Kirmira slained! | Vana Parva - Section 11b | Mahabharata In Tamil
(கிர்மீரவத பர்வத் தொடர்ச்சி)
கிர்மீரன் பீமன் மோதல், பீமன் கிர்மீரனைக் கொல்வது; விதுரன் இவை யாவற்றையும் திருதராஷ்டிரனுக்கு சொல்வது; திருதராஷ்டிரன் துக்கமடைந்து சிந்தனையில் ஆழ்வது...
விதுரன் தொடர்ந்தான், "தனது உறுதிமொழிகளில் உறுதியான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், இப்படி ராட்சசனால் சொல்லப்பட்டதும், "அப்படி ஆகவே முடியாது" என்று ராட்சசனை {கிர்மீரனைக்} கண்டித்தான். பிறகு பெரும் பலம்வாய்ந்த பீமன், தன்னைப் போல பத்து பாகம் நீளமுள்ள ஒரு மரத்தை வேகமாகப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான். எப்போதும் வெற்றிவாகை சூடும் அர்ஜுனன், சிறு காலத்திற்குள் இடியின் விசையைக் கொண்ட தனது காண்டீவத்தின் நாணை ஏற்றினான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தடுத்த பீமன், மேகத்தைப் போன்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசனை அணுகி, அவனிடம், "நில்! நில்!" என்று அந்த நரமாமிச உண்ணியிடம் தெரிவித்தான்.
இடுப்பைச் சுற்றித் தனது ஆடைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, தனது உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டு, உதடுகளைப் பற்களால் கடித்து, மரத்தை எடுத்துக் கைகளில் ஏந்தி எதிரியை நோக்கி முன்னேறினான் பலம்வாய்ந்த பீமன். இடியைச் சுழற்றிச் செல்லும் மகவத்தைப் {இந்திரனைப்} போல, பீமன் அந்த மரத்தை, யமனின் கதாயுதம் போலத் தோன்றச் செய்து, பெரும் பலத்துடன் அதை அந்த நரமாமிச உண்ணியின் தலையில் இறக்கினான். அடியால் தாக்குண்ட அந்த ராட்சசன் சற்றும் அசராமல் நின்றான். மறுபுறம், தனது கைகளில் இருந்த எரிகொள்ளியைச் சுழற்ற, மின்னலைப் போல் இருந்த அதை பீமன் மீது வீசினான். ஆனால் அந்த வீரர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது இடது காலால் அதை அணைத்து, வந்த வேகத்தில் அது ராட்சசனை {கிர்மீரனை} நோக்கி செல்லுமாறு செய்தான்.
பிறகு அந்தக் கொடுமையான கிர்மீரன், தனது பங்குக்கு ஒரு மரத்தைத் திடீரெனப் பிடுங்கி கதையுடன் கூடிய யமனைப் போலப் போர்புரியத் தொடங்கினான். மரங்களுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கிய அந்தச் சண்டை பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்காக, வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த சண்டை போல இருந்தது. போரிடுபவர்களின் தலையில் அடிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் யானையின் தலையில் தூவப்பட்ட தாமரைத் துணுக்குகள் போல துண்டு துண்டாகின. அந்தப் பெரும் வனத்தில் இருந்த கணக்கிலடங்கா மரங்கள், நாணல் போல நசுக்கப்பட்டு, கந்தலாகத் தரையில் கிடந்தன.
ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {கிர்மீரனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த மரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட அந்தச் சண்டை சிறிது நேரமே நீடித்தது. பிறகு செங்குத்தான ஒரு பாறையைத் தூக்கிய அந்தக் கோபம் நிறைந்த ராட்சசன் தனது எதிரில் நின்று கொண்டிருந்த பீமன் மீது வீசினான். ஆனால் பீமன் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. பிறகு, பாறையின் தாக்குதலில் அசையாது நின்ற பீமனை நோக்கி கதிர்களை வெளியேற்றும் சூரியனை விழுங்கச் செல்லும் ராகுவைப் போல தனது நீண்ட கரங்களை நீட்டினான். முட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் இரு கோபக்கார களைகள் போல இருவரும் ஒருவருக்கு எதிராகப் போராடினர். அல்லது இரு பெரும் பலம் வாய்ந்த புலிகள் தங்கள் பற்களாலும் கூரிய நகங்களாலும் போரிடுவதுபோல கடுமையாகப் போரிட்டனர்.
துரியோதனன் கைகளில் (முன்பு) அவமானப்பட்டதை நினைத்தும், தனது பலம் நிறைந்த கரங்களில் கர்வம் கொண்டும், கிருஷ்ணை {திரௌபதி} தன்னை நோக்குவதை உணர்ந்தும், விருகோதரன் மிகுந்த ஆவேசம் அடைந்தான். கோபத்தால் பொறிந்த பீமன் தனது கரங்களால் அந்த ராட்சசனை மதம் கொண்ட யானை மற்றொரு யானையைப் பற்றுவது போல பற்றினான். அந்தப் பலம் நிறைந்த ராட்சசனும் தனது எதிரியைப் பற்றினான். ஆனால், மனிதர்களில் முதன்மையான பலம் நிறைந்த பீமசேனன், அந்த நரமாமிச உண்ணியை வன்முறையுடன் தூக்கி எறிந்தான். அந்த இரு பெரும் போராளிகளும் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றுவது, மூங்கில் முறிவது போன்ற பயங்கரமான ஒலியை உண்டாக்கியது. அந்த ராட்சசனைக் கீழே தள்ளி, அவனது இடையைப் பற்றி, கடும்புயல் மரத்தைச் சுழற்றுவது போல அந்த ராட்சசனைச் சுழற்றத் தொடங்கினான் {பீமன்}.
இப்படி பலம் நிறைந்த பீமனால் பற்றப்பட்ட ராட்சசன் {கிர்மீரன்} சோர்வடைத் தொடங்கி நடுங்கினான். இருப்பினும் தனது பலம் முழுவதையும் செலுத்தி எதிர்த்தான். அவன் {கிர்மீரன்} களைப்படைவதைக் கண்ட விருகோதரன் {பீமன்}, மிருகத்தை கயிறால் கட்டுவது போல தனது கரங்களைக் கொண்டு அந்த எதிரியைக் கட்டினான். அதனால் அந்த மிருகம் பழுதான ஊதுகுழலைப் போல பயங்கரமாக கத்தினான். பிறகு பலம் நிறைந்த விருகோதரன் {பீமன்} நீண்ட நேரத்திற்குச் சுழற்றினான். ராட்சசன் உணர்வற்றவன் போல கலங்கிப் போய் நடந்தான். சக்தியிழந்த ராட்சசனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} நேரத்தைக் கடத்தாமல் மிருகத்தைக் கொல்வது போலக் கொன்றான்.
தனது கால் முட்டியை அந்த இழிந்த ராட்சசனின் இடுப்பில் வைத்த விருகோதரன், அந்த எதிரியின் கழுத்தைத் தனது கைகளால் அழுத்தினான். கண்கள் மூடும் நிலையில் ராட்சசனின் நசுக்கப்பட்ட உடலை இழுத்துச் சென்ற பீமன் "ஓ இழிந்த பாவியே {கிர்மீரனே}, இனி நீ ஹிடிம்பன் அல்லது பகனின் கண்ணீரை துடைக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நீ எமனுலகு செல்லப் போகிறாய்" என்று சொன்னான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன், இதயத்தில் கோபம் நிறைந்து, ஆடை ஆபரணம் மற்றும் உணர்வு ஆகியவற்றை இழந்த அந்த ராட்சசன் {கிர்மீரன்} வலிப்புடன் இருந்த போது, அவனைச் சாகும்படி விட்டான். மேக நிறம் கொண்ட அந்த ராட்சசனை {கிர்மீரனைக்} கொன்ற பிறகு, மன்னர்களில் சிறந்தவனின் {பாண்டுவின்} மகன் {யுதிஷ்டிரன்}, பீமனை அவனது பல குணங்களுக்காகப் புகழ்ந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} அவர்கள் முன்பு விட்டு, துவைத வனத்திற்குக் கிளம்பினர்.
விதுரன் சொன்னான், "ஓ மனிதர்களின் தலைவா {திருதராஷ்டிரா}, இப்படியே அந்தச் சண்டையில் நீதிமானான யுதிஷ்டிரனின் கட்டளைக்கு இணங்கி பீமனால் கிர்மீரன் கொல்லப்பட்டான். பாரத குலத்தைச் சேர்ந்த அந்தக் காளைகள் திரௌபதியை வசதியாக விட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் பீமனை அதிகமாகப் புகழ்ந்தனர். பீமனுடைய கரங்களின் வலிமையால் ராட்சசன் கொல்லப்பட்ட பிறகு, அந்த வீரர்கள் தொல்லைகளில் இருந்து விடுபட்ட அந்த அமைதியான காட்டில் நுழைந்தனர். அந்தப் பெரும் வனத்திற்குள் நுழைந்த போது, பீமனால் அச்சமின்றி கொல்லப்பட்ட அந்தத் தீய ராட்சசனின் {கிர்மீரனின்} உடலை நான் கண்டேன். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் இந்தச் சாதனையை, பாண்டவர்களைச் சூழ்ந்து இருக்கும் அந்தணர்களிடம் இருந்து கேள்விப்பட்டேன்"
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ராட்சசர்களில் முதன்மையான கிர்மீரன் சண்டையில் கொல்லப்பட்டதை அறிந்த மன்னன் {திருதராஷ்டிரன்} துக்கத்தால் பெருமூச்சு விட்டு, சிந்தனையில் ஆழ்ந்தான்.
******************கிர்மீரவத பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.