The prowess of the sons of Krishna | Vana Parva - Section 16 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
சால்வனின் படைபலத்தை கிருஷ்ணன் விவரித்தல்; கிருஷ்ணனின் மகன்களான சாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன் ஆகியோர் சால்வப் படைகளிடம் காட்டிய வீரத்தைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொல்வது….
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, சௌபத்தின் தலைவன் சால்வன், காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகள் கொண்ட பெரும் படையுடன் எங்கள் நகரத்தை நோக்கி வந்தான்! மன்னன் சால்வனின் தலைமையில் வந்த நால்வகைப் படைகளும் அதிகமான நீர் சூழ்ந்த சமவெளியில் நின்றன. கல்லறைகள், தேவர்களுக்கு அர்ப்பணித்திருந்த கோவில், புனிதமான மரங்கள், எறும்புப் புற்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவனது {சால்வனின்} படையே நிரம்பியிருந்தது. (நகரத்தை நோக்கி செல்லும்) சாலைகள் அனைத்தும் அந்தப் படைகளின் பிரிவுகளால் தடுக்கப்பட்டன. ரகசிய வழிகளும் எதிரிகளின் முகாமால் தடுக்கப்பட்டிருந்தது. கௌரவரே, மனிதர்களில் காளையே (யுதிஷ்டிரரே}, சௌபத்தின் ஆட்சியாளன் {சால்வன்}, அனைத்துவிதமான ஆயுதங்களுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களுடனும், அடர்ந்த காட்சி கொண்ட, ரதங்கள், யானைகள், பதாகைகளுடன் கூடிய குதிரைப் படை, நல்ல முறையில் கூலி கொடுக்கப்பட்ட பலமும் அனைத்து நற்குறிகளும் கொண்ட காலாட்படை வீரர்கள், பறவைகளின் தலைவனைப் போல (கருடனைப் போல), அற்புதமான ரதங்களில் வில்லுடன் கூடிய ரதவீரர்கள் ஆகியோருடன் பறவைகளின் மன்னனைப் போல (கருடனைப் போல) துவாரகையை நோக்கி விரைவாக வந்தான்.
சால்வனின் படையைக் கண்ட விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} இளைஞர்களான இளவரசர்கள், அவர்களுக்கு {சால்வ படையினருக்கு} நகருக்கு வெளியே பதிலடி கொடுப்பது என்று தீர்மானித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணன், சம்பன், பெரும் வீரனான பிரதியும்னன் ஆகியோர் கவசம் பூண்டு, அனைத்துவித ஆபரணங்களும் பூண்டு தங்கள் ரதங்களின் ஏறி சால்வனின் எண்ணிலடங்கா வீரர்களுடன் மோதுவதெனத் தீர்மானித்து சென்றனர்.
சாம்பன் தனது வில்லை எடுத்துக் கொண்டு சால்வனின் படைத்தளபதியும், அமைச்சருமான க்ஷேமவிருத்தியுடன் ஆர்வமாகப் போர்க்களத்தில் மோதினான். பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த ^ஜாம்பவதியின் மகன் {சாம்பன்}, மழையைப் பொழியவைக்கும் இந்திரனைப் போல, தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். பெரும் பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு சால்வப் படைகளின் தளபதியான க்ஷேமவிருத்தி, அந்தக் கணைமழையை, இமயம் போல நின்று அசையாமல் தாங்கிக் கொண்டான்.
மன்னர்களில் முதன்மையானவரே, க்ஷேமவிருத்தி, தனது பங்குக்கு, தன் மாயச் சக்தியைப் பயன்படுத்தி சாம்பன் மீது பலம்வாய்ந்த கணைகளைச் சரமாரியாகப் பொழிந்தான். அந்த மாயையால் ஈர்க்கப்பட்ட சாம்பன் தனது பதில் மாயையால் ஆயிரக்கணக்கான கணைகளை அவனது (எதிரியின்) {க்ஷேமவிருத்தியின்} ரதத்தின் மீது பொழிந்தான். சாம்பனின் கணைகளால் துளைக்கப்பட்டு, அதிக காயம் கொண்டு, தனது விரைவான குதிரையின் உதவியுடன் களத்தை விட்டு விலகினான் {க்ஷேமவிருத்தி}.
சால்வனின் {க்ஷேமவிருத்தி} தீய தளபதி களத்தை விட்டு விலகியதும், பெரும் பலம் வாய்ந்த தைத்தியனான வேகவத் எனது மகனை {சாம்பனை} நோக்கி விரைந்தான். ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, விருஷ்ணி குலத்தைத் தழைக்க வைக்கும் வீரனான சாம்பன், வேகவத்தின் தாக்குதலைப் பொறுத்து களத்தை விடாதிருந்தான். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, குலைக்க முடியா வீரம் கொண்ட சாம்பன், விரைவாகச் செல்லும் ஒரு கதாயுதத்தைச் சுழற்றி, வேகவத்தின் மீது வேகமாக ஏறிந்தான். மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த கதாயுதத்தால் தாக்குண்ட வேகவத் சிதைந்த வேர்களைக் கொண்ட காட்டின் தலைவன் {ஆல மரம்} விழுவது போல தரையில் விழுந்தான். இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த அசுரனைத் தனது கதாயுதத்தால் கொன்ற எனது மகன் {சாம்பன்} அந்தப் பெரும்படைக்குள் நுழைந்து, அனைவருடனும் போரிட்டான்.
பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நன்கு அறியப்பட்ட தானவனும் பெரும் பலம் வாய்ந்த வீரனுமான பிவிந்தியன் ஒரு பெரும் பலம்வாய்ந்த வில்லைத் தாங்கிக் கொண்டு, சாருதேஷ்ணனை எதிர்கொண்டான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணனுக்கும் பிவிந்தியனுக்கும் இடையில் நடந்த போர் பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல கடுமையானதாக இருந்தது! அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கணைகளால் தாக்கிக் கொண்டு, ஒருவரை மற்றவர் துளைத்து, இரு பெரும் பலம் வாய்ந்த சிம்மங்களைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.
பிறகு ^ருக்மிணியின் மகன் {சாருதேஷ்ணன்}, தனது வில் நாணில் நெருப்பைப் போலவும் சூரியனைப் போலவும் பிரகாசித்த பெரும் ஆயுதம் ஒன்றைப் பொருத்தி தகுந்த மந்திரங்களை உச்சரித்து அதற்கு உயிருண்டாக்கினான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, எனது மகனான அந்த பெரும் போர் வீரன் {சாருதேஷ்ணன்}, கோபத்தால் எரிந்து, பவிந்தியனுக்குச் சவால் விட்டு, அந்த ஆயுதத்தை அவன் {பிவிந்தியன்} மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் தாக்குண்ட அந்த தானவன், உயிரற்ற சடலமாகக் கீழே தரையில் விழுந்தான். பவிந்தியன் கொல்லப்பட்டதை அறிந்த மொத்த படையும் நடுங்கியது.
அப்போது சால்வன், நினைத்த இடம் எங்கும் செல்லக்கூடிய தனது அழகான ரதத்தில் மேலும் முன்னேறி வந்தான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, அப்படி அழகான தேரில் வந்த சால்வனைக் கண்ட துவாரகையின் வீரர்கள் பயத்தால் நடுங்கினார்கள். ஆனால், குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் வெளியே வந்து, ஆனர்த்தர்களுக்கு ஊக்கம் கொடுத்து, "நடுங்காதீர்கள், நான் போர்புரியப்போவதைப் பாருங்கள். எனது சக்தியைக் கொண்டு தேரோடு கூடிய அந்தச் சால்வனைத் தடுப்பேன். யாதவர்களே, இந்த நாளில், பாம்புகள் போன்ற கணைகளை எனது வில்லில் இருந்து வெளியேற்றி, சௌபத்தின் தலைவனான {சால்வனை} இந்தப் புரவலனை அழிப்பேன்! அனைவரும் உற்சாகத்தோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! சௌபத்தின் தலைவன் {சால்வன்} இன்று கொல்லப்படுவான்! என்னுடன் மோதியதும், அந்த இழிந்தவன், தனது தேருடன் சேர்ந்து அழிவைச் சந்திப்பான்" என்றான். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் இப்படி உற்சாகத்துடன் பேசியதும், யாதவப் புரவலர்கள், வீரரே {யுதிஷ்டிரரே}, களத்திலேயே நின்று, உற்சாகத்துடன் போர்புரியத் தொடங்கினார்கள்.
---------------------------------------------------------------------------------------------
^கிருஷ்ணரின் எட்டு மனைவியர்களின் பெயர்கள்:
1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.
---------------------------------------------------------------------------------------------
^கிருஷ்ணரின் எட்டு மனைவியர்களின் பெயர்கள்:
1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.