Learn the arts of acquitting in female company | Vana Parva - Section 45 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் ஊர்வசியைப் பார்த்ததைக் கண்ட இந்திரன், சித்திரசேனனை அழைத்து ஊர்வசியிடம் சென்று தனது செய்தியைச் சொல்லுமாறு சொன்னது; சித்திரசேனன் ஊர்வசியிடம் சென்று அர்ஜுனனைப் புகழ்ந்து சொல்லி, அர்ஜுனனிடம் ஊர்வசி செல்ல வேண்டும் என்று உரைப்பது; ஊர்வசி தான் ஏற்கனவே அர்ஜுனன் மேல் மோகத்தில் இருப்பதாகத் தெரிவிப்பது…
வைசம்பாயனர் சொன்னார், "ஒருநாள், அர்ஜுனனின் *பார்வை ஊர்வசியின் மேல் விழுந்ததைக் கண்ட வாசவன் {இந்திரன்}, சித்திரசேனனை {அர்ஜுனனின் கந்தர்வ நண்பன்} தனிமையில்அழைத்து, "ஓ கந்தர்வ மன்னா, நான் திருப்தியடைந்தேன்; அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் எனது தூதுவனாகச் சென்று, மனிதர்களில் புலியான பல்குனனுக்காக {அர்ஜுனனுக்காக} அவளை {ஊர்வசியைக்} காத்திருக்கச் செய். அவளிடம், {ஊர்வசியிடம்} "எனது {இந்திரன்} பயிற்சியின் மூலம் அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களையும், மற்ற கலைகளையும் கற்றுக் கொண்டு, எல்லோராலும் கொண்டாடப்பட்டு இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} பெண்களின் துணையைக் கொள்ளும் கலையை அறிந்தவனாகவும் நீ ஆக்க வேண்டும்" என்ற எனது {இந்திரன்} வார்த்தைகளைச் சொல்" என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வ மன்னன் {சித்திரசேனன்}, அந்த வாசவனின் {இந்திரனின்} கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, விரைவாக அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் சென்றான். அவனைக் கண்டதும், அவனது அடையாளத்தைக் கண்டு கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சியுண்டாவது போல அவனை வரவேற்கவும் வணங்கவும் செய்தாள். தான் வசதியாக அமர்ந்ததும் அவன் {கந்தர்வ மன்னனான சித்திரசேனன்}, மெல்லி புன்னகையுடன், வசதியாக அமர்ந்திருந்த ஊர்வசியிடம், "ஓ அழகான இடை கொண்டவளே, உன்னிடம் ஒரு உதவியைக் கேட்கும் சொர்க்கத்தின் ஒரே தலைவன் {இந்திரன்} அனுப்பியே நான் இங்கு வந்திருக்கிறேன்.
பிறப்பிலிருந்தே தன்னுள் இருக்கும் பல அறங்களுக்காகவும், தனது அருளுக்காகவும், நடத்தைக்காகவும், அழகுக்காகவும், நோன்புகளுக்காகவும், சுயக்கட்டு பாடுகளுக்காகவும், பலம் மற்றும் வீரத்திற்காகவும் தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் அறியப்பட்டவனும், அறம்சார்ந்தவர்களால் மதிக்கப்பட்டு எப்போதும் தயாரான சொல்நயத்துடனும், அறிவுஜீவியாகவும், அற்புதமான சக்தியுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், எந்த விதமான கறையும் படாமலும், நான்கு வேதங்களையும், அதன் கிளைகளையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் கற்று, குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், அறிவாற்றலின் எட்டு பண்புகளைக் கொண்டவனும்,
தனது துறவு, திறன், மூலம் {பிறப்பிடம்}, வயது ஆகியவற்றைக் கொண்டு, தேவலோகத்தை மஹாவத் {இந்திரன்} போன்று தனியாகவே காக்க இயன்றவனும், தற்பெருமை பேசாதவனும், அனைவருக்கும் தகுந்த மரியாதை கொடுப்பவனும், நுட்பமான சிறு பொருளையும் பெரிதாக மொத்தமாகப் பார்ப்பவனும், இனிமையான பேச்சு கொண்டவனும், விதவித விதமான உணவு மற்றும் பானங்களை நண்பர்களுக்கும், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் கொடுப்பவனும், உண்மையுள்ளவனும், அனைவராலும் வழிபடப்படுபவனும், நா நலமிக்கவனும், அழகானவனும், கர்வமற்றவனும், தனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களிடம் அன்புடன் இருப்பவனும், அண்டத்திற்கே திருப்தியாக இருந்து அனைவராலும் விரும்பப்படுபவனும், சத்தியத்தில் உறுதியுடன் இருப்பவனும், மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, வருணனுக்கும் எல்லாவிதத்திலும் சமமான அர்ஜுனனை நீ அறிவாய். ஓ ஊர்வசி, அந்த வீரன் சொர்க்கத்தின் இன்பங்களைச் சுவைப்பதற்காக உருவாக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள். இந்திரனின் கட்டளையின் பேரில் அவன் {அர்ஜுனன்} இன்று உனது பாதத்தை அடையட்டும். ஓ இனிமையானவளே, அர்ஜுனன் உன் பக்கமாகச் சாய்ந்திருப்பதால், இதைச் செய்" என்றான் {சித்திரசேனன்}.
இப்படிச் சொல்லப்பட்டதும் களங்கமற்ற குணம் கொண்ட ஊர்வசி புன்னகை கொண்ட முகத்துடன் அந்த கந்தர்வனின் {சித்திரசேனனின்} வார்த்தைகளை உயர்ந்த மரியாதையுடன் பெற்று, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "மனிதர்களை அலங்கரிக்க வேண்டிய அறங்களை, அவை உம்மால் சொல்லப்பட்ட போது {அர்ஜுனனை வர்ணித்தது} கேட்டேன். யார் இப்படிப்பட்ட அறங்களைக் கொண்டிருந்தாலும், நான் அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பேன். பிறகு, நான் ஏன் அர்ஜுனனை எனது காதலனாகக் கொள்ளக்கூடாது? இந்திரனின் உத்தரவினாலும், உம்மிடம் நான் கொண்டுள்ள நட்பினாலும், பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா நற்குணங்களாலும் ஈர்க்கப்பட்டு, நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறேன். ஆகையால், நீ விரும்பிய இடத்திற்கு செல். நான் மகிழ்ச்சியாக அர்ஜுனனிடம் செல்வேன்" என்றாள் {ஊர்வசி}.
அர்ஜுனன் ஊர்வசியை இந்த நடனத்தின் போது கண்டிருக்க வேண்டும் என்ற நினைக்கிறேன்.
------------------------------------------------------------------------
* அப்சரஸ்களின் நடனம்! - வனபர்வம் பகுதி 43இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.