Salwa killed Vasudeva | Vana Parva - Section 21 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; வசுதேவர் மாண்டார் என்று ஆஹூகர் கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்புவது; வானில் இருந்த சால்வன் தேரில் இருந்து வசுதேவர் விழுவது; இதைக் கண்ட கிருஷ்ணன் மயக்கமடைவது...
வாசுதேவன் சொன்னான், "மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, எனது பெரும் எதிரியான மன்னன் சால்வன், இப்படிப் போர்க்களத்தில் என்னிடம் போரிட்டு, மீண்டும் வானத்தில் எழும்பினான். வலிமைவாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, வெற்றியின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தத் தீயவன் என்மீது சதாக்னிகளையும், பெரும் கதாயுதங்களையும், எரியும் ஈட்டிகளையும், கனத்த தண்டங்களையும் வீசினான். அந்த ஆயுதங்கள் வானத்தில் வரும்போதே, நான் எனது வேகமான கணைகளால் தடுத்து, அவை என்னிடம் வரும் முன்பே அவற்றை இரண்டு மூன்று துண்டுகளாக்கினேன். அதனால் வானத்தில் பெரும் சத்தம் இருந்தது. சால்வன், தாருகனையும், எனது குதிரைகள் மற்றும் தேரையும் நூற்றுக்கணக்கான நேர்க்கணைகளால் மூடினான்.
வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, தாருகன் {தேரோட்டி} மயங்கும் முன்பு என்னிடம் தெளிவாக, "சால்வனின் கணைகளால் தாக்குண்ட பிறகும் நான் களத்தில் நிற்கிறேன் என்றால், அது எனது கடமை என்பதால் தான். ஆனால், {மேலும்} அப்படிச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். எனது உடல் பலவீனமடைந்துவிட்டது" என்றான். எனது தேரோட்டியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டு, நான் அவனைப் பார்த்தேன். அவன் {தேரோட்டி தாருகன்} கணைகளால் புண்ணாகியிருந்தான். பாண்டுவின் மகன்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவனது மார்புகளோ, தலையோ, உடலோ, கரங்களோ, அம்புகளால் மறைக்கப்படாமல் இல்லை. அந்தக் கணைகளால் உண்டான புண்களில் இருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. மழையில் முழுக்க நனைந்த சிவந்த சுண்ணாம்பு மலை எப்படி இருக்குமோ அப்படி அவன் இருந்தான். வலிமைமிக்க கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இப்படிப் போர்க்களத்தில் சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்டு, கைகளில் கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த எனது சாரதிக்கு நான் உற்சாகமூட்டினேன்.
பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில், துவாரகையில் தனது வீட்டை வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் எனது தேருக்கு வேகமாக வந்து, ஒரு நண்பனைப்போல், ஆஹுகர் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். அவன் ஆஹுகரின் பணியாட்களில் ஒருவன் போலத் தெரிந்தான். சோகத்துடன், துயரால் உடைந்த குரலுடன் அவன் "வீரரே {கிருஷ்ணரே}, துவாரகையின் தலைவர் ஆஹுகன் உமக்கு சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். கேசவரே {கிருஷ்ணரே}, உமது தந்தையின் நண்பர் என்ன சொல்லியனுப்பியிருக்கிறார் என்பதைக் கேளும், "விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணனே}, கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, நீ இல்லாத போது, இன்று சால்வன் துவாரகைக்கு வந்து, பலாத்காரமாக வசுதேவரைக் கொன்றான். ஆகையால், மேலும் போர் செய்யத் தேவையில்லை. போரை நிறுத்து, ஓ ஜனார்த்தனா, இங்கே வந்து துவாரகையைக் காப்பாற்று! அதுவே உனது முதற்கடமை!" என்று ஆஹுகர் சொன்னதாக செய்தியாளன் சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் கனத்தது. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை.
வீரரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும் துரதிர்ஷ்டத்தைக் கேட்டு, சாத்யகியையும், பலதேவரையும் {பலராமரையும்}, வலிமைவாய்ந்த பிரத்யும்னனையும் மனதால் நிந்தித்தேன். குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, துவாரகை மற்றும் வசுதேவரைக் காப்பதை அவர்களுக்கு அடிப்படைக் கடமையாக வைத்தே, நான் சால்வனின் நகரத்தை அழிக்கச் சென்றேன். துயர் நிறைந்த இதயத்துடன் நான் என்னிடமே, "அந்த எதிரிகளை அழிக்கும், வலிமைவாய்ந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பலதேவர் உயிருடன் இருக்கிறாரா, சாத்யகி, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, சாருதேஷ்ணன், சாம்பன் ஆகியோர் உயிருடன்தான் இருக்கின்றனரா?" என்று கேட்டுக் கொண்டேன். மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உயிருடன் இருந்தால், இடியைத் தாங்குபவனால் {இந்திரனால்} கூட சூதரின் மகனை (வசுதேவரை) எவ்வழியிலும் அழிக்க முடியாது. வசுதேவர் இறந்து விட்டார் என்றால் பலதேவர் {பலராமன்} உள்ளிட்ட அனைவரும் உயிரை இழந்திருப்பார்கள் என்பதே எனது உறுதியான தீர்மானமாக இருந்தது.
வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்களே என்று நினைத்துப் பார்த்த நான் துயரத்தில் மூழ்கினேன்! இந்த மனநிலையுடன் நான் சால்வனை எதிர்கொண்டேன். ஓ பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அப்போது நான் அந்த விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரில் இருந்து வசுதேவர் விழுவதைக் கண்டேன். இதைக் கண்ட நான் மயக்கமடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் இழந்து வானில் இருந்து *பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார். அழுக்கடைந்த தலைப்பாகையுடன், தலைமுடி கலைந்து, ஆடைகள் கலைந்து விழும் எனது தந்தை, தகுதிகளை இழந்து வானில் இருந்து விழும் ஒரு கோள் {கிரகம்} போலத் தெரிந்தார். பிறகு எனது வில்லான சாரங்கம் எனது கைகளில் இருந்து விழுந்தது. குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எனக்கு மயக்கம் வந்தது! நான் தேரின் பக்கவாட்டில் அமர்ந்தேன்.
பாரத குலத்தின் வழித்தோன்றலே, நான் தேரில் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு, நான் இறந்து விட்டேன் என்று நினைத்த எனது முழு படையும் "ஓ", "ஐயோ" என்று கதறின. தனது கரங்களையும் கீழ் முட்டிகளையும் நீட்டியபடி புரண்டு கொண்டு வந்த எனது தந்தை, வானத்தில் இருந்து விழும் பறவையைப் போலத் தெரிந்தார். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட வீரரே {யுதிஷ்டிரரே}, கைகளில் ஈட்டிகளையும் போர்க்கோடரிகளையும் வைத்திருந்த எதிரி வீரர்கள் பயங்கரமாகத் தாக்கினர்! (இவற்றைக் கண்டு) எனது இதயம் நடுங்கியது. நான் விரைவில் உணர்வடைந்தேன். ஓ வீரரே, அப்போது அந்தக் களத்தில் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையோ, எதிரியான சால்வனையோ, அல்லது முதிர்ந்த எனது தந்தையையோ நான் காணவில்லை! பிறகு நான் கண்டதெல்லாம் மாயை என்பதை என் மனதில் நிச்சயித்துக் கொண்டேன். உணர்வுகள் மீண்ட நான், மறுபடியும் நூற்றுக்கணக்கான கணைகளை அடிக்க ஆரம்பித்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------------
*பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
இந்திரன் யயாதி பேச்சு | ஆதிபர்வம் - பகுதி 87----------------------------------------------------------------------------------------------------------------
*பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
அஷ்டகனை அடைந்த யயாதி | ஆதிபர்வம் - பகுதி 88
யயாதி கண்ட உலகங்கள்| ஆதிபர்வம் - பகுதி 89
மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது? ஆதிபர்வம் - பகுதி 90
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.