Humility accomplishes | Vana Parva - Section 28 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
பலிச்சக்கரவர்த்தி, தனது பாட்டனான பிரகலாதனிடத்தில், கோபம் குறித்தும், கோபமடையாமல் இருப்பது குறித்தும் தனது சந்தேகங்களைக் கேட்பது; பிரகலாதன் தனது பேரனுக்கு, அவனது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது; இக்கதையை திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது...
திரௌபதி தொடர்ந்தாள், "இவ்விஷயத்தில், பிரகலாதனுக்கும், விரோசனனின் மகனான பலிக்கும் {பலிசக்கரவர்த்திக்கும்} இடையே பழங்காலத்தில் நடந்த உரையாடல் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அசுரர் மற்றும் தானவர்களின் தலைவனும், பெரும் ஞானம் கொண்டவனும், கடமை குறித்த அறிவியலின் புதிர்களை நன்கு அறிந்தவனுமான தனது பாட்டன் பிரகாலதனிடம், "ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!" என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}.
இப்படிக் கேட்கப்பட்ட ஞானம்கொண்ட அவனது {பலியின்) பாட்டனான {பிரகலாதன்}, அவ்விஷயத்தில் தன்னிடம் சந்தேகம் கேட்ட தனது பேரனுக்கு {பலிக்கு} முழுமையாகச் சொன்னான். பிரகலாதன், "ஓ குழந்தாய், பலமும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. மன்னிப்பும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. நிச்சயமான இந்த இரண்டு உண்மைகளையும் நீ அறிந்து கொள்! எப்போதும் மன்னிப்பவன் பல தீங்குகளுக்கு ஆளாகிறான். பணியாட்களும், அந்நியர்களும், எதிரிகளும் அவனை எப்போதும் அவமதிப்பர். எந்த உயிரும் அவனுக்கு அடிபணியாது. ஆகையால், ஓ குழந்தாய், எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களை கற்றவர்கள் மெச்சுவதில்லை! எப்போதும் மன்னிக்கும் மனிதனை அவனது பணியாட்கள் அவமதித்து எப்போதும் ஏதாவது குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள். அற்ப புத்தியுள்ள மனிதர்கள் அவனை {மன்னிப்பவனை} ஏமாற்றி அவனது செல்வத்தைக் கவர்வார்கள். இழிந்த ஆன்மா கொண்ட பணியாட்கள் அவனது {மன்னிப்பவனது} வாகனங்கள், துணிகள், ஆபரணங்கள், ஆடைகள், படுக்கைகள், ஆசனங்கள், உணவுகள், பானங்கள் மற்றும் பிற பொருட்களை தாங்கள் விரும்பியபடி எடுத்துப் பயன்படுத்துவார்கள். தங்கள் தலைவன் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கட்டளையிடும் பொருட்களைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தலைவனுக்கு உரிய மரியாதையும் கொடுக்க மாட்டார்கள். அவனை வழிபடமாட்டார்கள். இவ்வுலகத்தில் அவமதிப்பு என்பது மரணத்தைவிட மோசமானது.
ஓ குழந்தாய் {பேரன் பலியே}, மகன்களும், பணியாட்களும், உபசரிக்கிறவர்களும், ஏன் அந்நியர்களும் கூட எப்போதும் மன்னிப்பவனிடம் கடுஞ்சொற்கள் பேசுவார்கள். எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனை அவமதிக்கும் மனிதர்கள், அவனது மனைவியைக் கூட விரும்புவார்கள். அவனது மனைவியும் தான் விரும்பியபடி செயல்படத் தயாராவாள். எப்போதும் இன்பத்தை விரும்பும் பணியாட்கள், தங்கள் தலைவனிடம் இருந்து சிறு தண்டனைகூட கிடைக்காவிட்டால், எல்லா தீமைகளையும் செய்வார்கள். அதிலும் தீயவர்கள் தங்கள் தலைவனுக்குக் காயம் ஏற்படுத்தவும் விளைவார்கள். இதுவும் மேலும் சிலவும் எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனின் குறைகளாகும்.
ஓ விரோசனனின் மகனே {பலியே}, எப்போதும் மன்னிக்காதவர்களின் குறைகளை இப்போது கேள்! கோபம் கொண்ட மனிதன், இருளால் சூழப்பட்டு, தனது சக்தியாலே, பலதரப்பட்ட தண்டனைகளை மனிதர்களுக்குக் கொடுத்து, அந்த மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தகுந்தவர்கள் தானா என்பதைப் பாராமல் இருந்து, அதன் காரணமாகவே தங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிவார்கள். அப்படிப்பட்ட மனிதன், தனது உறவினர்களாலும், அந்நியர்களாலும்கூட வெறுக்கப்படுவான். அப்படிப்பட்ட {எப்போதும் கோபமடையும்} மனிதன், மற்றவர்களை அவமதிப்பதால், செல்வத்தை இழப்பதும், அவமதிப்பை அடைவதும், சோகம், வெறுப்பு, குழப்பம், எதிரிகள் ஆகியவற்றையும் சம்பாதித்துக் கொள்கிறான். கோபம் கொண்ட மனிதன், தனது கடுஞ்சினத்தின் காரணமாக மனிதர்களுக்குத் தண்டனை கொடுத்து, (பதிலுக்கு) கடுஞ்சொற்களைப் பெறுகிறான். அப்படிப்பட்டவன், விரைவில் தனது செழிப்பை இழந்து, நண்பர்களையும் உறவினர்களையும் இழக்கிறான். ஏன் உயிரைக் கூட இழக்கிறான்.
தனக்கு உதவுபவர்களிடமும், எதிரிகளிடமும் தனது பலத்தைப் பயன்படுத்தும் மனிதன், உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து, வீட்டில் வசிக்கும் பாம்பு போல அந்தக் குடும்பத்தாருக்குத் தெரிகிறான். உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பவன் என்ன செழிப்பை அடைந்து விட முடியும்? சமயம் வாய்க்கும்போது மக்கள் அவனைக் காயப்படுத்தத் தயங்கமாட்டார்கள். ஆகையால், எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்கள் பலத்தையோ மன்னிப்பையோ அதிகம் வெளிக்காட்டக்கூடாது. ஒருவன் தனது பலத்தையும், மன்னிக்கும் குணத்தையும் சரியான சமயங்களில் பயன்படுத்த வேண்டும். சரியான நேரங்களில் மன்னிப்பு, கடுமை, பலம் ஆகியவற்றைக் காட்டுபவன், இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பத்தை அடைகிறான்.
நான் இப்போது, எச்சந்தர்ப்பங்களில் மன்னிக்கலாம் என்று கற்றவர்களால் விதிக்கப்பட்டதை விளக்கமாகவும், எது எப்போதும் பின்பற்றத்தக்கது என்பதையும் சொல்கிறேன். நான் சொல்லும்போது கவனமாகக் கேட்டுக் கொள்! உனக்கு ஒரு சேவையைச் செய்தவன், உனக்குப் பெரும் தீங்கிழைத்திருந்தாலும், அவனது முந்தைய சேவையை நினைத்துப் பார்த்து, அந்தக் குற்றவாளியை மன்னிக்கலாம். கல்வியையும் ஞானத்தையும் மனிதர்களால் எளிமையாக அடைய முடியாது. ஆகையால், அறியாமையாலும், முட்டாள்தனத்தாலும் குற்றமிழைத்தவர்களை மன்னிக்கலாம். தெரிந்தே குற்றமிழைத்துவிட்டு, தெரியாமல் செய்துவிட்டேன் என்று கெஞ்சுபவர்களை, அவர்களது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். அத்தகு நேர்மையற்ற மனிதர்கள் மன்னிக்கப்படக்கூடாது.
எல்லா உயிரினங்களின் முதல் குற்றமும் மன்னிக்கப்பட வேண்டும். இருப்பினும், இரண்டாவது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் கூட தண்டிக்க வேண்டும். ஒரு மனிதன் விரும்பாமல் குற்றமிழைத்திருப்பின், அவனது கோரிக்கையை ஆராய்ந்து, சீரான நீதி விசாரணை செய்து, அவனை மன்னிக்க வேண்டும். பணிவு பலத்தை வெற்றி கொள்ளும், பணிவு பலவீனத்தையும் வெற்றி கொள்ளும். பணிவால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஆகையால், பணிவே (நம் பார்வைக்குத் தெரிவதைவிட) உண்மையாக கடுமையானது. ஒருவன் இடம், நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தனது பலத்தையும் பலவீனத்தையும் குறித்துக் கொண்டும் செயல்பட வேண்டும். இடத்தையும் நேரத்தையும் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றியடையாது. ஆகையால், நீ எப்போதும் இடத்திற்காகவும், நேரத்திற்காகவும் காத்திருக்க வேண்டும்! சில நேரங்களில் மக்களுக்கு அஞ்சி குற்றவாளிகள் மன்னிக்கப்பட வேண்டும். இவையே மன்னிக்கும் நேரங்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது" என்றான் { பலியின் பாட்டன் பிரகலாதன்}.
திரௌபதி தொடர்ந்தாள், "ஆகையால், ஓ மன்னா, நீர் பலத்தைப் பிரயோகிக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்! நம்மை எப்போதும் காயப்படுத்தும் குருக்களையும், திருதராஷ்டிரனின் பேராசைக்கார மகன்களையும் மன்னிக்கும் நேரம் இது கிடையாது! நீர் இப்போது பலத்தை உபயோகிப்பதே தகும். எளிமையாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கும் மனிதன் அவமதிக்கப்படுகிறான். கடுமையாக இருப்பவர்கள் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். உண்மையில், அது அதற்கு தகுந்த நேரத்தில் இரண்டிற்கும் {கோபமடைவதும் கோபமடையாதிருப்பதும்) தஞ்சம் கொடுப்பவனே மன்னனாவான்" என்றாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.