Why doth not thy anger, O king, blaze up | Vana Parva - Section 27 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
ஒவ்வொருவருக்கும் நேர்ந்த அநியாயங்களையும், உண்மையில் அவர்களது மதிப்புகளையும் எடுத்துக் கூறி, உமக்கு ஏன் கோபம் வரவில்லை என்று யுதிஷ்டிரனிடம் கேள்வி கேட்கிறாள் திரௌபதி.
வைசம்பாயனர் சொன்னார், "கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள், மாலைப்பொழுதில் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். கற்றறிந்தவளும், பார்ப்பதற்கு அழகானவளும், தனது தலைவர்களுக்கு அன்பானவளும், அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} யுதிஷ்டிரனிடம் "பாவியும், கடுமை நிறைந்தவனும், தீய மனதுடையவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} நிச்சயம் நமக்காக வருந்தமாட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்தவன் உம்மையும் என்னையும் மான் தோலுடுத்தி கானகத்திற்கு அனுப்பியும் கூட வருத்தப்படவில்லை. அந்த நேரத்தில் அறம் சார்ந்த தனது அண்ணனிடம் {உம்மிடம்} கடும் மொழிகள் பேசிய தீய செயல்கள் புரியும் அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} இதயம் இரும்பாலானது. அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதியுள்ள உமக்கு இந்த துக்கம் தகாது. உம்மை இப்படிப்பட்ட துன்பத்துக்கு தள்ளிய அந்த தீய மனம் படைத்த இழிந்த பாவி {துரியோதனன்}, தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, மான் தோலுடுத்தி நீர் கானகத்திற்குச் செல்லும்போது, ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், தீய மனம் கொண்ட சகுனி, துரியோதனின் தீய தம்பியான துச்சாசனன் ஆகிய நால்வர் {4} மட்டுமே கண்ணீர் சிந்தவில்லை! இவர்களைத் தவிர்த்து, ஓ குருக்களில் {குருகுலத்தில்} சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, மற்ற குருக்கள் {குருகுலத்தினர்} அனைவரும் துயரத்தில் மூழ்கி கண்களில் நீரை வார்த்தனர்! இப்போதிருக்கும் உமது படுக்கையைக் கண்டு, முன்பு நீர் கொண்டிருந்த படுக்கையை நினைத்து நான் துயருறுகிறேன். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துன்பம் அனுபவிக்கத் தகாத நீர், எல்லா ஆடம்பரங்களுடனேயே வளர்ந்தீர்! உமது சபையில் இருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தந்தத்தால் ஆன ஆசனத்தை மனதில் நினைத்து, இப்போது குசப்புல்லாலான {வெட்டிவேராலான} உமது ஆசனத்தைக் கண்டதால் துயரம் என்னை எரிக்கிறது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது சபையில் மன்னர்களால் சூழப்பட்ட உம்மைக் கண்டேன்! அப்படி இப்போது உம்மைக் காண முடியாத நிலையில், என் மனம் எப்படி அமைதியுடன் இருக்கும்? சந்தனம்பூசி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த உமது மேனியைக் கண்டேன்! ஐயோ, அழுக்கும் மண்ணும் பூசிய உமது மேனியை நான் இப்போது காண்பதால் துயரத்தால் எனது உணர்வுகளை இழக்கிறேன்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, சுத்தமான வெள்ளை நிறம் கொண்ட பட்டாடை உடுத்திய உம்மையே முன்பு நான் கண்டிருக்கிறேன்! ஆனால், இப்போது கிழிசல்களை உடுத்தியிருக்கும் உம்மைக் காண்கிறேன்.
முன்பு, அனைத்து வகையான சுத்தமான உணவுகளைக் கொண்ட தங்கத் தட்டுகள் உமது வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஓ மன்னா, வீடில்லாதவர்களும், இல்லறவாசிகளுமான தவசிகளுக்கு உணவில் சிறந்த வகையை நீர் கொடுத்தீர்! முன்பு, உலர் மாளிகையில் வாழ்ந்து கொண்டு, ஆயிரக்கணக்கான தட்டுகளில் உணவை நிரப்பி, அந்தணர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுத்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {இப்போது} இதையெல்லாம் காணும் எனது இதயம் எப்படி அமைதி பெறும்? ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, காதுகுண்டலங்களுடன் இளமையாக இருக்கும் இந்த உமது தம்பிகள், இனிமையான உணவுகளைப் புசித்து, நிபுணத்துவத்துடன் உடுத்தியவர்கள் ஆயிற்றே! ஐயோ, ஓ மன்னா, துன்பமடையத் தகாத அவர்கள் கானகத்தில் வாழ்ந்து, கானகத்தில் கிடைப்பதை உண்பதை நான் காண்கிறேன். எனது இதயம், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அமைதியை அறியவில்லை.
இந்த பீமசேனர், கானகத்தில் துயரத்துடன் வாழ்வதைக் கண்டு, காலம் கடந்துவிட்டாலும் உமக்குக் கோபம் வரவில்லையா? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எந்த உதவியும் இல்லாமல் அனைத்தையும் செய்யும் சிறப்புமிக்க பீமசேனர், அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதி கொண்ட அவர் {பீமசேனர்}, இப்படித் துயரத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, எண்ணற்ற வாகனங்களால் சூழப்பட்டு, விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தும் பீமசேனர், இப்படி கானகத்தில் வாழ நேர்ந்ததை நினைத்து ஏன் உமக்குக் கோபம் வரவில்லை?, இந்த மேன்மை மிக்க மனிதர் {பீமர்}, போர்க்களத்தில் அனைத்து குருக்களையும் கொல்லத் தயாராய் இருக்கிறார். இருப்பினும், நீர் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக காத்திருந்து, இந்த அனைத்துத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறார்.
இந்த அர்ஜுனர், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இரு கரங்களைக் கொண்டிருந்தாலும், இலகுவாக கணையடிக்கும் திறமைக்காக, ஆயிரம் {1000} கரம் கொண்ட அர்ஜுனனுக்குச் (கார்த்தவீர்யார்ஜுனனுக்கு) சமமானவரே! இவர் {அர்ஜுனர்} (எதிரிகளுக்கு) யுகத்தின் முடிவில் நிற்கும் யமனைப் போன்றவர்! அவரது {அர்ஜுனரது} ஆயுதங்களின் பராக்கிரமத்தாலேயே பூமியின் அனைத்து மன்னர்களும் உமது வேள்வியில் அந்தணர்களுக்காக காத்து நின்றார்கள். மனிதர்களில் புலி போன்ற அர்ஜுனர், தேவர்களாலும் தானவர்களாலும் ஆர்வத்துடன் வணங்கப்படுகிறார். அவர் இந்த நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோப உணர்ச்சி வரவில்லை? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆடம்பரத்துடன் வளர்ந்து, துயரடையத் தகாத பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்} நாடு கடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்குக் கோபம் வராததைக் கண்டு நான் துயருறுகிறேன். ஒரே தேரில் நின்று கொண்டு, தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் வீழ்த்திய அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு இப்படி இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, முன்பு தேர்களையும், பல உருவம் கொண்ட வாகனங்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொடையாகப் பெற்றும், பூமியின் மன்னர்களிடம் இருந்து அவர்களது செல்வத்தைப் பிடுங்கி வந்தும் எதிரிகளைத் தண்டிப்பவராகவும், ஒரே முயற்சியில் ஐநூறு கணைகளை வீசும் திறமை பெற்றவராகவும் உள்ள அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு, இந்நிலையில் இருக்கும் போதும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை?
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அழகு நிறமும் கட்டுடல் கொண்டவரும், இளமையானவரும், வாள்வீசுபவர்களில் முதன்மையானவரும் ஆன நகுலர் நாடு கடத்தப்பட்டு இந்நிலையை அடைந்ததைக் கண்டும், உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, ஓ யுதிஷ்டிரரே, அழகிய உருவம் கொண்டவரும், வீரம் கொண்டவரும், மாத்ரியின் மகனுமான சகாதேவர் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் எதிரிகளை நீர் ஏன் மன்னிக்கிறீர்? ஓ மன்னா, துயரடையத்தகாத நகுலரும் சகாதேவரும் துயரத்தில் இருக்கும் காட்சியைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதரின் குலத்தில் பிறந்து, திருஷ்டத்யும்னன் தங்கையாகவும், சிறப்புமிகுந்த பாண்டுவின் மருமகளாகவும், வீரர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனைவியாகவும் உள்ள நான் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருக்கும்போதும், நீர் ஏன் எதிரிகளை மன்னிக்கிறீர்?
ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? கோபமற்ற ஒரு க்ஷத்திரியன் கூட இந்த உலகத்தில் கிடையாது என்று சொல்லப்படுகிறது. பழமொழிகள் மாறுபடுவதை இப்போது நான் உம்மிடம் காண்கிறேன். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, வாய்ப்பு வரும்போது தனது சக்தியை உணராத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களாலும் அவமதிக்கப்படுகிறான்! ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை மன்னிக்கும் உமது குணத்தை நீர் நீட்டித்து வரக்கூடாது. உண்மையில், உமது சக்தியைக் கொண்டு, நீர் அவர்களனைவரையும் சந்தேகமற கொன்றுவிடலாம்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதே போல, மன்னிக்கும் நேரம் வரும்போதும் சமாதானமடையாத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களிடத்தும் செல்வாக்கற்றுபோய், இம்மையிலும் மறுமையில் அழிவடைவான்." {என்று யுதிஷ்டிரனிடம் கூறுகிறாள் திரௌபதி}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.