Apsaras dance | Vana Parva - Section 43 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனனைப் பலர் புகழ்தல்; இந்திரன் தனது மகனை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பது; இந்திரனின் சபையில் அப்சரஸ்களின் நடனம்.
வைசம்பாயனர் சொன்னார், "அர்ஜுனன் கண்ட இந்திரனின் நகரம் {அமராவதி நகரம்} மகிழ்ச்சிகரமானதாகவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தது. அங்கே அனைத்து காலங்களுக்கும் உரிய மலர்களும், அனைத்து விதமான புனித மரங்களும் இருந்தன. அப்சரஸ்களுக்கு ஓய்வெடுக்கப் பிடித்தமான இடமான நந்தனம் என்று அழைக்கப்பட்ட தெய்வீகச் சோலையையும் கண்டான். நறுமணம் கொண்ட காற்றும், இனிய மணம் கொண்ட மலர்களும், தெய்வீக அரும்புகள் கொண்ட மரங்களும் அதன் தலைவனும் அவனை வரவேற்க நிற்பது போலத் தெரிந்தது. தவம் செய்யாத எவரும், அக்னியில் நெய் விடாத எவரும் அதைக் காணமுடியாத படி அந்தப் பகுதி இருந்தது. போர்க்களத்தில் புறமுதுகிட்டவர்களுக்கானது அல்லாமல், அறம்சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஆன பகுதியாக அது இருந்தது.
வேள்விகளோ, கடும் நோன்புகளோ, வேத அறிவு இல்லாதவர்களோ, புண்ணிய நீர்களில் நீராடதவர்களோ, வேள்விகளிலும் தானங்களிலும் விலக்கப்பட்டவர்களோ அந்தப் பகுதியைக் காணமுடியாது. வேள்விகளைத் தடை செய்பவர்களோ, தாழ்ந்தவர்களோ, போதைதரும் மதுவைக் குடிப்பவர்களோ, குருவின் படுக்கையைக் களங்கப்படுத்தியவர்களோ, (பரிசுத்தமற்ற) புலால் உண்பவர்களோ, தீயவர்களோ அதைக் காண முடியாது. தெய்வீக இசையால் நிறைந்த அந்தத் தெய்வீக சோலையைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இந்திரனுக்குப் பிடித்தமான நகரத்துக்குள் {அமராவதிக்குள்} நுழைந்தான். நினைத்த இடத்திற்குச் செல்லவல்ல ஆயிரக்கணக்கான தெய்வீகத் தேர்கள் சரியான இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பதை அவன் கண்டான். அனைத்து திக்குகளிலும் பத்தாயிரக்கணக்கான அவ்வகை தேர்கள் நகர்ந்து கொண்டிருப்பதையும் கண்டான். மலர்களின் நறுமணத்துடன் கூடிய வாசனையான தென்றலால் வருடப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அப்சரஸ்களாலும் கந்தர்வர்களாலும் புகழப்பட்டான்.
கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருடன் இருந்த தேவர்கள், நற்செயல்கள் புரிந்த பிருதையின் {குந்தியின்} மகனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் மதித்து நடந்தனர். தெய்வீக இசை முழக்கத்துடன், ஆசீர்வாதங்கள் அவன் மீது பொழியப்பட்டன. பிறகு, வலுத்த கரங்கள் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுற்றி சங்குகள் மற்றும் பேரிகைகளின் இசையைக் கேட்டான். சுற்றி நின்ற அனைவராலும் புகழப்பட்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பிறகு இந்திரனின் கட்டளையின் பேரில், சுரவீதி என்று அழைக்கப்பட்ட பெரிதான அகன்ற நட்சத்திரப் பாதையில் சென்றான். பிறகு அவன், சத்யஸ்கள், விசுவஸ்கள், மருதர்கள், அசுவினி இரட்டையர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், பெரும் பிரகாசமுடைய பிரம்மரிஷிகள், திலீபனைத் தலைமையாகக் கொண்ட எண்ணிலடங்கா அரசமுனிகள், தும்புரு, நாரதர், ஹாஹா மற்றும் ஹூஹூ என்று அழைக்கப்பட்ட கந்தர்வ இரட்டையர்கள் ஆகியோரைச் சந்தித்தான்.
அந்த எதிரிகளைத் தண்டிக்கும் குரு இளவரசன் கடைசியாக நூறு வேள்விகளைச் செய்த தேவனான, தேவர்கள் தலைவனைச் {இந்திரனைச்} சந்தித்து அவனை முறைப்படி வணங்கினான். பிறகு அந்த வலுத்த கரம் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தேரில் இருந்து இறங்கி பகனைத் தண்டித்தவனான தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகினான். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தலைக்கு மேல், தங்கப்பிடி கொண்ட அழகான வெண்குடை பிடிக்கப்பட்டிருந்தது. தெய்வீக வாசனைத்திரவியங்களைக் கொண்டு நறுமணமாக்கப்பட்ட சாமரம் அவனுக்கு வீசப்பட்டது. விசுவவசுவைத் தலைமையாகக் கொண்ட கந்தர்வர்களாலும், பாணர்களாலும், பாடகர்களாலும், ரிக், யஜுர் வேதங்களை உச்சரிக்கும் அந்தணர்களில் முதன்மையானவர்களாலும், மற்றவர்களாலும் அவன் புகழப்பட்டான்.
பிறகு, குந்தியின் பலம் பொருந்திய மகன் {அர்ஜுனன்} இந்திரனை அணுகி, தனது தலையைத் தரையில் பதித்து அவனை வணங்கினான். அதன்பிறகு, இந்திரன் தனது உருண்டு பருத்த கரங்களால் அவனை {அர்ஜுனனை} அணைத்துக் கொண்டான். பிறகு அவனது கரத்தைப் பற்றிய சக்ரன் {இந்திரன்}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும், புனிதமான தனது ஆசனத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்து அவனை உட்காரச் செய்தான். ஆயிரம் கண்ணுடைய தேவனின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி, சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தில் அமர்ந்த, அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதையின் மகன் {அர்ஜுனன்}, இரண்டாவது இந்திரனைப் போல ஒளிர்ந்தான்.
பாசத்தால் உந்தப்பட்ட விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, அர்ஜுனனைச் சமாதானம் செய்து, தனது நறுமணமிக்க கரங்களால் அவனது {அர்ஜுனனின்} அழகான முகத்தைத் தொட்டுப் பார்த்தான். பிறகு, விரித்திரனைக் கொன்ற ஆயிரம் கண்களையுடையவன் {இந்திரன்}, வஜ்ராயுதம் பிடித்து வடுபட்ட தனது கரத்தால், வில்லின் நாணிழுத்து கடினமாகி தங்கத்தூண்களைப் போல இருந்த அர்ஜுனனின் பெரும் கரங்களைத் தட்டிக் கொடுத்தும், தேய்த்தும் பார்த்தான். சூரியனையும் சந்திரனையும் போல தனது மகன் தனது சபையை அழகூட்டியதைக் கண்ட ஆயிரம் கண்ணுள்ள தேவன் {இந்திரன்}, சுருண்ட முடி கொண்ட {குடாகேசன்}, தனது மகனை {அர்ஜுனனை} மீண்டும் கண்டு, புன்னகைத்து, மகிழ்ச்சியால் கண்களை அக விரித்து திருப்தியடையாமல் இருந்தான். அவனை {அர்ஜுனனை} அதிகமாகப் பார்க்க பார்க்க, மேலும் அவனை அதிகமாகப் பார்க்க ஆசைப்பட்டான்.
தேய்பிறையின் பதினான்காவது நாள் {சதுர்த்தசியில்} சூரியனும் சந்திரனும் வானத்தை அழகூட்டுவது போல, ஒரே இருக்கையில் அமர்ந்த தந்தையும் மகனும், அந்தச் சபையின் அழகை மேலும் கூட்டினர். புனிதமான மற்றும் புனிதமற்ற இசையில் நிபுணனான தும்புருவின் தலைமையிலான கந்தர்வ இசைக்குழு, இனிமையான பாடல்களைப் பாடினர். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, ரம்பை, பூர்வசித்தி, சுவயம்பிரபா, ஊர்வசி, மிஸ்ரகேசி, தண்டகௌரி, வரூதினி, கோபாலி, சஹஜன்யா, கும்பயோணி, பிரஜாகரை, சித்திரசேனா, சித்திரலேகா, சஹை, மதுரஸ்வனா ஆகியவர்களும், ஆயிரக்கணக்கன மற்றவர்களும், கடுந்தவம் பயின்ற மனிதர்களின் இதயங்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த இடைகளும், பெருத்த அழகான இடைகளும் கொண்டு, பல பரிமாணங்கள் காட்டி, தங்கள் பருத்த மார்புகளை அசைத்து, தங்கள் பார்வைகளைச் சுழலவிட்டு, பார்வையாளர்களின் இதயங்களையும், எண்ணங்களையும், மனங்களையும் கொள்ளை கொள்ளும் கவர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
![]() |
![]() |
![]() |
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.