார் வைசம்பாயனர்}.(46)
ஆங்கிலத்தில் | In English |