Krishna! don't slander God | Vana Parva - Section 31 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் திரௌபதிக்கு விளக்கம் சொல்வது...
யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ யக்ஞசேனி {திரௌபதி}, உனது பேச்சு மென்மையானதாக, அற்புதம் நிறைந்த சொற்றொடர்கள் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் அதைக் {கவனமாகக்} கேட்டோம். எனினும், நீ நாத்திகர்களின் மொழியில் பேசுகிறாய். ஓ இளவரசி {திரௌபதி}, எனது செயல்களுக்கான கனியை {பலனை} எதிர்பார்த்து நான் செயல்படுவதில்லை. கொடுப்பது எனது கடமையாகையால் நான் கொடுக்கிறேன்; வேள்வி செய்வது எனது கடமையாகையால் நான் வேள்வி செய்கிறேன்! இல்லற வாழ்வு வாழும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம், அவை கனி கொடுக்குமா கொடுக்காதா என்பதைக் கருதாமலேயே எனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி செய்கிறேன். ஓ அழகிய இடை கொண்டவளே, அறத்தின் கனியை அடைய விரும்பி நான் அறம்பயில வில்லை. வேதத்தின் விதிகளை மீறி நடக்கக்கூடாது என்று கருதியும், நல்லவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களின் நடத்தையைக் கண்டுமே நான் அறம்பயில்கிறேன்!
ஓ கிருஷ்ணா {திரௌபதி}, எனது இதயம் இயற்கையாகவே அறத்தின்பால் ஈர்க்கப்படுகிறது. அறம்பயில்வதின் மூலம் அந்த அறத்தின் கனியை அடைய விரும்பும் மனிதன் அறத்தை வணிகம் செய்பவனே ஆவான். அறச்செயல்கள் செய்த பிறகு, அதன் கனி குறித்து சந்தேகப்படுபடும் பாவ மனம் கொண்டவனுக்கு, அவனது ஐயத்தின் காரணமாகவே அக்கனி கிடைக்காது. , அறம் குறித்த சந்தேகம் உனக்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே இது போன்ற விஷயங்களில் நிறைய சாட்சிகளைக் கொண்டிருக்கும் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை நான் உன்னிடம் பேசுகிறேன். அறத்தை சந்தேகிப்பவன் தாழ்ந்த பிறவியான விலங்காகப் பிறக்க விதிக்கப்படுகிறான். வேதங்களின் படி, பலவீனமான புரிதல் கொண்ட மனிதன் ஒருவன், அறம், நல்லொழுக்கம், அல்லது முனிவர்களின் வார்த்தைகளைச் சந்தேகித்தால், நித்திய வாழ்வில் இருந்தும், அருளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு சூத்திரனாகிறான்.
ஓ புத்திசாலியே {திரௌபதியே}, நற்குலத்தில் பிறந்த ஒரு குழந்தை வேதங்களைப் பயின்று, அறத்தால் தன்னைத் தாங்கிக் கொண்டால், அறக்குணம் கொண்ட அரச முனிகள் அவனது வயதைக் கருதிப் பாரார். ஆனால், அறத்தைச் சந்தேகித்து, சாத்திரங்களை மீறி நடக்கும் பாவம் நிறைந்த இழிந்தவன், சூத்திரர்களை விடவும், ஏன் திருடர்களை விடவும் தாழ்ந்தவனாகக் கருதப்படுவான். அளவிடமுடியா ஆன்மா கொண்ட பெரும் தவசியான மார்க்கண்டேயர் நம்மிடம் வந்ததை நீயே உன் கண் கொண்டு பார்த்தாய்! அறத்தால் மட்டுமே அவர் சதையுடன் கூடிய நித்தியத்தன்மையை {சாகாவரத்தை} அடைந்தார். வியாசர், வசிஷ்டர், மைத்திரேயர், நாரதர், லோமசர், சுகர் மற்றும் பிற முனிவர்கள் அனைவரும் அறத்தால் மட்டுமே பரிசுத்தமான ஆன்மாவை அடைந்தனர். தெய்வீக தவச் சக்தியும், சாபமிட மற்றும் அருள் வழங்கக் கூடிய சக்தியும், தேவர்களைப் போன்றே அவர்கள் மேன்மையுடன் இருப்பதையும் நீயே உன் கண்ணாறக் கண்டிருக்கிறாய்.
ஓ பாவமற்றவளே {திரௌபதியே}, தேவர்களுக்குச் சமமான இவர்கள் அனைவரும், வேதங்களில் எழுதியிருப்பதைத் தங்கள் கண்களால் கண்டு, அறமே முதன்மைக் கடமை என்று விவரிக்கின்றனர். ஆகையால், ஓ இனிமையான அரசியே {திரௌபதியே}, மடமை கொண்ட இதயத்துடன் {மனத்துடன்} தெய்வத்தையோ செயலையோ சந்தேகிக்கவோ நிந்திக்கவோ செய்யாதே! அறத்தைச் சந்தேகித்து அதை அவமதிக்கும் முட்டாள், தனது ஆய்வறிவால் கிடைத்த சாட்சியைக் கொண்ட கர்வத்துடன், மற்ற சாட்சிகள் அனைத்தையும் காணாது, எதிர்காலத்தையே நிகழ்காலம் போல அறிந்து சொல்லும் முனிவர்களை பைத்தியக்காரர்கள் என்கிறான். தனது புலன்களைத் திருப்தி செய்யும் மேலோட்டமான வார்த்தைகளையே கருதிப்பார்க்கும் அந்த முட்டாள், மற்ற அனைத்திலும் குருடாயிருக்கிறான். அறத்தைச் சந்தேகிப்பவன் தனது குற்றத்திற்கு பரிகாரம் இல்லாதவன் ஆவான். கவலை நிறைந்த அந்த ஆறுதல் பெற முடியாத பாவி, அதன் பிறகு எந்த நல்லுலகையும் அடையமாட்டான்.
சாட்சிகளை நிராகரிப்பவனும், வேத சாத்திரங்களின் பொருளை அவதூறாகப் பேசுபவனும், காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு விதி மீறுபவனுமான அந்த முட்டாள் நரகத்திற்குச் செல்கிறான். ஓ இனிமையானவளே {திரௌபதியே}, மறுபுறம், அறத்தை நம்பிக்கையுடன் பேணிக் காப்பவர்கள், மறு உலகத்தில் நித்தியமான அருளைப் பெறுகிறார்கள். அறத்தைப் பேணிக்காக்காத முட்டாள், முனிவர்கள் அருளிய சாட்சிகளை மீறி நடந்து, அந்த சாத்திர மீறலுக்காக எந்த {உலக} வாழ்க்கையிலும் செழிப்பை அடைய மாட்டார்கள்.
ஓ அழகானவளே {திரௌபதியே}, மரியாதையுடன் முனிவர்களின் வார்த்தைகளையும், அறம்சார்ந்தவர்களின் நடத்தைகளையும் சாட்சியாக எண்ணிப் பார்க்காதவன், நிச்சயமாக இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நிலைக்க மாட்டான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நல்லவர்கள் பயிலும் பழமையான தர்மம் அண்ட அறிவு பெற்று அனைத்தையும் காணும் சக்தி பெற்ற முனிவர்களால் நிறுவப்பட்டது. ஓ துருபதனின் மகளே {திரௌபதி}, கடலைக் கடக்க நினைக்கும் வணிகர்களுக்கு கப்பல் எப்படியோ, அப்படி சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோரின் ஒரே படகு தர்மமே {சனாதன தர்மம்}. ஓ களங்கமற்றவளே {திரௌபதியே}, அறம்சார்ந்தோரால் பயிலப்படும் அறங்கள் கனி கொடுக்கவில்லையெனில், இந்த அண்ட மே காரிருளில் மூழ்கிவிடும். யாரும் முக்திக்கு முயற்சிக்கமாட்டார்கள். யாரும் ஞானத்தையோ செல்வத்தையோ பெற முயற்சிக்க மாட்டார்கள். மனிதர்களும் விலங்குகளைப் போலவே வாழ ஆரம்பிப்பார்கள்.
தவம் {ஆன்மிகம்}, பிரம்மச்சரியம், வேள்விகள், வேத கல்வி, தானம், நேர்மை ஆகியவை கனி கொடாமலிருந்தால், தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் அறம் பயின்றிருக்க மாட்டார்கள். செயல்கள் கனியற்றதாக இருப்பின், ஒரு கொடிய குழப்பமே பின்தொடரும். மனிதர்களின் நிலைமைக்கு {தரத்திற்கு} அப்பார்ப்பட்ட முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், ராட்சசர்களும் அறத்தை இந்த அளவு ஈடுபாட்டுடன் ஏன் பயில வேண்டும்? கடவுளே அறத்திற்கான கனி கொடுப்பவன் என்பதை அறிந்தவன், இவ்வுலகத்தில் அறத்தையே பயில்வான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, இதுவே நித்திய செழிப்பு {செழிப்பின் ஊற்றுக்கண்}.
ஞானம் மற்றும் தவத்தின் கனிகள் தெரியும்போது, அறமும், தீமையும் கனியற்றதாகிவிடாது. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நீ கேள்விப்பட்டவாறே உனது பிறப்பைக் குறித்து நினைத்துப் பார். பெரும் வீரம் கொண்ட திருஷ்டத்யும்னன் எப்படிப் பிறந்தான் என்பதை நினைத்துப் பார். ஓ இனிய புன்னகை கொண்டவளே {திரௌபதி}, இவையே {அறத்தின் கனிகளுக்கு} சிறந்த சாட்சிகள். தங்கள் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தங்கள் செயல்களுக்கான கனியைப் பறிப்பார்கள். சிறிது அறம்பயில்பவர்கள் கனியின் சிறு பகுதிகளை அடைவார்கள். அறத்தைச் சிறிதும் பயிலாத அறியாமையில் உள்ள மூடர்கள், எவ்வளவுதான் (இங்கு) பெற்றாலும், மறு உலகத்தில் ஒன்றையும் அடையமாட்டார்கள். ஓ அழகானவளே {திரௌபதியே}, வேதங்களில் விதிக்கப்பட்ட அறச்செயல்களும், மீறல்களும் கனிகொடாமல் போவது என்பதன் ஆதியும் அந்தமும், தேவர்களும் அறியாத புதிராக உள்ளது. இவற்றையெல்லாம் சாதாரண மனிதர்கள் அறியாமல் இருக்கின்றனர். இந்தப் புதிரைத் தக்க வைத்துக் கொள்ளும் தேவர்கள், மாயையால் அதை மறைக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
நோன்புகளிலும் தவத்திலும் நம்பிக்கை வைத்து, தங்கள் பாவங்களை எரித்து, அமைதியாகவும் புனிதமாகவும் வசிக்கும் ஆசைகளை அழித்த மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள். ஆகையால், அறம் கனி கொடுப்பதை நீ காணவில்லையென்றாலும், தர்மத்தையும் தேவர்களையும் நீ சந்தேகிக்கக்கூடாது. நீ விருப்பத்துடன் வேள்விகளைச் செய்ய வேண்டும். ஆணவம் இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும். இந்த உலகில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் கனிகள் இருக்கின்றன. அறம் நித்தியமானது. காசியபரை சாட்சியாக வைத்து, தனது (ஆன்மிக) மகன்களுக்கு பிரம்மாவே இதைச் சொல்லியிருக்கிறார். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது சந்தேகங்கள் மூடுபனி விலகுவது போல விலகட்டும். இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, உனது சந்தேகங்கள் நம்பிக்கைக்கு வழி கொடுக்கட்டும். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனான கடவுளை அவதூறு செய்யாதே. அவனை {கடவுளை} எப்படி அறிவது என்பதை அறிந்து கொள். அவனைப் பணிந்து வணங்கு. உனது மனம் இது போல் ஆகாது பார்த்துக் கொள். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, மனிதர்களுக்கு அருளும் தலைவர்களுக்குத் தலைவனான கடவுளை பக்தியுடன் அணுகி, அழியாத் தன்மை {நித்தியத்தன்மை} பெறு!
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.