The Pandavas went away | Sabha Parva - Section 77 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்...
யுதிஷ்டிரன் சொன்னான், "எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னன் சோமதத்தனிடமும், பெரும் மன்னன் பால்ஹீகனிடமும், துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர், திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்கள், யுயுத்சு, சஞ்சயன் என அனைத்து சபையோரிடமும் நான் பிரியாவிடை கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்"
வைசம்பயாணர் தொடர்ந்தார், "அங்கிருந்த அனைவரும் அவமானத்தால் குன்றிப்போனதால் யுதிஷ்டிரனுக்கு பதிலேதும் சொல்ல இயலவில்லை. இருப்பினும் அவர்களது மனதிற்குள், அந்த புத்திசாலி இளவரசின் நன்மைக்காக வேண்டினார்கள்.
விதுரன், "மரியாதைக்குரிய பிருதை {குந்தி} பிறப்பிலேயே இளவரசி. அவள் {குந்தி} கானகத்திற்குச் செல்வது தகாது. முதிர்ந்த, மென்மையான, எப்போதும் மகிழ்ச்சிக்காக அறியப்படும் இந்த அருளுடையவள் எனது வசிப்பிடத்தில், என்னால் வணங்கப்பட்டு வாழ்ந்து வரட்டும். இதை அறிந்து கொள்ளுங்கள் பாண்டவர்களே. எப்போதும் பாதுகாப்பு உங்களுடையதாக இருக்கட்டும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள், "ஓ பாவமற்றவரே {விதுரரே}, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நீர் எங்கள் சிறிய தகப்பனார். ஆகையால் நீங்கள் எங்களுக்கு தந்தையைப் போன்றவர். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிந்தவர்கள். ஓ கற்றவரே, நீரே எங்கள் மரியாதைக்குரிய பெரியவர். உமது உத்தரவுகளுக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிவோம். ஓ உயர் ஆன்மாவே, செய்ய வேண்டியது வேறு ஏதேனும் இருப்பின் எங்களுக்கு ஆணையிடும்" என்றனர்.
விதுரன், "ஓ யுதிஷ்டிரா, பாரத குலத்தின் காளையே, பாவகர வழிகளில் வீழ்த்தப்பட்டவன் அப்படிப்பட்ட தோல்வியின் வலியை உணரத் தேவையில்லை. இது எனது கருத்து. அனைத்து அறநெறிகளையும் அறிந்தவன் நீ; போர்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் வெற்றியாளன்; பீமசேனன் எதிரிகளைக் கொல்பவன்; நகுலன் செல்வம் சேர்ப்பவன்; சகாதேவன் நிர்வாகத் திறமை உள்ளவன்; தௌமியர் வேதம் அறிந்தவர்களில் முதன்மையானவர்; திரௌபதி அறம் மற்றும் பொருளியல் அறிந்தவள். நீங்கள் ஒருவருக்கொருவர் பிணைப்புடையவர்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் மகிழ்பவர்கள். எதிரிகளால் உங்களைப் பிரிக்க முடியாது. மேலும் நீங்கள் அடக்கமானவர்கள். ஆகையால், உலகத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படாதோர் யார்? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி பொறுமையின் உருவமாக இந்த பொருள்சார்ந்த உலகத்தில் இருப்பது உனக்கு பெரிய நன்மையைத் தரும். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான எதிரிகூட அதற்கு எதிராக நிற்க முடியாது. முன்பு இமயமலையில் மேருஸாவர்ணியாலும் {முனிவராலும்}, வாரணாவத நகரத்தில் கிருஷ்ண துவைபாயனராலும் {வியாசராலும்}, பிருகு மலை நெடும்பாறைகளில் {பிருகுதுங்கம் என்ற மலை என்கிறது ம.வீ.ரா.பதிப்பு} ராமனாலும் {பரசுராமனாலும்}, திருஷத்வதி கரைகளில் சம்புவாலும் {ஜம்பு = பரமசிவனாலும்} உபதேசம் பெற்றிருக்கிறாய். மேலும் அஞ்சன மலையில் பெரும் முனிவரான அசிதரின் போதனையைக் கேட்டிருக்கிறாய். மேலும் கல்மாஷி கரையில் பிருகுவுக்கு சீடனாகியிருக்கிறாய். நாரதரும், உனது புரோகிதரான தௌமியரும் இப்போது உனக்கு உபதேசிப்பவர்களாக இருக்கிறார்கள். முனிவர்களால் உனக்குக் கிடைக்கப்பெற்ற அற்புதமான பாடங்களை கைவிட்டுவிடாதே. அவை மறு உலகத்திற்கும் பயனுள்ளவையாக இருக்கும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, புத்திகூர்மையில் நீ இளாவின் மகனான புரூரவசையே விஞ்சியிருக்கிறாய். பலத்தால் பல ஏகாதிபதிகளையும், அறத்தால் பல முனிவர்களையும் விஞ்சியிருக்கிறாய். ஆகையால், நீ இந்திரனுக்கு சொந்தமான வெற்றியை அடைவாய்; யமனுக்கு சொந்தமான கோபத்தைக் கட்டுப்படுத்து; குபேரனுக்குச் சொந்தமானதை {செல்வத்தை} தானமாகக் கொடு; வருணனுக்குச் சொந்தமான உனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்து. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சந்திரனிடம் இருந்து மகிழ்ச்சிக்குரிய சக்தியைப் பெறு. நீரில் இருந்து அனைத்தையும் அடக்கும் சக்தியைப் பெறு; பொறுமையை பூமியிடம் இருந்து பெறு; சக்தியை மொத்த சூரிய வட்டிலில் இருந்து பெறு; பலத்தை காற்றிடம் {வாயு} இருந்து பெறு; மற்ற பூதங்களிடம் இருந்து செழுமையைப் பெறு. நோயால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், நலனும் உனதாகட்டும்; நீ திரும்பி வருவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். ஓ யுதிஷ்டிரா, துன்பம், கடினம் போன்ற அனைத்து காலங்களிலும் உனது கடமையின் படி சரியாக நடந்து கொள். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எங்களிடம் விடைபெற்று செல். ஓ பாரதா, அருள் உனதாகட்டும். இதற்கு முன்பு நீ பாவம் செய்தாய் என்று யாராலும் சொல்ல முடியாது. நாங்கள் உன்னைக் காண்போம் என நம்புகிறோம், ஆகையால், பாதுகாப்புடன் வெற்றி மகுடம் தரித்து திரும்பிவா" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி விதுரரால் சொல்லப்பட்ட தடுக்க முடியா வீரம் கொண்ட பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடமும் துரோணரிடமும் பணிந்து வெளியேறினான்.
![]() |
![]() |
![]() |