Showing your back is cowardice | Vana Parva - Section 18 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
உணர்வற்று விழுந்த பிரத்யும்னனை தேரோட்டி களத்தைவிட்டு வெளியேறுதல்; உணர்வு திரும்பிய பிரத்யும்னன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளல்
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "மன்னா {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் பிரத்யும்னன் உணர்விழந்ததும், போரிட வந்திருந்த விருஷ்ணிகள் உள்ளம் உடைந்து துயரத்தில் மூழ்கினர். அந்த விருஷ்ணி குல, அந்தக குல வீரர்கள் துயரத்தில் ஓ என்றும் ஐயோ என்றும் அலறும்போது, எதிரிப் படையில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. உணர்விழந்த பிரத்யும்னனைக் கண்ட தேரோட்டியான தாருகனின் மகன், வேகமாக செல்லும் குதிரைகளின் துணையுடன் அவனை {பிரத்யும்னனைக்} களத்தை விட்டு வெளியே கொண்டு சென்றான். அந்தத் தேர் சிறிது தூரம் செல்வதற்குள்ளேயே உணர்வைத் திரும்பப் பெற்ற பிரத்யும்னன், கைகளில் தனது வில்லை எடுத்துக் கொண்டு அந்தத் தேரோட்டியிடம், "சூத இனத்தின் மகனே, நீ என்ன செய்துவிட்டாய்? களத்தை விட்டு நீ ஏன் வெளியே செல்கிறாய்? போர்களத்தில் இது விருஷ்ணிகளின் வழக்கமில்லையே! சூத மகனே, கடும் போர் புரியும் சால்வனைக் கண்டதும் கலங்கிப் போனாயா? அல்லது இப்போரைக் கண்டு உள்ளம் ஒடிந்து போனாயா? உனது மனதை உண்மையாகச் சொல்!" என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தேரோட்டி, "ஜனார்த்தனரின் மகனே, "நாம் குழம்பவில்லை, அல்லது அச்சம் என்னைப் பீடிக்கவில்லை. மறுபுறம், கேசவரின் மகனே, சால்வனை வீழ்த்துவது உனக்குச் சிரமம் என்று நான் கருதுகிறேன்! ஆகையால், ஓ வீரனே, மெதுவாக நான் களத்தைவிட்டு அகலுகிறேன். அந்த இழிந்தவன் உன்னைவிட பலசாலியாக இருக்கிறான்! தேரில் இருக்கும் வீரனைக் காப்பது ஒரு தேரோட்டியின் கடமையாகும். நீ உணர்விழந்து வேறு இருந்தாய். நீண்ட ஆயுளைக் கொடையாகக் கொண்டவனே, நீ என்னைப் பாதுகாப்பது போல, நான் உன்னை எப்போதும் பாதுகாக்க வேண்டும்! தேரில் இருக்கும் வீரன் எப்போதும் (அவனது தேரோட்டியால்) காக்கப்பட வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தே, நான் உன்னை வெளியே அழைத்து வந்தேன்.! மேலும், பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, நீ தனியாளாக இருக்கிறாய், தானவர்களோ பலராக இருக்கின்றனர். ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, சண்டையில் நீ அவர்களுக்குச் சமம் இல்லை என்று நினைத்து, நான் வெளியே செல்கிறேன்!" என்றான்.
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அந்தத் தேரோட்டி இப்படிப் பேசியதும், ஓ கௌரவரே {யுதிஷ்டிரரே}, மகரத்தைக் கொடியாகக் கொண்டவன் {பிரத்யும்னன்}, "தேரைத் திருப்பு, ஓ தாருகனின் மகனே, மறுபடி இதைப் போல் செய்யாதே; அதை எப்போதும் செய்யாதே, சூதனே, நான் உயிருடன் இருக்கும்போது சண்டையை விட்டு விலகாதே! களத்தைக் கைவிட்டுச் செல்பவனோ, "நான் உனக்கு அடிமை" என்று சொல்லி, காலில் விழுந்த எதிரியைக் கொல்பவனோ அல்லது பெண்ணையோ, சிறுவனையோ, முதிர்ந்தவனையோ, தேரை இழந்து, ஆயுதங்கள் ஒடிந்து, துயரத்தில் இருக்கும் வீரனையோ கொல்பவன் விருஷ்ணி குல மகனாக இருக்க முடியாது. நீ தேரோட்டிகளின் குலத்தில் பிறந்தவன். உன் தொழிலில் பயிற்சி பெற்றவன்.
தாருகனின் மகனே, போர்க்களத்தில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்தவன் நீ! விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நீ, ஓ சூதா, இப்போது செய்தது இனி எப்போதும் களத்தில் இருந்து விலகாதிருப்பாயாக! கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், கதனின் அண்ணனுமான மாதவர், நான் முதுகில் காயம்பட்டு கலங்கிப் போய் களத்தை விட்டு பின்வாங்கி வந்தேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வார். கேசவரின் அண்ணனான பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், நீல நிற ஆடை உடுத்தி, மதுவால் உண்டான மயக்கத்துடன் இருக்கும் பலதேவர் {பலராமன்} திரும்பி வரும்போது என்ன சொல்வார்? சூதா, பெரும் போர் வீரனும் மனிதர்களில் சிங்கமான சினியின் பேரன் {சாத்யகி}, நான் போரில் இருந்து விலகினேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வான்?
தேரோட்டியே, எப்போதும் வெற்றிவாகைச் சூடும் சம்பன், கட்டுப்படுத்தப்பட முடியாத சாருதேஷ்ணன், கதன், சரணன், அக்ரூரர் ஆகிய பெரும் பலம் வாய்ந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்னிடம் என்ன சொல்வார்கள்! இதுவரை, எனது நடத்தைக்காகவும் வீரத்திற்காகவும், மரியாதைக்காகவும், ஆண்மைக்காகவும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்த என்னை, விருஷ்ணி குல வீரர்களின் மனைவிமார், தாங்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது, என்னைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள்? அவர்கள், போர்க்களத்தை விட்டு இங்கே வந்திருக்கும் இந்தப் பிரத்யும்னன் ஒரு கோழை! அவனுக்கு ஐயோ! என்றே சொல்வார்கள். நன்றாகச் செய்தாய் என்று அவர்கள் சொல்லவே மாட்டார்கள். நான் இகழ்ச்சிக்கும் பரிகசிப்புக்கும் ஆளானால், ஓ சூதா, அதைவிட நான் சாவதே மேல்!
ஆகையால், இன்னுமொரு முறை களத்தைவிட்டு வெளியேறாதே! எனக்குப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, மதுவைக் கொன்றவரான {மதுசூதனர்} ஹரி, பாரத சிங்கத்தின் {யுதிஷ்டிரரின்} வேள்விக்குச் சென்றிருக்கிறார்! ஆகையால், என்னால் அமைதியாக இருக்க முடியாது! ஓ சூதா, வீரம் கொண்ட கிருதவர்மர் சால்வனை எதிர்த்து வந்தபோது, நான் சால்வனைத் தடுத்து நிறுத்துவேன் என்று அவரை நிறுத்தினேன். ஹிருதிகரின் மகனான அவரும் என்னைப் புகழ்ந்துவிட்டு சென்று விட்டார்! இப்படி போர்க்களத்தைவிட்டு வெளியேறினால், அந்த பெரும்பலம் வாய்ந்த போர்வீரரிடம் {கிருதவர்மரிடம்}, அவரைச் சந்திக்கும்போது என்ன சொல்வேன்? கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைச் சுமப்பவருமான அந்த தாமரை இதழ் போன்ற கண் கொண்டவரிடம் {கிருஷ்ணரிடம்} நான் என்ன சொல்வேன்?
சாத்யகி, பலதேவர், மற்றும் பிற விருஷ்ணி, அந்தக குலத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் பெருமையாகவே எப்போதும் சொல்வர்! அவர்களுக்கெல்லாம் நான் என்ன சொல்வேன்? சூதனே, போர்க்களத்தை விட்டு அகன்று, முதுகில் கணைகளால் ஏற்பட்ட காயத்துடன், நான் உன்னால் வெளியே கொண்டு செல்லப்பட்டால், எக்காரணம் கொண்டும் என்னால் உயிர்வாழ முடியாது! ஆகையால், தாருகனின் மகனே, விரைவாகத் தேரைத் திருப்பு. பேராபத்தில் கூட இனிமேல் இப்படிச் செய்யாதே. சூதா, கோழைப் போல ஓடிச் சென்று, முதுகில் {எதிரிகளின்} கணைகளால் துளைக்கபடும் அளவுக்கு நான் வாழ விரும்பவில்லை. சூத மகனே, போர்க்களத்தில் இருந்து கோழை போல நான் ஓடுவதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? தாருகனின் மகனே, நான் போரில் ஆர்வம் கொண்டு, போர்த்தாகம் தணியாமல் இருக்கும்போது களத்தைக் கைவிடுவதை நீ செய்யலாகாது! ஆகையால், களத்திற்குத் திரும்பிப் போ!" என்றான் {பிரத்யும்னன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.