A beautiful apsara called Urvasi! | Vana Parva - Section 46a | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனனைக் காண நடந்து சென்ற ஊர்வசியின் அழகு குறித்த வர்ணனை…
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி தனது காரியத்தில் வெற்றியடைந்த கந்தர்வனை வழியனுப்பிய ஒளிரும் புன்னகையுடைய ஊர்வசி, பல்குனனை {அர்ஜுனனை} அடையும் விருப்பத்தால், நீராடினாள் {குளித்தாள்}. தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட அவள் {ஊர்வசி}, அழகிய ஆபரணங்களாலும், தெய்வீக மணம் கொண்ட மாலைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அர்ஜுனனின் அழகைக் கண்டு, காம தேவனால் உந்தப்பட்ட அவளது இதயம் மன்மதனின் அம்புகளால் மீண்டும் மீண்டும் தைக்கப்பட்டது. மனம் முழுவதும் அர்ஜுனனை நிறைத்து, தெய்வீக போர்வைகள் போர்த்தப்பட்ட அகலமான அற்புதமான படுக்கையில் அவனுடன் {அர்ஜுனனுடன்} மானசீகமாக விளையாடினாள்.
மாலை சந்தி ஆழ்ந்து சந்திரன் உதித்த போது, உயர்ந்த இடை கொண்ட அந்த அப்ரசஸ் அர்ஜுனனின் மாளிகைக்குக் கிளம்பினாள். அதே மனநிலையுடன், தனது மிருதுவான, மென்மையான, நீண்ட கூந்தலில் மலர்க்குலைகளைத் தரித்து இயல்புக்கு மிக்க அழகான தோற்றமுடையவளானாள். தனது அழகு மற்றும் அருளாலும், தனது புருவங்களின் அழகான அசைவாலும், தனது மென்மையான {பேச்சு} ஒலிகளாலும், சந்திரனைப் போன்ற தனது முகத்தாலும், அவள் {ஊர்வசி} நிலவின் அழகுக்கு சவால் விட்டு நடந்து செல்வது போலத் தோன்றியது.
அவள் {ஊர்வசி} அப்படி முன்னேறிச் செல்கையில், தங்க ஆரங்களாலும், தெய்வீகத் தைலங்களாலும், நறுமணச் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அவளின் {ஊர்வசியின்} பருத்த கூர்மையான மார்புகள் நடுங்கத்தொடங்கின {அசைந்தன [ஆங்கிலத்தில் began to tremble என்றே இருக்கிறது]}. அவளுடைய மார்புகளின் கனத்தால், அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் முன்னோக்கி குனிவது போல, மூன்று மடிப்புகளுடன் கூடிய தனது மிக அழகான இடையை வளைத்தாள். காமதேவனின் அழகிய உறைவிடமான, களங்கமற்ற வடிவம் கொண்ட அவளது இடுப்பு, தங்கச்சங்கிலிகளாலும், மெலிதான ஆடையாலும் அலங்கரிக்கப்பட்டு துறவிகளின் துறவு நிலையை அசைத்துப் பார்க்கும் சக்தியுடன் மலையின் கீழ்ப்பகுதியைப் போல அகன்றும் உயர்ந்தும் பருத்தும் உருண்டையாக மிகவும் அழகாக இருந்தது. அழகிய மறைந்த கணுக்கால்களும், தட்டையான உள்ளங்காலும், தாமிர நிறத்தில் நீண்ட சிவந்த கட்டைவிரலும், ஆமையின் முதுகைப் போன்ற வளைந்து உயர்ந்த குதிகாலும் கொண்ட அவளது பாதம், மணிகளாலும் ஆபரணங்களாலும் {சலங்கைகளாலும்} அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகான தோற்றம் கொண்டிருந்தது.
அவள் {ஊர்வசி} உட்கொண்டிருந்த சிறிதளவு மதுவால் கொண்ட மயக்கத்துடனும், ஆசையின் உற்சாகத்திலும், பல்வேறு அணுகுமுறைகளால் நகர்ந்து, மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தி சென்ற அவள் {ஊர்வசி} வழக்கத்தைவிட அதிக அழகான தோற்றம் கொண்டவளாகத் தெரிந்தாள். என்னதான் சொர்க்கம் அற்புதமான பல பொருட்களால் நிறைந்திருந்தாலும், இப்படி ஊர்வசி நடந்து செல்வதைக் கண்ட சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், தங்கள் கண்கள் கண்ட அனைத்தைக் காட்டிலும் அவள்தான் அழகு என்று கருதினர். அவளது உடலின் மேல்பாகத்தில் மேக நிறம் கொண்ட மெல்லிய துணியை அணிந்திருந்தாள். அதனால், அவள் ஆகாயத்தில் நிறைந்த மேகத்திரள், சந்திரனின் ஒளியைப் பிரதிபலிப்பதைப் போல அழகாக இருந்தாள். காற்று வேக மனோ வேகத்துடன் சென்ற அந்த ஒளிரும் புன்னகைக்குச் சொந்தக்காரி {ஊர்வசி}, பாண்டுவின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} மாளிகையை விரைவில் அடைந்தாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.