Brahmanas on strike | Sabha Parva - Section 80 | Mahabharata In Tamil
(அனுத்யூத பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த அச்சத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில காரியங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...
வைசம்பாயனர் சொன்னார், "பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெருந்துயரத்தில் மூழ்கினான்.(1) அவன் அமைதியற்றவனாகக் கவலையுடன் அமர்ந்து, துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி,(2) "ஓ பூமியின் தலைவா, பூமி முழுவதையும், அதன் செல்வங்களையும் அடைந்து விட்டீர்; பாண்டவர்களையும் நாடு கடத்திவிட்டீர்; இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?" என்று கேட்டான்.
திருதராஷ்டிரன், "கூட்டணிப் படைகளின் துணையுடன், பெரும் தேர்களைச் செலுத்திப் போர் புரியும் வீரர்களில் காளைகளான பாண்டுவின் மகன்களைப் போரில் சந்திக்க வேண்டிய ஒருவன் எப்படி துக்கப்படாமல் இருக்க முடியும்?" என்று கேட்டான்.(4)
சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது தவறான செயலாலேயே இந்தப் பெரும் பகைமை தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது. இது நிச்சயம் மொத்த உலகிற்கும் அழிவைக் கொண்டு வரும்.(5) பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் தடுக்கப்பட்டும், தீய மனம் கொண்டவனும், வெட்கங்கெட்டவனுமான உமது மகன் துரியோதனன், தனது சூதத் தூதுவனிடம் {பிராதிகாமினிடம்}, பாண்டவர்களின் அன்புக்குரியவளும், அறம்சார்ந்தவளுமான அவர்களுடைய மனைவியை {திரௌபதியை} சபைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டான்.(6,7) தேவர்கள், தோல்வியையும், அவமானத்தையும் யாருக்கு கொடுக்கப் போகிறார்களோ, அவர்களுக்கு முதலில் மதிமயக்கத்தை {தேவர்கள்} ஏற்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாகத் தான் அப்படிப்பட்ட மனிதன் அனைத்தையும் வித்தியாசமாகப் பார்க்கிறான்.(8)
அழிவு அருகில் இருக்கும் போது, தீமையையும், அடக்கமின்மையையும், நேர்மையின்மையையுமே அவன் விரும்புவான். அழிவு நேரப்போகும் மனிதனுக்கு முறையற்றவை முறையானவையாகவும், முறையானவை முறையற்றவையாகவும் தோன்றும். அதையே அவன் எப்போதும் விரும்பவும் செய்வான்.(9,10) அழிவைக் கொண்டு வரும் காலம் கைகளில் தண்டத்தைக் கொண்டு வந்து தலையில் அடிப்பதில்லை. மாறாக, அந்த குறிப்பிட்ட காலத்தில், அந்த மனிதன் தீமையை நன்மையாகவும், நன்மையைத் தீமையாகவும் காணும்படி செய்யும்.(11) அந்தப் பாவிகள், ஆதரவற்ற பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} சபையின் நடுவே இழுத்து வந்ததால் பயங்கரமான கொடூரமான அழிவை மொத்தமாகப் பெற்றுக் கொண்டனர்.(12)
பெண்ணின் கருவில் பிறக்காமல் புனித நெருப்பில் பிறந்து, கடமையையும், அனைத்து அறநெறிகளையும் அறிந்து, அழகும் புத்திசாலித்தனமும் கொண்ட துருபதன் மகளை {திரௌபதியை}, போலிப் பகடையாட்டம் {பொய்யாட்டம்} ஆடும் துரியோதனனைத் தவிர வேறு யாரால் இப்படி சபைக்குக் கொண்டு வந்து அவமதிக்க முடியும்? கறைபடிந்த ஒற்றையாடை உடுத்தி மாதவிலக்காக இருந்த அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி},(13,14) சபைக்குக் கொண்டு வரப்பட்ட போது, பாண்டவர்களின் மேல் பார்வையைச் செலுத்தினாள். செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, நாடு பிடுங்கப்பட்டு, ஆடைகளும் களைந்து, அழகிழந்து, அனைத்து மகிழ்ச்சியையும் தொலைத்து, அடிமை நிலையில் இருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாள் {திரௌபதி}. அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்ட அவர்கள் தங்கள் ஆற்றலைக்காட்ட இயலாமல் இருந்தனர்.(15,16) அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனும், கர்ணனும் கொடுமையானவையும், கடுமையானவையுமான வார்த்தைகளை, அப்படி நடத்தப்படத் தகாதவளான கோபம் கொண்ட கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} பேசினர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் அச்சமூட்டும் தீமையின் முன் அறிகுறி என எனக்குப் படுகிறது" என்றான்.(17)
திருதராஷ்டிரன், "ஓ சஞ்சயா, துயரத்தில் இருக்கும் துருபதன் மகளின் பார்வையே முழு உலகத்தையும் எரித்துவிடும். அப்படியிருக்கும் போது, என் மகன் ஒருவனாவது உயிருடன் இருக்கும் வாய்ப்பிருக்கிறதா?(18) பாண்டவர்களால் மணக்கப்பட்ட மனைவியும், அழகும் இளமையும் கூடியவளும், அறம்சார்ந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபையில் இழுத்து வரப்பட்ட போது, பாரதர்களின் {துரியோதனாதிபதிகளின்} மனைவிகள் காந்தாரியுடன் கூடி பயத்தால் ஓலமிட்டு அழுதனர். குடிமக்கள் அனைவருடன் சேர்ந்து இப்போது கூட அவர்கள் தினமும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர்.(19) திரௌபதி இப்படி அவமதிக்கப்பட்ட கோபத்தால் பிராமணர்கள் அன்று மாலை செய்ய வேண்டிய அக்னிஹோத்திரச் சடங்கைச் செய்யவில்லை.(20)
பிரளய காலத்தில் நடப்பது போலக் காற்று கடும்பலத்துடன் வீசியது. அங்கே கடும் இடியுடன் கூடிய புயலும் ஏற்பட்டது. எரிகற்கள் விண்ணிலிருந்து விழுந்தன. காலமற்ற காலத்தில் சூரியனை ராகு விழுங்கி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தினான். நமது போர் தேர்கள் திடீரென எரிந்தன.(21-23) அவற்றின் கொடிக் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இவை அனைத்தும் பாரதர்களுக்கு நேரப்போகும் தீங்கினைப் பகன்றன. துரியோதனனின் வேள்வி அறையில் இருந்து நரிகள் ஊளையிட்டன.(24) அனைத்துப் புறத்திலிருந்தும் கழுதைகள் பதிலுக்கு கத்த தொடங்கின. பிறகு, பீஷ்மர், துரோணர், கிருபர், சோமதத்தன், உயர் ஆன்ம பாஹ்லீகர் ஆகியோர் சபையை விட்டுச் சென்றனர்.
இதன்பிறகுதான் நான் விதுரனின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்},(25,26) "ஓ கிருஷ்ணையே, நான் உனக்கு வரங்களை வழங்குகிறேன். நீ என்ன விரும்புகிறாயோ அதை நிச்சயம் கொடுக்கிறேன்" என்றேன். பாஞ்சால இளவரசி பாண்டவர்களின் விடுதலையைக் கோரினாள்.(27) எனது சுய விருப்பத்தின் பேரில், நான் பாண்டவர்களை விடுவித்து, அவர்களை {பாண்டவர்களை} அவர்களது தேர்கள் விற்கள் மற்றும் அம்புகளுடன் {அவர்களது தலைநகருக்கு - காண்டவப்பிரஸ்தத்திற்கு / இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பிச் செல்ல ஆணையிட்டேன்.(28)
அதன் பிறகு தான் விதுரன் "சபைக்குள் கிருஷ்ணையை இழுத்து வந்த காரியம் நிச்சயம் பாரத குலத்தை அழிவடையச் செய்யும். பாஞ்சால மன்னனின் மகளான இவள் {திரௌபதி} களங்கமற்ற ஸ்ரீ ஆவாள்.(29) தெய்வீகப் பிறவியான இவள் {திரௌபதி} பாண்டவர்கள் மணந்த மனைவியாக இருக்கிறாள். இவளுக்கு நேர்ந்த அவமதிப்பைப் பாண்டுவின் கோபக்கார மகன்கள் மன்னிக்க மாட்டார்கள்.(30) விருஷ்ணி குல வில்லாளிகளும் மன்னிக்க மாட்டார்கள். பெரும் பலம் வாய்ந்த வீரர்களான பாஞ்சாலர்களும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். தடுக்க முடியாத ஆற்றலைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} துணை கொண்டு,(31) நிச்சயம் அர்ஜுனன் பாஞ்சாலப் படையுடன் திரும்பி வருவான். பெரும் பலம் வாய்ந்த பீமசேனனும் தனது கதாயுதத்தை யமனைப் போலச் சுழற்றிக் கொண்டு வருவான். பீமனுடைய கதாயுதத்தின் பலத்தை இந்த மன்னர்களால் தாங்க முடியாது. எனவே, ஓ மன்னா, பாண்டவர்களிடம் பகைமையில்லாமல் எப்போதும் அமைதியும் சமாதானமுமாக இருப்பதே சிறந்ததாகப் படுகிறது.(32-34) பாண்டுவின் மகன்கள் எப்போதுமே குருக்களைவிட {கௌரவர்களைவிட} பலசாலிகள்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, சிறப்பும் பெரும் பலமும் வாய்ந்த மன்னன் ஜராசந்தனைப்(35) பீமன் தனது வெறும் கைகளாலேயே கொன்றான் என்பதை நீர் அறிவீர். எனவே, ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு சமாதானம் செய்து கொள்வதே உமக்குத் தகும்.(36) எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, ஓ மன்னா, இருதரப்பையும் ஒற்றுமையடையச் செய்வீராக. ஒ மன்னா, நீர் இந்த வழியில் நடந்து கொண்டால், நிச்சயம் நற்பேற்றைப் பெறுவீர்." என்றான் {விதுரன்}.(37)
{திருதராஷ்டிரன் தொடர்ந்தான்} ஓ கவல்கனனின் மகனே {சஞ்சயா}, விதுரன், அறமும் பொருளும் சார்ந்த இவ்வாறான வார்த்தைகளில் என்னிடம் பேசினான். எனது மகன் மீது நான் கொண்ட பாசத்தினால், நான் அவனது {விதுரனது} ஆலோசனையை ஏற்கவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}" {என்றார் வைசம்பாயனர்}.(38)
************ சபா பர்வம் முற்றும் ************
ஆங்கிலத்தில் | In English |