இந்தப் பகுதி பீஷ்மர் வியாசர் சந்திப்பைச் சொல்கிறது... வியாசர் பீஷ்மருக்கு மன்னன் சிபியின் கதைச் சொல்வதும் வருகிறது..
*********************************************************************************
பொற்கதவம்-4 | முதற்கனல்-9 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
இந்தக் கதை வரும் பகுதியை நான் மஹாபாரதத்தில் கண்டதில்லை. ஆனால் மன்னன் சிபியின் கதை வருகிறது. அதை இன்னும் நான் மொழிபெயர்க்கவில்லை. இப்போது வனபர்வத்தின் 65வது பகுதியை மொழிபெயர்த்து வருகிறேன். இந்த சிபி கதை வனபர்வத்தின் 196வது பகுதியில் வருகிறது. அதனால் இதில் வரும் சிபி கதையின் ஆங்கில லிங்கைத் தருகிறேன்.
*********************************************************************************
நமது கருத்து:
//சித்ரகர்ணி என்று பெயர்கொண்ட அந்த முதிய சிம்மம் அதற்கு விதி வகுத்த பாதையில் நடந்து வந்து வியாசனின் தவச்சாலையை நோக்கியபடி ஒரு பாறைமீது நின்றுகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மர் அவ்வழியே சென்றார்.// இப்படி ஒரு காட்சி மஹாபாரதத்தில் இல்லை. ஆனால் ஆசிரியரின் புனைவு அருமையாக இருக்கிறது.
// சிபியிடம் அப்பருந்து சொன்னது “மன்னனே உன்னை வணங்குகிறேன். சைத்ரகம் என்னும் செம்பருந்துக்குலத்தின் அரசனாகிய என்பெயர் சித்ரகன். பிறப்பால் நானும் உன்னைப்போன்றே ஷத்ரியன்.// மஹாபாரதத்தில் சிபியிடம் பேசிய பருந்து இந்திரன் என்றும் புறா அக்னி என்றும் வருகிறது.
// பீஷ்மர் குனிந்து அந்தப் புழுதியில் இருக்கும் சிங்கத்தின் காலடித்தடங்களைப் பார்த்துவிட்டு “வயதான பெரிய சிங்கம். நகங்கள் மழுங்கியிருக்கின்றன. அதனால் வேட்டையாட முடியவில்லை.ஆகவேதான் வீட்டுப்பசுவை தேடி வந்திருக்கிறது”// இந்தக் காட்சி பீஷ்மரையே உருவகமாக் காட்டுவதாக அமைகிறது. ஆனால் அப்படி இது உருவகமாக இருந்தால், பின்பு சித்திரகர்ணி, கருவுற்றிருந்த அந்தப் பசுவையும் அடித்து, அதன் கருவையும் உண்பதை எதைக் குறிக்கிறது? பீஷ்மர் வயதான காலத்தில் பெண்களையும் கடத்திவந்து, பிள்ளைவரம் கொடுக்கமுடியாத ஒருவனுக்குக் கட்டி வைத்து கருவை உருவாகவிடவில்லை என்றா? அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் ரசித்த வரிகள்
* அதற்குள் வாசல்கள் ஒவ்வொன்றாக திறந்துகொண்டிருந்தன. ‘இவனை நானறிவேன்…இவன் முகமோ உடலோ நானறியாதது. ஆனால் இவனை நானறிவேன்….என் ஆன்மா இவனைக்கண்டதும் எழுகிறது’ என்று அது திரும்பத்திரும்ப தனக்குள் சொல்லிக்கொண்டது.
* உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’
* பீஷ்மரின் உயரத்தை அண்ணாந்து பார்த்து மகிழ்ந்து சிரித்து “தம்பி அஸ்தினபுரிக்குமேல் உயர்ந்திருக்கும் ஹஸ்தியின் அரண்மனை முகடுபோலிருக்கிறாய் நீ”
* //“ஆம்…அது உண்மை” என்றார் பீஷ்மர். “நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”// இந்த வார்த்தைகள் இன்றைய மனிதர்கள் பலருக்கும் கூட பொருந்தும் என நினைக்கிறேன்.
* ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” பீஷ்மர் தொடர்ந்தார். “நான் என்னை மிகமிகக்கூரிய ஓர் ஆயுதம் என்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை.
* அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?”
* “என்னுடைய அரண்மனை வளாகத்திற்குள் என் கைகளுக்குள் வந்த ஒவ்வொன்றுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதே என் தன்னறம்” என்றான் சிபி.
* என்னை இந்த அலகுடனும் இந்த நகங்களுடனும் இப்பெரும்பசியுடனும் படைத்த ஆற்றல் அல்லவா என்னை கொன்று உண்பவனாக ஆக்கியது? இந்தச் சின்னஞ்சிறு வெண்புறா இன்று காலையில் மட்டும் ஆயிரம் சிறுபூச்சிகளை கொத்தி உண்டிருக்கிறதென்பதை நீ அறிவாயா? அந்த ஆயிரம் புழுக்கள் பல்லாயிரம் சகப்புழுக்களை விழுங்கி நெளிந்துகொண்டிருந்தன என்பதை அறிவாயா? இதை விட்டுவிடு. இதைக் காப்பாற்ற முயலும்போது நீ இப்அண்டத்தை நிகழ்த்தும் முதல்மனதுடன் போட்டிபோடுகிறாய்”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.