Arjuna's eulogy to Krishna | Vana Parva - Section 12a | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வம்)
விருஷ்ணிகள், பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டதை அறிந்து கோபத்துடன் இருந்த பாண்டவர்களைக் கானகத்தில் சந்தித்தல்; பாண்டவர்களின் நிலை கண்டு கிருஷ்ணன் கோபம் கொள்ளுதல்; கிருஷ்ணனைச் சமாதானப்படுத்த அர்ஜுனன் துதி பாடல்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோர் அந்தப் பெரும் வனத்தில் துயரத்தில் இருந்த வீரர்களிடம் சென்றனர். பாஞ்சாலர்களுக்கு இரத்த உறவுகளும், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேதுவும், உலகத்தால் கொண்டாடப்படும் பலம் நிறைந்த சகோதரர்களான கேகேயர்களும், கோபத்தால் எரியும் இதயங்களுடன், பிருதையின் {குந்தியின்} மகன்களைக் காண அந்தக் கானகத்திற்குச் சென்றனர். திருதராஷ்டிரன் மகன்களை நிந்தித்த அவர்கள், "நாம் என்ன செய்வது?" என்றனர். க்ஷத்திரிய குலத்தின் அந்தக் காளைகள், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். குருக்களில் முதன்மையானவர்களை மரியாதையுடன் வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்} துக்கத்துடன், "இந்தப் பூமி, துரியோதனன், கர்ணன், துட்சாசனன், தீய சகுனி ஆகியோரது இரத்தத்தைக் குடிக்கும்! இவர்களைப் போர்க்களத்தில் கொன்று, அவர்களைப் பின்பற்றுபவர்களையும், அரசு முறை கூட்டாளிகளையும் வீழ்த்தி, நாம் நீதிமானான யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தலாம்! தீயவர்கள் கொல்லப்படத்தக்கவர்கள்! இதுவே நிலைத்த அறநெறியாகும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு நடந்த அநீதியின் காரணமாக, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} படைக்கப்பட்ட அத்தனைப் பொருட்களையும் எரிக்கும்படி கோபம் கொண்டான். அர்ஜுனன் அவனைச் சமாதானப் படுத்தினான். கேசவன் {கிருஷ்ணன்} கோபமடைந்ததைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அனைத்து பொருட்களுக்கும் ஆன்மாவானவன் {கிருஷ்ணன்}, அளக்க முடியாதவன், நிலையானவன், எல்லையற்ற சக்தி கொண்டவன், பிரஜாபதியின் தலைவன், அனைத்து உலகங்களின் முதன்மை ஆளுனாகிய ஆழமான ஞானம் கொண்ட விஷ்ணு {கிருஷ்ணன்} முற்பிறவிகளில் சாதித்த சாதனைகளை உரைக்க ஆரம்பித்தான்"
"அர்ஜுனன், "பழங்காலத்தில், ஓ கிருஷ்ணா, மாலை சந்திக்கும் இடத்தை வீடாகக் கொண்ட முனிவனாக பத்தாயிரம் {10000} வருடம் கந்தமாதன மலைகளில் உலவினாய்! பழங்காலத்தில் நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து, புஷ்கரா ஏரியின் அருகில் பதினோராயிரம் {11000} வருடங்கள் வசித்திருந்தாய்! ஓ மதுவைக் கொன்றவனே, கரங்களை உயர்த்தி, ஒற்றைக் காலில் உயர்ந்த மலைகளான பதரிகா மலைகளில் காற்றை மட்டுமே உட்கொண்டு நூறு {100} வருடங்கள் நின்று கழித்தாய். மேலாடை களைந்து, உடல் மெலிந்து, நரம்புகளால் ஆன உருவம் போல சரஸ்வதி நதிக்கரையில் இருந்து, பனிரெண்டு {12} வருட வேள்வியைச் செய்தாய்! ஓ பெரும் பலமும் சக்தியும் கொண்ட கிருஷ்ணா, ஆயிரம் {1000} தேவ வருடங்கள் நெடுக ஒற்றைக் காலில் அறவோர் வந்து போகும் பிரபாசம் என்ற சமவெளியில் நின்றிருந்தாய்.
நீயே படைப்புகளுக்கு காரணமும் வழியுமாக இருக்கிறாய் என்று வியாசர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஓ கேசவா, க்ஷேத்திரத்தின் தலைவா {நினைவு நிலை, அறிவு, அத்தியாவசிய உறுப்புகள், பத்து உணர்வுகள், பஞ்சபூதங்கள், ஆசை, வெறுப்பு, இன்பம், வலி, உறுப்புகளின் கலவை மற்றும் சைத்தன்யம் ஆகியவை அடங்கிய மகாபூதத்தின் தலைவா}, நீ அனைத்து மனங்களையும் அசைப்பவன், அனைத்துப் பொருட்களுக்கு ஆதியும் அந்தமும் ஆனவன்! அனைத்து தவங்களும் உன்னிலேயே ஓய்கின்றன. நீயே அனைத்து வேள்விகளையும் உள்ளடக்கிய நித்தியமானவன்! இந்த பூமியின் முதல் வாரிசான அசுரன் நரகனைக் கொன்று, அவனது காது குண்டலங்களை அடைந்தாய். முதல் குதிரை வேள்வியை {அசுவமேத யாகத்தை} {அந்த அசுரனையே வேள்விக் குதிரையாக்கி} நீயே செய்தாய்.
ஓ அனைத்து உலகங்களின் காளையே, இச்சாதனையைச் செய்து, அனைத்தையும் வென்றவன் நீ! தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போரில் கொன்றவன் நீ. பெரும் கரம் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்கு} அண்ட ஆளுகையைக் கொடுத்து, மனிதர்களுக்கு மத்தியில் நீ பிறந்திருக்கிறாய்! ஓ எதிரிகளைக் கொல்பவனே, ஆதி நீரில் மிதந்து, அதன் தொடர்ச்சியாக ஹரி, பிரம்மன், சூரியன், தர்மன், தத்ரி, யமன், அனலன், வசு, வைஸ்ரவணன், ருத்ரன், காலன், வானம் மற்றும் பத்து திக்குகள் ஆகியவர்களாக ஆனாய். சுயம்புவாக உருவாகி, இந்த அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனை ஆகியவற்றின் தலைவனாக இருக்கிறாய். அனைத்து பொருட்களின் படைப்பாளனாய் இருக்கிறாய். இருப்பு கொண்டுள்ளவைகளில் முதன்மையானவன் நீயே!
ஓ மதுவைக் {மது என்ற அசுரனைக்} கொன்றவனே, ஓ அபரிமிதமான சக்தி படைத்தவனே, ஓ கிருஷ்ணா, சைத்திரரத வனத்தில், அனைத்து தேவர்களின் தலைவனை வேள்வி செய்து திருப்தி செய்தாய்! ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒவ்வொரு வேள்வியிலும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கத்தை பகிர்ந்து கொடுத்தாய். ஓ யாதவகுலத்தின் மகனே, ஓ முதன்மையான தன்மைகள் கொண்ட மேன்மையானவனே, *அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்! ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ கிருஷ்ணா, நீ குழந்தையாய் இருக்கும்போதே, உனது சக்தியால், சொர்க்கத்தையும், வானத்தையும் பூமியையையும் மூன்று அடியால் அளந்தாய்! சொர்க்கத்தையும் வானத்தையும் மூடும் ஆன்மா கொண்டவனே, சூரியனின் உடலில் தங்கி, அவனுக்கு உள்ளிருந்து நீயே பிரகாசிக்கின்றாய்.
ஓ மேன்மையானவனே, ஆயிரக்கணக்கான உனது அவதாரங்களில், ஓ கிருஷ்ணா, நீ, நூற்றுக்கணக்கான அசுரர்களைக் கொன்றிருக்கிறாய். மௌரவர்களையும், பாஷர்களையும் அழித்து, நிசுந்தன் மற்றும் நரகனைக் கொன்று, பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் வழியைப் பாதுகாப்பாக்கினாய்! ஜாருதியில் அஹ்பிருத்தியையும், கிராதன் மற்றும் சிசுபாலனையும், அவர்களின் ஆதரவாளர்களையும், ஜராசந்தன் மற்றும் சைப்பியன் மற்றும் சததன்வன் ஆகியோரையும் நீயே கொன்றாய். மேகங்களைப் போல கர்ஜிக்கும் உனது ரதத்தில், சூரியனைப் போலப் பிரகாசித்து, போர்க்களத்தில் ருக்மியை வீழ்த்தி, போஜரின் மகளை {ருக்மிணியை} உனது ராணியாகக் கொண்டாய். இந்திரத்தியும்னனையும், யவனனான கசேருமனையும் நீயே கொன்றாய்! சௌபாவின் தலைவனான சால்வனைக் கொன்று, சௌபா நகரத்தை அழித்தவன் நீயே! உன்னால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை மேலும் சொல்கிறேன் கேள். கார்த்தவீர்யனுக்கு நிகரான மன்னன் போஜனை ஐராவதியில் வைத்துக் கொன்றாய், கோபதியும், தலகேதுவும் உன்னால் கொல்லப்பட்டனர்!
ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, புனிதமான நகரமும், செல்வச்செழிப்பும், முனிவர்களுக்கு ஏற்புடையதுமான துவாரகையை நீயே உண்டாக்கினாய், கடைசியில் நீயே அந்நகரத்தை கடலுக்குள் மூழ்கடிப்பாய். ஓ மதுவைக் கொன்றவனே, கோபம், பொறாமை, பொய்மை, கொடுமை ஆகியவற்றைக் களைந்திருக்கும் உன்னில் எப்படி கபடம் இருக்க முடியும்? ஓ தேய்மானத்தை அறியாதவனே, வேள்விக்களத்தில் அமர்ந்திருக்கும் உன்னை முனிவர்கள் அணுகி, உனது பாதுகாப்பைக் கோருகின்றனர். ஓ மதுவைக் கொன்றவனே, யுக முடிவில்,அனைத்தையும் அழித்து, அனைத்தையும் உனக்குள் நீயே ஏற்றுக் கொள்கிறாய்.
ஓ விருஷ்ணி குலத்தவனே, யுக ஆரம்பத்தில், தாமரை போன்ற உனது தொப்புளில் இருந்து அசையும் மற்றும் அசையா பொருட்களின் தலைவனான பிரம்மன் உதிக்கிறான். இந்த முழு அண்ட மும் உன்னுடையதே! கொடும் தானவர்களான மது கைதவன் ஆகியோர் பிரம்மனைக் கொல்ல நினைத்த போது, ஓ ஹரி, நீ அதைக் கண்டு, உனது நெற்றியில் இருந்து திரிசூலம் தாங்கும் சம்புவை {சிவனை} ஊற்றெடுக்கச் செய்தாய். இப்படியே இந்த இரு தெய்வங்களும் உனது உடலில் இருந்து, அவர்கள் வேலையைச் செய்ய எழுந்தனர்! இவை யாவையும் நாரதரே எனக்குச் சொன்னார்.
ஓ நாராயணா, பல்வேறு சடங்குகள் கொண்ட பெரும் வேள்வியை பல பரிசுகள் கொடுத்து கொண்டாடி சித்திரரத வனத்தில் நீயே செய்தாய்! ஓ தெய்வமே, ஓ தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவனே, குழந்தையாய் இருக்கும்போதே உனது பலத்தைக் கொண்டும், பலதேவரின் {பலராமரின்} உதவியைக் கொண்டும் நீ செய்த சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. அந்தணர்கள் சூழ கைலாசத்திலும் வசித்தவன் நீயே!" என்று வழிபட்டான் {அர்ஜுனன்}.
------------------------------------------------------------------------------------------------* ஓ! கிருஷ்ணா,அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்!
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65
பரம்பரைகள் ஆய்வு | ஆதிபர்வம் - பகுதி 66
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.