Saunaka's sermon | Vana Parva - Section 2 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தங்களைத் தொடர்ந்து வந்த பிராமணர்களைத் திரும்பிச் செல்ல சொன்னது; சௌனகர் யுதிஷ்டிரனுக்கு சில அறிவுரைகள் கூறியது; யுதிஷ்டிரன் சௌனகரிடம் சந்தேகம் கேட்டது; அதற்கு சௌனகர் விடையளித்தது...
வைசம்பாயனர் சொன்னார், "இரவு வெடித்துப் பகல் உதித்த போது, இரந்துண்டு {பிச்சையெடுத்து} தங்களைத் தாங்கிவந்த பிராமணர்கள் {பிராமணர்கள்}, செயற்கரிய செயல்களைச் செய்து கானகத்திற்குள் நுழையக் காத்திருந்த பாண்டவர்களின் முன்பு நின்றனர்.(1) குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அவர்களிடம், "செல்வங்களும், நாடும் என அனைத்தும் களவாடப்பட்டவர்களாகப் பெரும் துயரத்தில் இருக்கும் நாங்கள், கனிகளையும், கிழங்குகளையும் மட்டுமே உணவாகக் கொண்டு காட்டுக்குள் நுழையப்போகிறோம். இந்தக் கானகம் முழுவதும் எண்ணிலடங்கா ஊர்வனவும், இரை தேடி அலையும் விலங்குகளும் என ஆபத்துகள் நிறைந்தது. அங்கே நீங்கள் நிச்சயமாகப் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. பிராமணர்களின் பாதிப்புகள் தேவர்களைக் கூடச் சக்தி இழக்கச் செய்யக்கூடும். எனது சக்தியையும் அஃது இழக்கச் செய்யும் என்பது நிச்சயமே. எனவே, ஓ பிராமணரே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள்" என்று சொன்னான்.(2-4)
அதற்கு அந்தப் பிராமணர்கள், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ செல்லும் பாதையே எங்கள் பாதை! எனவே, உனக்காகத் தங்களை அர்ப்பணித்து, உன்னைப் போற்றி, உண்மையான அறம் பயின்று வருபவர்களைக் கைவிடாதே!(5) தேவர்கள்கூடத் தங்களை வழிபடுபவர்கள் மீது இரக்கம் கொண்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வை வாழும் பிராமணர்கள் மீது சிறப்பானகருணை கொண்டுள்ளனர்" என்றனர்.(6)
யுதிஷ்டிரன், "மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, நானும் என்னைப் பிராமணர்களுக்கு அர்ப்பணித்தவன்தான்! ஆனால் இந்தச் சூழ்நிலை என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது!(7) பழங்கள், கிழங்குகள் மற்றும் மான்களைச் சேகரிக்கும் எனது இந்தத் தம்பிகள், திரௌபதியின் துயரத்தாலும், நாட்டை நாங்கள் இழந்ததாலும் மதி மயங்கியவர்களாகக் கலக்கம் அடைந்திருக்கின்றனர். ஐயோ, இப்படித் துயர்கொண்டிருக்கும் அவர்களைத் துயர்நிறைந்த பணிகளில் என்னால் ஈடுபடுத்த முடியாது" என்றான்.(8,9)
அதற்கு அந்தப் பிராமணர்கள், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எங்களைப் பாதுகாப்பதில் துயர் கொள்ளாதே! உனது இதயத்தில் எங்களுக்கான ஓர் இடத்தைத் தேடு! எங்கள் உணவை நாங்களே சம்பாதித்துக் கொண்டு, தியானம் செய்து கொண்டும், உனக்கான வழிபாடுகளைச் செய்து கொண்டும் நாங்கள் உன்னைப் பின் தொடர்ந்து வருவோம். இனிமையான உரையாடல்கள் மூலம் உன்னை மகிழ்விப்போம்" என்றனர்.(10,11)
யுதிஷ்டிரன், "ஐயமில்லாமல் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கவேண்டும். மறுபிறப்பாளர்களின் {பிராமணர்களின்} துணையில் நான் எப்போதும் மகிழ்ந்தே இருக்கிறேன்! ஆனால், வீழ்ச்சியடைந்த இந்தச் சூழ்நிலையில் நானே ஒரு நிந்திக்கப்படும் பொருளாக இருக்கிறேன்.(12) துன்பப்படத் தகாதவர்களான நீங்கள் என் மீது கொண்ட அன்பால் துன்பப்படுவதையும், உங்கள் உணவை நீங்களே சம்பாதித்துக் கொள்வதையும் கண்டு, நான் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? ஓ, திருதராஷ்டிரரின் தீய மகன்களுக்கு ஐயோ!" என்றான்.(13)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் {யுதிஷ்டிரன்}, இதைச் சொல்லிவிட்டு அழுது கொண்டே தரையில் அமர்ந்தான். சாங்கிய யோகம் அறிந்தவரும், கல்விமானும் பிராமணருமான சௌனகர் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(14) "துயரத்தின் காரணம் ஆயிரமும், அச்சத்தின் காரணம் நூறும் நாளுக்கு நாள் மூடனையே மூழ்கடிக்கும். ஆனால் கல்விமானை மூழ்கடிக்காது.(15) நிச்சயமாக, உன்னைப் போன்ற நுண்ணறிவுமிக்க மனிதர்கள் இது போன்ற உண்மை அறிவுக்கு எதிரான அனைத்துவிதமான தீய செயல்களாலும், மோட்சத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களாலும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள்.(16) ஓ மன்னா, தீமைகள் அனைத்தையும் எதிர்த்து நிற்கவல்லதும், ஸ்ருதி (வேதங்கள்) மற்றும் சாத்திரக் கல்வியால் விளைவதுமான எட்டு குணங்களுடன்[1] கூடிய புத்தி உன்னில் இருக்கிறது.(17) உன்னைப் போன்ற மனிதர்கள், ஏழ்மையினாலோ, நண்பர்களுக்கு ஏற்படும் துக்கத்தினாலோ, உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகளாலோ ஒருபோதும் கலக்கமடைய மாட்டார்கள்.(18)
[1] கேட்டுக் கொள்ள விருப்பம், கேட்டல், புரிந்து கொள்ளுதல், உபயோகித்தல், ஊகித்தல், தீயவை விலக்குதல், பொருளை நன்கு உணர்தல், உண்மையை அறிதல் ஆகிய எட்டுக் குணங்கள்
சிறப்புமிக்க ஜனகர், தற்கட்டுப்பாட்டை {ஆன்மக்கட்டுப்பாட்டைக்} குறித்துப் பழங்காலத்தில் பாடிய பாடல்களைச் {ஸ்லோகங்களைச்} சொல்கிறேன் கேட்பாயாக.(19) இவ்வுலகம் உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்களால் பீடிக்கப்படுகிறது. அதைத் தணிப்பதற்கான வழிகளைச் சுருக்கமாகவும், விவரமாகவும் நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. நோய், வலிநிறைந்த பொருட்களின் தொடர்பு {முள்}, உழைப்பு, விருப்பத்திற்குரிய பொருட்களின் தேவை ஆகிய நான்கும் உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றன. மருந்தைக் கொள்வதால் நோயைத் தணித்து விட முடியும். அதே நேரத்தில் மனம் சார்ந்த நோயானது தியான யோகத்தினால் மறக்க முற்படும்போது குணமாகிறது.(22) இந்தக் காரணத்திற்காகத்தான் மருத்துவர்கள், நோயாளி ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசியும், விரும்பும் பொருளைக் கொடுப்பதாகக் கூறியும், முதலில் நோயாளிகளின் மனம் சார்ந்த பாதிப்புகளைத் தணிக்க முயல்வர்.(23)
ஒரு குடத்தில் சூடான இரும்புப் பட்டையை நுழைக்கும்போது, அதிலுள்ள நீர் கொதிப்பைதைப் போலவே, மனத்துயரமானது உடலில் துன்பத்தை ஏற்படுத்தும்.(24) நீரானது நெருப்பைத் தணிப்பது போல, உண்மை அறிவு மனக்கலக்கத்தைத் தணிக்கும். மனம் அமைதியுற்றால், உடலும் அமைதி அடையும்.(25) பற்றே மனத்துயரத்திற்கான வேரெனத் தெரிகிறது. இந்தப் பற்றே அனைத்து உயிரினங்களுக்கும் துன்பத்தையும், அனைத்துவிதமான துயரங்களையும் கொடுக்கிறது.(26) பற்றே துயரங்கள் அனைத்திற்கும், அச்சங்கள் அனைத்திற்கும், இன்பதுன்பங்கள் அனைத்துக்கும், அனைத்துவிதமான வலிகளுக்கும் வேராக இருக்கிறது.(27) பற்றின் காரணமாகவே அனைத்து காரியங்களும் தோன்றுகின்றன. பற்றே உலக நன்மைகளின் மீது நாம் ஆசை கொள்ளக் காரணமாக இருக்கிறது. முதல்வகை இரண்டாவதைவிட மோசமானதாக இருந்தாலும் இவை இரண்டுமே தீமையின் ஊற்றுக் கண்களேயாகும்.(28)
மரப்பொந்துக்குள் நுழையும் (சிறு அளவு) நெருப்பும் எப்படி வேர் வரை முழு மரத்தையும் எரித்துவிடுகிறதோ, அதே போலப் பற்றும் எவ்வளவு சிறிதாக எனினும் அறத்தையும் {தர்மத்தையும்}, பொருளையும் {அர்த்தத்தையும்} அழித்துவிடும்.(29) உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதால் மட்டுமே ஒருவன் அனைத்தையும் துறந்தவன் ஆகமாட்டான். எனினும், உலகத்தொடர்புகளில் இருந்து கொண்டே அதன் குறைகளை அறிந்தவனே உண்மையில் உலகத்தைத் துறந்தவன் ஆவான். தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு, எதையும் நம்பியிராத ஆன்மாவைப் பெற்ற ஒருவனே உண்மையில் உலகைத் துறந்தவனாவான்.(30)
எனவே, ஒருவன் நண்பர்களிடமோ, தான் ஈட்டிய செல்வத்திடமோ பற்று வைக்கக்கூடாது. அதே போல, தன்மீது வைத்திருக்கும் பற்றை, அறிவினால் களையவேண்டும்.(31) நீருக்குள் மூழ்கச் செய்தாலும் தாமரை இலை நனையாமல் இருப்பதைப் போலவே, ஒருநாள் மட்டும் நீடித்திருப்பவைக்கும், எப்போதும் நிலைத்து இருப்பவைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத்தெரிந்த ஆன்மா கொண்ட மனிதன், சாத்திரங்களை அறிந்து, அறிவால் தூய்மையடைந்து, பற்றால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.(32) பற்றால் பீடிக்கப்பட்ட மனிதன், ஆசையால் சித்திரவதை செய்யப்படுகிறான். அப்படி உண்டாகும் அசை, உலகப் பொருட்கள் மீது அவன் கொண்டிருக்கும் தாகத்தை அதிகரிக்கச் செய்கிறது. நிச்சயமாக இந்தத் தாகம் பாவகரமானது. இது துயரங்களின் ஊற்றுக் கண் என்று கருதப்படுகிறது.(33) இந்தக் கொடுமையான தாகமே, பாவத்துடன் கலந்து அறமற்ற செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.(34) இந்தத் தாகத்தைத் துறப்பவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். உடல் அழிந்தாலும் தீயவர்களின் தாகம் அழியாது. தீயவர்களால் அதைத் துறக்கவே முடியாது. அஃது உண்மையில் மரண நோயே ஆகும்.(35) அதற்குத் தொடக்கமும் முடிவும் கிடையாது. இதயத்தில் {மனத்தில்} குடியிருக்கும் வடிவமற்ற நெருப்பைப்போல அஃது உயிரினங்களை அழிக்கிறது.(36) ஒரு விறகில் ஊட்டப்படும் நெருப்பினால், ஒரு விறகுக்கட்டே எரிவதைப் போல, தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன் தனது இதயத்தில் பிறந்த பேராசையினால் அழிவைச் சந்திக்கிறான்.(37)
உயிருள்ள உயிரினங்கள் அனைத்தும் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சுவது போல, செல்வந்தர்கள், மன்னனிடமும், திருடனிடம், நீர், நெருப்பு, ஏன் உறவினர்களிடம் கூட எப்போதும் அச்சத்தையே கொண்டுள்ளனர்.(38) காற்றில் இருக்கும் இறைச்சித் துண்டு பறவைகளால் விழுங்கப்படும்; நிலத்தில் இருந்தால் இரைதேடும் விலங்குகளாலும்; நீரில் இருந்தால் மீன்களாலும் விழுங்கப்படுவதைப் போலவே, செல்வந்தன் ஒருவன் எங்கிருந்தாலும் ஆபத்தையே எதிர்நோக்கி இருக்கிறான்.(39) பலருக்கு அவர்களின் செல்வமே மரணத்தைக் கொடுக்கும் நஞ்சாகிறது. செல்வத்தில் இன்பம் காணும் ஒருவன் அதற்கு அடிமையாகி உண்மை இன்பத்தை அறியாமல் போகிறான்.(40)
பேராசையையும் மூடத்தனத்தையுமே செல்வம் அதிகரிக்கச் செய்கிறது. கஞ்சத்தனத்திற்கும், பகட்டுக்கும், தற்பெருமைக்கும், அச்சம் மற்றும் துயரத்துக்கும் செல்வமே வேராகும். இவையே ஞானமுள்ளோர் செல்வந்தர்களிடம் காணும் துன்பங்களாகும். செல்வத்தை அடைவதிலும், பாதுகாப்பதிலும் மனிதர்கள் பல துயரங்களை அடைகின்றனர். செல்வம் செலவழிந்தாலும் அதுவும் துயரத்தையே கொடுக்கும். அல்லாமலும், செல்வத்தின் பொருட்டு ஒருவனின் வாழ்வே {உயிரே} பறிபோகும். செல்வத்தைக் கைவிடுவதாலும் துயரமே மிஞ்சுகிறது. ஒருவனின் செல்வத்தால் பேணி வளர்க்கப்பட்ட மற்றொருவன், அந்தச் செல்வத்தின் பொருட்டு அவனுக்குப் பகைவனாகிறான்.(42,43) எனவே, செல்வத்தை வைத்திருத்தல் இவ்வளவு துயரங்களைக் கொடுப்பதால், அதன் அழிவைக் கண்டு ஒருவன் துயர் கொள்ளலாகாது. அறியாமை கொண்டோர் மட்டுமே நிறைவில்லாமல் இருப்பார்கள். எனினும், ஞானமுள்ளோர் எப்போதும் நிறைவுடனேயே இருப்பார்கள்.(44)
செல்வத்தின் மீதிருக்கும் தாகத்தை மட்டுப்படுத்தவே முடியாது. நிறைவுடன் இருப்பதே உயர்ந்த இன்பமாகும்; எனவே, மனநிறைவையே பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கமாக ஞானிகள் கருதுகின்றனர்.(45) இளமை, அழகு, வாழ்வு, செல்வக்குவியல், செழுமை, அன்பானவர்களின் துணை ஆகிவற்றின் நிலையாமையை உணர்ந்த ஞானிகள் அவற்றில் ஆசை கொள்வதில்லை.(46) எனவே, துன்பத்தை உணர்ந்து செல்வத்தை அடைவதைக் கைவிட வேண்டும். எந்தச் செல்வந்தனும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, அதன்காரணமாகவே அறம்சார்ந்தோர் செல்வத்தின் மீது ஆசையில்லாதவர்களை மெச்சுகிறார்கள்.(47) அறம் சார்ந்த காரியங்களுக்காகச் செல்வத்தைத் தொடர்பவர்கள்கூட அத்தகைய செயல்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக, சேறு பட்ட கைகளைக் கழுவிக் கொள்வதைக் காட்டிலும், சேற்றைத் தொடாமல் இருப்பது நல்லது இல்லையா?(48) ஓ யுதிஷ்டிரா, நீ ஆசைப்படாமல் இருக்க வேண்டும்! அறம் உனக்கு வேண்டும் என்றால், உலக உடைமைகள் மீதிருக்கும் ஆசைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்" என்றார் {சௌனகர்}.(49)
யுதிஷ்டிரன், "ஓ பிராமணரே, செல்வத்தை நான் விரும்புவது, அது கிடைத்தவுடன் இன்புறுவதற்காக அல்ல. பிராமணர்களைத் தாங்கிக் கொள்ளவே நான் அதை விரும்புகிறேன். பேராசையின் காரணமாக நான் அதை விரும்பவில்லை.(50) ஓ பிராமணரே, எங்களைப் போன்ற ஒருவனால், தன்னைப் பின்பற்றுபவர்களை {சார்ந்திருப்பவர்களைப்} பேணவும், ஆதரிக்கவும் இயலவில்லை என்றால், எதற்காக அவன் இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்?(51)
அனைத்து உயிரினங்களும் (தாங்கள் ஈட்டிய) உணவை, தங்களைச் சார்ந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதைக் காண்கிறோம். அப்படியே இல்லற வாழ்வை வாழ்பவனும், தங்களுக்காகச் சமைத்துக் கொள்ளாதிருக்கும் யதிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் தன் உணவைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.(52) நல்ல மனிதர்களின் வீடுகள், (அமர்ந்து கொள்ள) புல்லும், (ஓய்ந்திருக்க) வெளியும், (கழுவ, தாகம் தணிக்க) நீரும், நான்காவதாக இன்சொல்லும் இல்லாமல் இருக்கலாகாது.(53) களைப்புற்றவனுக்குப் படுக்கையும், நிற்பதால் சோர்ந்தவனுக்கு இருக்கையும், தாகத்திலிருப்பவனுக்கு நீரும், பசித்திருப்பவனுக்கு உணவும் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்.(54)
விருந்தினர்களை இனிமையான பார்வையாலும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடும், இனிமையான வார்த்தைகளாலும் வரவேற்க வேண்டும். வீட்டின் உரிமையாளன் விருந்தினரைக் கண்டதும், உடனே எழுந்து, அந்த விருந்தினரை எதிர்கொண்டழைத்து, அவருக்கு இருக்கை அளித்து, அவரை வணங்க வேண்டும். இதுவே நிலையான அறமாகும்.(55) அக்னிஹோத்ரம் செய்யாதவர்களும், காளைகளைக் {மாடுகள்} கவனிக்காதவர்களும், உற்றார் உறவினரைப் பேணிக் காக்காதவர்களும், விருந்தினர், நண்பர்கள், மகன்கள், மனைவியர், பணியாட்கள் ஆகியோரைப் புறக்கணிப்பவர்களும் பாவத்தால் எரிக்கப்படுகின்றனர். தன் ஒருவனுக்காக மட்டுமே ஒருவன் உணவு சமைக்கக்கூடாது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், விருந்தினருக்கும் படைக்காமல் எவனும் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைக்கப்படாத உணவை ஒருவன் உண்ணக்கூடாது.(56,57) காலையிலும், மாலையிலும் (தகுந்த) நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பறவைகளுக்கும் உணவைத் தரையிலிட்டு, வைஸ்வதேவ வேள்வியை ஒருவன் செய்ய வேண்டும்.(58) விகஸத்தை {விருந்தினர்களுக்கு / யாசகர்களுக்குக் கொடுத்து / வேள்வியில் எஞ்சிய உணவை} உண்பவர்கள், அமிர்தத்தை உண்டதாகக் கருதப்படுகிறார்கள்.(59) ஒரு விருந்தினருக்கு உணவளிப்பது ஒரு வேள்விக்கு நிகரானதாகும், ஒருவன் தன் விருந்தினரைப் பார்க்கும் இனிமையான பார்வை {1}, அர்ப்பணிப்புடன் கூடிய கவனிப்பு {2}, இனிமையான பேச்சு {3}, பின்தொடர்ந்து அவன் அளிக்கும் மரியாதை {4}, அவன் கொடுக்கும் உணவு மற்றும் நீர் {5} ஆகியவையே அந்த வேள்வியின் ஐந்து தட்சணைகள் {பஞ்சதக்ஷிணையஜ்ஞம்}ஆகும்.(60) முன்பு எப்போதும் கண்டிராதவனும், களைத்திருப்பவனுமான வழிப்போக்கனுக்கு அளவற்ற உணவைக் கொடுப்பவன் பெரும் நன்மையை அடைகிறான்.(61) இல்லற வாழ்வு வாழ்ந்து இத்தகு செயல்களைச் செய்பவன் பெரும் ஆன்மத் தகுதிகளை அடைகிறான். ஓ பிராமணரே, இதில் உமது கருத்து என்ன?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(62)
சௌனகர், "ஐயோ, இந்த உலகம் முரண்பாடுகள் நிறைந்தது. நல்லோரை அவமதிக்கவும், தீயோரை நிறைவடையவும் செய்கிறது.(63) ஐயோ, அறியாமையாலும், ஆசையாலும், தங்கள் புலன்களுக்கு அடிமைகளான மூடர்கள் கூட, மறுமையில் உண்டாகப் போகும் பசியைத் தணிக்கப் பல செயல்களைச் செய்கின்றனர்[2].(64) தீயவையும், பொல்லாதவையுமான குதிரைகளால் தன் புலனுணர்வை இழந்த ஒரு தேரோட்டியைப் போல, புலன்களால் மயக்கப்படும் மனிதர்கள் கண்களைத் திறந்து கொண்டே வழிதவறிப் {பாவ வழியில்} போகின்றனர்.(65)
[2] கும்பகோணம் பதிப்பில், "அறிவில்லாதவன் மோகன் ராகம், ஆசை இவைகளால் மூடப்பட்டு விஷயங்களுக்குட்பட்டுப் போகத்திற்கும் உதரத்திற்குமாக யாகசேஷத்தை மேலானதாக நினைக்கிறான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அறியாமை கொண்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், ஆசைககளாலும் பீடிக்கப்பட்டு, தங்கள் வயிறுகளையும், பாலியல் உறுப்புகளையும் நிறைவடையச் செய்வதற்கான பல செயல்களைச் செய்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மாயை மற்றும் பற்றால் இழுக்கப்படுபவர்களும், தங்கள் புலன்களை நிறைவடையச் செய்யும் அடிமைகளுமான மூடர்கள் தங்கள் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றுக்காகப் பல செயல்களைச் செய்கின்றனர்" என்றிருக்கிறது.
ஆறு புலன்களும், தனக்குரிய பொருளைக் காணும்போது, இதயத்தில் அந்தப் பொருளைக் குறித்த ஆசை எழுகிறது.(66) ஒரு குறிப்பிட்ட புலனுக்கு இன்பம் தரும் பொருளை அடைந்து இன்புற இதயம் முன்னேறும் போது, ஒரு விருப்பம் ஊக்கப்படுத்தப்படுகிறது. எனவே அங்கே ஓர் உறுதி பிறக்கிறது.(67) ஒளியைக் கண்டு ஆசை கொண்டு நெருப்புச்சுடரில் விழும் பூச்சியைப் போல, இன்பம் நுகர் பொருட்களால் துளைக்கப்பட்ட அவன் ஆசை {சபலம்} என்ற நெருப்பில் விழுகிறான்.(68) புலன்களின் இன்பத்தால் குருடான அவன், அறியாமை இருளில் மூழ்குகிறான். தான் இன்பம் என்று நினைக்கும் மூடத்தனத்தில் மூழ்கி, தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறான்.(69) அறியாமை, செயல் மற்றும் ஆசை ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு உயிரினமும், இடைவிடாமல் உருளும் சக்கரத்தைப் போல, ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவியை அடைந்தும், இப்போது நீரில், இதோ நிலத்தில், இங்கே காற்றில் எனப் புல்லின் நுனி முதல் பிரம்மன் வரையுள்ள இருப்பின் வட்டம் முழுவதும் திரிந்து, இவ்வுலகில் பல்வேறு நிலைகளில் வீழ்கிறது.(70,71)
இவையே அறிவற்றவர்களின் நடைமுறையாக இருக்கிறது. இனி, லாபம் தரும் அறம் மற்றும் சுய விடுதலையில் {மோக்ஷத்தில் / முக்தியில்} முனைப்புடன் இருக்கும் ஞானிகளின் வழிகளைக் கேட்பாயாக.(72) வேதங்கள் செயல்படக் கட்டளையிடுகின்றன. ஆனால் செயல்பாட்டை (செயல்பாட்டில் உள்ள ஆர்வத்தை) துறக்கச் சொல்கின்றன. எனவே, நீ அபிமானத்தைத் {அபிமானம் = நோக்கமற்ற நிலை} துறந்து செயல்பட வேண்டும்.(73) வேள்விகள்{1}, (வேத) கல்வி{2}, கொடை{3}, தவம்{4}, (பேச்சிலும் செயலிலும்) வாய்மை{5}, மன்னிக்கும் தன்மை {பொறுமை}{6}, புலனடக்கம்{7}, ஆசையைத் துறத்தல்{8}, ஆகிய எட்டு கடமைகளும் {தர்மங்களும்} உண்மையி்ன் வழியை உண்டாக்குகின்றன என்று {வேதங்களில்} தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(74) இவற்றில் முதல் நான்கும் பித்ருக்களின் உலகத்திற்கான பாதையை {பிதிருயானமார்க்கத்தை} அமைக்கின்றன. இவை அபிமானம் {நோக்கமின்மை} இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(75) நல்லவர்களால் எப்போதும் பின்பற்றப்படும் கடைசி நான்கும், தேவர்களின் சொர்க்கத்தை அடைய வழிவகுக்கின்றன. ஆன்மத் தூய்மை கொண்ட அனைவரும் இந்த எட்டு வழிகளையும் பின்பற்ற வேண்டும்.(76)
முக்திக்காக இந்த உலகை வெல்ல நினைப்பவர்கள், நோக்கங்களைத் துறந்து, புலன்களை அடக்கி, குறிப்பிட்ட கடும் நோன்புகள் நோற்று, அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசானுக்குத் தொண்டு செய்து, தங்கள் தட்சணையை நிச்சயம் கொடுத்து, விடாமுயற்சியுடன் வேதம் கற்று, செயலை இழிவாகக் கருதி கைவிட்டு, மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசையையும் வெறுப்பையும் {விறுப்பு வெறுப்புகளைக்} கைவிட்டே தேவர்கள் செழுமையை அடைந்தனர்.(77-79) யோக செல்வத்தின் அறத்தாலேயே ருத்திரர்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் உயிரினங்களை ஆளுகின்றனர்.(80) எனவே, ஓ குந்தியின் மகனே, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைப் போலவே நீயும், நோக்கம் கொண்ட செயலில் இருந்து முழுமையாக விடுபட்டு, தவச் செயல்களால் யோகத்தில் வெற்றியடைய முயற்சி செய்வாயாக.(81) உனது மூதாதையர்களில் {பித்ருக்களில்} ஆண்களிடமும் பெண்களிடமும் நீ பட்டிருக்கும் கடனை உனது செயல்களால் (வேள்விகளால்) உண்டாகும் வெற்றியால் அடைத்துவிட்டாய். மறுபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குத்} தொண்டு செய்வதற்காகத் தவத்தில் வெற்றியடைவாயாக.(82) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அந்த வெற்றியின் அறத்தால், தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும்; எனவே, தவத்தைக் கைக்கொண்டு விருப்பங்கள் அனைத்தையும் அடைவாயாக" என்றார் {சௌனகர்}(83).
ஆங்கிலத்தில் | In English |