Indra sent word to Yudhishthira | Vana Parva - Section 47 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
இந்திரலோகத்திற்கு லோமசர் வருகை; இந்திரன் லோமசருக்கு அர்ஜுனனைக் குறித்து விளக்குதல்; இந்திரன் யுதிஷ்டிரனிடம் சென்று அவனைப் பாதுகாக்குமாறு லோமசரைப் பணித்தல்; அர்ஜுனனும் யுதிஷ்டிரனைப் பாதுகாக்குமாறு லோமசரிடம் வேண்டுதல்; லோமசர் புறப்பாடு; காம்யக வனத்தில் யுதிஷ்டிரனை லோமசர் காண்பது...
வைசம்பாயனர் சொன்னார் "ஒரு நாள் பெருமுனிவரான லோமசர் {Rishi Lomasa}, தனது பயணங்களின் போது, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணும் விருப்பத்தோடு இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். அந்தப் பெருமுனிவர் {லோமசர்} தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகி, மரியாதையுடன் அவனை வணங்கினார். அப்போது பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} வாசவனின் {இந்திரனின்} பாதி ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். பல பெருமுனிவர்களால் வணங்கப்பட்ட அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {லோமசர்} சக்ரனின் {இந்திரனின்} விருப்பப்படி ஒரு அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட அந்த முனிவர், க்ஷத்திரியனான அர்ஜுனன் சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தை எப்படி அடைந்தான் என்று நினைத்தார். தேவர்களே வழிபடும் அந்த ஆசனத்தை அடைய அவன் {அர்ஜுனன்} தகுதி வாய்ந்த செயலைச் செய்திருக்கக் கூடும் என்றும், அவன் (தனது தவத்தகுதியால்) என்னென்ன உலகங்களை வென்றிருக்கக் கூடும் என்று தனது மனதில் நினைத்துக் கொண்டார்.
அந்த முனிவர் {லோமசர்} அப்படி தனது நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, விரித்திரனைக் கொன்றவனான சக்ரன் {இந்திரன்} இது குறித்து அறிந்தான். இவற்றை அறிந்த சச்சியின் தலைவன் {இந்திரன்}, லோமசரிடம் புன்னகையுடன், "ஓ பிரம்ம முனிவரே {பிரம்மரிஷியே}, உமது மனதில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து கேளும். மனிதர்களின் உலகில் பிறப்பெடுத்திருக்கும் இவர் மரணத்திற்குரிய {நர மனிதன்} அல்ல. ஓ பெரும் முனிவரே, இந்த பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட வீரன் {அர்ஜுனன்} குந்தியிடம் பிறந்த எனது மகனாவான். சில காரியங்களுக்காக ஆயுதங்களை அடையவே இவன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான். ஐயோ! உயர்ந்த தகுதிகள் கொண்ட பழங்காலத்து முனிவனான இவனை உம்மால் உணர முடியவில்லையா? ஓ அந்தணரே {லோமசரே}, இவன் யார் என்றும், எதற்காக என்னிடம் வந்திருக்கிறான் என்றும் சொல்கிறேன் கேளும். பழங்காலத்து அற்புதமான முனிவர்களான இருவர் உலகத்தில் நரன் என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்பட்டனர். ஓ அந்தணரே {லோமசரே}, அவர்கள் தான் ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்பதை அறிவீராக. நரன் என்றும் நாராயணன் என்றும் உலகத்தால் அறியப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனிவர்கள், குறிப்பிட்ட காரியத்தை சாதிப்பதற்காகவும், அறம்பெறவும் உலகத்தில் பிறந்திருக்கிறார்கள்.
சித்தர்களாலும், சாரணர்களாலும் வழிபடப்படும், பதரி {Vadari} என்ற பெயரால் உலகத்தால் அறியப்படும் அவர்களது புனிதமான ஆசிரமம், கங்கையின் மூலம் ஆரம்பிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. ஓ அந்தணரே {லோமசரே}, விஷ்ணு மற்றும் ஜிஷ்ணு ஆகியோரின் அந்த ஆசிரமத்தை சிறப்பு மிகுந்த முனிவர்களாலும், ஏன் தேவர்களாலும் கூட காண முடியாது. ஓ பிரம்ம முனிவரே, பிரகாசமிக்க அந்த முனிவர்கள் எனது விருப்பத்தின் பேரில், பூமி பாரத்தைக் குறைக்க வேண்டி, பெரும்பலத்துடன் பூமியில் பிறந்திருக்கிறார்கள். இதையும் தவிர்த்து, தாங்கள் பெற்ற வரத்தின் காரணமாக கர்வம் கொண்ட நிவாதகவசர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட அசுர வகையினர், எங்களுக்குக் காயம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பலத்தால் தற்பெருமை பேசிக்கொண்டு, தேவர்களை அழிக்க அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரத்தைப் பெற்ற பிறகு அவர்கள் தேவர்களை மதிப்பதில்லை. கடுமையும் பலமும் கொண்ட அந்த தானவர்கள் பாதாளப்பகுதியில் வசிக்கிறார்கள். அனைத்து தேவர்களும் ஒருங்கிணைந்தும் அவர்களுடன் போரிட இயலாத நிலையுள்ளது.
ஓ மேன்மையானவரே {லோமசரே}, மதுவைக் கொன்றவரும், உலகத்தில் கபிலர் என்று அறியப்பட்டவரும், சிறப்புமிக்க சகரனின் மகன்களைத் தனது பார்வையாலேயே எரித்தவருமான அந்த அருளப்பட்ட விஷ்ணுவை {கிருஷ்ணனை} அவர்கள் பலத்த சத்தங்களுடன் பூமியின் குடல் பகுதியில் சந்திக்கும்போது, ஓ அந்தணரே, அந்த வெல்லப்படமுடியாத ஹரி {கிருஷ்ணன்} எங்களுக்கு பெரும் சேவையைச் செய்யக் கூடும். அவரோ {கிருஷ்ணனோ} அல்லது பார்த்தனோ {அர்ஜுனனோ} அல்லது இருவரும் சேர்ந்தோ எங்களுக்கு சந்தேகமற பெரும் சேவையைச் செய்யக்கூடும். பெரும் ஏரியில் தனது பார்வையாலேயே நாகர்களைக் கொன்ற ஹரி {கிருஷ்ணன்}, நிச்சயம் நிவாதகவசர்கள் என்று அழைக்கப்படும் அசுரர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் கொல்லும் தகுதி படைத்தவரே. ஆனால், முக்கியமற்ற இந்தப் பணியில் மதுவைக் கொன்றவனை {மதுசூதனனான கிருஷ்ணனை} ஈடுபட வலியுறுத்த வேண்டியதில்லை. ஆற்றல்களின் குவியலாக பலம் பொருந்தியிருக்கும் அவர் {கிருஷ்ணன்}, தனது ஆற்றல்களைப் பெருக்கினால், இந்த முழு அண்டமும் எரிந்துவிடும்.
இந்த அர்ஜுனனும் அவர்களைக் கொல்லத் தகுதிவாய்ந்தவனே. இந்த வீரன் அவர்களைப் {நிவாதகவசர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பிச் செல்வான். நீர் எனது பரிந்துரையின் பேரில் பூமிக்கு செல்லும். காம்யக வனத்தில் வாழும் வீரம்மிகுந்த யுதிஷ்டிரனைக் காண்பீர். பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், ஆயுதக்கலையில் பரிசுத்தமான வலிமை கொள்ளாமல், ஆயுதங்களில் நிபுணத்துவம் அடையாமல், அவனால் {அர்ஜுனனால்} பீஷ்மரிடமோ, துரோணரிடமோ மற்றவர்களிடமோ போர்க்களத்தில் போராட முடியாது என்பதால், ஆயுதங்கள் அனைத்திலும் நிபுணத்துவம் அடைந்த பிறகு, அந்த வீரன் பூமி திரும்புவான் என்றும் போர்க்களத்தில் கலங்காத வீரம் கொண்ட அந்த அறம் சார்ந்த யுதிஷ்டிரனிடம், என் சார்பாகச் சொல்லும். மேலும் அந்தச் சிறப்புமிக்க யுதிஷ்டிரனிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட குடகேசன் {சுருள் முடி கொண்ட அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பிறகு, தெய்வீக நடனம், குரலிசை, கருவியிசை ஆகிய அறிவியல்களிலும் நிபுணத்துவம் அடைந்திருக்கிறான் என்பதையும் சொல்லும். மேலும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} "ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது தம்பிகளை அழைத்துக் கொண்டு பல்வேறு புண்ணியத்தலங்களைக் காண வேண்டும். பல்வேறு புனித நீர்நிலைகளில் நீராடி உங்கள் பாவங்களைத் தொலைத்தால், உங்கள் இதய நோய் கொஞ்சம் குறையும். பிறகு உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்ட பிறகு, உங்கள் நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்" என்றும் சொல்லும். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {லோமசரே}, பூமியில் உலவிக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை உமது தவச்சக்தியால் பாதுகாப்பதே உமக்குத் தகும். மலைகளில் கடினமான பகுதிகளிலும், முரட்டுத்தனமான புல்வெளிகளிலுமே கடும் ராட்சசர்கள் எப்போதும் வாழ்கிறார்கள். அந்த நரமாமிச உண்ணிகளிடம் இருந்து மன்னனைக் காப்பாற்றும்" என்று சொன்னான் {இந்திரன்}.
லோமசரிடம் மகேந்திரன் இப்படிப் பேசிய பிறகு, பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} அந்த முனிவரிடம் மரியாதையுடன், "எப்போதும் பாண்டுவின் மகனைக் {யுதிஷ்டிரனைக்} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உம்மால் காக்கப்படும் மன்னன் {யுதிஷ்டிரன்}, பல்வேறு புண்ணியத்தலங்களுக்குச் சென்று அந்தணர்களுக்குத் தானங்கள் செய்யட்டும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் பலம்வாய்ந்த தவசியான லோமசர் அவர்கள் இருவருக்கும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, காம்யக வனத்தை அடைய விரும்பி பூமிக்குக் கிளம்பினார். அந்த வனத்தை அடைந்து, அந்த எதிரிகளைக் கொல்பவனும் குந்தியின் மகனுமான நீதிமானான யுதிஷ்டிரனைத் தவசிகளும், அவனது தம்பிகளும் சூழக் கண்டார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.