The Description of Dhaumya | Vana Parva - Section 3 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தௌமியரிடம்
தனது இக்கட்டான நிலையைச் சொல்லி ஒரு வழி சொல்லுமாறு கேட்டது; தௌமியர் கூறிய விளக்கம்; யுதிஷ்டிரன் சூரியனை
நோக்கி செய்த வழிபாடு; யுதிஷ்டிரன் சூரியனிடம் இருந்து அக்ஷயப் பாத்திரத்தை அடைந்தது...
வைசம்பாயனர் சொன்னார், "சௌனகரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுக்கு மத்தியில் இருந்த தனது புரோகிதரை {தௌமியரை} அணுகி,(1) "வேதங்களை அறிந்த பிராமணர்கள், கானகம் நோக்கிச் செல்லும் என்னைப் பின் தொடர்ந்து வருகின்றனர். பேராபத்துகளால் துயரப்படும் என்னால் இவர்களைத் தாங்க இயலாது.(2) என்னால் இவர்களைக் கைவிடவும் முடியவில்லை. இவர்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்கும் சக்தியும் என்னிடம் இல்லை. ஓ புனிதமானவரே {தௌமியரே}, இச்சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர் சொன்னார், "அறம்சார்ந்தவர்களில் முதன்மையான தௌமியர், இதற்குச் சரியான வழியைச் சிந்திக்கத் தமது யோக சக்தியைக் கொண்டு சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} மனத்தை ஒருங்கிணைத்துக் கொண்டு, யுதிஷ்டிரனிடம்,(4) "பழங்காலத்தில், படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டன. சவிதா (சூரியன்), (அவை அனைத்துக்கும்) தந்தையைப் போல இருந்து, அவற்றின் மீது இரக்கம் கொண்டான்.(5) முதலில் வடக்கு சரிவுக்குச் {உத்தராயணம் / வடகோடு} சென்று தனது கதிர்களால் தண்ணீரை இழுத்து, தென் சரிவுக்கு {தட்சணாயனம் / தென்கோடு} வந்து, பூமிக்கு மேல் நின்றான். அப்போது வெப்பத்துக்குத் தன்னையே மையமாக வைத்துக் கொண்டான்.(6) இப்படிச் சூரியன் பூமியின் மேல் இருந்த போது, காய்கறிகளின் {தாவரங்களின்} தலைவன் (சந்திரன்), சூரிய வெப்பத்தின் விளைவை (ஆவியை), மேகங்களாக மாற்றி, நீரின் வடிவில் அவற்றைப் பொழிந்தான்.(7) இதனால் செடிகள் முளைத்தன. எனவே, சந்திரனின் தாக்கத்தின் மூலம் நனைந்த சூரியனே, வேகமாக வளரும் வித்துகளில் இருந்து புனிதமான காய்கறியாக உருமாறி ஆறு சுவைகளைத் தருகிறான். இவையே {இப்படி விளைந்தவையே} பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகின.(8) இவ்வாறே, உயிரினங்களின் உயிரைத் தாங்க வைக்கும் உணவு, சூரிய சக்தியை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, சூரியனே அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிறான். ஓ யுதிஷ்டிரா, நீ அவனையே {சூரியனையே} புகலிடமாகக் கொள்வாயாக.(9) தூய பரம்பரை மற்றும் செயல்களுக்காக அறியப்படும் அனைத்து சிறப்புமிக்க ஏகாதிபதிகளும், தங்கள் மக்களுக்கு வழங்குவதற்காக உயர்ந்த தவப் பயிற்சியை மேற்கொண்டனர்.(10) பெரும் கார்த்தவீரியன், வைனியன் {வேனன் மகனான பிருது}, நகுஷன் ஆகிய அனைவரும், துன்பத்தில் இருந்த தங்கள் மக்களுக்கு, நோன்புகள் நோற்றுத் தவம் மற்றும் தியானம் ஆகியவற்றின் அறத்தால் {உணவு} கொடுத்தனர்.(11) எனவே, ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரா}, நீ செயல்களின் மூலம் தூய்மையடைந்தவனாவாய். அதே போல் {அவர்களைப் போல}, நீயும் கடுந்தவங்களைச் செய்வாயாக. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அறம் சார்ந்த மறுபிறப்பாளர்களை {பிராமணர்களை} ஆதரிப்பாயாக" என்றார் {தௌமியர்}[1].(12)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பிறகும் இன்னும் சில வரிகள் இருக்கின்றன. அவை பினவருமாறு, "இவ்விதம் அந்தக் காலத்திற்கேற்ற வார்த்தையைத் தௌம்யர் சொல்லக் கேட்ட யுதிஷ்டிரர், அவர்களிடமிருந்து எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய மந்திரத்தை உபதேசம் பெற்றார். அஷ்டாகரமென்னும் சிறந்த மந்திரமானது ஸம்ஸார துக்கத்தை அடைந்தவர்களுக்கு எப்போதும் பிரியமானது. பிராமணர்களுக்கு அன்னத்திற்காக நியமத்திலிருக்கிறவரும், மனத்தை அடக்கியவரும், உறுதியான வ்ரதமுள்ளவரும் (ஸ்நானத்தால்) சுத்தமான சரீரமுள்ளவருமா தர்ம புத்திரர் மேலான தவத்தைச் செய்தார். அந்த அரசர் புஷ்ப முதலிய பூஜைக்குரிய பொருள்களாலும், பலிகளாலும் ஸூரியனைப் பூஜித்து, ஸூர்யனுக்கு எதிர்முகமானார். தர்மாத்மாவான தர்மபுத்திரர் கங்காஜலத்தை ஆசமனம்செய்து, இந்திரியங்களை ஜயித்துக் காற்றைப் புசித்து மனோவியாபாரத்தை நிறுத்தி, பிரணாயாமம் செய்து கொண்டு நின்றார் பிறகு, சுத்தமான அவர் சுத்தமான வாக்குகளால் ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார்" என்றிருக்கிறது. இன்னும் யுதிஷ்டிரன் எவ்வாறெல்லாம் தவமும், நோன்பும் இருந்தான் என்பது குறித்த செய்திகள் நீள்கின்றன.
ஜனமேஜயன், "குருக்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், அற்புதமான தோற்றம் கொண்ட சூரியனை பிராமணர்களுக்காக எப்படி வணங்கினான்?" என்று கேட்டான்.(13)
வைசம்பாயனர், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மனத்தை அனைத்துப் பொருட்களிலிருந்தும் விலக்கி கவனமாகக் கேட்பாயாக. ஓ மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, ஒரு நேரத்தைக் குறித்துக் கொள்வாயாக. {அப்போது} நான் உனக்கு அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன்.(14) ஓ சிறப்பானவனே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தௌமியரால், பிருதையின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சொல்லப்பட்ட சூரியனின் நூற்று எட்டுப் {108} பெயர்களை {அஷ்டாகரத்தைக்} கேட்பாயாக.
தௌமியர், "சூரியன், ஆர்யமான், பகன், த்வஷ்டிரி {துவஷ்டா}, புஷன், ஆர்க்கன், சாவித்ரி, ரவி, கபஸ்திமான், அஜன், மிருத்யு {காலன்}, தாத்ரி {தாதா}, பிரபாகரன், பிருதிவீ, அபன், தேஜன் {தேஜஸ்}, கம், வாயு, {பராயணன்}, சோமன், பிருஹஸ்பதி, சுக்ரன், புதன், அங்காரகன், இந்திரன், விவஸ்வான், தீப்தாமசு, சுசி, சௌரி, சனைசரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஸ்கந்தன், வைஸ்ரவணன், வைதியுதக்னி, ஜாடராக்னி, ஐந்தனன், தேஜஸாமபதி, தர்மத்வஜன், வேதகர்த்தன், வேதாங்கன், வேதவாஹனன், கிருதன், திரேதன், துவாபரன், தூய்மையற்ற கலி, கலை, காஷ்டன், முகூர்த்தன், பக்ஷன், {மாஸன், ருது}, யமன், க்ஷணன், ஸம்வத்ஸரகரன், அஷ்வத்தன், காலச்சக்ரன், விபாவஸு, புருஷன், சாஸ்வதன், யோகின், வியக்தாவ்யக்தன், ஸநாதனன், காலதியக்ஷன் {லோகாதயக்ஷன்}, பிரஜாதியக்ஷன் {ஸுராதயக்ஷன்}, விஷ்வகர்மன், தமோனுதன், வருணன், ஸாகரன், அம்சு {அம்சன்}, ஜீமூதன், ஜீவனன், அரிஹன், பூதாஷ்ரயன், பூதபதி, ஸ்ரஷ்டிரி {ஸரஷ்டா}, ஸம்வர்த்தகன், வன்ஹி {வஹ்}, ஸர்வாதி {ஸர்வஸயாதி}, அலோலுபன், அனந்தன், கபிலன், பாநு, காமதன், ஸர்வதோமுகன், ஜயன், விசாலன், வரதன், மனஸ், ஸுபர்ணன், பூதாதி, சீக்ரகன், பிராணதாரனன், தன்வந்தரி, தூமகேது, அதிதேவன், அதிதேஸஸுதன், துவாதசாத்மன், அரவிந்தாக்ஷன், பித்ரு {பிதா}, மாத்ரு {மாதா}, பிதாமஹன் {பாட்டன்}, ஸ்வர்க்கதவாரன், பிரஜாதுவாரன், மோக்ஷதுவாரன், திரிவிஷ்டபன், தேஹாகார்த்தி {தேவகர்த்தன்}, பிரசந்தாத்மன், விஷ்வாத்மன், விஷ்வதோமுகன், சராசராத்மன், ஸூக்ஷமாத்மன், மற்றும் கருணையுள்ள மைத்திரேயன்.(16-27) சுயம்புவின் (பிரம்மா) சொல் படி அளவிடமுடியா சக்தி கொண்ட சூரியனின் நூற்று எட்டு {108} பெயர்கள் இவையே.(28)
"ஓ பாஸ்கரா {சூரியனே}, தங்கத்தைப் போன்றும் நெருப்பைப் போன்றும் பிரகாசித்துத் தேவர்களாலும், பித்ருக்களாலும், யக்ஷர்களாலும் வணங்கப்பட்டு, அசுரர்களாலும், நிசாசரர்களாலும், சித்தர்களாலும் வழிபடப்படுபவனே, செல்வத்தை அடைவதற்காக நான் உன்னை வணங்குகிறேன்" என்ற துதியை(29) எவனொருவன் சூரியோதயத்தின் போது, நிலைத்த கவனத்துடன் சொல்வானோ, அவன் மனைவி மக்கள் செல்வம், முற்பிறவியின் நினைவு ஆகியவற்றைப் பெறுகிறான்.(30) இந்தத் துதியைப் பாடுவதால் ஒருவன், பொறுமையையும், நினைவுத்திறனையும் பெறுகிறான். ஒரு மனிதன், தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, இந்தத் துதியைப் பாடட்டும். இவ்வாறு செய்வதால் அவன் துயரம், காட்டுத்தீ, பெருங்கடல் ஆகியவற்றில் நேரும் துன்பங்களுக்கு எதிரான சாட்சியாக இருந்து, தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் பெறுவான்" என்றார் {தௌமியர்}".(31)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சூழ்நிலைக்கேற்ற சொற்களைத் தௌமியரிடம் இருந்து கேட்ட நீதிமானான யுதிஷ்டிரன், பிராமணர்களை ஆதரிக்க விரும்பி, மனத்தை ஒருமுகப்படுத்தி, மனத்தைத் தூய்மைப்படுத்தி, கடும் தியானத்தில் ஈடுபட்டான். நாளை உண்டாக்குபவனை {சூரியனை} மலர்களாலும் மற்ற பொருட்களாலும் பூஜித்து, தனது சடங்குகளைச் செய்தான் மன்னன் {யுதிஷ்டிரன்}.(32,33) நீரோடையில் நின்று கொண்டு, முகத்தை நாளின் தேவனுக்கு {சூரியனுக்கு} நேராக வைத்துக் கொண்டான். கங்கையின் நீரைத் தொட்ட அறம்சார்ந்த யுதிஷ்திரன், புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்வாதாரமாகக் காற்றை மட்டுமே கொண்டு, பிராணாயாமத்தில் ஈடுபட்ட ஆன்மாவுடன் நின்றான்.(34) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சை அடக்கி, (சூரியனை நோக்கி) துதிபாடலை பாடத் தொடங்கினான் {யுதிஷ்டிரன்}.(35)
யுதிஷ்டிரன், "ஓ சூரியனே, நீ இந்தப் அண்டத்தின் விழியாக இருக்கிறாய். அனைத்து உடல்களுக்கும் நீயே ஆன்மாவாக இருக்கிறாய். நீயே அனைத்திற்கும் மூலமாக இருக்கிறாய். நீயே அறம் சார்ந்தவர்களின் செயல்களில் இருக்கிறாய்.(36) சாங்கிய தத்துவத்தை (ஆன்மாவின் புதிர்களை) அறிந்தவர்களுக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய். {மோட்சமடைய} தாழில்லாத கதவாக நீயே இருக்கிறாய். {அடிமைத்தனத்திலிருந்து} விடுதலை விரும்புவோருக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய்.(37) உனது தூய இரக்கத்தால், உலகத்தை நிலைக்க வைத்து, கண்டறியப்பட வைத்து, புனிதப்படுத்தி நீயே ஆதரவுமளிக்கிறாய்.(38) வேதங்களை அறிந்த பிராமணர்கள், உன் முன்னால் தோன்றி, குறிப்பிட்ட நேரத்தில் உன்னை வழிபட்டு, குறிப்பிட்ட (வேதங்களின்} கிளைகளில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர். முனிவர்களால் நீயே வணங்கப்படுகிறாய்.(39)
சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், நாகர்கள் ஆகியோர் வரங்களைப் பெற விரும்பி வானத்தில் உலவும் உனது தேரைத் தொடர்ந்து வருகின்றனர்.(40) உபேந்திரனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய முப்பத்து மூன்று {33} தேவர்களும்[2], மகேந்திரனும், வைமானிகங்களின்[3] வரிசைகளும் உன்னை வழிபட்டு, வெற்றியடைந்திருக்கின்றனர்[4].(41) தெய்வீக மந்தார மலர்களால்[5] ஆன மாலைகளை உனக்குப் படைத்து, வித்யாதரர்களில் சிறந்தவர்கள் தங்கள் ஆசைகள் அத்தனையும் அடைந்தனர்.(42)
[2] "இவர்கள் எட்டு {8} வசுக்கள், பதினோரு {11} ருத்திரர்கள், பனிரெண்டு {12} ஆதித்யர்கள், பிரஜாபதி மற்றும் வஷத்கரன் ஆகியோர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறர்.
[3] "இது தேவர்களின் வரிசை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[4] கும்பகோணம் பதிப்பில், "முப்பத்து மூன்று தேவதைகளும், விமானத்தோடு ஸஞ்சரிக்கும் கணங்களும், இந்திரனும், உபேந்திரனும் உம்மைப் பூஜித்து ஸித்தியை அடைந்திருக்கிறார்கள்" என்றிருக்கிறது.
[5] "பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குஹ்யர்களும், தெய்வீக மற்றும் மனிதத் தன்மையிலான பித்ருக்களின் ஏழு வகைகளும் {ஏழு பித்ரு கணங்களும்} உன்னை மட்டுமே வழிபட்டு மேன்மை அடைந்தனர்.(43) வசுக்கள், மருத்துகள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மரீசிபர்கள், வாலஹில்யர்கள் {வாலகில்யர்கள்}, சித்தர்கள் ஆகியோர் உன்னை வணங்கியே உயர்ந்த புகழை அடைந்தனர்.(44) ஏழு உலகங்கள் மொத்தத்திலும், பிரம்மனையும் சேர்த்து உன்னை விஞ்சிய எதையும் நான் காணவில்லை.(45) சக்தியும் பெருமையும் கொண்ட மற்றவை எனினும், அவை அனைத்தும் உனது பிரகாசத்திற்கும் சக்திக்கும் ஈடற்றவையாகும்.(46) அனைத்து ஒளியும் உன்னுள் இருக்கிறது. நீயே அனைத்து ஒளிகளின் தலைவனாவாய். உனக்குள்ளேயே (ஐந்து) பூதங்களும், நுண்ணறிவு மற்றும் ஞானம் அனைத்தும், தவமும், தவத்தன்மைகளும் இருக்கின்றன[6].(47)
[6] "இவை தவத்தின் குணங்களாகிய அணிமா, லகிமா முதலியன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அசுரர்களின் செருக்கை அடக்குபவனான சாரங்கத்தைத்[7] தாங்குபவனின் {விஷ்ணுவின்} கைகளில் இருக்கும் சக்கரத்தை, உனது சக்தியை உள்ளடக்கியே விஷ்வகர்மன் செதுக்கினான்.(48) கோடை காலத்தில் உன் கதிர்களால் அனைத்து உடல்களில் இருந்தும், செடிகள் மற்றும் நீர்ப் பொருட்களில் இருந்தும் நீர்மையை எடுத்து, மழைக்காலத்தில் அவற்றைமழையாகப் பொழிகிறாய்.(49) உனது வெப்பம் மிகுந்த கதிர்களே மேகங்களாகி, மின்னலுடன் முழங்கி உரிய காலத்தில் மழையாகப் பொழிகிறது.(50) குளிரால் பாதிக்கப்பட்டவனுக்கு நெருப்போ, உறைவிடமோ, கம்பளி ஆடைகளோ உனது கதிர்களை விட மேலான சுகத்தைக் கொடுக்க முடியாது.(51)
[7] "சிவனுக்குப் பினாகத்தைப் போல, இது விஷ்ணுவின் வில்லாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பதிமூன்று தீவுகளைக்[8] கொண்ட இந்த முழு உலகத்துக்கும் நீயே ஒளியூட்டுகிறாய். நீ மட்டுமே மூன்று உலகங்களுக்கும் எப்போதும் நன்மை செய்வதில ஈடுபடுகிறாய்.(52) நீ எழவில்லையென்றால் அண்டமே குருடாகிறது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் கல்விமான்களால் ஈடுபட முடியாது.(53) பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் நாள்தோறும் தங்கள் கடமைகளையும், வேள்விகளையும்[9] உனது கருணையாலேயே செய்ய முடிகிறது.(54) நீயே பிரம்மாவின் ஆயிரம் யுக காலத்தின் ஆதியும் அந்தமுமான நாளாக இருக்கிறாய் என்று காலவரிசை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.(55) மனுக்கள், மனுக்களின் மகன்கள், அண்டம், மனிதகுலம், மன்வந்தரம் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஆகிய அனைத்துக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய்.(56) பிரளய காலத்தின் போதும் உன் கோபத்தில் உண்டான ஸம்வர்தக நெருப்பு மூன்று உலகத்தையும் எரித்து விட்டு, அது மட்டுமே எஞ்சியிருக்கும்.(57) உன் கதிர்களால் உண்டாகும் பலவண்ண மேகங்கள், ஐராவத யானையுடனும், இடியுடனும் கூடி, நியமிக்கப்பட்ட {பிரளயகாலப்} பெருவெள்ளத்தைக் கொண்டுவருகின்றன[10].(58) உன்னைப் பனிரெண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, பல சூரியன்களாக மாறி, உன் கதிர்களால் பெருங்கடலை நீயே குடிக்கிறாய்.(59) இந்திரன் என்று அழைக்கப்படுபவன் நீயே. விஷ்ணு நீயே, பிரம்மன் நீயே, பிரஜாபதி நீயே, நெருப்பு {அக்னி} நீயே, நுட்பமான மனம் நீயே. தலைவனும் {பிரபுவும்} நீயே, நித்திய பிரம்மமும் நீயே.(60) ஹன்சன் நீயே, சாவித்ரி நீயே, பானு நீயே, அன்சுமாலீ நீயே, பிருஹஸ்பதி நீயே, விஸ்வஸ்வான் நீயே, மிஹிரன் நீயே, பூஷன் நீயே, மித்ரன் நீயே, மற்றும் தர்மனும் நீயே.(61) ஆயிரங்கதிர்கள் கொண்ட ஆதித்யன் நீயே, கதிர்களின் தலைவனான தபனனும் நீயே. மார்த்தாண்டன் நீயே, அர்க்கன் நீயே, ரவி நீயே, சூரியன் நீயே, சரண்யன் நீயே மற்றும் நாளை உண்டாக்குபவனும் நீயே.(62) திவாகரன் நீயே, ஸப்தஸப்தி நீயே, தூமகேசி நீயே, விரோசனன் நீயே. வேகமானவன் {அசுகாமீ} நீயே, இருளை அழிப்பவன் {தமோக்னன்} நீயே, மஞ்சள் குதிரைகள் கொண்டவவன் {ஹரிதாஷ்வன்} நீயே.(63)
[8] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸுதர்சனத்வீபம் முதலிய அவாந்தரத்வீபங்கள் சேர்ந்து பதிமுன்று என்பது பழையவுரை" என்றிருக்கிறது.
[9] உரையில் உள்ள சொற்கள் அக்னிஹோத்ரம், பசுபந்தம், இஷ்டி, மந்திரம், யாகம், தபம் முதலிய காரியங்கள் ஆகும்.
[10] கும்பகோணம் பதிப்பில், "உம்முடைய கிரகத்தாலுண்டான அனேக நிறமுள்ள பெரிய மேகங்கள் ஐராவதமென்னும் மேகங்களுடனும், இடிகளுடனும் கூடிக்கொண்டு நான்கு விதமான எல்லாப் பிராணிகளையும் ஜலத்தில் முழுகச் செய்கின்றன" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மேகங்களுக்கு மேலுள்ள மேகங்களுக்கு ஐராவதமென்று பெயர்" என்றும், "அண்டஜனம் = முட்டையிலிருந்து உண்டானது; ஸ்வேதஜன் = வேர்வையிலிருந்து உண்டானது; உத்பிஜ்ஜம் = பூமியைப் பிளந்து உண்டானது; ஜராயுஜம் = கருப்பையிலிருந்து உண்டானது என்று நான்கு வித பிராணிகள்" என்றிருக்கிறது.
ஆறாவது அல்லது ஏழாவது சந்திர நாளில் {சஷ்டி அல்லது சப்தமியில்} உன்னை மரியாதையுடன் வழிபடுபவன், பணிவுடனும், மன அமைதியுடனும், லட்சுமியின் அருளுடனும் இருப்பான்.(64) சிதறாத கவனத்துடன் உன்னை வழிபடுபவன், அனைத்து அச்சம், துன்பம் மற்றும் பாதிப்புகளில் இருந்து உன்னால் விடுவிக்கப்படுகிறான்.(65) அனைத்திலும் உன்னைக் காண்பவர்கள் நீடூழி வாழ்ந்து, பாவங்களில் இருந்து விடுதலை பெற்று, நோயற்ற வாழ்வு வாழ்ந்து, இன்புற்று இருப்பர்.(66) ஓ உணவுகள் அனைத்தின் தலைவனே, எனது விருந்தினர்களுக்கு மதிப்புடன் உணவு வழங்க விரும்பும் எனக்கு, அபரிமிதமான உணவை அளிப்பாயாக.(67) உனது பாதத்தைப் புகலிடமாகக் கொண்டு உன்னைத் தொடர்பவர்களான மாடரன், அருணன், தண்டன் மற்றும் அசனி, க்ஷுபை உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். க்ஷுபை மற்றும் மைத்ரீ ஆகிய அனைத்து உயிர்களின் தெய்வீகத் தாய்மாரையும், பிறரையும் வணங்குகிறேன். அவர்கள் அனைவரும் தங்கள் பங்கை எனக்குக் கொடுக்கட்டும்" என்று வேண்டினான் {யுதிஷ்டிரன்}.(68,69)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா, உலகைத் தூய்மைப்படுத்தும் சூரியன், (யுதிஷ்டிரனால்} இப்படியே வணங்கப்பட்டான். தன்னொளி கொண்டு நாளை உண்டாக்குபவன், இந்தப் பாடலால் நிறைவடைந்து, பாண்டுவின் மகன் முன்னிலையில் தகிக்கும் தனலெனத் தன்னை வெளிப்படுத்தினான்.(70) விவஸ்வான் {சூரியன்}, "நீ விரும்பியது அனைத்தையும் அடைவாய். பனிரெண்டு வருடங்களுக்குத் தேவையான உணவை நான் உனக்குத் தருகிறேன்.(71) ஓ மன்னா, நான் உனக்குக் கொடுக்கும் இந்தத் தாமிரப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள்வாயாக. ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவனே, பாஞ்சாலி, இந்தப் பாத்திரத்தை, அதன் உள்ளடக்கங்களுடன், அஃதாவது உனது சமையலறையில் சமைக்கப்பட்ட கனிகள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறிகளுடன் வைத்திருக்கும்வரை, இந்த நான்கு வகையான உணவுகளும் இந்த நாள் முதல் வற்றாமல் இருக்கும். இன்றிலிருந்து பதினான்காம் ஆண்டில் நீ உனது நாட்டை அடைவாய்" என்றான்.(72,73)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்தத் தேவன் பிறகு மறைந்து போனான். எவன் ஒருவனும், வரம் வேண்டி இந்தப் பாடலை {ஸ்லோகத்தை} மன ஒருங்கிணைப்புடன், பாடினால் நினைக்கும் வரம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நிச்சயம் அதை அடையலாம்.(74) மனிதர்களில் ஆணோ பெண்ணோ, தினமும் இதைப் பாடினாலோ, கேட்டாலோ, அவ்வாறு பாடும், அல்லது கேட்கும் அவனோ அவளோ, மகனை விரும்பினால் அடைவார்கள். செல்வத்தையும் கல்வியையும் விரும்பினாலும் அதையும் அடைவார்கள். ஆணோ பெண்ணோ இந்தப் பாடலை தினமும் இரு சந்திகாலத்திலும் {பொழுது உதிக்கும் அதிகாலையிலும், பொழுதுசாயும் மாலையிலும்}, பாடி வந்தால், ஆபத்துகளில் இருந்தும் கட்டுகளில் இருந்தும் விடுபடுவார்கள். இந்தப் பாடலை, சிறப்பு மிகுந்த சக்ரனுக்கு {இந்திரனுக்கு} பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(75-77) சக்ரனிடமிருந்து நாரதரும், நாரதரிடம் இருந்து தௌமியரும், தௌமியரிடம் இருந்து யுதிஷ்டிரனும் இதை அடைந்து, தங்கள் விருப்பங்களை அடைந்தனர்.(78) இந்தப் பாடலின் அறத்தாலேயே {தன்மையாலேயே} ஒருவன் போரில் வெற்றியை அடையலாம், பெரும் செல்வத்தையும் அடையலாம். இதைப் படிப்பவர்களை அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவித்து, சூரியலோகத்துக்கு அழைத்துச் செல்கிறது இந்தப் பாடல்".(79)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வரத்தை அடைந்த குந்தியின் அறம் சார்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, நீரில் இருந்து எழுந்து, தௌமியரின் பாதங்களில் விழுந்து, தன் தம்பிகளை ஆரத்தழுவிக் கொண்டான்.(80) ஓ மேன்மையானவனே, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சமையலறையில் இருந்த திரௌபதியிடம் சென்று, அவளால் வழிபடப்பட்டு, {அவர்களுக்கான} அன்றைய உணவை அவனே சமைத்தான்.(81) நான்கு வகையிலான தூய்மையான உணவு{பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறி}, எவ்வளவு குறைவாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்தில் இட்டதும் சுவையுடன் பெருகி அளவற்றதானது. அதைக் கொண்டு யுதிஷ்டிரன் மறுபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} உணவளித்தான்.(82) பிராமணர்களுக்கு உணவு அளித்த பிறகு, தனது தம்பிகளுக்கும் கொடுத்தான். அதன் பிறகு, விகஸம் என்று அழைக்கப்பட்டதும், எஞ்சியிருப்பதுமான உணவை யுதிஷ்டிரன் உண்டான்.(83) யுதிஷ்டிரன் உண்ட பிறகு, மேலும் எஞ்சியிருந்ததைப் பிருஷதனின் மகள் {திரௌபதி} உண்டாள். அவள் உணவை உண்டதும், அன்றைய பொழுதுக்கான உணவு தீர்ந்துவிடும்.(84)
நாளை உண்டாக்குபவனிடம் {சூரியனிடம்} இருந்து, இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தேவர்களைப் போலப் பிரகாசித்து, பிராமணர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் அவர்களை மகிழ்வித்தான்.(85) தங்கள் புரோகிதருக்குக் {தௌமியருக்குக்} கீழ்ப்படிந்து நடந்த பிருதையின் மகன்கள், நற்பேற்றை அருளும் சந்திர நாள், அமாவாசை, பௌர்ணமிகளில் விதிப்படியும், சாத்திரப்படியும் உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்தனர்.(86) அந்த வேள்விகள் முடிந்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தௌமியரால் சொல்லப்பட்டவையும், நற்பேறுகளை வழங்கக்கூடியவையுமான சடங்குகள் அனைத்தையும் செய்து, அவரையும் அழைத்துக் கொண்டு, பிராமணர்களால் சூழப்பட்டவனாக, காம்யக வனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(87)
ஆங்கிலத்தில் | In English |