Queen Mother's grace | Vana Parva - Section 65b | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
வணிகர்களிடம் இருந்து பிரிந்த தமயந்தி சேதி நாட்டை அடைந்து, மன்னனுடைய தாயின் கண்ணில் படுவது; அந்த மன்னனின் தாய் தமயந்தியை அழைத்து, தனது மகளுக்குத் தோழியாகச் செய்வது…
பிறகு, விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} புலம்பத் தொடங்கினாள், "ஐயோ, என்ன தீச்செயலை நான் நிகழ்த்திவிட்டேன்! இந்தத் தனிமையான கானகத்தில் நான் பெற்ற மனிதர்கள் கூட்டம், யானைக்கூட்டத்தால் அழிவுற்றதே, இது எனது துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுள்ளது. சந்தேகமற நீண்ட காலத்திற்கு நான் இந்தப் பேரிடரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே. காலம் வராமல் எந்த மனிதனும் இறக்க மாட்டான் என்ற பெரியோரின் சொற்களை நான் கேட்டிருக்கிறேன்.
அதனால்தான் துக்கத்தில் இருக்கும் நான் இப்போது யானைக்கூட்டத்திடம் மிதிபட்டு கொல்லப்படாமலிருக்கிறேன். மனிதர்களுக்கு நேரும் எதுவும் விதியால் கிடைப்பதன்றி வேறு எதுவுமில்லை. எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் நினைவாலோ, வார்த்தையாலோ, செயலாலோ எந்தப் பாவமும் செய்யாதிருக்கையில் இந்தப் பேரிடர் எனக்கு எவ்வாறு நேர்ந்தது? எனது கணவரால் எனக்கு நேர்ந்த இந்தத் துன்பம், அந்தத் தேவர்களான லோகபாலர்களால் நிகழ்கிறது என்றே நினைக்கிறேன். சுயம்வரத்திற்காக வந்த அவர்களை நளருக்காக நான் அவமதித்தேன்" என்று புலம்பினாள் {தமயந்தி}.
ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இப்படி அழுதுகொண்டிருந்த அற்புத மங்கையும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான தமயந்தி, அந்தப் படுகொலையிலும் பிழைத்த வேதமறிந்த அந்தணர்களுடன், துயரத்தால் ஒடுக்கப்பட்டு, இலையுதிர் காலத்துச் சந்திரன் போல ஆனாள் {நிறம் மங்கினாள்}. பிறகு அங்கிருந்து விரைவாக வெளியேறி, மாலை நேரத்தில் அந்த மங்கை {தமயந்தி} சேதிகளின் மன்னனான உண்மை பேசும் சுவாஹுவின் பெரும் பலம் பொருந்திய நகரத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் {தமயந்தி} அந்த அற்புதமான நகரத்திற்குள் அரை ஆடையுடனேயே நுழைந்தாள். அப்படி அவள் பயத்தில் மூழ்கி, மெலிந்து, துயரமுற்று, கூந்தல் கலைந்து, உடலெல்லாம் மண்புழுதியுடன் ஒரு பைத்தியக்காரியைப் போலச் செல்வதை அங்கிருந்த குடிமக்கள் கண்டனர். அப்படி அவள் சேதி மன்னனின் நகரத்திற்குள் நுழைந்தபோது, அந்த நகரத்தின் சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் அவளைப் பின்தொடர்ந்தனர்.
அவர்களால் {சிறுவர்களால்} சூழப்பட்ட அவள் {தமயந்தி}, மன்னனின் {சேதிநாட்டு மன்னன் சுவாஹுவின்} அரண்மனை முன்பு வந்தாள். அந்த மாளிகையின் மேல்தளத்தில் இருந்த மன்னனின் தாய், கூட்டத்தால் சூழப்பட்ட அவளைக் {தமயந்தியைக்) கண்டாள். அவள் தனது செவிலியிடம், "போய் அந்தப் பெண்ணை என் முன்னால் கொண்டு வா. கதியற்ற அவள் இந்தக் கூட்டத்தால் எரிச்சலடைந்திருக்கிறாள். துயரத்தில் இருக்கும் அவள் உதவி நாடி நிற்கிறாள். அவளது அழகு எனது இல்லத்தைப் பிரகாசிக்க வைப்பதை நான் காண்கிறேன். பைத்தியக்காரியைப் போல இருந்தாலும், அந்த அழகானவள் {தமயந்தி}, அகன்ற கண்களுடன் ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருக்கிறாள்" என்றாள். இப்படி கட்டளையிடப்பட்ட அந்த செவிலி வெளியே சென்று, அக்கூட்டத்தை விரட்டி தமயந்தியை அருள் நிறைந்த அந்த உப்பரிகைக்குக் கொண்டு வந்தாள்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவளைக் கூட்டி வந்த செவிலி ஆச்சரியத்துடன் அவளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப்பட்ட துயர நிலையில் இருந்தாலும், நீ அழகான உருவைக் கொண்டிருக்கிறாய். நீ மேகத்திற்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போல மிளிர்கிறாய். நீ யார் என்பதையும், யாருடையவள் என்பதையும் என்னிடம் சொல். ஓ தெய்வீக அழகைப் பெற்றவளே, ஆபரணங்களற்று இருந்தாலும், உனது அழகு மானுடப்பிறவியைச் சார்ந்ததாக இல்லை. ஆதரவற்று இருந்தாலும், இந்த மனிதர்களின் சீற்றத்திற்கு முன்னால் அசைந்து கொடுப்பவளாகத் தெரியவில்லை" என்று கேட்டாள். செவிலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமனின் மகள் {தமயந்தி}, நான் எனது கணவருக்கு என்னை அர்ப்பணித்திருக்கும், மனித குலத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதை அறிந்து கொள். நான் நல்ல பரம்பரையில் பிறந்த பணிப்பெண். நான் விரும்பிய இடத்தில், கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, தனியாக வாழ்ந்து, மாலைப்பொழுது ஏற்படும் இடத்தில் தங்குகிறேன். எனது கணவர் எண்ணற்ற அறங்களைக் கொண்டு எப்போதும் தன்னை எனக்கு அர்ப்பணித்தவர் ஆவார்.
நானும், எனது பங்குக்கு அவருடன் ஆழ்ந்த பிடிப்புடன், அவரை நிழலெனப் பின்தொடர்ந்தேன். அவர் தீவிரமாக பகடையில் ஈடுபடும் சூழ்நிலை அமைந்தது. பகடையில் தோல்வியுற்று, அவர் கானகத்திற்கு வந்தார். நானும் எனது கணவருடன் சேர்ந்து துயரத்துடன் ஒற்றையாடையுடன் பைத்தியக்காரியைப் போல கானகத்திற்கு வந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணத்திற்காக, அந்த வீரர், பசியாலும், தாகத்தாலும் துன்பப்பட்டு, தனது ஒரே ஆடையையும் இழக்க அந்தக் கானகத்தில் உந்தப்பட்டார். ஆடையிழந்து, உணர்வையும் இழந்து பைத்தியக்காரர் போல இருந்த அவரை, நானும் எனது ஒற்றையாடையுடன் பின்தொடர்ந்தேன். அவரைத் தொடர்ந்த நான், அவருடன் சேர்ந்து பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். இப்படியே பல நாட்கள் கடந்தன. ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது ஒற்றையாடையில் பாதியை வெட்டி எடுத்துக் கொண்டு, எந்தத் தவறும் செய்யாத என்னை அவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். தாமரையின் நிறம் கொண்ட எனது கணவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது இதயத்துக்குச் சொந்தக்காரரான தேவர்களைப் போன்ற எனது அன்புக் கணவரை எனது கண்கள் இன்னும் காணவில்லை. அதனால் நான் இரவும் பகலும் துக்கத்தில் கழிக்கிறேன்" என்றாள்.
கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரத்தால் தடைபட்டக் குரலுடனும் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, மன்னனின் தாய், "ஓ அருளப்பட்ட மங்கையே, நீ என்னுடனேயே வசித்து வா. நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ அழகான மங்கையே, எனது ஆட்கள் உனது கணவனைத் தேடுவார்கள். அல்லது அவனே கூட தனது அலைச்சலினூடே தானாக இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஓ அழகான மங்கேயே, நீ இங்கேயே தங்கினால் (தொலைந்த) உனது தலைவனை மீட்கலாம்" என்றாள். மன்னனின் தாயால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, "ஓ வீரர்களின் அன்னையே, சில நிபந்தனைகளின் பேரில் நான் உம்முடன் தங்குவேன். நான் எஞ்சிய உணவை உண்ண மாட்டேன். யாருடைய காலையும் நான் கழுவ மாட்டேன். எந்த ஆடவருடனும் நான் பேச மாட்டேன். யாரேனும் என்னை (மனைவியாக்கிக் கொள்ளவோ வைப்பாட்டியாக்கிக் கொள்ளவோ) நாடினால், அவன் உமது கரங்களால் தண்டனை பெற வேண்டும். அதன் பிறகும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டினால், அந்தத் தீயவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுவே நான் செய்திருக்கும் சபதமாகும். நான் எனது கணவரை வெளியே தேடுவதற்காக, அந்தணர்களின் ஆலோசனையைக் கேட்க உத்தேசித்துள்ளேன். இவையனைத்தையும் உம்மால் செய்ய முடியும் என்றால், நான் நிச்சயம் உம்முடன் வாழ்வேன். இல்லாவிட்டால், நான் உம்முடன் வசிப்பதற்கான வழியை எனது இதயத்தில் நான் காணவில்லை." என்றாள். அதற்கு அந்த மன்னனின் அன்னை, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "இவையனைத்தையும் நான் செய்வேன். இவ்வித சபதத்தை மேற்கொண்டிருப்பது உனக்கு நன்மையே" என்றாள்.
பிருகதஸ்வர் {Vrihadaswa} தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப் பேசிய அந்த மன்னனின் அன்னை, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சுநந்தை {Sunanda} என்று அழைக்கப்பட்ட தனது மகளிடம், "ஓ சுநந்தா {Sunanda}, தேவதை போல இருக்கும் இந்த மங்கையை சைரந்திரி {Sairindhri} என ஏற்றுக் கொள்! இவளும் உனது வயதை உடையவளாக இருப்பதால், இவள் உனது தோழியாக இருக்கட்டும். இவளுடன் சேர்ந்து கவலையற்று மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிரு" என்றாள். சுநந்தையும் மகிழ்ச்சியாக தமயந்தியை ஏற்று, தனது தோழியருடன் சேர்ந்து அவளை {தமயந்தியை} தனது அறைக்கு இட்டுச் சென்றாள். அங்கே மரியாதையுடன் நடத்தப்பட்ட தமயந்தி, மிகவும் திருப்தியடைந்து, துயரைவிட்டு தொடர்ச்சியாக அங்கு வசிக்க ஆரம்பித்தாள். அங்கே அவளின் {தமயந்தியின்} விருப்பங்கள் அனைத்தும் முறையாக செய்து கொடுக்கப்பட்டன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.