Abstinence from intoxicating drink in Dwarka | Vana Parva - Section 15 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
சால்வனின் முற்றுகையில், துவாரகையில் நடந்த போர்த்தயாரிப்புகள் மற்றும் கோட்டைகளின் தன்மைகளைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்...
யுதிஷ்டிரன், "பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட சிறப்புகள் மிக்க வாசுதேவா, சௌபத்தின் தலைவன் {சால்வன்} மரணம் குறித்து விரிவாகச் சொல். இந்த விவரிப்பால் எனது ஆர்வம் தணியவில்லை" என்று கேட்டான்.
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னா, *சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் கேட்ட சால்வன், ஓ பரத குலத்தில் சிறந்தவா {யுதிஷ்டிரரே}, துவாராவதி நகரத்திற்கு வந்தான்! பிறகு, பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே} அந்தத் தீய மன்னன் {சால்வன்}, தனது படைகளை வரிசையாக நிறுத்தி, அந்த நகரத்தைச் சுற்றிலும் மேலிருந்தும் முற்றுகையிட்டான். வானில் தன்னை நிறுத்திக் கொண்ட அந்த மன்னன் {சால்வன்} அந்த நகரத்திற்கு {துவாரகைக்கு} எதிராகப் போர் தொடுத்தான். எல்லா புறங்களில் இருந்தும் அடர்த்தியான ஆயுதங்களைப் பொழிந்து அந்தப் போர் நடந்தது.
பாரத குலத்தின் காளையே, அந்த நகரம் {துவாரகை} எல்லாப்புறங்களிலும் கோட்டை பாதுகாப்புடனும் இருந்தது. அந்தக் கோட்டை, கோட்டை கட்டும் அறிவியலுடன் இருந்தது. நீண்ட முக்கோண வடிவ கொடிகளுடனும், வளைவுகளுடனும், வீரர்களுடனும், சுவர்கள் மற்றும் மேடைகளுடனும், இயந்திரங்கள், சுரங்கங்கள், மற்றும் மரத்தாலான முள்வேலியால் தடுக்கப்பட்ட தெருக்களும், நெருப்பு, பாத்திரங்கள், (நீர் எடுத்துச் செல்ல) மான் தோல் மற்றும் அனைத்து ஆயுதங்களும், ஆயுதங்களை ஏவும் இயந்திரங்களுடன் கூடிய வாயில்கள் கொண்ட கோபுரங்கள் மற்றும் மாளிகைகளுடன் அந்தக் கோட்டை இருந்தது.
மேலும் அந்த வாயில்களில் எக்களாம், சிறு முரசு, மேளம், ஈட்டிகள், கவண்கள், சதாக்னிகள், கலப்பை பங்குகள், ஏவுகணைகள், கற்பந்துகள், போர்க்கோடரிகள் மற்றும் பிற ஆயுதங்கள், இரும்பு பதித்த கவசங்கள், பந்துகளையும், தோட்டாக்கள் மற்றும் கொதிக்கும் திரவங்களை வீசக்கூடிய இயந்திரங்களும் இருந்தன. அந்த நகரம் {துவாரகை}, எண்ணிலடங்கா ரதங்களுடன், உயர்ந்த பிறப்பு கொண்டவர்களும், எந்த எதிரியையும் எதிர்க்கவல்லவர்களுமான கதன், சாம்பன், உத்தவன் மற்றும் பிற வீரர்களால் காக்கப்பட்டு இருந்தது. உத்தரவிடும் பணிகளில் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட அவர்கள், குதிரைப்படை மற்றும் காலாட்படையின் துணை கொண்டு நகரத்தைக் காக்கத் தொடங்கினார்கள்.
கவனக்குறைவைத் தவிர்க்க உக்கிரசேனரும், உத்தவனும் நகரம் முழுவதும் சென்று யாரும் மது அருந்தக் கூடாது என்று அறிவித்தனர். அனைத்து விருஷ்ணிகளும் அந்தகர்களும், தாங்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டால் சால்வனால் கொல்லப்படுவோம் என்பதை நன்றாய் அறிந்து, நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தனர்.
ஆனர்த்த நாட்டின் கோமாளிகளையும், ஆடற்கலைஞர்களையும், பாடகர்களையும் காவலர்கள் நகரத்தை விட்டுத் துரத்தினர். நதிகளின் மேல் இருந்த அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டன. படகுகள் தடுக்கப்பட்டன. (நகரத்தைச் சுற்றிலும் இருந்த) அகழிகளில் அடியில் சூலங்கள் நட்டு வைக்கப்பட்டன. நகரைச் சுற்றி இருந்த இரண்டு மைல் நீளம் கொண்ட நிலங்கள் சமமற்றவையாக, துளைகளும் குழிகளும் தோண்டப்பட்டு அடியில் ரகசியமாக எரிபொருட்கள் {Combustibles வெடி பொருட்களோ!} நிரப்பப்பட்டன.
பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, எங்கள் கோட்டை இயற்கையிலேயே வலிமையானது. எல்லாப்புறங்களில் இருந்தும் நன்கு பாதுகாக்கப்பட்டது. அதில் எல்லா வகையான ஆயுதங்களும் நிரப்பப்பட்டிருந்தது. இந்தத் தயாரிப்புகளின் தொடர்ச்சியாக எங்கள் நகரம் எப்போதையும் விட எதிரியைச் சந்திக்கத் தயாராகவே இருந்தது.
பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தின் தொடர்ச்சியாக அந்த நகரம் இந்திரனின் நகரம் போலவே காட்சி அளித்தது. மன்னா, சால்வன் அதை {அந்நகரத்தை} அணுகிய போது, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரம் ஏற்றுக் கொண்ட குறிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், யாரும் நுழையவும், அதை விட்டு வெளியேறவும் முடியாத நிலையில் இருந்தது. அந்த நகரத்தின் அனைத்து தெருக்களும், திறந்த வெளிகளும், எண்ணிலடங்கா யானைகளாலும் குதிரைகளாலும் நிரப்பப்பட்டன.
பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே, போரிடத் தாயாரயிருந்த வீரர்களுக்கு உதவித்தொகைகளுடன் கூடிய கூலியும், உணவுப் பங்கீடும், ஆயுதங்களும், ஆடைகளும் வழங்கப்பட்டன. அந்த வீரர்களில் தங்கம் கொடுக்கப்படாதவர்கள் யாரும் இலர். கூலிக்கொடுக்கப்படாத யாரும் இலர். கட்டாயப்படுத்தப்பட்ட எவரும் இலர். பராக்கிரமத்தை முன்பே வெளிப்படுத்ததாத யாரும் இலர். தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவரே {யுதிஷ்டிரரே}, இப்படியே நன்கு திட்டமிட்டப்பட்ட ஏற்பாடுகளினால் பாதுகாக்கப்பட்ட துவாரகை ஆஹுகரால் (உக்கிரசேனரால்) காக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------
*சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் .....
மேலும் விவரங்ளுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44
----------------------------------------------------------------------------------------------------------------
*சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் .....
மேலும் விவரங்ளுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.