Did Drona fear? | Sabha Parva - Section 79 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து கெட்டசகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது...
வைசம்பாயனர் சொன்னார், "பெரும் முன்னறியும் திறன் கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்},(1) "தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின்மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்?(2) ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்வாயாக" என்றான்.(3)
விதுரன், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது முகத்தைத் துணியால் மூடிச் சென்றான். பீமன், தனது பெரும் கரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.(4) ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மன்னனைப் பின்தொடர்ந்து சென்று, சுற்றிலும் மண்ணை வீசிச் சென்றான். மாத்ரியின் மகனான சகாதேவன், தன் மேனியில் வண்ணம் பூசிச் சென்றான்.(5) ஓ மன்னா {திருதராஷ்டிரரே} மனிதர்களில் அழகனான நகுலன் தன் மேனியில் அழுக்கைப் பூசிக் கொண்டு பெரும் துயரத்துடன் சென்றான்.(6) பெரிய கண்களை உடைய அழகான திரௌபதி, கலைந்திருந்த தனது முடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு கண்ணீருடன் அழுதுகொண்டே சென்றாள்.(7) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தௌமியர் தமது கையில் குசப் புல்லை வைத்துக் கொண்டு யமனைக் குறிப்பதும், அச்சமூட்டுவதுமான சாம வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே சாலை வழியில் சென்றார்" என்றான்.(8)
திருதராஷ்டிரன், "ஓ விதுரா, பாண்டுவர்கள் ஏன் இத்தகைய மாறுபட்ட வேடங்களில் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றனர்?" என்று கேட்டான்.(9)
விதுரன், "உமது மகன்களால் துன்புறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து நாடும், செல்வமும் திருடப்பட்டு இருந்தாலும், ஞானமும் நீதியும் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் மனம் அறத்தின் பாதையில் இருந்து வழுவவில்லை.(10) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் எப்போதும் உனது பிள்ளைகளிடம் அன்புடனேயே இருக்கிறான். நியாயமற்ற முறையில் அனைத்தையும் இழந்தாலும், அவன் {யுதிஷ்டிரன்} பெரும் கோபம் கொண்டிருந்தாலும்,(11) "எனது கோபப் பார்வையால் மக்களைப் பார்த்து அவர்களை எரித்துவிடக் கூடாது" என்று கண்களைத் திறக்காமல் செல்கிறான். அதனாலே அவன் {யுதிஷ்டிரன்} முகத்தை மூடிச் செல்கிறான்.(12)
ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீமன் ஏன் அப்படிச் செல்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக. "எனது கரங்களின் பலத்திற்கு நிகரானவர் யாருமில்லை" என்று நினைத்துக் கொண்டு தனது பெரும் கரங்களை அடிக்கடி விரித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறான். ஓ மன்னா, தனது கரத்தின் வலிமையில் கர்வம் கொண்ட விருகோதரன் {பீமன்}, அந்தக் கரங்களைக் கொண்டு எதிரிகளின் செயல்களுக்காக அவர்களை அவன் {பீமன்} என்ன செய்யப் போகிறான் என்பதைக் காட்டிக் கொண்டு செல்கிறான்.(13,14)
இரண்டு கரங்களையும் (காண்டீபத்தைத் தாங்கிப்} பயன்படுத்தவல்ல குந்தியின் மகனான அர்ஜுனன் யுதிஷ்டிரனின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி சென்று, மணல் துகள்களை தூவி, போர்களத்தில் தனது கணைகளின் மழையைக் குறிப்பால் உணர்த்துகிறான். ஓ பாரதா, மணற்துகளை எப்படி எளிதாக அவனால் வீச முடிகிறதோ அப்படித் தனது அம்புகளின் மழையை (போர்க்களத்தில்) எளிதாக எதிரிகள் மீது பொழிவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறான்.(15,16)
சகாதேவன் தனது முகத்தில் வண்ணம் பூசி, "இந்த துயர் நிறைந்த நாளில் என்னை யாரும் அறிந்து கொள்ள வேண்டாம்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான். ஓ மேன்மையானவரே, நகுலன் தனது மேனியை புழுதியால் கறைபடுத்தி, "இப்படிச் செய்யவில்லை என்றால், என்னைப் பார்க்கும் பெண்களின் இதயங்களைக் கொள்ளையிடுவேன்" என்று நினைத்துக் கொண்டு செல்கிறான்.(17,18)
கேசம் கலைந்து, கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தியிருக்கும் திரௌபதி, அழுது கொண்டே,(19) "என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் மனைவிமார், இன்றிலிருந்து பதினான்காவது ஆண்டு, தங்கள் மாதவிலக்கு காலத்தில், தங்கள் கணவர்களையும், மகன்களையும், உறவினர்களையும், அன்பானவர்களையும் இழந்து, இரத்தம் படிந்து, தலை முடி கலைந்து உடலெல்லாம் புழுதி படிந்து, (தாங்கள் இழந்தவர்களின் ஆன்மாவுக்கு) நீரால் தர்ப்பணம் செய்த பிறகு ஹஸ்தினாபுரத்துக்குள் நுழைய வேண்டும்" என்று குறிப்பால் உணர்த்தி செல்கிறாள்.(20,21)
ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உணர்ச்சிகளைத் தமது கட்டுக்குள் வைத்திருக்கும் கற்ற தௌமியர், தனது கையில் தெற்மேற்கு நோக்கிய குசப்புல்லை {தென்மேற்கு மூலையில் இருந்து தர்ப்பைப் புல்களை அறுத்து} கொண்டு, முன்னணியில் நடந்து, யமனைக் குறிக்கும் சாம வேத மந்திரங்களை உரைத்துச் செல்கிறார்.(22) ஓ ஏகாதிபதி, கல்விமானான அந்தப் பிராமணரும், "போர்க்களத்தில் பாரதர்கள் கொல்லப்படும் போது, குருக்களின் புரோகிதர்கள் இப்படியே (இறந்தவர்களின் நன்மைக்கான} சோம மந்திரங்களைப் பாடிச் செல்வர்’ என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.(23)
பெரும் துயரத்தில் இருந்த குடிமக்கள் அனைவரும், "ஐயோ, ஐயோ, எங்கள் தலைவர்கள் செல்கிறார்களே. ச்சீ… ச்சீ… பேராசை கொண்ட குருகுலப் பெரியவர்கள் சிறுபிள்ளைகள் போல் நடந்து கொண்டு பாண்டுவின் வாரிசைகளை ஒதுக்கினரே.(24) ஐயோ, பாண்டுவின் மகனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாங்கள், தலைவன் இல்லாமல் இருப்போமே.(25) தீயவர்களும், பேராசை கொண்டவர்களுமான குருக்களிடம் நாங்கள் எப்படி அன்புடன் இருக்க முடியும்?" என்றனர்.(26)
ஓ மன்னா இப்படியே பெரும் மனோ சக்தி கொண்ட குந்தியின் மகன்கள், தங்கள் இதயத்தில் இருந்த தீர்மானங்களைக் குறிப்புகளாலும், நடத்தையாலும் குறிப்பிடும் வகையில் சென்றனர்.(27)
அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதும், வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது, பூமி நடுங்கத் தொடங்கியது.(28) அமாவாசை இல்லாத போதே சூரியனை ராகு விழுங்க வந்தான். நகரத்தை வலப்புறம் கொண்டு {இடப்புறமாக} எரிகற்கள் விழுந்தன. {ஊரை அபஸவ்யமாகச் சுற்றி எரிகொள்ளி விழுந்தது}.(29) நரிகளும், கழுகுகளும், கருங்காக்கைகளும், இறைச்சி உண்ணும் வேறு விலங்குகளும் பறவைகளும், தேவர்களின் கோவில்களில் இருந்தும், புனிதமான மரங்களின் உச்சியிலிருந்தும், சுவர்கள் மற்றும் வீடுகளின் மேலிருந்தும் உரக்கக் கதறத் தொடங்கின.(30) ஓ மன்னா, உமது தீய ஆலோசனைகளின் விளைவால் இந்த இயல்புக்கு மிக்க பேரிடர் அறிகுறிகள், பாரதர்களின் அழிவைக் குறிக்கும்படி காணப்படவும் கேட்கப்படவும் செய்தன" என்றான் {விதுரன்}".(31)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இப்படி மன்னன் திருதராஷ்டிரனும், ஞானமுள்ள விதுரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது,(32) அந்த கௌரவர்கள் சபையில், அனைவரின் கண்களுக்கும் முன்னால், தேவலோக முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்} தோன்றினார். அவர்கள் அனைவருக்கும் முன்னால் தோன்றிய அவர் {நாரதர்}, பயங்கரமான வார்த்தைகளால்,(33) "துரியோதனனின் பிழையின் காரணமாக, இன்றிலிருந்து பதினான்காவது வருடம், பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள்" என்று சொன்னார்.(34) வேத அருளைத் தன்னகத்தே கொண்டிருந்த அந்த முனிவர்களில் சிறந்தவர் {நாரதர்}, இப்படிச் சொல்லிவிட்டு, வானத்தில் கடந்து சென்று, காட்சியில் இருந்து மறைந்தார்.(35)
பிறகு, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி, நாட்டை அவரிடம் {துரோணரிடம்} ஒப்படைத்தனர்.(36)
அப்போது துரோணர், பகைமையும் கோபமும் கொண்ட துரியோதனன், துச்சாசனன், கர்ணன் ஆகியோரிடமும், அனைத்து பாரதர்களிடமும்,(37) "பாண்டவர்கள் தெய்வீகத் தோற்றம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று பிராமணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து, மரியாதையுடன் இதயப்பூர்வமாக என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து, நான் அவர்களைப் பார்த்துக் கொள்வேன். ஆனால் விதி வலியது, அஃதை என்னால் மீற முடியாது.(38,39) பகடையில் தோற்ற பாண்டுவின் மகன்கள், தாங்கள் ஏற்ற உறுதிமொழிக்கு ஏற்றவாறு நாடு கடந்து செல்கிறார்கள். அவர்கள் கானகத்தில் பனிரெண்டு வருடங்கள் வாழ்வார்கள்.(40) இந்தக் காலத்தில் அவர்கள் அங்கே பிரம்மச்சரிய வாழ்வுமுறையைக் கைக்கொண்டு, பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் திரும்பித் தங்கள் எதிரிகளை வஞ்சம் தீர்க்கப் போகின்றனர்.(41)
முன்பு நடந்த ஒரு நட்பு ரீதியான போரில் நான் துருபதனை நாட்டை இழக்கச் செய்தேன். ஓ பாரதா {துரியோதனா}, என்னால் அவனது நாடு கவரப்பட்டதால், அவன் ஒரு வேள்வி செய்து, {என்னைக் கொல்வதற்காக} ஒரு மகனைப் பெற்றான்.(42) யாஜர் மற்றும் உபயாஜரின் தவ வலிமையில், துருபதனின் {வேள்வி} நெருப்பிலிருந்து திருஷ்டத்யும்னன் என்ற பெயர் கொண்ட மகனையும், களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி} என்ற மகளையும் பெற்றான். அவர்கள் இருவரும் வேள்வி மேடையில் எழுந்தவர்கள் ஆவர்.(43) பாண்டுவின் மகன்களுக்கு நடந்த திருமணத்தால் அந்தத் திருஷ்டத்யும்னன் அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} மைத்துனனாகி, அவர்களிடம் அன்புடன் இருக்கிறான். எனவே, அவனைக் {திருஷ்டத்யும்னன்} குறித்தே நான் அஞ்சுகிறேன்.(44) தெய்வீகப் பிறப்பு பிறந்து, நெருப்பு போல பிரகாசிக்கும் அவன் {திருஷ்டத்யும்னன்} பிறக்கும்போதே வில், அம்பு மற்றும் கவசத்துடன் பிறந்தான். நானோ இறக்கக்கூடிய மனிதனாவேன். எனவே, அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} நான் பேரச்சம் கொண்டிருக்கிறேன்.(45) அந்த எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான்.(46) நானும் அவனும் {திருஷ்டத்யும்னனும்} நேரடியாகப் போர்க்களத்தில் மோதும் நிலை வந்தால், நான் எனது உயிரை இழக்க நேரிடும். கௌரவர்களே, திருஷ்டத்யும்னன் தான் துரோணரைக் கொல்வான் என்ற பொது நம்பிக்கை இருக்கும் போது, இதை விட எனக்கு பெரிய துன்பம் வேறு என்ன இருக்க முடியும்? அவன் {திருஷ்டத்யும்னன்} என்னைக் கொல்லவே பிறந்திருக்கிறான் என்று நான் கேள்விப்படுகிறேன். இதுவே உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கிறது.(47,48)
ஓ துரியோதனா, உன்னால் அந்தக் கொடுமையான அழிவுக்காலம் நெருங்கி வந்துவிட்டது. உனக்கு நன்மை பயக்கும் செயல்களை நேரம் கடத்தாமல் செய்வாயாக.(49) பாண்டவர்களை நாடு கடத்திவிட்டதால், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளாதே. நீ கொள்ளும் இந்த மகிழ்ச்சி, பனிக்காலத்தில் பனை மரத்தின் அடியில் (குறுகிய காலம்) ஓய்வெடுப்பதைப் போலத்தான் நீடித்திருக்கும். ஓ பாரதா {துரியோதனா} பல்வேறு வேள்விகளைச் செய்து மகிழ்ந்து, நீ விரும்பும் அனைத்தையும் கொடையளிப்பாயாக.(50) இன்றிலிருந்து பதினான்காவது வருடம் பேரிடர் உன்னை மூழ்கடிக்கும்" என்றார் {துரோணர்}".
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரோணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன்,(51) "ஓ க்ஷத்தா {விதுரா}, ஆசான் உண்மையைச் சொல்கிறார். நீ சென்று பாண்டவர்களை அழைத்து வருவாயாக. அவர்கள் திரும்பி வர வில்லை என்றால், அவர்கள் அன்புடனும், மதிப்புடனும் செல்லட்டும். என் மகன்களான அவர்கள் {பாண்டவர்கள்} ஆயுதங்களுடனும், தேர்களுடனும், காலாட் படையுடனும் சென்று, நல்ல பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.(52)
ஆங்கிலத்தில் | In English |