திரு.ஜெயமோகன் அவர்களின் மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் முதல் பகுதி வெளி வந்துவிட்டது.
காலையில் எழுந்ததும் அவரது வலைத்தளத்தில் தான் விழித்தேன். கணினியை எழுப்பும்போதே எப்படி ஆரம்பித்திருப்பாரோ, கதைக்களம் எவ்வாறிருக்கும், எந்தக் கதையில் இருந்து ஆரம்பித்திருப்பார். எதில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். தொடக்கம் அருமையாக இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே சுவிட்சில் இருந்து கை எடுத்தேன்.
கணினி எழுந்ததுமே, நெருப்பு நரியின் இலட்சனையைத் தேடினேன். அது தினந்தோறும் செய்வதுதான் என்றாலும் இன்றைக்கு அதைச் செய்ய அதிக நேரம் பிடித்ததாக உணர்ந்தேன். நெருப்பு நரியுடன் ஜெயமோகனின் வெண்முரசு பக்கமும் எழுந்தது.
எடுத்தவுடன் பரபரவென்று பதிவின் கீழே சென்றேன். படம் இருந்தது. அற்புதமான படம். ஆனால் எதற்காக இப்படி ஒரு படம். சரி படிக்காமல் அனுமானிக்கமுடியாது என்று கருதி வெண்முரசின் முதல் பகுதியான வேள்வி முகத்தில் பயணித்தேன். "வேள்வி முகம்" இந்தத் தலைப்பில் தான் எவ்வளவு பொருள்.
மானச தேவி என்ற சொல்லைப் படித்ததுமே, இது சரியான ஆரம்பம் ஆஸ்தீகரின் கதையைத் தொடுகிறார் ஜெயமோகன் என்று ஊகித்துவிட்டேன். ஆனால் அந்த ஆஸ்தீகர், ஜரத்காருவின் கதையைச் சொல்வதற்கு முன் அவர் தரும் வர்ணனை நம்மை அமானுஷ்ய உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இந்த ஒரு பதிவை வைத்துக் கொண்டே ஹாலிவுட்டில் ஒரு திரைப்படமே எடுத்துவிடலாம். மேம்போக்காகப் பார்ப்பதற்கு இது மிகைப்பட்ட பாராட்டாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து அவதானித்துப் படித்தால் அதன் பிரம்மாண்டமும், இந்த ஒருபதிவில் அவர் எவ்வளவு நீண்ட காலம் நம்மைப் பயணிக்க வைக்கிறார் என்பதும் புரியும்.
இந்திய இலக்கியங்களில் உலக உயிரினங்களின் தோற்றம் ஒரு பெரும் முட்டையில் இருந்து உருவெடுத்ததாகச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதையே உருவமாக, ஆதி இருளில் கிடந்த பெரும் கண்ணில்லா பாம்பு, தனது வாலைத் தனது வாயில் கவ்வி சுருண்டு கிடந்தது என்கிறார் திரு.ஜெயமோகன். என்ன அற்புதமான உருவகம்?
மேலும் நாகம் என்பதற்கு பொருள், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதையும் கதையுனேயே இணைக்கிறார். ஒரு குழந்தைக்கு {ஆஸ்தீகர்} கதை சொல்லும் தாய் {மானச தேவி}, நாகம் என்றால் "நான் இல்லை" என்ற பொருளைச் சொல்வதாகச் சொல்கிறார். தட்சன் என்ற பெயருக்கு இமையாத கண்கள் கொண்டவன் என்ற பொருளாம். மரீதி என்ற பெயருக்கு வெண்ணிற ஒளி என்ற பொருளையும் சொல்கிறார். மேலும் முடிவில்லாத காமமே தட்சன், முடிவில்லாத வளமே வீரிணி என்றும் சொல்கிறார். ஒரே பதிவில் நமக்கு எவ்வளவு விவரங்கள் கிடைக்கின்றன பாருங்கள். இவற்றை முழு மஹாபாரதத்தைப் படித்தாலும் பெற முடியாது. ஆனால் மகாபாரதத்தை சிறிதாவது அறியாதவர்களுக்கு நேரடியாக வெண்முரசைப் படித்தால் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். ஆனால் அதுவும் ஒரு திரில்லிங்கான சுகானுபவமாகத்தான் இருக்கும்.
ஆதிநாகம் தான் கண்ணில்லாதது என்று ஆரம்பிக்கிறாரே, பிறகு அதற்கு கண்கள் எப்படி உருவாகின. அதற்கு எவ்வளவு அழகான விளக்கத்தைத் தருகிறார் பாருங்கள். "கண்ணில்லா நாகத்திற்கு அகத்திலிருந்து இச்சை பிறந்து இரண்டு கண்களாக அதன் முகத்தில் திறந்தது" என்கிறார்
காலம் உருவான கதையை "இரு நாகங்கள் தழுவித்தழுவி இறுகிய பின் மேலும் தழுவும் பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்த போது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது." என்கிறார். இதற்கு முன் இதுபோன்ற ஒரு தத்துவ வர்ணனையை நான் படித்ததில்லை.
"நீங்களும் நானும் நாம் ஒருபோதும் அறியமுடியாத காலநாடகத்தின் இரு சிறு துளிகள் மட்டுமே" என்று தன் கணவரிடம் பேசிய மானச தேவி, அதைத் தனது குழந்தையிடம் {ஆஸ்தீகரிடம்} சொல்கிறாள்.
மானச தேவியின் மகனை ஆயுள் இல்லாதவனாக சபிக்கிறார் ஜரத்காரு, அதைத் தன் மகனிடம் சொல்லும் தாய் எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள், "உனக்கு முதுமை இல்லை. உன் தந்தை உனக்களித்த வரமாகவே அதைக்கொள். உன்னை முதியவனாக பார்க்கும் நிலை எனக்கும் இல்லை. அது என் காதலுக்கு அவர் அளித்த கொடை என்றே எண்ணுகிறேன்." என்று சொல்கிறாள்.
ஓவியர் திரு.ஷண்முகவேல் அவர்களின் இந்தப் பதிவுக்கான ஓவியத்தை வார்த்தைகளால் பாராட்டுவது தகாது. ஆசிரியரின் உள்ளக்காட்சிகளைத் தன் மணக்கண்ணில், கண்டு அதைத் தூரிகையில் வடித்து, கணினியில் மெருக்கேற்றி பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வெண்முரசின் அனைத்துப் பதிவுகளுக்கும் இது போன்ற ஒரு படம் இருந்தால் மிக அருமையாக இருக்கும் என்று மனம் எதிர்பார்க்கிறது.
மொத்தத்தில் முதல் பதிவே அற்புதமாக வந்திருக்கிறது.
பி.கு.: முதல்பகுதி தேவிபாகவதத்துக்கும் கடன்பட்டது. வயக்கவீட்டு விசாலாட்சியம்மாவின் குரலில் இருந்து தொடங்கியிருக்கிறேன் என்று திரு.ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
பி.கு.: முதல்பகுதி தேவிபாகவதத்துக்கும் கடன்பட்டது. வயக்கவீட்டு விசாலாட்சியம்மாவின் குரலில் இருந்து தொடங்கியிருக்கிறேன் என்று திரு.ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
திரு.ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் முதல் பகுதியான வேள்வி முகத்தைப் படிப்பதற்கு முன் முழுமஹாபாரதத்தின் கீழ்க்கண்ட சுட்டிகளில் இருக்கும் பதிவுகளைப் படித்த பிறகு படிக்க ஆரம்பிப்பது, அப்பதிவை எளிதாக அணுக உதவியாக இருக்கும்
1. ஜரத்காருவும் யயவரர்களும் | ஆதிபர்வம் - பகுதி 13 - http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section13.html
2. வாசுகியின் தங்கை பெயரும் ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 14 - http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section14.html
3. பெண் பாம்பு ஜரத்காருவை மணந்த ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 15 - http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section15.html
4. வாசுகியின் கவலை |ஆதிபர்வம் - பகுதி 39 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section39.html
5. புத்திரப்பேறு குறித்து யயவரர்கள் | ஆதிபர்வம் - பகுதி 45 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section45.html
6. ஜரத்காரு கேட்ட பிச்சை | ஆதிபர்வம் - பகுதி 46 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section46.html
7. மனைவியைப் பிரிந்த ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 47 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section47.html
8. ஆஸ்தீகர் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 48 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section48.html
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!