Damayanti chose Nala! | Vana Parva - Section 57 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தியின் சுயம்வரம் நடப்பது; நளனைப் போன்ற உருவத்துடன் லோகபாலர்கள் நால்வரும் நளனுடன் சேர்ந்து நிற்பது; யார் நளன் என்று தமயந்தி குழம்புவது; நளனை வெளிக்காட்டும்படி தேவர்களிடம் தமயந்தி மானசீகமாக வேண்டுவது; சில குறிப்புகளைக் கொண்டு உண்மையான நளனை தமயந்தி தேர்ந்தெடுப்பது...
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "புனிதமான சந்திர நாளில், புண்ணியமான காலத்தில், நன்மை தரும் நேரம் வந்த போது, மன்னன் பீமன், மன்னர்களை சுயம்வரத்திற்கு அழைத்தான். இதைக் கேள்விப்பட்ட அனைத்து பூமியின் தலைவர்களும் காதலால் தாக்குண்டு, தமயந்தியை (அடைய) விரும்பி அங்கே விரைவாக வந்தனர். அந்த ஏகாதிபதிகள் அனைவரும், தங்கத் தூண்களாலும், உயர்ந்த நுழைவு வாயில் கொண்ட அந்த அரைவட்டமான சபைக்குள் கடும் மலைகளில் நுழையும் பெரும் பலம் வாய்ந்த சிங்கங்கள் போல நுழைந்தார்கள். வாசனையான மாலைகளாலும், பளபளப்பாக்கப்பட்ட காது வளையங்களாலும், நகைகளாலும் நன்கு தங்களை அலங்கரித்துக் கொண்ட அந்த பூமியின் தலைவர்கள் அங்கிருந்த பல இருக்கைகளில் தங்கள் தங்களுக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
புனிதமான அந்த மன்னர்களின் சபை, மனிதர்களில் புலிகளால் நிரம்பி, நாகர்களால் மொய்க்கப்பட்ட போகவதி {நகரத்தைப்} போல அல்லது புலிகளால் நிரம்பிய பெரும் மலைக்குகை போல இருந்தது. அவர்களது கரங்கள் பலமானவையாக இரும்பு கதாயுதம் போல நல்ல உருவத்தில், அருளுடன் ஐந்து தலை நாகங்களைப் போல காட்சி அளித்தது. அழகான கேசம், அழகான நாசி, விழி, புருவம் ஆகிய அருளுடன் இருந்த அந்த மன்னர்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல மின்னினர்.
பிறகு, (நேரம் வந்ததும்), அழகான முகத்தைக் கொண்ட தமயந்தி, தனது பிரகாசத்தால் அங்கிருந்த இளவரசர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டு சபைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்த அந்த சிறப்புவாய்ந்த ஏகாதிபதிகளின் பார்வை, அவளது எந்த அங்கத்தில் முதலில் விழுந்ததோ, அந்த அங்கத்திலேயே {பார்வை} நிலைத்து, சற்றும் அசையாமல் இருந்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதிகளின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, பீமனின் மகள் {தமயந்தி} ஒரே தோற்றம் கொண்ட ஐந்து பேரைக் கண்டாள். உருவத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அங்கு அமர்ந்திருந்த அவர்களைக் கண்டு, மனதில் சந்தேகம் கொண்டாள். அவளால் {தமயந்தியால்} அவர்களில் யார் மன்னன் நளன் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. (அவர்களில்) அவள் யாரைக் கண்டாலும், அவனை நிஷாத மன்னன் {நளன்} என்றே கருதினாள். இதனால் துயரம் கொண்ட அந்த அழகானவள் தனக்குள், "ஓ, எப்படி நான் தேவர்களை வேறுபடுத்திப் பார்ப்பேன்? எப்படி அரசன் நளனைக் கண்டுகொள்வேன்?" என்று நினைத்தாள்.
இப்படிச் சிந்தித்த விதரப்பனின் {மன்னன் பீமனின்} மகள் {தமயந்தி}, துயரத்தால் நிறைந்தாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களின் அடையாளங்களைத் தான் கேள்விப்பட்டவாறு நினைத்துப் பார்த்து, தனக்குள், "முதியவர்களிடம் இருந்து நாம் கேள்விப்பட்ட தேவர்களின் குணங்கள் இப்போது இந்தப் பூமியில் இங்கே இருக்கும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தவில்லையே" என்று நினைத்தாள். இந்தக் காரியத்தைக் குறித்து தனது மனதில் குழப்பிக் கொண்டு, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து, அந்தத் தேவர்களின் பாதுகாப்பையே நாடுவது என்று தீர்மானித்தாள். மனதாலும் சொல்லாலும் அவர்களை வணங்கி, கரங்கள் கூப்பி, நடுக்கத்துடன் அவர்களிடம், "அன்னங்களின் பேச்சைக் கேட்டதில் இருந்து, நான் நிஷாதர்களின் மன்னனை {நளனை} எனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தேன். ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். மனதாலோ சொல்லாலோ நான் அவரை விட்டு நான் வழி தவறியதில்லை. ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். தேவர்களே நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} எனக்கு தலைவராக விதித்திருப்பதால், ஓ, உண்மையின் பொருட்டு, அவர்கள் {தேவர்கள்{ அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். நளருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டும், உண்மையின் பொருட்டும், நான் இந்த நோன்பை மேற்கொள்வதால், ஓ, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். ஓ, உலகங்களின் அந்த மேன்மையான பாதுகாவலர்கள், அந்த நீதிமானான மன்னனை நான் அறிந்து கொள்ளும் பொருட்டு, தங்கள் உண்மை உருவை அடையட்டும்" என்றாள் {தமயந்தி}.
தமயந்தியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டும், நிஷாதர்களின் மன்னன் {நளனின்} மேல் தீவிர காதல் கொண்ட அவளது நிலைத்த தீர்மானத்தை உறுதி செய்து கொண்டும், அவளது இதயசுத்தத்தையும், நளன் மீது கொண்ட பாசத்தையும் கருதிப் பார்த்து, தங்கள் தங்கள் பண்புகளைத் தங்களால் இயன்ற வரை ஏற்ற அந்த தேவர்கள் தாங்கள் நினைத்ததைச் செய்தனர். அதன் பிறகு, அவள் {தமயந்தி}, தேவர்கள் வியர்வையற்றவர்களாக, கண் சிமிட்டாதவர்களாக, வாடா மாலைகள் தரித்தவர்களாக, தூசு கறை படியாதவர்களாக, தரையைத் தொடாமல் நிற்பதைக் கண்டாள். நிஷாதன் {நளன்}, தனது நிழல் தெரியும்படி, வாடிய மாலையுடன், தூசால் கறைபட்டு, வேர்வையுடன், பூமியில் கால் பதித்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டு நின்றான்.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அறம் சார்ந்த நளனையும் கடந்து வந்த பீமனின் மகள் {தமயந்தி}, தனக்கு உண்மையான நிஷாதனைத் {நளனைத்} தேர்ந்தெடுத்தாள். அந்த அகன்ற விழி கொண்டக் காரிகை. நாணத்துடன், அவனது ஆடையின் நுனியைப் பற்றி, மிதமிஞ்சிய அருள் கொண்ட அந்த மலர் மாலையை அவனது {நளனின்} கழுத்தில் அணிவித்தாள். அந்த அழகன நிறம் கொண்ட மங்கை {தமயந்தி} நளனைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தபோது, தீடீரென வியப்புடன், "ஓ" என்றும் "ஐயோ!" என்றும் மன்னர்கள் வெடித்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களும் பெரும் முனிவர்களும் வியப்படைந்து, "அற்புதம்! அற்புதம்!" என்று மன்னனைப் {நளனைப்} பாராட்டினர்.
ஓ கௌரவனே {யுதிஷ்டிரா}, வீரசேனின் அரசமகன், மகிழ்ச்சியால் இதயம் நிறைந்து, அழகான தமயந்தியிடம், "ஓ அருளப்பட்டவளே, தேவர்களின் முன்னிலையில் மனிதனான {இறந்து போகக்கூடிய mortal} என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உனது உத்தரவுக்குக் கீழ்ப்படியும் கணவனாக இருப்பேன் என்பதை அறிந்து கொள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, என்னுடலில் எனது உயிர் உள்ள வரை, நான் உனதாகவே, உனக்கு மட்டுமே ஆனவனாக இருப்பேன் என்று உண்மையாகச் சொல்கிறேன்." என்று சொல்லி ஆறுதலளித்தான். தமயந்தியும், குவிந்த கரங்களுடன், அதே போன்ற வார்த்தைகளில் மரியாதை செலுத்தினாள்.
அக்னியையும், மற்ற தேவர்களையும் கண்ட அந்த மகிழ்ச்சி நிறைந்த ஜோடி, மானசீகமாக அவர்களின் பாதுகாப்பை வேண்டினர். பீமனின் மகள் {தமயந்தி}, நிஷாதனைத் {நளனைத்} தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த பின்னர், பெரும் பிரகாசம் கொண்ட லோகபாலர்கள் திருப்தியான இதயத்துடன், நளனுக்கு எட்டு {8} வரங்களை அளித்தனர். சச்சியின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நளனுக்கு வேள்விகளில் தனது {இந்திரனின்} தேவ தன்மையைக் காணவும், அருள் உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். ஹுதாசனன் {அக்னி}, அந்த நிஷாதன் {நளன்} விரும்பியபோதெல்லாம் தான் {அக்னி} அவனுக்குக் காட்சியளிக்கவும், தன்னைப் போன்ற பிரகாசத்தை உடைய உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். யமன், அவனுக்கு உணவில் நுட்பமான சுவையையும் {நளன் நல்ல சமையற்கலைஞன்}, மேலான அறநிலையையும் வரங்களாக அளித்தான். நீர்த்தலைவன் {வருணன்}, நளனுக்கு, விரும்பிய போது தன்னைக் காணவும், தெய்வீக நறுமணம் கொண்ட மலர்மாலைகளையும் வரங்களாகக் கொடுத்தான். இப்படியே அவர்களில் {லோகபாலர்களில்} ஒவ்வொருவரும் இரு வரங்களை அளித்தனர். இந்த வரங்களை அளித்த தேவர்கள் சொர்க்கத்திற்குத் திரும்பினர். தமயந்தி நளனைத் தேர்ந்தெடுப்பதைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களும், மகிழ்ச்சியுடன் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.
அந்தப் பலம் வாய்ந்த ஏகாதிபதிகள் சென்றதும், உயர் ஆன்ம பீமன், மிகவும் திருப்தியடைந்து, நளன் மற்றும் தமயந்தியின் திருமணத்தைக் கொண்டாடினான். தான் விரும்பிய காலம் வரை அங்கு தங்கிய மனிதர்களில் சிறந்த அந்த நிஷாதன் {நளன்}, பீமனின் அனுமதியைப் பெற்று தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். பெண்களில் முத்தை {தமயந்தியை} அடைந்த அந்த அறம்சார்ந்த மன்னன், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலனையும் விரித்திரனையும் கொன்றவன் {இந்திரன்} சச்சியுடன் இருப்பது போல, தனது நாட்களை மகிழ்ச்சிகரமாகக் கடத்தினான். சூரியனைப் போன்ற புகழுடன் இருந்த அந்த மன்னன் {நளன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது குடிமக்களை நீதியுடன் ஆண்டு, அவர்களுக்கு பெரும் திருப்தியை அளித்தான். *நகுஷனின் மகனான யயாதியைப் போன்ற அந்த புத்திசாலி ஏகாதிபதி {நளன்}, அந்தணர்களுக்கு ஏராளமான பரிசுகளுடன் குதிரை வேள்வியையும், மற்ற பல வேள்விகளையும் கொண்டாடினான்.
தமயந்தியுடன் காதலுடன் கானகங்களிலும், தோப்புகளிலும் தேவர்களைப் போல விளையாடினான். அந்த உயர்ந்த மனம் கொண்ட மன்னன் {நளன்}, தமயந்தியிடம் இந்திரசேனன் என்ற மகனையும், இந்திரசேனை என்ற மகளையும் பெற்றான். வேள்விகள் கொண்டாடி, (தமயந்தியுடன்) விளையாடி, இருந்த அந்த மன்னன், செல்வங்களுடன் கூடிய பூமியை ஆண்டான்.
*************************************************************************
*நகுஷனின் மகனான யயாதியைப்..............
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்....
தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 75
உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன் | ஆதிபர்வம் - பகுதி 76
தேவயானியை ஏற்க மறுத்த கசன் - பகுதி 77
தேவயானியின் கோபம் | ஆதிபர்வம் - பகுதி 78
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79
தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80
யயாதியின் திருமணம் | ஆதிபர்வம் - பகுதி 81
யயாதியை ஏற்கவைத்த சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 82
யயாதியைத் தாக்கிய பலவீனம் | ஆதிபர்வம் - பகுதி 83
யயாதியின் முதுமையை ஏற்ற புரு | ஆதிபர்வம் - பகுதி 84
தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு | ஆதிபர்வம் - பகுதி 85
யயாதியின் கடுந்தவம் | ஆதிபர்வம் - பகுதி 86
இந்திரன் யயாதி பேச்சு | ஆதிபர்வம் - பகுதி 87
அஷ்டகனை அடைந்த யயாதி | ஆதிபர்வம் - பகுதி 88
யயாதி கண்ட உலகங்கள்| ஆதிபர்வம் - பகுதி 89
மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது?| ஆதிபர்வம் - பகுதி 90
வாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் - பகுதி 91
பரிசுகளை ஏன் ஏற்கக்கூடாது? | ஆதிபர்வம் - பகுதி 92
மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான் யயாதி | ஆதிபர்வம் - பகுதி 93
................வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காக சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு, பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.