I will die for thy sake | Vana Parva - Section 56 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளனிடம் தமயந்தி, தான் அவனை விரும்புவதாகச் சொல்வது; நளன் தேவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு தமயந்தியிடம் சொல்வது; தமயந்தி பழியற்ற ஒரு வழியைச் சொல்வது; தமயந்தியைச் சந்தித்த செய்தியை தேவர்களிடம் நளன் கூறுவது...
பிருகதஸ்வர் சொன்னார், "தேவர்களை வணங்கிய தமயந்தி, இப்படிச் சொன்ன நளனிடம் புன்னகையுடன், "ஓ மன்னா {நளரே}, உரிய முறையில் என்னிடம் அன்பு கொண்டு {காதல் கொண்டு}, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுவீராக. நானும், எனக்கு உரியதாக இருக்கும் எல்லா செல்வங்களும் உமதே. ஓ மேன்மையானவரே, முழு நம்பிக்கையுடன் கூடிய உமது அன்பை {காதலை} எனக்கு அருளும். ஓ மன்னா, அன்னங்கள் பேசிய மொழி என்னை எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ வீரரே, உமக்காகவே நான் இந்த மன்னர்களின் கூடுகையைக் கூட்டியிருக்கிறேன். ஓ உரிய மரியாதை தருபவரே, உம்மை வணங்கும் என்னை நீர் கைவிட்டீரென்றால், உமக்காகவே நான் விஷத்தையோ, நெருப்பையோ, நீரையோ, {தூக்கு} கயிறையோ நாடுவேன்" என்றாள் {தமயந்தி}.
விதரப்ப மன்னனின் {பீமனின்} மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், அவளிடம், "லோகபாலர்கள் இருக்கும்போது, நீ மனிதனையா தேர்ந்தெடுப்பாய்? உனது இதயத்தை அந்த உயர் ஆன்ம தலைவர்களிடம், உலகத்தை உண்டாக்கிவர்களிடம் திருப்பு. அவர்களின் பாத தூசுக்குக்கூட நான் சமானமாக மாட்டேன். இறப்பைக் கொண்ட மனிதன் {mortal}, தேவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தினால் மரணத்தைச் சந்திப்பான். ஓ களங்கமற்ற உறுப்புகளைக் கொண்டவளே {தமயந்தி}, என்னைக் காப்பாற்று! எல்லாவற்றையும் விஞ்சும் தேவர்களைத் தேர்ந்தெடு. தேவர்களை ஏற்பதால், நீ கறையில்லா ஆடைகளையும், பலவண்ண தெய்வீக மாலைகளையும், அற்புதமான ஆபரணங்களையும் அனுபவிப்பாய். பூமி முழுவதையும் சுருக்கி, திரும்பவும் விழுங்குகின்ற தேவர்களில் தலைவனான ஹுதாசனனை {அக்னியை} எந்தப் பெண்தான் தனது தலைனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தனது கதாயுத்தின் அசைவால், அனைத்து உயிரினங்களையும் அறத்தின் பாதையில் நடத்துபவனை {யமனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தேவர்களுக்குத் தலைவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களைத் தண்டிப்பவனும், அறம்சார்ந்த உயர் ஆன்ம மகேந்திரனை {இந்திரனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? அல்லது, உனது இதயத்தில் லோகபாலர்களில் ஒருவனான வருணனைத் தேர்ந்தெடுத்தால், தயக்கமின்றி அதைச் செய். இதை நட்பின் அறிவுரையாக ஏற்றுக் கொள்" என்றான் {நளன்}.
இப்படி அந்த நிஷாதனால் {நளனால்} சொல்லப்பட்ட தமயந்தி, கண்ணீரால் கண்கள் நீராட, துயரத்துடன் நளனிடம், "ஓ பூமியின் தலைவா, அனைத்து தேவர்களையும் வணங்கி, நான் உம்மை என் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறேன். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றாள். தேவர்களின் தூதுவனாக வந்த அந்த மன்னன், கரங்கள் கூப்பி நடுங்கிக் கொண்டிருந்த தமயந்தியிடம், "ஓ இனியவளே, நீ விரும்பியவாறே செய். ஓ அருளப்பட்டவளே, நான் தேவர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, மற்றவர் காரியமாக வந்து, எனது சொந்த நலனை நான் எப்படி நாட முடியும்? அறம் சார்ந்து எனது நலனை நாட முடியும் என்றால் நான் நாடுவேன். ஓ அழகானவளே, நீயும் அதன்படியே செய்" என்றான் {நளன்}.
பிறகு, பிரகாசமிக்க புன்னகை கொண்ட தமயந்தி, மன்னன் நளனிடம் கண்ணீரால் தடைபற்ற குரலுடன் மெதுவாக, "ஓ மனிதர்களின் தலைவா, நான் பழியற்ற வழியொன்றைக் காண்கிறேன். அப்படிச் செய்தால் எந்தப் பாவமும் உம்மை அணுகாது. ஓ மன்னா {நளனே}, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, இந்திரனின் தலைமையில் வந்துள்ள அனைத்து தேவர்களுடன் நீரும் சுயம்வரத்திற்கு வாரும். ஓ ஏகாதிபதி {நளரே}, அங்கே, அந்த லோகபாலர்களின் முன்னிலையில், ஓ மனிதர்களில் புலியே, நான் உம்மைத் தேர்ந்தெடுப்பேன். அப்போது உம்மீது எந்தப் பழியும் ஏற்படாது" என்றாள்.
ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் நளன், தேவர்கள் ஒன்றாகத் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும் தேவர்களை அவன் அணுகுவதைக் கண்ட லோகபாலர்கள், ஆர்வத்துடன் என்ன நடந்தது என்பதை விசாரிக்க, அவனிடம், "ஓ மன்னா {நளா}, இனிய புன்னகை கொண்ட தமயந்தியைக் கண்டாயா? அவள் எங்களைக் குறித்து என்ன சொன்னாள்? ஓ பாவமற்ற ஏகாதிபதியே {நளா}, எங்களுக்கு அனைத்தையும் சொல்" என்று கேட்டனர்.
நளன், "உங்களால் கட்டளையிடப்பட்ட நான், கோலைக் {தடியைக்} கைகளில் தாங்கி, மூத்த {அனுபவம் வாய்ந்த} காவலர்களால் காக்கப்பட்ட, உயர்ந்த நுழைவாயில்களைக் கொண்ட தமயந்தியின் அரண்மனைக்குள் நுழைந்தேன். உங்களது சக்தியின் தன்மையால், நான் அங்கு நுழைந்த போது, அந்த இளவரசியைத் {தமயந்தியைத்} தவிர யாரும் என்னைக் காண வில்லை. நான் அவளது பணிப்பெண்களைக் கண்டேன். அவர்களும் என்னைக் கண்டார்கள். ஓ மேன்மையான தேவர்களே, மேலும், என்னைக்கண்டதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். நான் அவளிடம் பேசிய போது, அந்த அழகான முகம் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஓ தேவர்களில் சிறந்தவர்களே, அவளது விருப்பத்தை என் மேல் நிலைக்க வைத்து என்னை {அவளுக்கான துணையாகத்} தேர்ந்தெடுத்தாள். அந்த மங்கை {தமயந்தி}, "ஓ மனிதர்களில் புலியே, தேவர்கள் உம்முடன் சுயம்வரத்திற்கு வரட்டும். அவர்களது முன்னிலையில் நாம் உம்மைத் தேர்ந்தெடுக்கிறேன். இதனால், ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {நளரே}, உம்மை எந்தப் பழியும் சேராது" என்றாள். தேவர்களே, இதுவே நான் சொன்னவாறு அங்கு நடந்தது. தேவர்களில் முதன்மையானவர்களே {லோகபாலர்களே}, கடைசியாக {இனி} அனைத்தும் உங்களைச் சார்ந்தே இருக்கிறது" என்றான் {நளன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.