Arjuna learned music and dance | Vana Parva - Section 44 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் சகோதரர்களை நினைத்து கவலை கொள்தல்; இந்திரன் அர்ஜுனனை இசையும் நடனமும் கற்றுக் கொள்ளச் சொல்லி சித்திரசேனனை நண்பனாகக் கொடுத்தல்; அர்ஜுனன் சித்திரசேனனிடம் இசையும் நடனமும் கற்றல்;
வைசம்பாயனர் சொன்னார், "தேவர்களும், கந்தர்வர்களும், இந்திரனின் விருப்பங்களை உணர்ந்து, அற்புதமான ஆர்கியாவைத் தயார் செய்து, பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} அவசரமாக மரியாதை செலுத்தினர். அவனின் {அர்ஜுனனின்} கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, அந்த இளவரசனை {அர்ஜுனனை}, இந்திரனின் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். இப்படி வழிபடப்பட்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தொடர்ந்து தனது தந்தையின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் வாழ ஆரம்பித்தான். தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காகவும், அந்த ஆயுதங்களைத் திரும்ப அழைக்கும் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காகவும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கேயே தொடர்ந்து இருந்தான். பிறகு, சக்ரனின் {இந்திரனின்} கைகளால் அவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான வஜ்ராயுதத்தையும் மற்ற பயங்கரமான கர்ஜனை கொண்ட, மேகத்தின் தோற்றத்தையும், (நடனமாடும்) மயில்களின் தோற்றத்தையும் கொண்டு அறியக்கூடிய விண்ணுலகின் மின்னலைப் போன்ற பிற ஆயுதங்களையும் பெற்றான். அப்படி ஆயுதங்களை அடைந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை நினைவுகூர்ந்தான். இருப்பினும், இந்திரனின் கட்டளையின் பேரில், வசதியுடனும் ஆடம்பரத்துடனும் முழுமையாக ஐந்து வருடங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்தான்.
அர்ஜுனன் ஆயுதங்களைப் பெற்ற சில காலங்களுக்குப் பிறகு, தகுந்த நேரத்தில் இந்திரன், "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, சித்திரசேனனிடம் இருந்து இசையையும் ஆடற்கலையையும் கற்றுக் கொள். இசைக்கருவிகளால் இசைக்கப்படும் தற்போதைய தேவலோக இசை, மனிதர்களின் உலகில் இல்லை. ஓ குந்தியின் மகனே, அது உனக்கு நன்மையைத் தரும். பிறகு புரந்தரன் {இந்திரன்}, சித்திரசேனனை அர்ஜுனனுக்கு நண்பனாகக் கொடுத்தான். அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} சித்திரசேனனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான். அவனுடன் இருந்த காலத்தில் சித்திரசேனன் அர்ஜுனனுக்கு குரலிசையும், கருவி {வாத்திய} இசையும், நடனமும் கற்றுக் கொடுத்தான். ஆனால் சுறுசுறுப்பான அர்ஜுனன், சுபலனின் மகனான சகுனியின் நியாயமற்ற விளையாட்டை நினைவுகூர்ந்து, கோபத்துடன் துச்சாசனனையும் அவனது மரணத்தையும் நினைத்துப் பார்த்து மன அமைதியின்றியே இருந்தான். இருப்பினும், சித்திரசேனனுடனான அவனது நட்பு முழுமையாகக் கனிந்து, ஒப்பிலா நடனத்தையும், கந்தர்வர்களால் இசைக்கப்படும் இசையையும் அர்ஜனன் கற்றுக் கொண்டான். பல வகைப்பட்ட நடனங்களையும், வித்தியாசமான வகைகளிலான குரலிசை மற்றும் கருவியிசைகளையும் கற்றுக் கொண்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களையும், தாய் குந்தியையும் நினைத்துப் பார்த்து மன அமைதி பெற்றானில்லை.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.