Sage Vaka's sermon | Vana Parva - Section 26 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அந்தணர்களின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு முனிவர் பகன் எடுத்துரைத்தல்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து துவைத வனத்தில் வசித்த போது, அந்தப் பெரும் கானகமே அந்தணர்களால் நிரம்பியது. அக்கானகத்தில் இருந்த தடாகமே இரண்டாவது பிரம்மலோகம் போல, அங்கு எப்போதும் வேத ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது. யஜுர், ரிக், சாமத்தின் ஒலிகள் மற்றும் அந்தணர்களின் உச்சரித்த வார்த்தைகள் கேட்பதற்கு காதுக்கினியனவாக இருந்தது. அந்தணர்களின் வேத ஒலியும், பிருதை {குந்தி} மைந்தர்களின் {பாண்டவர்களின்} வில்லொலியுடன் சேர்ந்து அந்தண க்ஷத்திரிய முறைகள் கலந்த ஒரு அழகான முறையாக இருந்தது.
ஒரு நாள் மாலைப் பொழுதில் தால்பிய குடும்பத்தைச் சேர்ந்த பகன் என்ற முனிவர், மற்ற முனிவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம், "ஓ குருக்களின் தலைவா, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, தவக்கடமைகள் கொண்ட அந்தணர்களின் ஹோமத்திற்கான நேரம் வந்துவிட்டதைக் கவனி. இது (வேள்வி) நெருப்பு மூட்டப்படும் நேரமாகும்! கடும் நோன்புகள் நோற்ற இவர்கள், உன்னால் பாதுகாக்கப்பட்டு, இந்தப் புனிதமான பகுதியில் அறச்சடங்குகளை {rites of religion} செய்கிறார்கள். பிருகு, அங்கிரஸ் வழித்தோன்றல்களும், வசிஷ்டர், காசியபர் வழித்தோன்றல்களும், அகத்தியரின் மகன்களும், அற்புதமான நோன்புகள் கொண்ட அத்ரியின் வாரிசுகளும் சேர்ந்து உண்மையில் அந்தணர்களில் முதன்மையானவர்களான அனைவரும் உன்னிடம் சேர்ந்திருக்கின்றனர்!
ஓ குந்தியிடம் பிறந்த குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளைக் கேள்! காற்றுடன் சேர்ந்த நெருப்பு கானகத்தை உட்கொள்வதைப் போல, பிரம்ம சக்தி க்ஷத்திரிய சக்தியுடன் இணைந்தும், க்ஷத்திரிய வலிமை, அந்தண பலத்துடன் இணைந்தும், சேரும் சக்தி அனைத்து எதிரிகளையும் உட்கொண்டுவிடும்! ஓ குழந்தாய், இவ்வுலகத்தையும், மறு உலகத்தையும் நீண்ட நாட்களுக்கு அடக்கி வைக்க எண்ணும் ஒருவன் தன்னுடன் அந்தணர்கள் இல்லாமல் இருக்க விரும்பக்கூடாது. உண்மையில், ஒரு மன்னன் அறம் மற்றும் உலக நடப்புகளை அறிந்து, ஆசைகளையும் அறியாமையையும் துறந்து இருக்கும் அந்தணரை அடைந்த மன்னனே தனது எதிரிகளை வீழ்த்த முடியும்!
தனது குடிமக்களை நன்றாகப் பேணிப் பாதுகாத்து முக்திக்கு வழிவகுக்கும் கடமைகளைச் செய்த மன்னன் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அதற்குக் காரணமாக அந்தணர்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதன் காரணமாகவே, விரோசனனின் மகனான அந்த அசுரன் {பலிச்சக்கரவர்த்தி}, எப்போதும் திருப்தியுடனும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் அடைந்தான். அந்தணர்களின் உதவியால் முழு உலகத்தையும் அடைந்த பிறகு, அவர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தீங்கு செய்ததாலேயே அவன் {பலிச் சக்கரவர்த்தி} அழிவைச் சந்தித்தான்.
செல்வங்கள் நிறைந்த இந்தப் பூமி, அந்தணனுடன் இல்லாத க்ஷத்திரியனை ஒரு போதும் கொண்டாடாது. அந்தணரின் ஆளுகைக்கு உட்பட்டு, தனது கடமைகளை அவரிடம் இருந்து கற்றவனையே கடலால் சூழப்பட்ட இந்தப் பூமி வணங்குகிறது. போர்க்களத்தில் உள்ள பாகன் இல்லாத யானை போன்று அந்தணர்கள் இல்லாத க்ஷத்திரியன் பலம் குறைந்து பலவீனனாவான். அந்தணனின் பார்வை ஒப்பற்றது. க்ஷத்திரியனின் பலமும் இணையற்றதே. இந்த இரண்டும் சேரும் போது, இப்படிப்பட்ட சேர்கை முழு உலகத்திற்கும் மகிழ்ச்சியை விளைவிக்கும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு பலம் பெற்று, வைக்கோலையும், மரங்களையும் உட்கொள்வது போல, அந்தணர்களுடன் சேர்ந்த மன்னர்கள் எதிரிகள் அனைவரையும் உட்கொள்வார்கள். ஆகையால், ஓ குந்தியின் மகனே, ஓ யுதிஷ்டிரா! அடையாததை அடையவும், இருப்பதை அதிகரித்துக் கொள்ளவும், சரியான பொருளுக்கும் மனிதர்களுக்கும் செலவு செய்யவும், ஞானமும் அனுபவமும் உள்ள வேதமறிந்த மரியாதைக்குரிய அந்தணர் ஒருவரை உன்னிடம் வைத்துக் கொள். நீ எப்போதும் அந்தணர்களை உயர்வாகவே மதித்திருக்கிறாய். இதன் காரணமாகவே உனது புகழ் பெரிதாக மூன்று உலகங்களிலும் சுடர்விட்டு எரிகிறது." என்றார்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசிய தால்பிய குலத்தைச் சேர்ந்த {முனிவர்} பகனிடம் திருப்தி கொண்ட, யுதிஷ்டிரனுடன் இருந்த அனைத்து அந்தணர்களும் அவரை வழிபட்டனர். துவைபாயனர், நாரதர், ஜமதக்னேயர், பிருதுஸ்ரவஸ், இந்திரத்யும்னர், பாலகி, கிரிதசேதஸ், சகஸ்ரபத், கர்ணஸ்ரவஸ், முஞ்சர், லவணாஸ்வர், காசியபர், ஹாரிதர், ஸ்தூலகர்ணர், அக்னிவேஸ்யர், சௌனகர், கிருதவாகர், சுபாகனர், பிருஹதஸ்வர், விபாவசு, ஊர்தரேதஸ், விருஷாமித்ரர், சுஹோத்ரர், ஹோத்ரவாஹணர் ஆகியோரும், கடும் நோன்புகள் நோற்ற பல அந்தணர்களும் சேர்ந்து, சொர்க்கத்தில் இருக்கும் புரந்தரனைக் கொண்டாடும் முனிவர்கள்போல யுதிஷ்டிரனைக் கொண்டாடினர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.