The women sprang up seeing Nala | Vana Parva - Section 55 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தேவர்கள் நளனை தமயந்தியிடம் தூது அனுப்புதல்; நளனைக் கண்டு ஆச்சரியமடைந்த பெண்கள் எழும்புதல்; தமயந்தி நளன் உரையாடல்...
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நளன் தேவர்களிடம், "நான் அதைச் செய்வேன்" என்று வாக்குறுதி கொடுத்தான். அதன் பிறகு அவர்கள் முன் கை கட்டியபடி அணுகி, "நீங்கள் யார்? என்னைத் தூதுவனாகக் கொள்ள விரும்பும் நபர் யார்? மேலும், இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? உண்மையாக எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நிஷாத மன்னன் {நளன்} இப்படிப் பேசியதும் மகவத் {இந்திரன்} அவனிடம் {நளனிடம்}, "நாங்கள் தமயந்திக்காக இங்கு வந்திருக்கும் இறவாதவர்கள் {Immortals தேவர்கள்} என்று அறிந்து கொள். நான் இந்திரன், இவன் அக்னி, இவன் நீர்த்தேவன் {வருணன்}, ஓ மன்னா {நளனே}, இவனே மனிதர்களின் உடலை அழிக்கும் யமன். எங்கள் வருகையை தமயந்தியிடம் "உலகப் பாதுகாவலர்களான, பெரும் இந்திரனும் மற்றவர்களும் {உனது} சுயம்வரத்தைக்காண விரும்பி சபைக்கு வர இருக்கின்றனர். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகின்றனர். ஆகையால், அவர்களில் ஒருவரை நீ தலைவனாகக் கொள்" என்ற வார்த்தைகளில் சொல்" என்றான் {இந்திரன்}.
சக்ரனால் {இந்திரனால்} இப்படிச்சொல்லப்பட்ட நளன் கூப்பிய கரங்களுடன், "நானும் அதே காரியத்தை நாடியே வந்திருக்கிறேன். என்னை நீங்கள் (தூது) அனுப்புவது தகாது. ஒருவன் தானே காதலின் ஆளுகையில் இருக்கும் போது, அவன் ஒரு {அந்த} மங்கையிடம் மற்றவர்களுக்காக எப்படி பரிந்து பேச முடியும்? ஆகையால் தேவர்களே என்னை விட்டுவிடுங்கள்" என்றான். இருப்பினும் தேவர்கள், "ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே}, "நான் செய்வேன்" என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் படி நடக்க ஏன் இப்போது மறுக்கிறாய்? ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே} காலந்தாழ்த்தாமல் இதைக் குறித்து எங்களுக்குச் சொல்" என்றனர்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "தேவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்}, "அந்த மாளிகைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் நுழைய முடியும் என்று எவ்வாறு நான் நம்புவது?" என்று மீண்டும் பேசினான். அதற்கு இந்திரன், "உன்னால் நுழைய முடியும்" என்று மறுமொழி கூறினான். "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நளன் அதன் பிறகு தமயந்தியின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே வந்து, அழகால் பிரகாசிப்பவளும், அங்கங்கள் யாவும் உரிய உருவத்தில் அற்புதமாகக் கொண்டவளும், மிக மென்மையான உறுப்புகள் கொண்டவளும், கொடியிடையும், அழகான கண்களும் கொண்டவளான விதரப்ப மன்னனின் மகள் {தமயந்தி}, பணிப்பெண்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். தனது சுய பிரகாசத்தால், சந்திரனின் ஒளியைப் பழிப்பது போல அவள் தெரிந்தாள். இனிய புன்னகை கொண்ட அந்த மங்கையை அப்படியே அவன் பார்த்துக் கொண்டிருந்ததால் நளனின் காதல் அதிகரித்தது. ஆனால் உண்மையைக் காக்க விரும்பிய அவன், தனது ஆசையை அடக்கிக் கொண்டான்.
பிரகாசமிக்க அந்த நிஷாதனைப் {நளனைப்} பார்வையில் கண்டதும், பெண்களின் முதன்மையான அவர்கள், ஆச்சரியமடைந்து, தங்கள் இருக்கைகளில் இருந்து ஊற்றென எழும்பினர். (அவனைக் {நளனைக்} கண்ட பார்வையில்) ஆச்சரியத்தால் நிறைந்து, இதய மகிழ்ச்சியோடு நளனைப் புகழ்ந்தனர். எதையும் பேசாமல் அவர்கள் "ஓ, என்ன அலங்காரம்? ஓ, இந்த உயர் ஆன்மா கொண்டவனுக்கு என்ன கனிவு? யாரிவன்? தேவனா? யக்ஷனா? அல்லது கந்தர்வனா?" என்று மானசீகமாக நினைத்து அவனுக்கு மரியாதை செலுத்தினர். அந்தப் பெண்களில் முதன்மையானவர்கள் நளனின் பிரகாசத்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட நாணத்தாலும் ஆச்சரியத்துடன் கூடிய குழப்பமடைந்து, அவனை அணுகிப் பேசாதிருந்தனர்.
தமயந்தியும் வியப்பால் தாக்கப்பட்டிருந்தாலும், போர்க்குணமுள்ள நளன் புன்னகைத்தவாறே தானும் புன்னகைத்துக் கொண்டு, "ஓ களங்கமற்ற குணங்கள் கொண்டவரே, காதலை எனக்குத் தூண்டி விட வந்திருக்கும் நீர் யார்? ஓ பாவமற்றவரே, ஓ தேவ உரு கொண்ட வீரரே, இங்கு வந்திருக்கும் நீர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன். மேலும், நீர் ஏன் இங்கு வந்திருக்கிறீர்? எனது மாளிகை நன்கு பாதுகாக்கப்பட்டது என்றும் மன்னரின் ஆணைகள் கடுமையானவை என்று கருதி வரும் வேளையில், நீர் எப்படி யாரும் அறியாமல் இருக்கிறீர்?" என்று கேட்டாள்.
விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், "ஓ அழகான மங்கையே, எனது பெயர் நளன் என்பதை அறிந்து கொள். நான் இங்கு தேவர்களின் தூதுவனாக வந்திருக்கிறேன். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகிறார்கள். ஓ அழகான மங்கையே, அவர்களில் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு. அவர்களின் சக்தியாலேயே நான் யாரும் பார்க்காதவாறு நான் இங்கு நுழைந்தேன். இதன் காரணமாகவே எனது வழியில் என்னை யாரும் காணவில்லை அல்லது எனது நுழைவைத் தடுக்கவில்லை. ஓ கனிவானவளே {தமயந்தி}, இந்த காரியத்துக்காகவே நான் தேவர்களில் முதன்மையானவர்களால் அனுப்பப்பட்டேன். ஓ பேறு பெற்றவளே, இதைக் கேட்டு, உனக்கு மகிழ்ச்சி தருவதைச் செய்" என்றான் {நளன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.