Will you hide Himavat mountains with handful of grass| Vana Parva - Section 35 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
பீமன்
சொன்னான், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நுரை போலவும், (எப்போதும் விழத்தயாராக இருக்கும்)
கனிந்த கனி போலவும், நீர் காலத்தை நம்பி அழியும் தன்மை பெற்று இருக்கிறீர்.
வேகமான கணையைப் போன்றும், வேகமாக ஓடும் நீரூற்றைப் போன்றும், மரணத்தைப்
போன்றும் உள்ள எல்லையற்ற, அளவிடமுடியாத காலத்திற்குட்பட்ட ஒரு
ஒப்பந்தத்தில் நுழைந்தால், நம்மிடம் உள்ள அனைத்தும் அதில் அடித்துச்
செல்லப்படுகிறது. அவை எல்லாம் உம்மிடம் இருக்கும் என்று எப்படி நீர்
கருதுகிறீர்? ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஊசியால் குத்தி
எடுக்கப்படும் மைப்பொடி போல ஒவ்வொரு கணமும் வாழ்நாள் குறையும் ஒருவன்,
எப்படி காலத்தை எதிர்பார்க்கலாம்? அளவற்ற ஆயுள் கொண்டவனோ அல்லது தனது
வாழ்நாள் எவ்வளவு என்ற நிச்சயம் கொண்டவனோ, எதிர்காலத்தைத் தன் கண் முன்
நடக்கும் நிகழ்வு போல அறிபவனுமே (எதிர்பார்த்த) காலத்தின் வருகைக்காகக்
காத்திருக்கலாம்.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் நமது
வாழ்நாட்களைக் குறைத்து பதிமூன்று {13} வருடங்கள் காத்திருந்தோமானால், அது நம்மை
மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும். உடலுள்ள எந்த உயிரினத்திற்கும்
மரணம் நிச்சயம் வரும். ஆகையால், நாம் இறக்கும் முன்பு நமது நாட்டை அடைய
நாம் முயற்சிக்க வேண்டும். எதிரிகளைத் தண்டிக்கத் தவறி, புகழடைவதில்
தோல்வியுறுபவன், அசுத்தமான ஒரு பொருளைப் போன்றவனாவான். தடுமாறும் காளையைப்
போல புகழற்று அழிந்து போகக்கூடியவன் இந்தப் பூமிக்குத் தேவையற்ற பாரமாகவே
இருப்பான். எதிரிகளைத் தண்டிக்காமல் பலமற்று, வீரமற்று வீணாக ஒருவன்
வாழ்ந்தால், அவன் தாழ்ந்த பிறவியாகவே கருதப்படுவான். போர்க்களத்தில்
எதிரிகளைக் கொன்று உமது கரத்தின் பலத்தால் பெற்ற செல்வத்தை அனுபவியும்.
உமது கரங்களால் தங்கத்தைப் பொழிய முடியும்; உமது புகழ் உலகெங்கும் பரவும்.
ஓ
அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, தனக்குத் தீங்கிழைத்தவனைக்
கொல்வதால் ஒருவன் அன்றே நரகத்திற்குச் சென்றாலும், அந்த நரகம் கூட அவனுக்கு
சொர்க்கமாக மாறும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவன் கோபத்தை அடக்குவதால் உண்டாகும் வலி
உணர்ச்சி நெருப்பை விட எரிச்சல் நிறைந்ததாக இருக்கும். இப்போது கூட நான்
அதனால் எரிந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னால் பகலிலோ இரவிலோ உறங்க
முடிவதில்லை. பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்று அழைக்கப்படும் பிருதையின் {குந்தியின்} இந்த
மகன், வில் நாணை இழுப்பதில் முதன்மையானவனாவான். அவன் {அர்ஜுனன்} குகைக்குள் வாழும்
சிங்கத்தைப் போல இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிச்சயமாக துக்கம் அவனை
எரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பூமியில் உள்ள அனைத்து வில்லாளிகளின்
துணையும் இல்லாமல் எதிரிகளைக் கொல்ல நினைக்கும் அவன், பலம் வாய்ந்த
யானையைப் போல, தனது நெஞ்சத்தில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான்.
நகுலன்,
சகாதேவன், வீரர்களின் தாயான முதிர்ந்த குந்தி ஆகியோர் உம்மைத்
திருப்திப்படுத்தவே ஊமையாக இருக்கின்றனர். அவர்களுக்குச் சமமாக
சிரீன்ஜயர்களும் நமது நண்பர்கள் அனைவரும், உம்மைத் திருப்தி செய்ய
எண்ணுகின்றனர். நானும் பிரதிவிந்தியனின் தாயும் {திரௌபதியும்} மட்டுமே
துயரத்தில் எரிந்து உம்மிடம் இதுகுறித்துப் பேசுகிறோம். நான் உம்மிடம்
என்னவெல்லாம் பேசுகிறேனோ, அவையெல்லாம் துக்கத்தில் மூழ்கி போருக்கு ஆவலாகக்
காத்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதே. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே},
அலட்சியப்படுத்தத்தக்க பலவீனமானவர்களால் நமது நாடு கவரப்பட்டு, அவர்களால்
அந்த நாடு அனுபவிக்கப்படுவதை விட வேறு என்ன பேரிடர் நமக்கு வர வேண்டும்?
ஓ
மன்னா {யுதிஷ்டிரரே}, உமது பலவீனமான மனதாலேயே, நீர் செய்து கொடுத்த
உறுதிமொழியை மீற வெட்கப்படுகிறீர். ஆனால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, இந்த
உமது மனநிலையாலும் உமது அன்பாலும் இந்தக் கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை
யாரும் மெச்சமாட்டார்கள். வேதங்களை அதன் பொருள் உணராது மனப்பாடம் செய்யும்
மடமையும் அறியாமையும் கொண்ட உயர் பிறவிகளைப் போல, உமது அறிவு உண்மையைக்
காணவில்லை. நீர் அந்தணர்களைப் போல அன்பாக இருக்கிறீர். நீர் எப்படி
க்ஷத்திரியக் குலத்தில் பிறந்தீர்? க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள்
பொதுவாக குரூர புத்தி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
நீர்,
மனுவால் உரைக்கப்பட்ட குரூரமான, கபடமான, அமைதிவழிகளுக்கும் அறத்திற்கும்
எதிரான அரச கடமைகளைக் கேட்டிருக்கிறீர். பிறகு ஏன், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் தீய
திருதராஷ்டிரன் மகன்களை மன்னிக்கிறீர்? உமக்கு அறிவும், வீரமும் கல்வியும்,
உயர்ந்த பிறப்பும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, செய்ய வேண்டிய
காரியத்தில் முயற்சியில்லாமல் பெரும்பாம்பு போல அசையாமல் ஏன் இருக்கிறீர்?
ஓ
குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எங்களை மறைக்க விரும்புபவன், இமயத்தின்
மலைகளை, கைப்பிடி புல்லால் மறைக்க விரும்புகிறான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே
{யுதிஷ்டிரரே}, உலகம் முழுவதும் நீர் அறியப்பட்டவராதலால், மனிதர்களை
அறியாமல் எப்படி சூரியனால் முழு வானத்தைக் கடக்க முடியாதோ அப்படி உம்மால்
யாராலும் அறியப்படாமல் இருக்க முடியாது. நீர் நிறைந்த இடத்தில் கிளை
பரப்பி, மலர்களுடனும், இலைகளுடனும் இருக்கும் பெரும் மரம் போல அல்லது
இந்திரனின் யானையைப் {ஐராவதத்தைப்} போல இருக்கும் ஜிஷ்ணுவால் {அர்ஜுனானால்} எப்படி
யாராலும் அறியப்படாமல் இருக்க முடியும்? இளம் சிங்கங்களைப் போல இருக்கும்
நமது தம்பிகளான இந்தப் பிள்ளைகள் நகுலனும் சகாதேவனும் எப்படி கமுக்கமாக
{இரகசியமாக} வாழ முடியும்? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, துருபதனின்
மகளும் , இளவரசியும் , வீரர்களின் தாயும், அறச் செயல்களுக்காக உலகம்
முழுவதும் அறியப்பட்ட இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படி யாரும் அறியாமல்
வாழ முடியும்? என்னைப் பிள்ளைப் பருவத்தில் இருந்து அனைவரும் அறிவர்.
யாரும் அறியாமல் நான் எப்படி வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்தச் செயல் மேருவின் மலைகளை மறைக்க முயல்வதற்குச் சமமானது.
நம்மால்
அவர்களது நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பல மன்னர்கள் இருக்கிறார்கள்.
நம்மால் நாடுகடத்தப்பட்ட, செல்வங்கள் அபகரிக்கப்பட்ட இந்த மன்னர்களும்
இளவரசர்களும் நமக்கு நண்பர்கள் இல்லையாகையால், அவர்கள், திருதராஷ்டிரனின்
தீய மகன்களைத் தொடர்வார்கள். திருதராஷ்டிரனுக்கு நன்மை செய்ய விரும்பும்
அவர்கள், நிச்சயம் நம்மைக் காயப்படுத்தவே எண்ணுவார்கள். நிச்சயம் அவர்கள்
நமக்கு எதிராக எண்ணிலடங்கா ஒற்றர்களை ஏவுவார்கள். அவர்கள் நம்மைக்
கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னால், பெரும் ஆபத்தில் நாம் மூழ்குவோம்.
நாம் ஏற்கனவே பதிமூன்று {13} மாதங்களைக் கானகத்தில் கழித்துவிட்டோம். ஓ மன்னா {யுதிஷ்டிரரே},
அவற்றையே பதிமூன்று வருடங்களாகக் கருதிக் கொள்ளும். சோமத்திற்கு ஈடாக
மூலிகைப்பானை கருதப்படுவதைப் போல, ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் ஈடாகும்
என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, ஓ மன்னா
{யுதிஷ்டிரரே}, புனிதமான சுமைகளைச் சுமக்கும் அமைதியான காளைக்கு நல்ல
சுவையான உணவைக் கொடுத்து இந்தப் பாவத்தில் இருந்து நீர் விடுபடலாம்.
ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளைக் கொல்லத் தீர்மானியும். ஒவ்வொரு
க்ஷத்திரியனுக்கும் போரைத் தவிர உயர்ந்த அறம் கிடையாது!" என்றான் {பீமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.