Encounter between Pradyumna and Salwa | Vana Parva - Section 17 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
பிரத்யும்னனுக்கும் சால்வனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்.
வாசுதேவன் தொடர்ந்தான், "பாரத குலத்தின் காளையே, யாதவர்களிடம் இப்படிப் பேசிய ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) தனது தங்க ரதத்தில் ஏறினான். அவனது {பிரத்யும்னன்} தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அற்புதமான வகையைச் சேர்ந்தவை. அந்தத் தேரில் யமனைப் போன்ற கடுமையுடன் திறந்த வாய் உள்ள மகரம் பொறிக்கப்பட்ட கொடி பொருத்தப்பட்டிருந்தது. தரையில் ஓடுவதை விட பறப்பதைப் போல இருக்கும் குதிரைகளுடன் அவன் {பிரத்யும்னன்} எதிரியை நோக்கி விரைந்தான். அந்த வீரன் அம்பறாத்தூணி, வாள் ஆகியவற்றை அணிந்து கொண்டு, விரல்களுக்கு தோல் கவசம் பூண்டு, மின்னலைப் போன்ற பிரகாசமிக்க தனது வில்லை எடுத்துச் சுண்டினான். பெரும் பலத்துடன் அந்த வில்லை ஒரு கரத்தைவிட்டு மறு கரத்திற்கு மாற்றிக் கொண்டு எதிரியை அவமதிப்பது போல, தானவர்களுக்கு மத்தியிலும் சௌப நகரத்தின் போர்வீரர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தினான்.
மேலும் எதிரியை அவமதிப்பது போல, போர்க்களத்தில் தானவர்களைத் தொடர்ந்து கொன்ற போது, அவன் சரமெனத் தொடர்ந்து கணையடித்ததில் யாரும் சிறு இடைவெளியையும் காணவில்லை. அவனது {பிரத்யும்னனின்} முகத்தின் நிறம் மாறவில்லை. அவனது உறுப்புகள் நடுங்கவில்லை. அவனது அற்புதமான வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவனால் எழுப்பப்பட்ட சிம்ம கர்ஜனைகளை மட்டுமே மக்கள் கேட்டனர். வாயை அகல விரித்திருக்கும் நீர்மிருகம் அனைத்து மீன்களையும் விழுங்குவது போல, ரதங்களில் சிறந்த தனது ரதத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடி, சால்வனின் போர் வீரர்கள் இதயங்கள் பயங்கரத்தை உணர்ந்தனர். மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெட்டித் தள்ளும் பிரத்யும்னன், சால்வனிடம் போர் புரிய விரும்பி அவனிடம் {சால்வனிடம்} விரைந்து சென்றான்.
குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் தனது வீரத்தைப் பறைசாற்றிய பிரத்யும்னனைக் கண்டு கோபம் கொண்ட சால்வனால் அந்தச் சவாலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதரிகளின் நகரங்களை வெல்லும் சால்வன், கோபத்தால் வெறிகொண்டு, கட்டற்ற வேகம் கொண்ட தனது அழகிய ரதத்தில் இருந்து இறங்கி, பிரத்யும்னனிடம் போர்புரியத் தீர்மானித்தான். சால்வனுக்கும், விருஷ்ணி வீரர்களில் முதன்மையானவனுக்கும் {பிரத்யும்னனுக்கும்} இடையில் நடந்த போர், பழங்காலத்தில் இந்திரனுக்கும் பலிக்கும் {மஹாபலிக்கும்} இடையில் நடந்த போரைப் போல இருப்பதை மக்கள் கண்டனர்.
வீரரே {யுதிஷ்டிரரே}, தங்கத்தாலானதும், கொடிகளும், கொடிக்கம்பங்களும், அம்பறாத்தூணிகளும் கொண்ட தனது அழகிய தேரில் ஏறிய சிறப்புமிக்கவனும் பலம் பொருந்தியவனுமான சால்வன் பிரத்யும்னனை நோக்கித் தனது கணைகளை அடிக்கத் தொடங்கினான். பிரத்யும்னன் தனது கரங்களின் சக்தியால் அடர்த்தியான கணை மழையால் சால்வனை மூடினான். பிரத்யும்னனால் இவ்வளவு தாக்கப்பட்டும் சௌபத்தின் மன்னன், அவனைப் பொறுத்துக் கொள்ளாமல், எனது மகனை {பிரத்யும்னனை} நோக்கி சுடர்விட்டு எரியும் நெருப்பு போன்ற கணைகளை அடித்தான்.
ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்ட ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, நேரத்தைத் தவற விடாது, எதிரியின் உயிர்ப்பகுதிக்குள் நுழையும் ஆற்றல் கொண்ட கணையை அடித்தான். எனது மகனால் {பிரத்யும்னனால்} அடிக்கப்பட்ட இறகுகள் கொண்ட அந்தக் கணை, சால்வனின் கவசத்தைத் துளைத்து, இதயத்திற்குள் நுழைந்தது. இதனால் சால்வன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான். வீரனான மன்னன் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்ததைக் கண்ட தானவர்களில் முதன்மையானவர்கள் பூமியை மறைப்பது போல ஓடிப் போனார்கள். பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் படை, சௌபத்தின் தலைவனான தங்கள் மன்னன் உணர்வின்றி கீழே விழுவதைக் கொண்டு "ஓ...." "ஐயோ" என்று சொல்லி ஓலமிட்டனர்.
குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, மீண்டும் உணர்வைப் பெற்ற, பெரும் பலம் வாய்ந்த சால்வன் எழுந்து, பிரத்யும்னனை நோக்கி தனது கணைகளை அடித்தான். வீரனும், பலம் வாய்ந்த கரம் கொண்டவனுமான பிரத்யும்னன், தனது எதிரியால் {சால்வனால்} தொண்டையில் துளைக்கப்பட்டு, தளர்ந்து போய் தனது தேரில் இருந்தான். பெரும் பலம் வாய்ந்த மன்னரே, ருக்மிணியின் மகனைக் {பிரத்யும்னனைக்} காயப்படுத்திய சால்வன், சிம்மத்தைப் போல உரக்க கர்ஜித்து, உலகம் முழுவதையும் அந்தச் சத்தத்தால் நிறைத்தான்! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மகன் {பிரத்யும்ன்ன} உணர்விழந்த போது, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாத சால்வன், தாங்க முடியாத கணைகளை அவன் {பிரத்யும்னன்} மீது ஏவினான். குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, இப்படி எண்ணிலடங்கா கணைகளால் துளைக்கப்பட்ட பிரத்யும்னன், போர்க்களத்தில் அசைவற்றுக் கிடந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.