Children were sent toVidarbha | Vana Parva - Section 60 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் சூதில் அனைத்தையும் இழந்துவிடுவான் என்று எதிர்பார்த்த தமயந்தி, தேரோட்டியை அழைத்து தனது பிள்ளைகளை விதரப்ப்ப நாட்டில் இருக்கும் தனது தந்தை பீமனிடம் அழைத்துச் செல்ல வேண்டுவது. தேரோட்டியும் அவ்வாறே செய்வது...
பிருகதஸ்வர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா} பீமனின் மகளான கலக்கமற்ற தமயந்தி, நேர்மையான மன்னன் {நளன்} பகடையால் உணர்விழந்திருப்பதைக் கண்டு, அச்சத்திலும் துயரத்திலும் மூழ்கினாள். மன்னன் செய்யும் இக்காரியம் மிகத்தீவிரமானது என்று அவள் {தமயந்தி} நினைத்தாள். நளனை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேரிடரின் தொடர்ச்சியைக் கண்டு, தனது தலைவன் {நளன்} அனைத்தையும் தொலைத்துவிட்டான் என்பதைப் புரிந்து, அவனுக்கு {நளனுக்கு} நன்மை செய்ய வேண்டி, பெரும் புகழ்வாய்ந்த, தன் மேல் நல்ல நோக்கம் கொண்ட, அனைத்துக் கடமைகளையும் குதூகலமாகச் செய்யும், நம்பிக்கையும் இனிமையான பேச்சும் கொண்ட பிருகத்சேனை என்ற பணிப்பெண்ணை அழைத்து, "ஓ பிருஹத்சேனா, இங்கிருந்து சென்று நளரின் பெயரால் அமைச்சர்களை அழைத்து, செல்வத்தில் எதுவெல்லாம் தோற்கப்பட்டது, எவை நம்மிடம் மீதம் எஞ்சியிருக்கிறது என்பதைச் சொல்" என்று சொல்லி அனுப்பினாள்.
நளனின் அழைப்பைக் கேட்ட அமைச்சர்கள், "இது நமக்கு நற்பேறே" என்று சொல்லி மன்னனை அணுகினர். இரண்டாவது முறையும் வந்த குடிமக்களைக் கண்ட பீமனின் மகள் {தமயந்தி}, நளனிடம் அதைத் தெரிவித்தாள். ஆனால் மன்னன் {நளன்} அவளை மதிக்கவில்லை. தனது வார்த்தைகளை தனது கணவன் கருதவில்லை என்பதைக் கண்டு, மிகவும் நாணி, தனது உள் அறைக்கு {அந்தப்புரத்திற்குத்} திரும்பினாள். தொடர்ச்சியாக பகடை அறம்சார்ந்த நளனுக்குச் சாதகமாக இல்லை, அவன் அனைத்தையும் இழந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் தனது பணிப்பெண்ணிடம், "ஓ பிருஹத்சேனா, திரும்பவும் நளரின் வார்த்தைகளை, ஓ அருளப்பட்டவளே, தேரோட்டியான வார்ஷ்ணேயனிடம் சுமந்து செல். இப்போது கையில் இருக்கும் காரியம் மிகவும் தீவிரமானது" என்றாள். தமயந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பிருஹத்சேனை, வார்ஷ்ணேயனை நம்பிக்கைக்குரிய பணியாட்களை அனுப்பி அழைத்தாள்.
காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற நடத்தையுள்ள களங்கமற்ற பீமனின் மகள் {தமயந்தி}, அந்தச்சூழ்நிலைக்குத் தக்கவாறு மென்மையான வார்த்தைகளால், "உன்னிடம் மன்னர் எப்படி நடந்து கொள்வார் என்பது உனக்குத் தெரியும். அவர் இப்போது சிரமத்தில் இருக்கிறார். ஆகவே அவருக்கு உதவுவதே உனக்குத் தகும். * புஷ்கரனிடம் மன்னர் {நளர்} எந்த அளவு தோற்கிறாரோ அவ்வளவு அந்த விளையாட்டின் மீதான தீவிரம் அதிகரிக்கிறது. புஷ்கரனுக்குக் கீழ்ப்படிந்தே பகடை விழுகிறது. அவை {பகடை} விளையாட்டில் நளருக்குச் சாதகமாக இல்லை என்று காணப்படுகிறது. அந்த {பகடை} விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வார்த்தையை அவர் கேட்பதில்லை. ஏன் எனது வார்த்தைகளையே கூட அவர் {நளர்} கேட்பதில்லை. இருப்பினும், விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, எனது வார்த்தைகளை அவர் கருதிப்பார்க்க வில்லையெனினும், அந்த உயர் ஆன்ம நிஷாதர் {நளர்} பழிச்சொல்லுக்கு உரியவர் இல்லை. ஓ தேரோட்டியே {வார்ஷ்ணேயரே}, நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். என் கட்டளைப்படி நட. என் மனம் எனக்கு ஐயமூட்டுகிறது. மன்னர் துயரத்தை அடையலாம். ஆகவே, நளருக்குப் பிடித்தமான மனோவேகம் கொண்ட குதிரைகளையும், இந்த இரட்டையர்களையும் {எனது மகன் மற்றும் மகளையும்) தேரில் அழைத்துக் கொண்டு குண்டினபுரம் செல். எனது உறவினர்களிடம் {பிறப்பால் உண்டான உறவுகளிடம்{ எனது பிள்ளைகளையும் தேரையும் குதிரைகளையும் கொடுத்துவிட்டு, நீ அங்கேயே தங்கினாலும் சரிதான், அல்லது வேறு ஏதாவது இடத்திற்கு உனது விருப்பபடி செல்வதாக இருந்தாலும் சரிதான்" என்றாள் {தமயந்தி}.
நளனின் தேரோட்டியான வார்ஷ்ணேயன், தமயந்தியின் இவ்வார்த்தைகளை விவரமாக மன்னனின் தலைமை அதிகாரிகளிடம் தெரிவித்தான். அவர்களிடம் ஆலோசித்து அவர்களது ஏற்பையும் பெற்றுக் கொண்டு, ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, {நளனின்} குழந்தைகளைத் தேரில் அழைத்துக் கொண்டு விதர்ப்பத்திற்குக் கிளம்பினான். இந்திரசேனன் என்ற ஆண்பிள்ளையையும், இந்திரசேனை என்ற பெண்பிள்ளையையும், தேர்களில் சிறந்த தேரையும், குதிரைகளையும், கொடுத்துவிட்டு, நளனைக் குறித்து இதயத்தில் வருந்திய அந்தத் தேரோட்டி, பீமனிடம் {தமயந்தியின் தந்தையிடம்} பிரியாவிடை பெற்று சென்றான். சிலகாலம் பயணத்தில் உலவிக்கொண்டிருந்தவிட்டு, அயோத்தியா நகரம் சென்றான். அங்கு துக்கம் நிறைந்த இதயத்துடன் மன்னன் ருதுபர்ணனின் முன்னிலையில் நின்று, அந்த ஏகாதிபதிக்குத் தேரோட்டியாகப் பணியில் சேர்ந்தான்.
---------------------------------------------------------
* புஷ்கரன் - நளனுடைய தம்பி இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.