Pradyumna defeated Salwa | Vana Parva - Section 19| Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
உணர்வு திரும்பிய பிரத்யும்னனைத் தேரோட்டி, மீண்டும் களத்திற்கு இட்டுச் செல்லல்; சால்வனை பிரத்யும்னன் வீழ்த்துதல்...
வாசுதேவன் தொடர்ந்தான், "இப்படிச் சொல்லப்பட்ட சூதகுல மகன் {தேரோட்டி}, பலம் பொருந்தியவர்களில் முதன்மையான பிரத்யும்னனிடம் இனிமையான வார்த்தைகளில் விரைந்து மறுமொழி கூறினான். அவன், "ஓ ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, போரில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நான், களத்தில் குதிரைகளை வழிநடத்த அஞ்சவில்லை. இதைத் தவிர வேறு எதுவுமில்லை! ஆனால், நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே {பிரத்யும்னா}, போரில் தேரை வழிநடத்துபவர்களுக்கு, அந்தத் தேரில் இருக்கும் போர்வீரனை என்ன செய்தாவது காக்க வேண்டும் என்று சொல்லித்தரப்படுகிறது! நீயும் மிகவும் தாக்கப்பட்டு இருந்தாய். சால்வனின் கணைகளில் நீ மிகுந்த காயங்களை அடைந்திருந்தாய். மேலும் ஓ வீரனே, நீ உணர்வை இழந்திருந்தாய். ஆகையால், நான் களத்தில் இருந்து விலக வேண்டியிருந்தது! ஆனால், சத்வதர்களின் தலைவனே, இப்போது நீ உணர்வை அடைந்துவிட்டாய். ஆகையால், கேசவரின் மகனே, குதிரைகளை வழிநடத்துவதில் எனக்கிருக்கும் திறமையை இப்போது பார்! நான் தாருகரால் பெறப்பட்டு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது, கொண்டாடப்படும் சால்வப் படையின் அணிவகுப்பை அச்சமின்றி ஊடுருவிச் செல்வேன்!" என்றான்.
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "வீரரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தத் தேரோட்டி, கடிவாளத்தின் வாரை இழுத்து, குதிரைகளை விரைவாக போர்க்களத்திற்கு நடத்தினான். மன்னா {யுதிஷ்டிரரே}, சாட்டையால் அடிக்கப்பட்டும், கடிவாளங்களால் இழுக்கப்பட்டு சென்ற அந்த அற்புதமான குதிரைகள் வளைவாகவும், ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியாக இல்லாமலும், வலதுபுறமாகவும் இடது புறமாகவும் அழகான அசைவுகளுடன், காற்றில் பறப்பதைப் போல சென்றன. மன்னா {யுதிஷ்டிரரே}, கை லாவகம் கொண்ட தாருகன் மகனின் நோக்கத்தை அறிந்த அந்தக் குதிரைகள், மிகுந்த சக்தியுடன், தரையில் தங்கள் குளம்புகளைப் பதிக்காமல் செல்வது போலத் தெரிந்தது! அந்த மனிதர்களில் காளை {தேரோட்டி}, எளிதாக சால்வனின் சேனையைச் சுற்றி வந்ததைக் கண்டவர்கள் மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.
பிரத்யும்னனின் திறமிக்க செயலைத் தாங்கிக் கொள்ள முடியாத சௌபத்தின் தலைவன் {சால்வன்}, உடனே மூன்று கணைகளைத் தனது எதிரியின் தேரோட்டி மீது அடித்தான்! எனினும், அந்தத் தேரோட்டி, அந்தக் கணைகளின் வேகத்தைக் குறித்து எந்த லட்சியமும் செய்யாமல் தொடர்ந்து வலப்புறமாகச் சென்றான். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த சௌபத்தின் தலைவன் {சால்வன்}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} மீது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏவினான்! ஆனால் அந்த எதிரிகளைக் கொல்லும் வீரனான ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தனது கை லாவகத்தை சிறு புன்னகையால் வெளிக்காட்டி, அந்த ஆயுதங்கள் அவனை நெருங்கும் முன்னரே அவற்றைத் துண்டாக்கினான். பிரத்யும்னனால் கணைகள் துண்டிக்கப்பட்டதைக் கண்ட சௌபத்தின் தலைவன், அசுர மாயையை அறிந்தவனாதலால், அவற்றின் துணை கொண்டு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். தன்னை நோக்கி அடிக்கப்பட்ட அந்த வலிமைவாய்ந்த தைத்திய ஆயுதங்களைத் தனது பிரம்ம ஆயுதத்தைக் கொண்டு பல துண்டுகளாக்கினான். பிறகு பிரத்யும்னன் பிற மன்னர்களின் இறகு கொண்ட கணைகளை அடித்தான்.
அந்த தைத்தியனால் அடிக்கப்பட்ட இரத்தம் குடிக்கும் கணைகளை விலக்கி, அவனைத் {சால்வனைத்} தலையிலும், மார்பிலும், முகத்திலும் அடித்தான். அதனால் ஏற்பட்ட காயங்களால் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்தான். பிரத்யும்னனால் கணைகளால் காரிய வாதம் கொண்ட அந்தச் சால்வன் கீழே விழுந்த போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவனை {சால்வனை} நோக்கி, எந்த எதிரியையும் அழிக்கும் வேறொரு கணையைப் பொருத்தி குறி பார்த்தான். அனைத்து தாசார்ஹர்களாலும் வழிபடப்படுவதும், சுடர் விட்டு எரியும் நெருப்பு போன்றதும், கடும் விஷம் கக்கும் பாம்பு போன்றதுமான அந்தக் கணையைக் கண்டு, அந்த ஆகாயமே "ஓ", "ஐயோ" என்றது போல இருந்தது.
பிறகு கருவூலத் தலைவனைத் (குபேரனைத்) தலைமையாகக் கொண்ட இந்திரன் முதற்கொண்ட அனைத்து தேவர்களும், நாரதரையும், பெரும் வேகம் கொண்ட வாயுத் தேவனையும் அனுப்பினார்கள். அந்த இருவரும் ருக்மிணியின் மகனை {பிரத்யும்னனை} அணுகி, தேவர்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லி, "வீரனே, மன்னன் சால்வன் உன்னால் கொல்லப்படக்கூடாது! அந்தக் கணையை விலக்கிக் கொள். போரில் உன்னால் அவனைக் கொல்ல இயலாது! அந்தக் கணையால் கொல்லப்பட முடியாத, அதன் சக்தியைத் தாங்கக் கூடிய மனிதன் யாருமில்லை. வலிமையுள்ள கரம் கொண்டவனே, தேவகியின் மகனான கிருஷ்ணனின் கையால் அவன் இறக்க வேண்டும் என்று பெரும்படைப்பாளர் {பிரம்மா} விதித்திருக்கிறார். அது பொய்யாகக் கூடாது!" என்றனர். இதன் காரணமாக பிரத்யும்னன் கணைகளில் சிறந்த அந்தக் கணையை தனது வில்லில் இருந்து பிரத்யும்னன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எடுத்து, தனது அம்பறாத்தூணியில் திரும்ப வைத்தான். பிறகு, மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த வலிமை வாய்ந்த சால்வன், பிரத்யும்னனின் கணைகளால் தாக்குண்டு, இதயம் ஒடிந்து, விரைவாக சென்று விட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய சால்வன், விருஷ்ணிகளால் இப்படித் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேரில் ஏறி, துவாரகையை விட்டு வானத்தில் ஏறி வெளியேறினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.