Krishna's war against Salwa | Vana Parva - Section 20 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
துவாரகை திரும்பிய கிருஷ்ணன் சால்வனைத் தேடி பல நாடுகளைக் கடந்து சென்று அவனைக் கண்டடைந்து அவனுடன் யுத்தம் புரிந்தது;
வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், "சால்வன் அனர்த்தர்களின் நகரத்தைவிட்டு சென்ற பிறகு, உமது பெரும் ராஜசூய வேள்வியை முடித்ததும் நான் அங்கு சென்றேன்! அங்கே சென்றதும் துவாரகை தனது ஓளியை இழந்திருப்பதைக் கண்டேன். பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அங்கே வேத உச்சரிப்புகள் மற்றும் வேள்வி ஆகியவற்றின் ஒலி கேட்கவில்லை. அற்புதமான மங்கையர் தங்கள் ஆபரணங்களை இழந்திருந்தனர். தோட்டங்கள் அழகிழந்து இருந்தன. இக்காட்சிகளால் அச்சமுற்ற நான், ஹிருதிகனின் மகனிடம் {கிருதவர்மனிடம்}, "மனிதர்களில் புலி போன்றவனே, விருஷ்ணிகளின் நகரத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் துயருற்று இருக்கின்றனர்?" என்று கேட்டேன். மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இப்படிக் கேட்கப்பட்ட ஹிருத்திகனின் மகன் (கிருதவர்மன்), நகரத்தின் மீதான சால்வனின் படையெடுப்பையும், அவன் திரும்பிச் சென்றதையும் விவரமாகத் தெரிவித்தான்.
பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தையும் கேட்ட நான், சால்வனைக் கொல்ல எனது மனதில் தீர்மானித்தேன். பாரதர்களில் சிறந்தவரே, குடிமக்களை ஊக்கப்படுத்தி, மன்னர் ஆஹுகரிடமும், அனகதுந்துபியிடமும், விருஷ்ணி குலத்தின் தலைமை வீரர்களிடமும், "யாதவர்களில் காளைகளே, நான் சால்வனைக் கொல்லப் போகிறேன் என்பதை அறிந்து, நீங்கள் அனைவரும் விழிப்புடன் இந்த நகரத்திலேயே இருங்கள். அவனை {சால்வனைக்} கொல்லாமல் நான் துவாராவதி நகரத்திற்குத் திரும்பமாட்டேன். சால்வனுக்கும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அவனது தேருக்கும் அழிவை ஏற்படுத்திவிட்டு நான் உங்களிடம் வருகிறேன். பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த துந்துபி {போர் இசை வாத்தியம்}, கூர்மை, நடுத்தர மற்றும் சம சுவரங்களில் அடிக்கப்படட்டும்", என்று சொன்னேன்.
பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, என்னால் இப்படித் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்ட அந்த வீரர்கள் மகிழ்ச்சியாக என்னிடம், "சென்று பகைவர்களைக் கொல்லுங்கள்" என்றனர். இப்படி மகிழ்ச்சி நிறைந்த அந்த வீரர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்று, அந்தணர்களை அதிர்ஷ்டமான வார்த்தைகளைக் கூற வைத்து, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவர்களையும் சிவனையும் வணங்கி, சைப்பியம், சுக்ரீவம் என்ற குதிரைகளை எனது தேரில் பூட்டி, தேர்ச்சக்கரங்களின் ஒலியால் அந்த இடத்தையே நிறைத்து, சங்குகளில் சிறந்த சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதிக்கொண்டு வெளியே சென்றேன்.
மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியே, சந்தேகத்திற்கிடமில்லாது வெற்றியடையும் எனது நால்வகைப் படையுடன் நான் கிளம்பினேன். மரங்களால் கிரீடம் சூட்டப்பட்டு, நீர்த்தேக்கங்களாலும், ஓடைகளாலும் நிரம்பிய பல நாடுகளையும் மலைகளையும் கடந்து, கடைசியாக மார்திகாவர்தம் என்ற நாட்டை அடைந்தேன். அங்கே, மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் சால்வன் சமுத்திரத்தின் அருகில் சென்று கொண்டிருந்ததாகக் கேள்விப் பட்டு அவனைத் தொடர்ந்து சென்றேன்.
எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அலைகள் கொண்ட ஆழமான கடலுக்கு மத்தியில் சால்வன் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் இருந்தான். யுதிஷ்டிரரே, தூரத்தில் இருந்தே என்னைக் கண்ட அந்தத் தீய ஆன்மா, என்னைத் தொடர்ந்து போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான். எனது வில்லில் இருந்து புறப்பட்ட வேகமாக சென்று துளைக்கக்கூடய எனது கணைகள் அவனது தேரை அடையவில்லை. இதனால் நான் மிகுந்த கோபமடைந்தேன்.
மன்னா, தைத்தியனின் மகனும் பாவியுமான அந்த கட்டுப்படுத்த முடியாத சக்தி கொண்டவன் {சால்வன்}, அவனது பங்குக்கு ஆயிரக்கணக்கான கணைகளை ஊற்று போல என்னை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான். பாரதரே, எனது வீரர்கள் மீதும், எனது தேரோட்டி மீதும், எனது குதிரைகள் மீதும் கணைகளை மழையெனப் பொழிந்தான். அந்தக் கணைகளைக் குறித்துக் கருதிப் பாராமல் நாங்கள் தொடர்ந்து போரிட்டோம். பிறகு சால்வனைத் தொடரும் வீரர்கள் என்னை நோக்கி நேரடியாக ஆயிரம் கணைகளை அடித்தனர். அசுரர்கள், எனது குதிரைகளையும், எனது தேரையும், தாருகனையும் உயிரைத் துளைத்துப் பறிக்கவல்ல கணைகளால் மூடினர்.
குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தைப் பெற்ற நானும் பத்தாயிரக்கணக்கான கணைகளை மந்திரங்களை உச்சரித்து அடித்தேன்! விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்த தேர் வானத்தில் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த போது, அதை எனது துருப்புகளால் காண முடியவில்லை. ஆகையால் அவர்கள் என்னை தங்கள் கர்ஜனைகளால் ஊக்கப்படுத்தியும் கைத்தட்டிக் கொண்டும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிந்தது. எனது கை நுனியால் விடப்பட்ட கணைகள் அனைத்தும் தானவர்களின் உடலில் பூச்சிகளைப் போல ஊடுருவின.
விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரில் இருந்து ஓலம் எழுந்தது. கூரிய கணைகளால் தாக்குண்டவர்கள் அந்தப் பெரும் சமுத்திரத்தின் நீருக்குள் விழுந்தனர். தங்கள் கரங்களையும் இழந்தவர்களும், கழுத்துகளை இழந்து தலையில்லாத முண்டங்களின் வடிவத்தில் இருந்தவர்களும் பெரும் ஓலமிட்டு விழுந்தனர். அப்படி அவர்கள் விழும்போதே, அந்தச் சமுத்திரத்தின் நீரில் வாழ்ந்த விலங்குகளால் விழுங்கப்பட்டனர். பிறகு நான் நீரில் இருந்து பெற்றதும், தாமரைத் தண்டு போல அருள்நிறைந்ததும், பால் போன்ற வெண்மை கொண்டதும், மகரந்த மலரைப் {Kunda Flower} போலவும், நிலவைப் போலவும், வெள்ளியைப் போலவும் இருந்த பாஞ்சஜன்யத்தை பலமாக ஊதினேன்.
விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையுடைய சால்வன், தனது வீரர்கள் விழுவதைக் கண்டு, மாயையின் உதவியுடன் போர்புரியத் தொடங்கினான். அவன் தொடர்ச்சியாக என்னை நோக்கி கதாயுதங்களையும், கலப்பைகளையும், இறகு கொண்ட கணைகளையும், ஈட்டிகளையும், போர்க்கோடரிகளையும், வாட்களையும், ஈட்டிகைளப் போன்ற கணைகளையும், இடிகளையும், சுருக்கு கயிறுகளையும், அகலமான வாட்களையும், பீப்பாய்களில் இருந்து தோட்டாக்களையும் {bullets from barrels}, தண்டங்களையும், ஏவுகணைகளையும் அடித்தான். என்னை நோக்கி அவர்களை வரவைத்த நான், வெகுவிரைவாக அவர்களை பதில் மாயையால் அழித்தேன். தனது மாயைகள் பலனற்றுப் போவதைக் கண்ட அவன் {சால்வன்}, மலைச்சிகரங்களை எடுத்துப் போர்புரிய ஆரம்பித்தான்.
பாரதரே {யுதிஷ்டிரரே}, அங்கே இருளும் ஒளியும் மாறி மாறி வந்தன. திடீரென நாள் இருண்டதாகவும் அழகானதாகவும் இருந்தது. திடீரென வெப்பமாகவும், திடீரென குளிர்ச்சியாகவும் இருந்தது. அங்கே நிலக்கரி, சாம்பல் மற்றும் கணைகளின் மழை பொழிந்தன. இப்படி ஒரு மாயையை உண்டாக்கிய அந்த எதிரி என்னுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். அதை உறுதி செய்த நான், பதில் மாயையால் முன் வந்த மாயையை அழித்தேன். சரியான நேரத்தில் சுற்றிலும் நான் கணைகளின் மழையைப் பொழிந்தேன். வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு வானத்தின் மாடம் நூறு சூரியன்களை உடையது போலவும், நூறு சந்திரன்கள் உடையது போலவும், ஆயிரம் பத்தாயிரிம் நட்சத்திரங்களை உடையது போலவும் காட்சியளித்தது. அது இரவா அல்லது பகலா என்பதை யாராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. கலக்கமடைந்த நான், எனது வில்லின் நாணில் பிரஜ்ஞாயுதத்தைப் {பிரஜ்ஞாஸ்திரத்தைப்} பொருத்தினேன். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதம், பருத்திச் செதில்களாக மாறி காற்றால் இழுத்துச் செல்லப்பட்டது! முடிவில் ஒருவரின் உடல் மட்டும் மீண்டிருப்பதற்காகக் கணக்கிட்டது போல அங்கே பெரும் போர் நடந்தது. ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, ஒளி மீண்டதும், மீண்டும் நான் எதிரியுடன் போரிட்டேன்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.