Arjuna reached Indraloka | Vana Parva - Section 42 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வம்)
மாதலி கொண்டு வந்த தேரில் அர்ஜுனன் பயணித்து சொர்க்கத்தின் பல பகுதிகளைக் காணுதல்; அர்ஜுனன் இந்திரலோகம் அடைதல்…
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா} அந்த லோகபாலர்கள் சென்ற பிறகு, எதிரிகளைக் கொல்லும் அர்ஜுனன், இந்திரனின் தேரைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். புத்திகூர்மையுள்ள அந்த குடகேசன் {அர்ஜுனன்} அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த போது, மேகங்களைப் பிளந்து கொண்டு, சுற்றத்தை ஒளியூட்டி, மேகக்கூட்டங்களின் கர்ஜனையை ஒத்த ஒலியை எழுப்பிக் கொண்டு வந்த மிகுந்த ஒளிவீசும் அந்தத் தேரை, மாதலி வழிநடத்திக் கொண்டு வந்தான். வாள்கள், பயங்கர உருவிலான ஏவுகணைகள், அச்சமூட்டும் கதாயுதங்கள், மின்னலைப் போன்ற தெய்வீக ஒளிவீசும் இறகு கொண்ட கணைகள், இயக்கிகள் பொருத்தப்பட்ட சக்கரங்கள் ஆகியவை சுற்றுவட்டாரத்தை விரிவாக்கி, பெரும் மேகத்திரளுக்கு ஒப்பான சத்தத்தை எழுப்பிக் கொண்டு அந்த தேரில் இருந்தன. நெருப்பைக் கக்கும் பெரும் நாகங்களும், வெண்மேங்கள் போன்ற கற்குவியல்களும் அந்தத் தேரில் இருந்தன.
அந்தத் தேர் தங்க நிறம் கொண்ட பத்தாயிரம் {10000} குதிரைகளால் இழுக்கப்பட்டு, காற்றின் வேகம் கொண்டிருந்தது. மாயை நிறைந்த அந்த தேரின் முன்னேற்றத்தை கண்களால் காண முடியவில்லை. அர்ஜுனன் அந்தத் தேரில், மரகத நிறம் அல்லது கருநீல தாமரையின் நிறத்தில் இருந்த வைஜயந்தம் என்ற கொடிக்கம்பத்தைக் கண்டான். அது தங்க ஆபரணங்களாலும், நேரான மூங்கிலாலும் ஆன கொடிக்கம்பமாக இருந்தது. தங்க ஆசனத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, அது {அந்தத் தேர்} தேவர்களுக்குச் சொந்தமானது என்று கருதினான்.
அர்ஜுனன் அந்தத் தேரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, தேரோட்டியான மாதலி, தேரைவிட்டு இறங்கி தலைவணங்கி அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ சக்ரனின் {இந்திரனின்} அதிர்ஷ்டசாலி மகனே {அர்ஜுனா}, சக்ரன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறார். நேரத்தைக் கடத்தாமல் இந்தத் தேரில் ஏறு. இந்தத் தேர் இந்திரனால் அனுப்பப்பட்டது. நூறு வேள்விகளைச் செய்த தேவனும், இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவனுமான உனது தந்தை, "குந்தியின் மகனை இங்கே கொண்டு வா. தேவர்கள் அவனைக் காணட்டும்" என்று என்னிடம் உத்தரவிட்டார். தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்ட சங்கரரும் உன்னைக் காண காத்திருக்கிறார்கள். பகனைக் கொன்றவர் {இந்திரனின்} உத்தரவின் பேரில், இந்தத் தேரில் ஏறி, என்னுடன் தேவர்களின் உலகத்துக்கு வா. ஆயுதங்களைப் பெற்ற பின்னர் நீ திரும்பலாம்." என்றான் {மாதலி}.
அர்ஜுனன், "ஓ மாதலி, நூறு ராஜசுய மற்றும் குதிரை வேள்விகளாலும் அடைய முடியாத இந்த அற்புதமான தேரில் நேரத்தைக் கடத்தாமல் ஏறு. பெரும் வேள்விகளைச் செய்து, நிறைந்த செல்வத்தை பரிசாகக் கொடுத்திருக்கும் பெரும் செழிப்பு மிக்க மன்னர்களும், ஏன் தேவர்களும், தானவர்களும் கூட இந்தத் தேரில் ஏற தகுதிபடைத்தவர் அல்லரே. தவத்தகுதி இல்லாத எவனும் இந்தத் தேரைக் காணவோ அல்லது தொடவோ முடியோதபோது, இதில் தவத்தகுதி இல்லாத மனிதர்கள் பயணிக்க முடியாது. ஓ அருளப்பட்டவனே {மாதலி}, நீ இந்தத் தேரில் ஏறி, குதிரைகள் அசையாமல் நின்ற பிறகு, நேர்மையானவர்களின் நெடுஞ்சாலையில் அடியெடுத்து வைக்கும் அறம் சார்ந்த மனிதன் போல நான் அதில் ஏறுவேன்", என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சக்ரனின் தேரோட்டியான மாதலி, அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு விரைவாக அந்தத் தேரில் ஏறி குதிரைகளைக் கட்டுப்படுத்தினான். பிறகு, அர்ஜுனன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், கங்கையில் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான். பிறகு அந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வழக்கமான வழிபாடுகளை முறையாகத் {செவிக்குப் புலப்படாதபடி) திரும்பச் செய்தான். பிறகு முறைப்படி பித்ருக்களுக்கு நீரால் அர்ப்பணம் செய்தான். கடைசியாக, மலைகளின் மன்னன் மந்தரத்திடம் {மந்தர மலையிடம்}, "ஓ மலையே, நீயே புனிதமானவர்களும் அறம்சார்ந்த நடத்தையுடைவர்களுமான சொர்க்கத்தை விரும்பும் முனிவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறாய். ஓ மலையே, உனது கருணையாலேயே, அந்தணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சொர்க்கத்தை அடைந்து, துன்பங்கள் களைந்து, தேவர்களுடன் விளையாடுகிறார்கள்.
ஓ மலைகளின் மன்னா, ஓ மலையே, நீயே முனிவர்களின் ஆசிரமம், நீயே உனது மார்பில் பல புண்ணியத் தலங்களைத் தாங்குகிறாய். உனது உயரங்களில் நான் மகிழ்ச்சியாக வசித்திருக்கிறேன். நான் இப்போது உன்னிடம் நன்றியுடன் பிரியாவிடை பெறுகிறேன். உனது மேட்டுச் சமவெளிகளையும், நிழல் நிறைந்த கொடி பந்தல்களையும், புண்ணியத்தலங்களையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். உன்னில் வளரும் சுவை மிகுந்த கனிகளை உண்டிரிக்கிறேன். உனது உடலில் இருந்து சுரக்கும் வாசனை நிறைந்த நீரைக் கொண்டு எனது தாகத்தைத் தணித்திருக்கிறேன். இனிமையான அமிர்தத்தைப் போன்ற உனது ஊற்று நீரையும் பருகியிருக்கிறேன். ஓ மலையே, தந்தையின் மடியில் மகிழ்ச்சியாக உறங்கும் பிள்ளையைப் போல நானும் மகிழ்ச்சியாக, ஓ மலைகளின் மன்னா, ஓ அற்புதமானவனே உனது மார்பில் அப்சரஸ்களின் இசையை எதிரொலித்து விளையாடிக் கொண்டும், வேதங்களை உரைத்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். ஓ மலையே, உனது மேட்டுச் சமவெளியில் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாக வாழ்ந்திருக்கிறேன்" என்று சொல்லி அந்த மலையிடம் பிரியாவிடை பெற்று எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன், சூரியனைப் போலப் பிரகாசித்து, அந்த தெய்வீகத் தேரில் ஏறினான்.
மேலும் புத்திக்கூர்மை கொண்ட அந்த குரு இளவரசன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், இயல்புக்கு மிக்க சாதனைகளாலானதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான அந்த தெய்வீகத் தேரில் ஏறி வானத்தில் பயணித்தான். உலக மனிதர்களின் கண்களுக்கு அவன் மறைந்த பிறகு, இயல்புக்கு மிக்க அழகுடைய ஆயிரக்கணக்கான தேர்களைக் கண்டான். அந்தப் பகுதியில் ஒளியைக் கொடுக்க சூரியனோ, சந்திரனோ, நெருப்போ இல்லை. ஆனால் அந்தப் பகுதி அறத்தின் தவத்தகுதியால் உற்பத்தியான தன்னொளி கொண்டு பிரகாசித்தது. பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திர உருவில் தெரியும் அந்தப் பிரகாசமான பகுதிகள், உண்மையில் அவை பெரியதாக இருந்தாலும் வானத்தில் விளக்கு போல தெரிந்தன. அதனதன் இடத்தில் முழு அழகுடனும் பிரகாசத்துடன் தன்னொளி கொண்டு மின்னிய அவற்றை பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கண்டான். அங்கே தவத்தில் வெற்றி மகுடம் சூடிய அரச முனிகளையும், போரில் தன்னுயிரீந்த வீரர்களையும், தவநோன்புகளால் சொர்க்கத்தை அடைந்தவர்களையும் நூற்றுக்கணக்கில் கண்டான். அங்கே சூரியனைப் போன்ற கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும், குஹ்யர்களும், முனிவர்களும், எண்ணிலடங்கா அப்சர இனங்களும் இருந்தனர்.
தன்னொளி பெற்று பிரகாசித்த அந்தப் பகுதிகளைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்} மிகவும் வியந்து, மாதலியிடம் அவை குறித்து விசாரித்தான். மாதலியும் மகிழ்ச்சியுடன், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் இருக்கும் அறம் சார்ந்த மனிதர்களாவர். ஓ மேன்மையானவனே, நீ இவர்களைத் தான், பூமியில் இருந்து நட்சத்திரங்களெனக் கண்டாய்" என்றான். பிறகு (இந்திரலோகத்தின்} வாயிலில் எப்போதும் வெற்றிவாகைசூடும் நான்கு தந்தங்களுடைய அழகான யானையான அனைத்து சிகரங்களையும் கொண்ட கைலாச மலையைப் போன்ற ஐராவதம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். சித்தர்களின் வழியில் பயணித்த {சித்தர்களின் வழியை அடைந்த} அந்தக் குருக்களில் முதன்மையான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மன்னர்களில் சிறந்தவனான மாந்தாதா போல அழகுடன் அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், அறம் சார்ந்த மன்னர்களுக்கான பகுதியைக் கடந்து சென்றான். அந்தக் கொண்டாடப்படும் அர்ஜுனன், தொடர்ச்சியாக சொர்க்கத்தின் பகுதிகளைக் கண்டு, கடைசியாக இந்திரனின் நகரமான அமராவதியைக் கண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.