Arjuna is a great rishi | Vana Parva - Section 36 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாசர் வந்து யுதிஷ்டிரனுக்கு ஞானத்தை உபதேசிப்பது. வியாசரின் கட்டளைப்படி யுதிஷ்டிரன் துவைத வனத்தைவிட்டு, காம்யக வனம் சென்று தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது...
வைசம்பாயனர் சொன்னார், "பீமனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனும், மனிதர்களில் புலியும், பகைவர்களைக் கொல்பவனுமான யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டபடி அமைதியாகச் சிந்தித்தான். பிறகு தனக்குள்ளேயே, "மன்னர்களின் கடமைகளையும், பலவகைப்பட்டவர்களின் கடமைகள் குறித்த உண்மைகளையும் கேட்டிருக்கிறேன். கடமைகளைக் கண்ணுக்கு முன்பு வைத்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் நடத்தைகளில் அவற்றை அனுசரிப்பவர்களே கடமையைச் சரியாகச் செய்பவர்கள் ஆவார்கள். அறத்தின் உண்மையான வழிகளை அறிந்த நான், மேருவைப் புரட்டிப் போடுவது போல அறத்தை எப்படி புரட்டிப் போடுவேன்?" என்று சிறிது நேரம் சிந்தித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானித்து, பீமனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவனுக்கு மறுமொழி கூறினான்.
அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால், ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, நான் சொல்லப்போகும் மறுமொழியையும் கேள். ஓ பீமா, ஒருவன் செய்ய முயற்சிக்கும் எந்தப் பாவ காரியமும், தைரியத்தை {திமிரை} நம்பி மட்டுமே செய்யப்பட்டு, எப்போதும் வலியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. ஆனால், ஓ பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {பீமனே}, ஆழ்ந்து ஆராய்ந்து, நன்கு வழிநடத்தப்பட்ட வீரத்துடனும், அனைத்து கருவிகளுடனும், எது தொடங்கப்பட்டாலும் அது வெற்றியடையும். தேவர்களே கூட அப்படிப்பட்ட ஏற்பாடுகளுக்கு அனுக்கிரம் செய்வார்கள். ஓ பீமா, பலத்தில் கொண்டுள்ள கர்வத்தாலும், அவசரத்தாலும் அக்காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்று எண்ணுகிறாய்.
வீழ்த்துவதற்கு கடினமான பூரிஸ்ரவஸ், சலன், பெரும் பலம் மிக்க ஜலசந்தன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரோணரின் பலம் மிக்க மகன் {அஸ்வத்தாமன்}, திருதராஷ்டிரன் மகன்களாகிய துரியோதனனும் மற்றவரும் ஆயுதக்கலையில் சாதனை செய்தவர்கள். அவர்கள் அனைவரும் நம்முடன் போரிடத் தயாராக இருக்கிறார்கள். நம்மால் காயப்பட்ட அந்த மன்னர்களும் பூமியின் தலைவர்களும், கௌரவர்களுடன் உறவு பூண்டவர்களும் கௌரவர்களின் பக்கத்தையே சேர்வார்கள்.
பீஷ்மர், துரோணர், மற்றும் சிறப்புவாய்ந்த கிருபர் ஆகியோரின் நடத்தை அவர்களிடம் {கௌரவர்களிடம்} எவ்வாறு இருக்கிறதோ அதே போல நம்மிடம் இருந்தாலும், ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, எனது உறுதியான முடிவு என்னவென்றால் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான அரச உதவிகளுக்குப் பதிலாக, போர்க்களத்தில் உயிரையும் தர சித்தமாயிருப்பார்கள். அர்ப்பணிப்புடன் அறம்பயிலும் அவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள். வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்றே நான் எண்ணுகிறேன். இன்னும் அவர்களிடம் கர்ணன் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். மூர்க்கமும், எப்போதும் கோபமும் கொண்ட அவன் {கர்ணன்} அனைத்து ஆயுதங்களிலும் நிபுணனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், துளைக்க முடியாத கவசம் கொண்டவனாகவும் இருக்கிறான். மனிதர்களில் முதன்மையான அவர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தாமல், எந்த உதவியும் அற்ற நாம் துரியோதனனை எப்படிக் கொல்ல முடியும்? ஓ விருகோதரா {பீமா}, வில் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த சூத மகனின் {கர்ணனின்} கை லாவகத்தை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை," என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்க்கமான பீமன் அச்சமுற்று ஏதும் பேசாதிருந்தான். பாண்டுவின் மகன்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, சத்தியவதியின் மகனும் பெரும் தவசியுமான வியாசர் அங்கே வந்தார். அப்படி அவர் வந்த போது பாண்டுவின் மகன்கள் அவரை முறைப்படி வணங்கினர். பிறகு, பேசுபவர்களில் முதன்மையான அவர் {வியாசர்} யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் காளையே, உனது இதயத்தில் என்ன கடந்து செல்கிறது என்பதை எனது ஞானப்பார்வையில் கண்டே, நான் உன்னிடம் வந்தேன். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவனே, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இளவரசர்களான துரியோதனன் மற்றும் துச்சாசனன் ஆகியோரிடம் நீ கொண்ட அச்சத்தை எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நான் விலக்குவேன். என்னிடம் இருந்து அதைக் கேட்டு அமைதியுடன் அதைச் சாதித்து முடி. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அதைச் சாதிப்பதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடு." என்றார்.
பராசரரின் மகனான {வியாசர்}, அந்தப் பேசுபவர்களில் முதன்மையானவர் {வியாசர்} யுதிஷ்டிரனை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, ஆழமான வார்த்தைகளில், "ஓ பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும்போது உனது செழுமைக்கான நேரம் வரும். வெற்றியை உருவகமாகக் கொண்ட பிரதிஸ்மிருதி என்ற ஞானத்தை நான் அதைப் பெறத் தகுதியுடைய உனக்குத் தருகிறேன். அதை (உன்னிடமிருந்து) பெறும் அர்ஜுனன் உனது விருப்பத்தை சாதிக்கக்கூடியவனாக இருப்பான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகேந்திரன், ருத்திரன், வருணன், குபேரன், யமன் ஆகியோரிடம் அர்ஜுனன் சென்று அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறட்டும். அவன் {அர்ஜுனன்} தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் தகுதியைப் பெற்றவனாவான். அவன் {அர்ஜுனன்}, அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து நாராயணனுக்கு நண்பனும், பெரும் சக்தி படைத்த முனிவனுமாவான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அவன் {அர்ஜுனன்}, இந்திரனிடமும், ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் கானகத்தை விட்டு, நீ வசிப்பதற்கு தகுதியான வேறு கானகத்திற்குச் செல்லவும் சிந்தனை செய். நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் வசிப்பது அருமையாக இருப்பது அரிது. உனது காரியத்தில் {நீ இங்கு தங்குவதால்}, இது தவசிகளுக்கு துயரத்தையும் கொடுக்கலாம். நீ வேதங்களின் பல கிளைகள் அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்களைப் பராமரிப்பதாலும், தொடர்ந்து இங்கு வசிப்பதாலும், இக்கானகத்தில் மான்களின் எண்ணிக்கை முழுவதும் அழிந்து போகக்கூடும். பல செடி கொடிகளும் அழிந்து போகும்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிச் சொல்லிவிட்டு, பெரும் ஞானம் கொண்ட, உலகத்தின் புதிர்களை அறிந்த சிறப்புவாய்ந்த, மேன்மையான தவசியான வியாசர், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அறிவியலில் முதன்மையான ஞானத்தைக் {பிரதிஸ்மிருதி} கொடுத்தார். பிறகு அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வியாசர் மறைந்தார். அறம்சார்ந்த புத்திசாலியான யுதிஷ்டிரன், தான் பெற்ற ஞானத்தைக் கவனமாக மனதில் நிறுத்தி, சரியான நேரங்களில் அவற்றை உரைத்தான். வியாசரின் ஆலோசனையைக் கேட்டு மகிழ்ந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, துவைதவனத்தைவிட்டு, சரஸ்வதி நதிக்கரையில் இருந்து காம்யக வனத்திற்குச் சென்றான். தவத்தகுதியுடையவர்களும், சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு குறித்த அறிவியலை அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்கள், தேவர்கள் தலைவனைத் {இந்திரனைத்} தொடரும் முனிவர்கள் போல அவனைத் {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்றார்கள். காம்யக வனத்திற்கு வந்த சேர்ந்த அந்த பாரதர்களில் சிறந்த காளைகள், தங்கள் நண்பர்கள் மற்றும் பணியாட்களுடன் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா} சக்தி படைத்த அந்த வீரர்கள், அங்கே விற்பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்து, வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டு அங்கு சிறிது காலம் வசித்தார்கள். அங்கே அந்த வனத்தில் சுத்தமான கணைகளைத் தரித்துக்கொண்டு தினமும் மான் வேட்டையாடினார்கள். பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான சடங்குகளைச் செய்தார்கள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.