Life is impossible without action| Vana Parva - Section 32 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
செயல் மற்றும் செயலின்மை குறித்து தனது தந்தை துருபதனின் இல்லத்தில் இருந்த போது ஒரு அந்தணரின் மூலம் அறிந்து கொண்ட திரௌபதி, தனது நாயகனான யுதிஷ்டிரனிடம் அவற்றை மீண்டும் சொல்லிப் புலம்புதல்.....
திரௌபதி சொன்னாள், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள்.
ஆகையால், ஓ யுதிஷ்டிரரே, முன்ஜென்மங்களில் தாங்கள் செய்த செயல்களின் அடிப்படையிலேயே உயிரினங்கள் தங்கள் குணங்களை அடைகின்றன. ஓ பாரதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, அசையும் உயிரினங்களில் மனிதன் மட்டும் தனது செயல்கள் மூலம் இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கையை நிர்ணயிப்பதால் விசேஷமானவனாக இருக்கிறான். முந்தைய ஜென்ம வாழ்க்கையின் தாக்கத்தால், அனைத்து உயிர்களும் தங்கள் செயல்களின் கனிகளை இவ்வுலகில் பறிப்பது தெரிகிறது. உண்மையில், அனைத்து உயிரினங்களும் முந்தய ஜென்ம வாழ்வின் தாக்கத்தோடேயே வாழ்கின்றன. (யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே) நீரில் வாழும் கொக்கைப் போல படைப்பாளரும் {பிரம்மாவும்}, அண்ட ஆணையாளரும் தங்கள் வேலையைச் செய்கின்றனர். செயல்படாத உயிரினத்தின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஆகையால், எந்த உயிரினமாக இருந்தாலும் செயலற்ற தன்மையுடன் அல்லாமல் செயல்பாடோடே இருக்க வேண்டும். செயலைத் துறப்பதால் கண்டிக்கப்படாதிருக்க நீரும் செயல்பட வேண்டும்.
கவசம் தரிப்பது போல, செயலால் உம்மைக் காத்துக் கொள்ளும். செயல்கள் அல்லது வேலையின் பயன்பாட்டை உண்மையில் அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது அதுவும் இல்லாமலிருக்கலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் செயல்பட வேண்டும்; {செல்வ} வரவுக்காக முயற்சிக்காதவன், தனது செல்வத்தைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருந்தால், இமயத்தை ஒத்த அவனது பெரும் செல்வமும் விரைவில் செலவழிந்துவிடும். செயல் இல்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும். செயல்கள் கனிகொடுக்க வில்லையென்றால், உயிரினங்கள் பெருகியிருக்காது. சில நேரங்களில் உயிரினங்கள் கனியற்ற செயல்களை செய்வதை நாம் காண்கிறோம். அவை செயல்படவில்லை என்றால் அவற்றின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடும். விதியை நம்பும் மனிதர்களும், வாய்ப்பை {அதிர்ஷ்டத்தை} நம்பும் மனிதர்களும், மனிதர்களிலேயே இழிந்தவர்களாவார்கள். செயல்திறனை நம்புபவர்கள் மட்டுமே பாராட்டத்தக்கவர்கள். வசதியாக பொய்யுரைத்துக் கொண்டு, செயல்படாமல், விதியை மட்டுமே நம்பி இருப்பவன், சுடப்படாத மண் பானை நீரால் அழிவது போல அழிந்து போவான். அதே போல, வாய்ப்பை நம்பி எதிர்பார்த்து, செயல்பட முடிந்தும் செயல்படாமல் உட்கார்ந்து இருப்பவனும், பலவீனமான மற்றும் ஆதரவற்ற தனது வாழ்க்கையால் நீண்ட நாள் பிழைத்திருக்க மாட்டான்.
எதிர்பாராவிதத்தில் செல்வத்தை அடையும் ஒருவன், யாரொருவரின் முயற்சியும் இல்லாமல் அதைப் பெற்றதால், அதிர்ஷ்டத்தால் அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, அறச்சடங்குகள் மூலம் ஒரு மனிதன் அடையும் எந்த நற்பேறாக இருந்தாலும், அது அதிர்ஷ்டவசமாகப் பெற்றதாகவே சொல்லப்படுகிறது. மனிதன் செயல்பாட்டால் கனியை அடைந்தால், தனது செயல்பாடுகளின் நேரடிப் பயனான அது, அவனது தனிப்பட்ட திறனுக்கான சாட்சியாக மதிக்கப்படுகிறது. ஓ மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, காரணம் இல்லாமல் தானாக ஒருவனால் அடையப்படும் செல்வம், தன்னிச்சையான கையகப்படுத்தல் என்று சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமான அருளாலும், தானாகவும் வரும் எந்தப் பொருளும், ஒருவனுடைய செயல்களின் பயனாகப் பெறப்பட்டது என்று கருதப்பட்டாலும், அது முன்ஜென்ம வாழ்க்கையில் அவன் செய்த செயல்களின் விளைவே ஆகும். அண்ட ஆணையாளரான கடவுள், முன் ஜென்ம வாழ்க்கையில் செய்த செயல்களை ஆராய்ந்து, இந்த உலகத்தில் அதன் பகுதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறான். நல்லதாகவோ தீயதாகவோ எச்செயலையும் செய்யும் ஒரு மனிதன், அது கடவுள் கொடுத்த பயன் என்பதை அறிந்து, முன்ஜென்ம வாழ்க்கைக்குத் தக்க படி செயல்படுகிறான். இந்த உடல் கடவுளின் கரங்களில், செய்யப்படும் செயல்களுக்கு கருவியாக மட்டுமே இருக்கிறது. செயல்திறனற்றதாக இருக்கும் உடல், கடவுள் பணித்ததைச் செய்கிறது.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தலைவர்களுக்குத் தலைவனான கடவுளே, அனைத்து உயிர்களையும் செயல்பட வைக்கிறான். உயிரினங்கள் தானே செயல்படும் சக்தியற்றவை. ஓ வீரரே, மனிதன் முதலில் மனதில் ஒரு காரியத்தைத் தீர்மானித்து, தனது அறிவின் துணை கொண்டு அதைச் சாதிக்கிறான். ஆகையால், நாம், (மனிதன் செய்யும் காரியங்களுக்கு) மனிதனே காரணம் என்று சொல்கிறோம். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, மாளிகைகளும், நகரங்களும் மனிதர்களின் செயல்களின் பயன்களே, ஆகையால் மனிதர்களின் செயல்கள் எத்தனை என்று எண்ணுவது சாத்தியமற்றது. எள்ளில் இருந்து எண்ணை எடுக்கலாம் என்றும், பாலில் இருந்து தயிர் எடுக்கலாம் என்றும், விறகு எரிப்பதால் உணவைச் சமைக்க முடியும் என்றும், புத்தி கொண்ட மனிதன் தனது அறிவின் துணை கொண்டு அறிந்து கொள்கிறான். இவற்றையெல்லாம் சாதிக்கும் வழிகளையும் அவர்கள் அறிகிறார்கள். அவற்றை அறிந்து கொண்டு, பின்பு சரியான பொருட்களைக் கொண்டு அவற்றைச் சாதிக்கிறார்கள். தங்கள் செயல்களின் வழியாகக் கிடைக்கும் பலன்களைக் கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன.
ஒரு நிபுணன் ஒரு வேலையைச் செய்தால், அதைச் சரியாகச் செய்கிறான். வேலையில் இருக்கும் வித்தியாசங்களால், நிபுணத்துவம் அற்ற கை செய்த வேலையை நாம் கண்டறிகிறோம். ஒரு மனிதன் செய்யும் செயல்களின் விஷயத்தில் அவன் காரணமாக இருக்க வில்லையெனில், வேள்விகள் அவன் விஷயத்தில் கனி கொடுக்காது. யாரும் அவனுக்கு சீடனாகவும் முடியாது. குருவாகவும் முடியாது. ஒரு வேலைக்கு அந்த மனிதனே காரணமாக இருப்பதால்தான் அவன் வெற்றியடையும்போது பாராட்டப்படுகிறான். ஆகையால் அந்தப் பணியில் அவன் தோற்கும்போது நிந்திக்கப்படுகிறான். தனது செயல்களுக்குத் தானே காரணமாகாத மனிதன் இவற்றையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? சிலர் அனைத்துமே அதிர்ஷ்டத்தின் பயன் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அப்படியில்லை என்கின்றனர். ஆனால் விதியின் பயன் என்றும், அதிர்ஷ்டத்தின் பயன் என்றும் சொல்லப்படும் அனைத்தும், முன்ஜென்ம செயல்களின் நல்ல அல்லது தீய செயல்களின் பயனாக இருக்கின்றன. அதிர்ஷ்டத்தாலும், விதியாலும் உடைமைகள் கிடைப்பதும் காணப்படுகிறது. சில விதியாலும், சில அதிஷ்டத்தாலும், சில முயற்சியாலும் பெற்றப்படுகின்றன. மனிதர்களின் விஷயத்தில் இவை மூன்றையும் தவிர்த்து நான்காவதாக ஒரு காரணம் கிடையாது. உண்மை அறிந்த, அறிவுத்திறமை கொண்டவர்கள் இப்படியே சொல்கின்றனர்.
எனினும், நன்மையான அல்லது தீங்கான கனிகளைக் கொடுப்பது கடவுள் இல்லை என்றால், உயிரினங்களில் பரிதாபகரமானவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்தைய செயல்களின் விளைவுகள் ஒரு கட்டுக்கதை என்றால், மனிதன் வேலை செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். ஆகையால் இவ்வுலகில் மூன்று மட்டுமே {விதி, அதிர்ஷ்டம், முயற்சி} வெற்றி மற்றும் தோல்வியின் கதவுகள் என்று (முன் ஜென்ம வாழ்வின் செயல்களைக் கருதிப்பாராமல்) கருதுபவர்கள் உடலைப் போலவே மந்தமாக செயலற்று இருப்பார்கள். இவையெல்லாம் இப்படி இருப்பினும் மனிதன் செயல்பட வேண்டும். இது மனுவின் தீர்மானமாகும். ஓ யுதிஷ்டிரரே, செயல்படாத மனிதன் நிச்சயம் அடிமைப்படுவான் {Succumb}. இவ்வுலகத்தில் செயல்படும் மனிதன் பொதுவாக வெற்றியையே சந்திக்கிறான். இருப்பினும் செயலற்றவன் வெற்றியை அடைவதே இல்லை. வெற்றி சாத்தியமில்லாத போது, வெற்றியின் பாதையில் இருக்கும் தடைகளை விலக்க ஒருவன் முயற்சிக்க வேண்டும்.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, (கடுமையாக) வேலை செய்யும் {உழைக்கும்} மனிதனின் கடன்கள் (கடவுளுக்கு பட்ட கடன்கள்) (அவன் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும்) ரத்து செய்யப்படுகின்றன. செயலற்று, நீண்டு கிடப்பவன், துரதிர்ஷ்டத்தில் மூழ்குகிறான். துடிப்புடனும், நிபுணத்துவத்துடனும் இருப்பவன் நிச்சயம் வெற்றியை அறுவடை செய்து, செழிப்பையும் இன்பத்தையும் அடைவான். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் புத்திசாலி மனிதர்கள், வித்தியாசமாக இருப்பவர்களை சந்தேகம் உள்ளவர்களாகவும், வெற்றியடையாதவர்களாகவும் கருதுகிறார்கள். எனினும் நம்பிக்கை நிறைந்தவர்களை வெற்றியாளர்களாகவே அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கணம் நாம் துன்பத்தில் மூழ்கி இருக்கிறோம். இருப்பினும் நீர் செயல்பட்டால் நமது துன்பம் விலகும். நீர் தோல்வியுற்றால், அதுவே உமக்கும், விருகோதரருக்கும் {பீமருக்கும்}, விவத்சுவுக்கும் {அர்ஜுனருக்கும்}, இரட்டையர்களுக்கும் {நகுலர், சகாதேவருக்கும்} (நீங்கள் எதிரியிடம் நாட்டை பறிக்க முடியவில்லை என்ற) ஆதாரத்தை வழங்கும்.
மற்றவர்களின் செயல்களுக்கு வெற்றிமகுடம் சூட்டப்படுவதைக் காண்கிறோம். நமது செயல்களும் வெற்றியடையும் என்று கருதலாம். தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஒருவன் எப்படி முன்பே அறிந்து கொள்ள முடியும்? முயற்சி செய்தால், அந்த முயற்சிக்கு கனி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உழவன் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுது விதைகளைத் தூவுகிறான். பிறகு பயிரை விளைவிக்க மேகமே {மழையே} காரணம் என்று அமைதியாக அமர்கிறான். மேகங்கள் அவனுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அந்த உழவன் பழியில் இருந்து விடுவிக்கப்படுகிறான். அவன் தனக்குள்ளேயே, "மற்றவர்கள் செய்ததைத்தான் நானும் செய்தேன். இருந்தபோதிலும் தோல்வியைச் சந்தித்தேன். என்னை எந்தப் பழியும் சாராது." என்று நினைத்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளாதிருப்பான்.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஒரு நம்பிக்கையின்மையுடன், "நான் செயல்படுகிறேன். ஆனாலும் வெற்றி எனதாகவில்லையே!" என்று கருதக்கூடாது. ஏனென்றால் முயற்சியைத் தவிர்த்து வெற்றிக்கான இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையின்மை கூடாது. ஏனென்றால் செயல்களின் வெற்றி சேர்க்கை மற்றும் பல சூழ்நிலைகளைப் பொருத்ததாகும். ஒரு முக்கியமான பொருள் தேவை என்றால் வெற்றி அதற்கு ஈடானதாகாது அல்லது வெற்றி கிட்டாது. இருப்பினும் முயற்சி இல்லையென்றால் வெற்றி கிட்டாது. முயற்சி இல்லாது வேறு எது இருந்தாலும் அது பாராட்டத்தக்கதல்ல. புத்திசாலிகள், செழிப்பை அடைய இடம், நேரம், வழி, அதிர்ஷ்ட சடங்குகள் ஆகியவற்றைச் சரியாகச் செய்து தங்கள் புத்தியின் துணையுடன் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள். கவனத்துடனும், விழிப்புடனும் வீரத்தைத் தலைமை வழிகாட்டியாகக் கொண்டு வேலையைச் செய்ய வேண்டும். ஒரு வேலையின் வெற்றிக்குத் தேவையான குணங்களின் சேர்க்கையில் வீரமே முக்கியமானதாகும்.
எதிரி தன்னைவிட பல குணங்களில் மேன்மையாக இருப்பதைக் காணும் புத்திசாலி மனிதன், சமரசக் கலைகளையும், சரியான சாதனங்களையும் பயன்படுத்தி தனது காரியங்களை நிறைவேற்றுவதற்கு வழி தேட முயற்சிக்க வேண்டும். அவன் தனது எதிரிக்கு தீமையையும், எதிரியை அகற்றுதலையும் விரும்ப வேண்டும். மரணத்திற்குரிய மனிதர்களைப் பற்றி இல்லாமல், அவனது எதிரி கடல், மலைகளாகவும் இருந்தாலும் கூட அவனது நோக்கங்கள் இவ்வாறே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மனிதன் தனது எதிரிகளிடம் இருக்கும் ஓட்டைகளைத் தேடுவதன் மூலம், தனது மற்றும் தனது நண்பர்களின் கடனைத் தீர்க்கிறான். எந்த மனிதனும் தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்பவன் உயர்ந்த செழிப்பை அடையவே மாட்டேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்த உலகத்தில் வெற்றி என்பது அடையக்கூடியதே. உண்மையில் இவ்வுலகத்தில் வெற்றி என்பது நேரம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிடைக்கிறது.
முன்பு என் தந்தை {துருபதன்} தன்னுடன் ஒரு கற்ற அந்தணரை வைத்திருந்தார். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவரே {அந்த அந்தணரே} இவற்றையெல்லாம் என் தந்தைக்கு {துருபதனுக்குச்} சொன்னார். உண்மையில் பிருஹஸ்பதி வெளிப்படுத்திய கடமை குறித்த இவ்வழிமுறைகள், எனது சகோதரர்களுக்கு {திருஷ்டத்யும்னன் போன்றோர்க்குக்} கற்றுத் தரப்பட்டது. பிறகு, அவர்களிடம் இருந்தே, என் தந்தையின் {துருபதரின்} இல்லத்தில் இருந்தபோது நான் கேட்டறிந்தேன். ஓ யுதிஷ்டிரரே, இடைவேளை நேரங்களில் நான் {உள் அறைகளில் இருந்து = அந்தப்புரத்தில் இருந்து} வெளியே சென்று என் தந்தையின் {துருபதரின்} மடியில் அமர்ந்து கொள்வேன். அப்போது அந்தக் கற்ற அந்தணர் இந்த உண்மைகளையெல்லாம் இனிமையாகவும் ஆறுதலாகவும் எனக்குச் சொன்னார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.