Is God stained with sin | Vana Parva - Section 30 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனுடன் திரௌபதியின் விவாதம்...
திரௌபதி சொன்னாள், "உமது உணர்வுகளை மூடியிருக்கும் {மறைக்கும்} தத்திரியையும் (ஆதித்தியர்களில் [சூரியர்களில்] ஒருவன் = ஆரோக்கியத்திற்கான தேவன்} விதத்திரியையும் {பெண் தெய்வம் [துர்கை என்றும் கொள்ளலாம்]} நான் வணங்குகிறேன். நீர் தாங்கும் சுமையைச் சுமப்பதில், உமது தந்தைமாரும் பாட்டன்மாரும் பின்பற்றிய வழிகளில் இருந்து நீர் மாறுபடுகிறீர்! மனிதர்களுடைய செயல்களின் தாக்கம் {செயல்களினால் உண்டாகும் பாவத்தின் விளைவு} வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நம்மைத் தாக்குகிறது. செயல்கள் தவிர்க்க முடியாத விளைவுகளை {பின் விளைவுகளை} ஏற்படுத்துகின்றன; விடுதலை என்பது வெறும் மடமையின் காரணமாகவே விரும்பப்படுகிறது. அறம், மென்மை, பொறுமை {மன்னிக்கும் தன்மை}, முற்போக்கு, கண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் செழிப்பை அடைய முடியாது என்றே காணப்படுகிறது.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அது அப்படியில்லை என்றால், இந்தத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடர், அதற்குத் தகுதியில்லாத உமக்கும், பெரும் சக்திகள் கொண்ட உமது தம்பிகளுக்கும் ஏற்பட்டிருக்காது! செழிப்புடன் இருந்த அந்நாட்களிலும் சரி, தீயூழ் {துரதிர்ஷ்டம்} வாய்ந்த இந்நாட்களிலும் சரி, ஓ பாரதரே, அறத்தைவிட உகந்தது உமக்கு வேறு எதுவும் இருந்ததில்லை. அறத்தை உமது உயிரைவிட அதிகமாகக் கருதி வருகிறீர். உமது நாடும், உமது சுயமும் அந்தணர்களாலும், உமக்கு மூத்தவர்களாலும், தேவர்களாலும் அறத்திற்காக மட்டுமே கருதப்படுகின்றன.
நீர், பீமசேனரையும், அர்ஜுனரையும், மாத்ரி மகன்களான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்}, அவர்களுடன் சேர்த்து என்னையும் கைவிட்டாலும் விடுவீரே ஒழிய அறத்தைக் கைவிட மாட்டீர்! மன்னன் அறத்தைக் காப்பான் என்றும், அப்படி அவனால் காக்கப்பட்ட அறம் (பதிலுக்கு) அவனைக் காக்கும் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் அறம் உம்மைக் காக்காததையே நான் கண்டு வருகிறேன்! ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, மனிதனைத் தொடரும் அவனது நிழல் போல, உமது இதயம், ஒரே நோக்கோடு அறத்தையே நாடுகிறது. நீர் உமக்குச் சமமானவர்களையோ, தாழ்ந்தவர்களையோ, மேன்மையானவர்களையோ என்றும் அவமதித்ததில்லை. முழு உலகத்தை நீர் அடைந்தும், உமக்கு கர்வம் அதிகரிக்கவில்லை!
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களையும், தேவர்களையும், பித்ருக்களையும், சுவதங்களுடனும் மற்ற வகையான வழிபாடுகளாலும் வழிபட்டு வருகிறீர்! ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து, அவர்களைத் திருப்தி செய்திருக்கிறீர். யதிகளுக்கும், சந்நியாசிகளுக்கும், இல்லறத்துறவிகளுக்கும் உமது இல்லத்தில் தங்கத்தாலான தட்டில் வைத்து உணவு பரிமாறியிருக்கிறீர். வானப்பிரஸ்தர்களுக்கு தங்கமும் உணவும் எப்போதும் கொடுத்திருக்கிறீர். அந்தணர்களுக்கு நீர் கொடுக்க மாட்டீர் என்று சொல்லும்படி எந்தப் பொருளும் உமது வீட்டில் இல்லை.
உமது {மன} அமைதிக்காக, உமது இல்லத்தில் நடைபெற்ற விஸ்வதேவ வேள்வியில், சுத்தம் செய்யப்பட்ட பொருட்களை முதலில் உமது விருந்தினர்களுக்கும், மற்ற எல்லா உயிர்களுக்கும் கொடுத்து மீந்ததையே நீர் உண்டீர்! விருப்பத்தை ஈடேற்றும், இஷ்டிகளையும், பாசுபந்தங்கள் எனும் வேள்விகளையும், இல்லறக் கடமைகளுக்கான சடங்குகளையும், பக வேள்விகளையும், அனைத்து வகையான பிற வேள்விகளையும் உமது வீட்டில் நீர் நடத்தியிருக்கிறீர். திருடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தனிமையான கானகத்திற்கு நாடுகடத்தப்பட்டும், சொந்த நாட்டை இழந்தும் உமது அறம் கெடவில்லை!
பெரும் பரிசுகள் கொடுத்து நடத்தப்பட வேண்டிய அஸ்வமேதம், ராஜசுயம், புண்டரீகம், கோஸ்வம் ஆகிய பெரும் வேள்விகளை நீர் செய்திருக்கிறீர்! விபரீத உணர்வுகளால் உந்தப்பட்ட அந்தக் கடுமையான நேரத்தில், பகடையில் தோற்று, உமது நாட்டையும், உமது செல்வங்களையும், உமது ஆயுதங்களையும், உமது தம்பிகளையும், ஏன் என்னையும் இழந்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எளிமை, மென்மை, அடக்கம், உண்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், தீமை நிறைந்த சூதில் உமது மனம் ஈர்க்கப்பட்டது எவ்வாறு? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது இந்தத் துயரையும் பேரிடரையும் கண்டு எனது இதயம் துயரத்தில் மூழ்குகிறது. நான் எனது உணர்வுகளை இழக்கும் நிலையில் இருக்கிறேன்.
மனிதர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்க முடியுமே தவிர, தங்கள் விருப்பங்கள் படி நடக்க முடியாது என்பதற்கு ஒரு பழைய வரலாறு இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மரப் பதுமையைக் {பொம்மையைக்} கட்டி, நூல் கொண்டு ஆட்டி வைப்பது போல, அனைத்து துன்பங்களையும், இன்பங்களையும் விதிப்பவனான மேலான கடவுள், தான் படைத்த மக்களை ஆட்டி வைக்கிறான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அனைத்துப் பொருட்களையும் மூடியிருக்கும் வெளியைப் போல, கடவுளும் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடுருவி இருந்து இன்பத்தையும் துன்பத்தையும் விதிக்கிறான். நூலால் கட்டப்பட்ட பறவை போல, அனைத்து உயிரினங்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. அனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்களே அன்றி வேறு யாருக்கும் அல்ல. யாரும் தனக்குத் தானே விதித்துக் கொள்பவனாக இருக்க முடியாது.
நூலில் உள்ள முத்தைப் போல அல்லது, கயிற்றால் கட்டப்பட்ட காளையைப் போல அல்லது நீர்ச்சுழலில் சிக்கிய மரத்தைப் போல, அனைத்து உயிர்களும் படைப்பாளனின் கட்டளைகளைத் தொடர்கின்றன. அந்தப் அண்ட ஆன்மாவை {கடவுளை} நம்பியிருக்கும் மனிதன், ஒருக்கணம் கூட சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இருளால் சூழப்பட்ட எந்த மனிதனும், தானே தனது துன்பத்திற்கும் இனபத்திற்கும் தலைவனாக இருக்க முடியாது. கடவுளால் உந்தப்பட்டே அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். லேசான வைக்கோல் பலமான காற்றை நம்பியிருப்பது போல, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே} அனைத்து உயிர்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. இதுதான் கடவுள் என்று யாராலும் சொல்ல முடியாதெனினும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் கடவுள், அண்டத்தில் நகர்ந்து நல்லது கெட்டதைச் செய்து வருகிறான். இந்த நமது உடலை ஆயுதமாகக் கொண்டு, தலைவர்களுக்குத் தலைவன் {கடவுள்} நன்மை மற்றும் தீமையின் கனிகளைப் பறிக்கிறான்.
கடவுளால் பரப்பப்பட்டிருக்கும் மாயையின் சக்தியைப் பாரும். கடவுள் தனது மாயையால் குழப்புவதன் மூலமாக, உயிர்களைத் தங்கள் நண்பர்களையே கொல்ல வைக்கிறான். உண்மை அறிந்த முனிவர்கள் அவற்றை வித்தியாசமாகக் காண்கிறார்கள். அவை அவர்களுக்கு சூரிய ஒளியைப் போல வேறு ஒளியில் தெரிகின்றன (சாதாரணக் கண்களுக்கு ஒளிக்கீற்று போலத் தெரிபவை, ஆழ்ந்த பார்வை கொண்டோருக்கு உணவிலும் பானகங்களிலும் இருக்கும் பூச்சிகளைப் பார்ப்பது போலத் தெரிகிறது). சாதாரண மனிதர்கள் இவ்வுலகத்தை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்பிலும் அழிப்பிலும் வேறு வேறு செயல்வகைகளைக் கைக்கொண்டு, அனைத்தையும் செய்பவன் இறைவனே ஆவான்.
ஓ யுதிஷ்டிரரே, சுயம்புவான பெருந்தகப்பன் {பிரம்மா}, அந்தப் பெரும் தெய்வம், ஒரு மரத்தின் மந்தமான உணர்வற்ற பகுதியை, மரத்தை வைத்தே உடைப்பது போலவும், கல்லைக் கல்லால் உடைப்பது போலவும், இரும்பை இரும்பால் உடைப்பது போலவும், தான் படைத்த உயிரை தானே கொல்கிறான். அந்தத் தலைவர்களுக்குத் தலைவன் {பிரம்மன்}, தன் சித்தத்தின் படி உயிரினங்களை உற்பத்தி செய்து, அவற்றை அழித்து, ஒரு குழந்தை களிமண் பொம்மையுடன் விளையாடுவது போல, தான் படைத்த உயிரினங்களுடன் விளையாடுகிறான்.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, கடவுள் தான் படைத்த உயிரினங்களுடன் ஒரு தந்தையைப் போலவோ அல்லது ஒரு தாயைப் போலவோ நடந்து கொள்கிறான் என எனக்குத் தோன்றவில்லை. ஒரு தீய மனிதனைப் போல, அவன், தான் படைத்தவை மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்! மேன்மையான, நன்னடத்தையுள்ள, எளிமையான மனிதர்கள் துன்புற்று, பாவிகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். உமது துயரத்தையும், சுயோதனனின் {துரியோதனனின்} செழிப்பையும் நான் காண்பதால், பாரபட்சத்துடன் நடக்கும் அந்தப் பெரும் ஆணையாளனைக் {கடவுளைக்} குறித்து நான் உயர்வாகப் பேச மாட்டேன்.
ஐயா {யுதிஷ்டிரரே}, விதிகள் அனைத்தையும் மீறி, நியாயமற்று, பேராசையுடன் நடந்து கொண்டு, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் காயப்படுத்தும் திருதராஷ்டிரனின் மகனுக்குப் {துரியோதனனுக்கு} பெரும் செழிப்பை வழங்கி என்ன பெரும் கனியை {பலனை} அடைந்து விடப்போகிறான் அந்த பெரும் ஆணையாளன் {கடவுள்}? ஒரு செயலின் பலன் {வினை} செய்தவனை மட்டுமே தொடரும்; மற்றவரைத் தொடராது என்றால், நிச்சயமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலாலும் ஏற்படும் பாவத்தால் கடவுளே கறைபடுகிறான். எனினும், செய்யப்பட்ட செயலின் பாவம் செய்தவனைச் சாரவில்லை என்றால், பலமே (தனியொருவனின் பலமே) செயல்களுக்கான உண்மையான காரணமாகும் (கடவுள் இல்லையென்றாகிவிடும்). நான் பலமற்றவர்களுக்காக வருந்துகிறேன்!" என்றாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!