"We may migrate Kamyaka" said Sahadeva! | Vana Parva - Section 80 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வம்)
ஜனமேஜயன் சொன்னான், "ஓ புனிதமானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டனான பார்த்தன் {அர்ஜுனன்}, காம்யக வனத்தைவிட்டுச் சென்ற பிறகு, இடது கையாலும் வில்லை இழுக்கும் அந்த வீரன் {அர்ஜுனன்} தங்களுடன் இல்லாத போது {மற்ற} பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? எதிரிகளை வீழ்த்தும் அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியே, தேவர்களுக்கு விஷ்ணுவைப் போல, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரே புகலிடம் என்று எனக்குத் தெரிகிறது. இந்திரனைப் போன்ற வீரம் கொண்டு போரில் புறமுதுகிடாத அந்த வீரனின் {அர்ஜுனனின்} துணையில்லாதிருந்த எனது பாட்டன்கள், தங்கள் நாட்களை எப்படிக் கடத்தினர்?"
வைசம்பாயனர் சொன்னார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட அர்ஜுனன் காம்யக வனத்தை விட்டுச் சென்றதும், ஓ மகனே {ஜனமேஜயா}, பாண்டுவின் மகன்கள் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர். உற்சாகமற்ற இதயம் கொண்ட அந்தப் பாண்டவர்கள், சரத்தில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் போலவும், சிறகிழந்த பறவைகள் போலவும் இருந்தனர். குபேரன் இல்லாத சைத்திரரத வனம் போல, வெண்குதிரைகளைக் கொண்ட அந்த வீரன் இல்லாத கானகம் இருந்தது. ஓ ஜனமேஜயா, அந்த மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள் அர்ஜுனனின் துணையை இழந்து உற்சாகமற்ற மனநிலையுடனேயே அந்தக் காம்யக வனத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர். ஓ பாரதகுலத்தின் தலைவா {ஜனமேஜயனே}, அந்தப் பலம் பொருந்திய போர் வீரர்கள், சுத்தமான கணைகளைக் கொண்டு, பெரும் பராக்கிரமத்துடன் அந்தணர்களின் வேள்விக்கான விலங்குகளை அடித்தனர். அந்த மனிதர்களில் புலிகளான எதிரிகளை ஒடுக்குபவர்கள், தினமும் காட்டு விலங்குகளைக் கொன்று, முறைப்படி அதைச் சுத்தப்படுத்தி, அந்தணர்களிடம் கொடுத்தனர்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே அந்த மனிதக் காளைகள், அர்ஜுனனின் பிரிவால் துயரத்துடனும் உற்சாகமற்ற இதயங்களுடனும் வாழ்ந்தனர். குறிப்பாக பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தனது மூன்றாவது தலைவனை நினைத்து வருந்தி, யுதிஷ்டிரனிடம், "தனது இருகரங்களால், ஆயிரம் கரம் கொண்ட (பழங்கால) அர்ஜுனனையே {கார்த்தவீரியார்ஜுனன்} எதிர்க்கவல்லவர் அர்ஜுனர். பாண்டு மகன்களில் முதன்மையான அவர் இல்லாத இந்தக் கானகம் அழகற்றதாக எனது கண்களுக்குத் தெரிகிறது. அவரில்லாத இடத்தில் எனது பார்வை படும்போது, பூமி களையிழந்து காணப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மரங்களாலும், அற்புதங்கள் நிறைய வைத்திருந்தாலும் அர்ஜுனர் இல்லாத இந்தக் கானகம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கிறது. நீல மேகக் குவியல் போலவும், மதம் கொண்ட யானையின் பராக்கிரமத்துடனும், தாமரை இதழ்கள் போன்ற கண்களும் உடைய அந்த வீரர் இல்லாத இந்தக் காம்யக வனம் எனக்கு அழகாகத் தெரியவில்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைப் போன்ற கர்ஜனையைக் கொடுக்கும் வில்லொலியை எழுப்புபவரும், இடது கையாலும் வில்லை இழுக்கவல்லவரும், அந்த வீரரை {அர்ஜுனரை} நினைத்து, என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை" என்றாள் {திரௌபதி}.
ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன அழுத்தத்தால் உண்டான அவளது புலம்பலைக் கேட்ட எதிரி வீரர்களைக் கொல்பவனான பீமன், திரௌபதியிடம், "ஓ கொடியிடை கொண்ட அருளப்பட்ட மங்கையே, அமுதத்தைப் பெருமடக்காகக் குடிப்பது போல உள்ள உனது ஏற்புடைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் மகிழ்கிறது. சமச்சீராக நீண்டு, இரண்டு இரும்பு கதாயுதங்கள் போல பருத்து, உருண்டு, வில்லின் நாணால் உண்டான காயங்களுடனும், வில் வாள், மற்ற ஆயுதங்களுடன் இரண்டு ஐந்து தலை நாகங்களைப் போல இருக்கும் கரங்களைக் கொண்ட அந்த மனிதப் புலி இல்லாமல், சூரியன் இல்லா வானம் போல இருக்கிறோம். அந்த பெரும் பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனை நம்பியே பாஞ்சாலர்களும் கௌரவர்களும், கடும் முயற்சியுடைய தேவர்களுக்குக் கூடப் பயப்படுவதில்லை. அந்த வீரனை நம்பியே நாம் நமது எதிரிகள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவும், பூமி ஏற்கனவே அடையப்பட்டதாகவும் கருதி வருகிறோம். அப்படிப்பட்ட அந்த பல்குனன் {அர்ஜுனன்} இல்லாமல் நான் இந்த காம்யக வனத்தில் அமைதியை அடைய முடியவில்லை. வேறு பக்கங்களில் நான் எனது பார்வையைத் திருப்பினாலும், அனைத்தும் எனக்கு வெறுமையாகவே தெரிகிறது.
பீமன் முடித்ததும், பாண்டுவின் மகனான நகுலன் கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "போர்க்களத்தில் இயல்புக்குமிக்க சாதனைகள் செய்து தேவர்களையும் பேச வைக்கும் அந்த வீரர்களில் முதன்மையானவர் {அர்ஜுனர்} இல்லாத இந்த வனத்தில் நாம் என்ன இன்பங்களை அடைய முடியும்? வடதிசை சென்று நூற்றுக்கணக்கன கந்தர்வத் தலைவர்களை வீழ்த்தி, காற்று போன்ற பெரும் வேகம் கொண்ட எண்ணிலடங்கா தித்திரி, கல்மாஷ வகையிலான அழகான குதிரைகளைக் கொணர்ந்தார். அப்படிக் கொணர்ந்து, பெரும் ராஜசூய வேள்வியின் போது, தனது அண்ணனான மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பாசத்தால் பரிசளித்த அந்தச் சிறப்புமிக்கவரும், பீமருக்குப் பின் பிறந்த அந்தப் பயங்கரப் போர்வீரரும், தேவர்களுக்கு இணையானவருமான அந்த வீரர் {அர்ஜுனர்} இல்லாத இந்தக் காம்யக வனத்தில் மேலும் வாழ எனக்கு விருப்பமில்லை" என்றான் {நகுலன்}.
நகுலனின் புலம்பல்களுக்குப் பிறகு, சகாதேவன், "போர்க்களத்தில் பல பலம்பொருந்திய வீரர்களை வீழ்த்தி, பெரும் செல்வத்தையும், கன்னிகைகளையும் கொண்டு வந்து, மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பெரும் ராஜசூய வேள்வியின் போது கொடுத்தவர், அந்த அளவில்லா பிரகாசம் கொண்ட வீரர், போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற *யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர். சிறப்புமிக்க துருபதனின் பகுதியின் மேல் படையெடுத்து, ஓ பாரதரே {யுதிஷ்டிர்ரே} துரோணருக்குத் தனது குரு தட்சணையைக் கொடுத்தவர் அந்த வீரர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது ஆசிரமத்தில் இருக்கும் அந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனரின்} புல் படுக்கையைக் கண்டு எனது இதயம் ஆறுதல் இல்லாமல் தவிக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அந்த வீரர் இல்லாத இந்தக் கானகம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஆகவே இந்தக் கானகத்தை விட்டு சென்றுவிடுவதே நலம் என நான் கருதுகிறேன்" என்றான் {சகாதேவன்}.
***********************************************************************
*யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221
***********************************************************************
*யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர்.
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221
சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.