Kunti's lamentation | Sabha Parva - Section 78 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது...
வைசம்பாயனர் சொன்னார், "பின்பு அனைவரும் புறப்படத் தயாரான போது, சிறப்புமிக்கப் பிருதையிடம் {குந்தியிடம்} சென்று திரௌபதி பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள்.(1) தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் அந்தப்புரத்திற்குள் இருந்து ஒப்பாரியும், அழுகையும் பேரொலியுடன் எழுந்தது.(2) அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்றவளாக, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(3)
அவள் {குந்தி}, "ஓ குழந்தாய் {திரௌபதி}, இந்தப் பேரிடரைக் கண்டு அஞ்சாதே. பெண்களின் கடமைகளை நன்கு அறிந்தவள் நீ. நடத்தைகள் எவ்வாறே இருக்க வேண்டுமோ அவ்வாறே உன்னிடம் இருக்கின்றன.(4) ஓ இனிய புன்னகை உடையவளே, உனது தலைவர்களுக்கு நீ ஆற்ற வேண்டிய கடமையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. நீ கற்புடையவளாகவும், சாதனைகளைக் கொண்டவளாகவும் இருக்கிறாய். உனது குலத்துக்கு ஏற்ற வகையிலும், புகுந்த வீட்டின் குலத்துக்கு ஏற்ற வகையிலும் உன் பண்புகள் இருக்கின்றன.(5)
உனது கோபத்தால் எரியாது போன கௌரவர்கள் நற்பேறு பெற்றவர்களே. ஓ குழந்தாய், எனது வேண்டுதல்களால் {ஜபங்களால்} நீ பாதுகாப்பாகச் சென்று வருவாயாக.(6) தவிர்க்கப்பட முடியாத காரியங்களில் நல்ல பெண்கள் மனவேற்றுமை கொள்வதில்லை. அனைத்திற்கும் மேலான அறத்தால் காக்கப்பட்டு, விரைவில் நீ நற்பேறு பெறுவாயாக.(7) கானகத்தில் வாழும்போது, எனது மகன் சகாதேவனைக் கவனித்துக் கொள்வாயாக. அவனது {சகாதேவனது} மனம் இந்த பேரிடரில் மூழ்கிப்போகாமல் பார்த்துக் கொள்வாயாக" என்றாள்.(8)
திரௌபதி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, கண்ணீரால் நனைந்து, ஒற்றையாடையில் குருதிக்கறையுடன், மயிர்க் கலைந்தவளாக தனது மாமியாரை விட்டு சென்றாள்.(9) அழுது ஒப்பாரி வைத்து சென்ற அவளை {திரௌபதியை} பிருதை {குந்தி} துயரத்துடன் பின்தொடர்ந்தாள். அவள் {குந்தி} அப்படி வெகுதூரம் சென்றிருக்கமாட்டாள், அதற்குள் அவள் {குந்தி} ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி, அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டு வருவதைக் கண்டாள். அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், நண்பர்கள் பரிதாபகரமாக நிற்பதையும் கண்டாள்.(10,11) தாயுணர்ச்சி மேலிட்டதன் காரணமாக, குந்தி அந்த நிலையில் இருந்த தனது மகன்கள் அனைவரையும் ஆரத்தழுவி துயரத்தால் தடைபட்ட சொற்களுடன் இப்படிச் சொன்னாள்.(12)
அவள் {குந்தி}, "அறம் சார்ந்த நல்லொழுக்கத்துடன், அனைத்து அற்புதமான குணங்களும், மரியாதைக்குரிய நடத்தையும் கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் உயர்ந்த மனம் படைத்தவர்கள்.(13,) எப்போதும் பெரியவர்களின் பணிவிடைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். தேவர்களுக்கும் வேள்விகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருந்த உங்களை இந்தப் பேரிடர் எப்படி ஆட்கொண்டது? இந்தப் பேறு மாறுவது எப்போது? யாருடைய தீமையால் இந்தப் பாவம் உங்களை ஆட்கொண்டது என்பது எனக்குத் தெரியவில்லை.(14) ஐயோ நானே உங்களை ஈன்றவள். என்னுடைய கெட்ட காலத்தால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. இதனால் தான் அற்புதமான அறங்களைக் கொண்ட உங்களுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தது.(15) சக்தியால், ஆற்றலால், பலத்தால், உறுதியால், பராக்கிரமத்தால் நீங்கள் குறைந்தவர்களல்லர். சொத்துகளையும் உடைமைகளையும் இழந்து, பாதைகளற்ற கானகத்தில் எப்படி ஏழ்மையில் வாழப்போகிறீர்கள்?(16)
கானக வாழ்க்கைதான் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருந்தால், {எனது கணவர்} பாண்டு இறந்த போது, சதசிருங்க மலையில் இருந்து ஹஸ்தினாபுரத்திருக்கு வந்திருக்கவே மாட்டேன்.(17) உங்கள் தந்தை {பாண்டு} நற்பேறு பெற்றவர், அவர் வருநலம் தெரிந்தவராக {தீர்க்க தரிசனுத்துடன்} தனது தவ வாழ்க்கையின் கனிகளை {பலன்களை} அனுபவித்து, விருப்பம் நிறைவேறி, மகன்களைப் பற்றி எந்தத் துன்பமும் இல்லாமல் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்.(18) அறம் சார்ந்த மாத்ரியும் நற்பேறு பெற்றவளே, அவள் {மாத்ரியும்} பின்னால் நடக்கப் போவதை அறிந்தே உயர்ந்த பாதையை அடைந்து, அனைத்து அருளையும் பெற்றாள்.(19) மாத்ரி என்னை அவளது வசிப்பிடமாகவும், தனது மனமாகவும் நினைத்து, அவளது அன்பை என்னில் நிலைக்கச் செய்தாள். ஓ.. சீ... சீ... எனக்கு உயிரின் மேலிருந்த ஆசையினால் அல்லவா இன்று துயரத்தை அனுபவிக்கிறேன்?(20) குழந்தைகளே, நீங்கள் எனக்கு அற்புதமானவர்கள், அன்பானவர்கள். உங்களை நான் பெரும் சிரமத்திற்கிடையில் பெற்றேன். என்னால் உங்களை விட முடியாது. நானும் உங்களுடன் வருகிறேன். ஐயோ, ஓ கிருஷ்ணையே {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்?(21) உயிருடன் கூடிய அனைத்தும் நிச்சயம் அழியும். தத்தா {பிரம்மா} எனது இறப்பை விதிக்க மறந்துவிட்டாரா? அப்படித்தான் இருக்கும். அதனால் தான் எனது உயிர் போகாமல் இன்னும் இருக்கிறது.(22)
ஓ கிருஷ்ணா {கிருஷ்ணன்}, துவாரகையில் இருப்பவனே, சங்கர்ஷணனின் {பலராமனின்} தம்பியே, நீ எங்கிருக்கிறாய்? இந்தத் துயரத்திலிருந்து என்னையும் இந்த மனிதர்களில் சிறந்தவர்களையும் ஏன் விடுவிக்காமல் இருக்கிறாய்?(23) ஆதியும் அந்தமும் இல்லாத நீ, உன்னை நினைப்பவர்களை விடுவிப்பாய் என்று சொல்கிறார்களே. அஃது ஏன் இப்போது பொய்யானது?(24) எனது மகன்களான இவர்கள், எப்போதும் அறத்துடன் இணைந்து, உயர்ந்தவர்களாக, நல்ல புகழும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த துயரம் தகாது. அவர்களுக்கு கருணை காட்டுவாயாக.(25)
அறநெறிகளையும், உலகளாவிய நடைமுறைகளையும் அறிந்த பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூத்தவர்கள் இருக்கும்போது இந்த பேரிடர் எப்படி வந்தது?(26) ஓ பாண்டுவே, ஓ மன்னா, நீர் எங்கே இருக்கிறீர்? உமது பிள்ளைகள் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடத்தப்படும்போது நீர் அமைதியாக இருப்பதேன்?(27) ஓ சகாதேவா, போகாதே. நீயே எனக்கு அன்பான மகன், ஓ மாத்ரியின் மகனே, நீ எனக்கு எனது உடலைவிட அன்பானவன். என்னைக் கைவிடாதே. என்னிடம் கருணை காட்டுவாயாக.(28) அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டவர்களாக உனது சகோதரர்கள் செல்லட்டும். ஆனால், நீ என்னிடம் இருந்து, எனக்காகக் காத்திருப்பதால் {என்னைப் பார்த்துக் கொள்வதால்} கிட்டும் அறத்தைப் பெற்றுக் கொள்வாயாக" என்றாள்".(29)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள், அழுது கொண்டிருந்த தங்கள் தாயை {குந்தியைச்} சமாதானப்படுத்திவிட்டு, இதயம் நிறைந்த துயரத்துடன் கானகம் சென்றனர்.(30) துயரத்தில் இருந்த விதுரனும், துயரத்தில் இருந்த குந்தியிடம் பல காரணங்களைச் சொல்லி சமாதானப் படுத்தி, அவளை மெதுவாகத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.(31) திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்மணிகள், பாண்டவர்களின் நாடு கடத்தலையும், சபைக்கு கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்பட்டதையும் கேள்விப்பட்டு, கௌரவர்களை நிந்தித்துப் பேரொலியுடன் அழுதனர்.(32) அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து, தாமரை போன்ற தங்கள் முகங்களை தங்கள் அழகான கரங்களால் மூடிக் கொண்டனர்.(33)
தனது மகன்களுக்கு வர இருக்கும் ஆபத்தை எண்ணிய மன்னன் திருதராஷ்டிரனும் துயரத்துக்கு இரையாகி, மனம் அமைதியில்லாமல் இருந்தான்.(34) ஒவ்வொன்றையும் கவனமாகத் தியானித்து, துயரத்தால் மன அமைதி இழந்தவனாக, ஒரு தூதரை விதுரனிடம் அனுப்பி, "ஒரு நொடியும் தாமதிக்காமல் க்ஷத்தன் {விதுரன்} இங்கே வரட்டும்" என்று சொன்னான்.(35)
இந்த அழைப்பின் பேரில் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு விதுரன் விரைவாக வந்தான். அவன் {விதுரன்} வந்ததும், அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம் பெரும் கவலையுடன், பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு எவ்வாறு சென்றார்கள் என்பதை விசாரித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(36)
ஆங்கிலத்தில் | In English |