Wrath destroys everything | Vana Parva - Section 29 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
கோபத்தில் இருக்கும் குற்றங்களை திரௌபதிக்கு யுதிஷ்டிரன் சொல்வது..
யுதிஷ்டிரன் சொன்னான், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ! பெரும் ஞானம் கொண்டவளே {திரௌபதியே}, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். ஓ! அழகானவளே, எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்?
கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான். கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனக்கு மேலானவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாடை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய முடியாத செயல் எதுவும் இல்லை. கோபம் கொண்ட மனிதனால் சொல்ல முடியாத வார்த்தைகளும் எதுவும் இல்லை. கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், கொல்லப்படத் தகாத மனிதனையும் கொன்றுவிடுவான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆன்மாவைக்கூட யமனின் உலகுக்கு அனுப்புவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இவ்வுலகிலும் மறு உலகிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி அதில் ஈடுபடுவோம்?
ஓ! துருபதனின் மகளே {திரௌபதியே}, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. கோபம் கொண்ட மனிதனுக்கு எதிராக எந்த செயலும் செய்யாத மனிதன் தன்னையும் பிறரையும் பெரும் அச்சத்தில் இருந்து காத்துக் கொள்கிறான். உண்மையில் அப்படிப்பட்ட மனிதன் தனக்கும், கோபம் கொண்ட மனிதனுக்கும் மருத்துவன் போன்றவன் ஆவான். மற்றவர்களால் துன்பத்துக்குள்ளான பலவீனமான மனிதன், தனது முட்டாள்தனத்தால் தன்னைவிட பலசாலிகளிடம் கோபமாக நடந்து கொண்டால், தனது அழிவுக்கு தானே காரணமாகிறான். இப்படி தெரிந்தே தனது உயிரை விடும் மனிதர்களுக்கு எந்த உலகமும் கிடைக்காது. ஆகையால், ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, பலவீனமான மனிதன் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் இருக்கும் ஞானமுள்ள மனிதன் கோபப்படாமல் இருந்தால், தனக்கு துன்பத்தை ஏற்படுத்தியவனை விட மறு உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறான். இதன் காரணமாகவே பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் ஞானமுள்ள மனிதன், எப்போதும் தன்னை துன்புறுத்துகிறவனையும் அவன் கெட்ட காலத்தில் இருந்தாலும் கூட மன்னிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்?
பின்வருவதை அறியும் கற்றவர்களால் பலம் நிறைந்த மனிதன் என்று கருதப்படுபவர்கள் நிச்சயமாக வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் கோபம் மிகுந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள். ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி} கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். கோபம் கொண்ட மனிதர் கொல்லத்தகாதவர்களையும் கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆசான்களையும் கொல்வான். ஆகையால், சக்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும்.
கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும். ஓ! ஞானமுள்ளவளே {திரௌபதியே}, அதே வேளை கோபம் கொண்ட மனிதனால் சரியான நேரத்தில் தனது சக்தியை வெளிப்படுத்த முடியாது. அறியாமையில் இருப்பவர்களே கோபத்தை சக்திக்குச் சமமாகக் கருதுவார்கள். கோபம் என்பது உலகத்தின் அழிவிற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், சரியாக நடக்க விரும்பும் மனிதன் எப்போதும் கோபத்தைக் கைவிட வேண்டும். தனது வகைக்கே உரிய அற்புதமான அறங்களைக் கைவிட்ட மனிதன் கோபப்படுபவனாக இருப்பான். அனைத்து விதங்களிலும் மீறி நடக்கும் ஒளியற்ற மனம் கொண்ட முட்டாள்கள் இப்படி நடந்து கொள்ளும்போது, ஓ! குறைகளற்றவளே, என்னைப்போன்ற ஒருவன் (அவர்களைப் போல) எப்படி மீறி நடக்க முடியும்?
பூமியைப் போன்ற பொறுமையுள்ள மனிதர்கள் இல்லையெனில், தொடர்ந்து கோபப்படும் மனிதர்களால் உலகம் அமைதியற்றே இருக்கும். காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மேலானவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மேலானவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், காயம் கொண்ட மனிதன் தனது காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், தண்டனை பெற்ற மனிதன் பதிலுக்கு தண்டிப்பதும் ஏற்படுவதால், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும். ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! ஓ! அழகான முகம் கொண்டவளே {திரௌபதியே}, உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்.
ஓ! திரௌபதி, மன்னர்களும் கோபத்திற்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ! அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற {மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான} உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இவ்வுலகிலும் மறு உலகிலும் அழிவைச் சந்திக்கிறான்.
ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த பல வேள்விகளைச் செய்தவர்கள், வேதங்களை அறிந்தவர்கள் மற்றும் தவசிகள் அடையும் உலகத்தை பொறுமைசாலி அடைவான். வேத வேள்விகள் செய்பவர்களும், அறத்தின்படியான நன்மையான சடங்குகளைச் செய்பவர்கள் மற்ற உலகங்களை அடைவார்கள். பொறுமைசாலி, புகழப்படும் பகுதிகள் கொண்ட பிரம்மனின் உலகத்தை அடைவார்கள். பலசாலிகளின் பலமே பொறுமை {மன்னிக்கும் தன்மை}. பொறுமையே வேள்வி, பொறுமையே மன அமைதி. ஓ! கிருஷ்ணா {திரௌபதி} இப்படி இருக்கும்போது பிரம்மம், உண்மை, ஞானம் ஆகியவற்றை அடைய விரும்பும் எங்களைப் போன்றோர் எப்படி பொறுமையைக் கைவிடமுடியும்?
பொறுமையாக இருப்பவன் பிரம்மத்தை அடைய முடியும் என்பதால் ஒரு ஞானி பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். பொறுமைசாலிகளுக்கு இந்த உலகம் சொந்தம். மறு உலகமும் அவர்களுடையதே. பொறுமை மதிப்பையும், அருளையும் பெற்றுத் தருகிறது. பொறுமையால் கோபத்தை வெற்றி கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த உலகங்களை அடைவார்கள். ஆகையால், பொறுமையே உயர்ந்த அறம் என்று சொல்லப்படுகிறது." என்று எப்போதும் பொறுமையுடன் இருப்பவர்களைக் குறித்து காசியபர் பாடியிருக்கிறார். ஓ! திரௌபதி பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. சந்தனுவின் மகனான எங்கள் பாட்டா {பீஷ்மர்}, அமைதியையே வழிபடுகிறார்; கிருபரும் சஞ்சயரும் அமைதியையே உரைக்கின்றர். சோமதத்தன், யுயுத்சு, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, எங்கள் பாட்டனான வியாசர், ஆகிய அனைவரும் அமைதியை குறித்தே பேசுகின்றனர். இவர்களால் அமைதியின் பக்கம் அழைத்துவரப்படும் மன்னர் {திருதராஷ்டிரன்} நமது நாட்டை நமக்குத் திரும்பக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும், அவர் {திருதராஷ்டிரன்} மயக்கமடைந்தால், அவர் அழிவைச் சந்திப்பார். ஓ! பெண்ணே {திரௌபதியே}, பாரதர்களின் வரலாற்றில் அவர்களை பேரிடரில் ஆழ்த்த ஒரு நெருக்கடி வந்திருக்கிறது. இது சில காலங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும் உறுதியான தீர்மானம். சுயோதனனுக்கு {துரியோதனனுக்கு} நாட்டை அடையும் தகுதியில்லை. ஆகையால்தான், அவனால் {துரியோதனனால்}பொறுமையாக இருக்க முடியவில்லை. நான் ஆட்சி உரிமை கொண்டவன் ஆகையால் பொறுமையை ஏற்கிறேன். மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.