Herd of elephants attaked the merchants | Vana Parva - Section 65a | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தி சேதி நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் கூட்டத்தோடு நளனைக் காணும் ஆவலில் செல்வது; ஒரு தடாகத்தைக் கண்டு அந்த வணிகர் கூட்டம் அங்கே தங்குவது; இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு பெரும் யானைக் கூட்டம் வணிகர்களைத் தாக்கியது...
பிருகதஸ்வர் சொன்னார், "கவிகைகள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி, தனது தலைவனை {நளனைக்} காணும் ஆவலில் அந்தக் கவிகைகளுடன் சேர்ந்து முன்னேறினாள். இப்படியே பல நாட்கள் சென்ற போது அந்த வணிகர்கள், அந்தப் பயங்கரமான அடர்த்தியான கானகத்தின் நடுவே தாமரை மணம் கமழும் பெரிய தடாகத்தைக் கண்டனர். அது புற்கள் நிறைந்தும், விறகு, கனிகள் மற்றும் மலர்கள் நிறைந்தும், மிக அழகாகவும், காண்பதற்கு மிக இனிமையாகவும் இருந்தது.
அதில் பல வகைப்பட்ட நீர்க்கோழிகளும், பறவைகளும் வசித்தன. அதில் விழுந்து கொண்டிருந்த நீர் சுத்தமானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மொத்தத்தில் அந்த இடம் முழுவதும் இதயத்தைக் கவர்வதாக இருந்தது. கவிகைகளில் வந்த அந்தக் கூட்டம் மிகவும் களைத்திருந்ததால், அங்கேயே தங்குவதென முடிவெடுத்தது.
அவர்களது தலைவனின் அனுமதியைப் பெற்று, அந்த அழகிய கானகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டனர். அந்தப் பெரும் கூட்டம் மாலைப் பொழுதிலும் அங்கேயே தங்கினர். நடு இரவில் எல்லாம் அடங்கி அமைதி அடைந்த போது, களைப்பாக இருந்த அந்தக் கூட்டத்தினர் அனைவரும் தூங்கினர். அப்போது மதப்பெருக்கால் கலங்கிய ஒரு யானைக்கூட்டம் அந்தத் தடாகத்தில் நீர் அருந்த வந்து, அங்கிருந்த கூட்டத்தையும் அவர்களுக்குச் சொந்தமான எண்ணிலடங்கா யானைகளையும் கண்டது. மனிதர்களால் பழக்கப்பட்ட அந்த யானைகளைக் கண்ட காட்டு யானைகள் கோபம் கொண்டு மதம் பெருகி கோபத்தோடும் அவற்றைக் கொல்லும் நோக்கத்தோடும் நாட்டு யானைகளை நோக்கி விரைந்தன. மலை முகடுகளில் இருந்து பெயர்ந்த சிகரங்கள் சமவெளியை நோக்கி விரைவது போல விரைந்த அந்த யானைகளின் சக்தி தாங்க முடியாததாக இருந்தது. அந்தத் தாமரைக்குளத்தைச் சுற்றி இருந்த பாதைகளையெல்லாம் அடைத்துக்கொண்டு கவிகைகளில் வந்தக் கூட்டத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர். விரைந்து வந்த யானைகள் காட்டுப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டன. திடீரென அந்த யானைகள் அனைத்தும் தரையில் உணர்வற்றுக் கிடந்த மனிதர்களை நசுக்க ஆரம்பித்தன.
"ஓ" "ஐயோ" என்று கதறிய உறக்கத்தால் குருடான அந்த வணிகர்கள், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக பிணங்களையும், புதர்களையும் புகலிடமாகக் கொண்டனர். சிலர் தந்தங்களாலும், சிலர் துதிக்கைகளாலும், சிலர் அந்த யானைகளின் கால்களாலும் கொல்லப்பட்டனர். எண்ணிலடங்கா ஒட்டகங்களும், குதிரைகளும் கொல்லப்பட்டன, நடந்து வந்த மனிதக் கூட்டம் பயத்தால் ஓடி ஒருவரை ஒருவர் {மிதித்து} கொன்றனர். உரக்க கதறிய அவர்களில் சிலர் தரையில் விழுந்தனர். சிலர் பயத்தால் மரங்களில் ஏறினர், சிலர் சமமற்ற தரையில் விழுந்தனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி யானைக் கூட்டத்தால் தாக்கப்பட்ட அந்த விபத்தால் அந்தப் பெரும் கூட்டம் பெரிய இழப்பைச் சந்தித்தது. அங்கே எழுந்த பயங்கரமான கதறல் மூன்று உலகங்களையும் பயமுறுத்தியது.
"அதோ பார், பெரும் நெருப்பு", "காப்பாற்றுங்கள்!" "விரைவாக ஓடுங்கள்", "ஏன் ஓடுகிறீர்கள்?". "குவியலில் இருந்து ரத்தினங்கள் விழுகின்றன, எடுங்கள்", "இந்த செல்வம் அனைத்தும் அற்பமாய் போகிறதே", "நான் பொய் சொல்ல மாட்டேன்", "ஓ கவனம் கலைந்தவனே, நான் மறுபடியும் சொல்கிறேன், எனது வார்த்தைகளை நினைத்துப் பார்" இப்படிப்பட்ட கூக்குரல்களுடன் அவர்கள் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். தமயந்தி பயத்துடனும் துயரத்துடனும் விழித்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உயிரிழப்புகளைக் கண்டாள். எதிர்பாராமல் நடைபெற்றதும், மூவுலகங்களின் பயத்தைத் தூண்டுவதுமான அந்தப் படுகொலைகளைக் கண்டு, தாமரை இதழ் கண்களைக் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, பயத்தால் கடுமையடைந்து, கிட்டத்தட்ட மூச்சை நிறுத்தியபடி விழித்தாள்.
அந்தக் கூட்டத்தில் அடிபடாமல் தப்பியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுக்குள், "இந்த நிலை நமக்கு ஏற்பட, நாம் என்ன செய்தோம்? நிச்சயமாக, நாம் சிறப்புமிக்க மணிபத்திரர்களை வணங்கத் தவறிவிட்டோம். அதே போல மேன்மையான அருள் நிறைந்த யக்ஷமன்னன் வைஸ்ரவணனையும் {குபேரனையும்} வணங்கவில்லை. அந்தத் தெய்வங்களை வணங்காததால் தான் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது. நாம் அவர்களுக்குத் தக்க மரியாதை வழங்கவில்லை. ஒருவேளை, நாம் சில பறவைகளைக் கண்டோமே அதனால் இது நிகழ்ந்ததா? நமக்கு நட்சத்திர பலன் நன்மையாய் இல்லை. வேறு எந்தக் காரணத்தால் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது?" என்று கேட்டுக் கொண்டனர்.
செல்வங்களையும் உறவினர்களையும் இழந்த வேறு சிலர், "நமது பெரும் கவிகைகளுடன் வந்தாளே ஒரு பைத்தியக்காரி {தமயந்தி}, அவள் மானுடப்பிறவி போலவே இல்லை. அவள் வித்தியாசமாக இருக்கிறாள். அவளின் காரணமாகவே இந்தப் பயங்கர மாயை நடந்தேறியுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகத்தான் இருக்கும். அவள் {தமயந்தி} நிச்சயமாக ராட்சசியோ அல்லது யக்ஷப் பெண்ணோ அல்லது பிசாசாகவோதான் இருப்பாள். இந்த தீமைகள் அனைத்தும் அவள் வேலைதான். இதில் சந்தேகமென்ன? வணிகர்களை அழித்தவளும், எண்ணிலடங்கா துயரங்களைக் கொடுத்தவளுமான அந்தத் தீயவளை மறுபடியும் கண்டால், நமக்குத் தீங்கைச் செய்த அவளை, கற்களாலும், புழுதியாலும், புற்களாலும், மரத்தாலும், கைமுஷ்டிகளாலும் அடித்துக் கொல்ல வேண்டும்" என்றனர்.
அந்த வணிகர்களின் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, பயத்தாலும், வெட்கத்தாலும், துயராலும், இதன்காரணமாக நமக்குத் தீமை வருமோ என்று எண்ணியும் காட்டுக்குள் ஓடினாள். தன்னைத் தானே நிந்தித்துக் கொண்ட அவள், "ஐயோ, கடவுள் என்னிடம் கொண்டுள்ள கோபம் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறதே. எனது வழியில் அமைதி ஏற்படவில்லையே. எந்தத் தீச்செயலால் இந்த நிகழ்ச்சி நடந்தது? நினைவாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாருக்கும் சிறு தீமை செய்ததாகவும் எனக்கு நினைவில்லையே. எனது எந்த செயலால் இந்தச் சம்பவம் நடந்தது? நிச்சயமாக, முற்பிறவியில் நான் செய்த பெரும்பாவங்களுக்காகவே நான் இந்தப் பேரிடரில் மூழ்கியுள்ளேன். எனது கணவரின் {நளனின்} நாடு பறிபோனது. தனது உறவினரிடமே அவர் {எனது கணவர்} தோல்வியுற்றார். தலைவன், மகன், மகள் ஆகியோரைப் பிரிந்து, பாதுகாப்பற்ற நிலையில் இரைதேடும் விலங்குகள் நிறைந்த இந்தக் கானகத்தில் இருக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டாள் {தமயந்தி}.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அடுத்த நாள், அந்தக் கூட்டத்தில் எஞ்சிய வணிகர்கள், இறந்து போன தங்கள் சகோதரர்கள், தந்தைகள், மகன்கள், நண்பர்கள் ஆகியோருக்காக வருந்தி அழுது, பிறகு அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.